விநாயகரே கதறி அழுதாலும்..

 

காளஹஸ்தி கோயில் வாசலிலேயே ’சென்னை ஹோட்டல் சரவண பவன்’ என்ற பெயர் பலகை! HSB என்று அதே மாதிரியான லோகோ. அதே மாதிர் நீலக் கலர் பேக்கிரவுண்டில் வெள்ளை நிற எழுத்துகள். ‘உயர்தர சைவ உணவகம்’ என்றும் இருக்கிறது!  போதாக்குறைக்கு முருகன், கிருபானந்த வாரியார் ஆகியோரின் பெரிய சைஸ் புகைப்படங்கள்.

போதாதா.. கூட்டம் குவிகிறது.

சரவணபவன் ஹோட்டல் விளம்பரங்களில் காளஹஸ்தியில் பெயர் இருக்கிற மாதிரி பார்த்ததே இல்லையே என்று சந்தேகம். கூடவே அது என்ன பெயருக்கு மேல் ‘சென்னை’ என்று கூடுதலாக வேறு சேர்த்திருக்கிறார்கள் என்றும் யோசனை.

உள்ளே நுழையும் போதே, “இது மெட்ராஸ் சரவண பவனோட பிராஞ்சா?” என்று கேட்டதற்கு, “இது சென்னை சரவண பவன் சார்” என்றார்கள் மிகத் தெளிவாக.

உள்ளே நுழைந்து இருக்கைகளைப் பார்க்கும் போது மீண்டும் டவுட் எட்டிப் பார்த்தது. கிழிந்தும் கிழியாததுமாக நாற்காலி குஷன்கள்! கண்டிப்பாக இது ஒரிஜினல் சரவண பவனாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டே இருக்கும் போது, மெனு கார்டு கேட்டேன். “என்ன என்ன ஐட்டம் இருக்குன்னு சொல்லிடுறோம் சார்” என்று வரிசையாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

உணவின் தரம் ஓகே ரகம்! காளஹஸ்தியில் இருப்பதிலேயே இங்கே தான் ஓரளவிற்கு சுமாராக இருக்கும் என்று வேறு கேள்வி!

ஆக, ஒரு பிரபல பிராண்டு பல ஆண்டு காலம் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியை குறுக்கு வழியில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் நம் நாட்டில் மட்டுமே சாத்தியம்!! அடுத்த தடவை காளஹஸ்தி சென்றால் வேறு வழியேயில்லாமல் பட்டினியாக கிடந்தாலும் இந்த ஹோட்டலுக்குச் செல்ல மாட்டேன்! சாப்பாடு செரிக்காது!

ooOoo

போன கட்டுரையில் ஆடி மாத அலறல்கள் குறித்து எழுதியிருந்தேன். இதோ இரண்டு நாட்களாக சென்னை மாநகர வீதிகளில் ஆங்காங்கே ‘விநாயகர் சதுர்த்தியை’ முன்னிட்டு சீர்காழி கோவிந்தராஜன் பாடிக் கொண்டிருக்கிறார் ஹை-டெஸிபல் சப்தத்தில்! இன்னமும் ஓரிரு நாட்களுக்கு இது தொடருமாம்! விநாயகா!!

அந்தக் காலங்களில் கிராமங்களில் ஊருக்கு நடுவில் சுற்றிலும் எக்கச்சக்க வெட்டவெளி, குளம் இருக்க நடுவில் கோவில் இருக்கும். எனவே இந்த மாதிரியான நிகழ்ச்சிகளின் போது மக்களை திரண்டு வர வைப்பதற்காக இந்த மைக் செட் எல்லாம் தேவைப்பட்டது. சென்னை போன்ற நகரங்களில் இதெல்லாம் தேவையா?

இதோ இன்னும் சில தினங்களில் விநாயகர் சிலையை மெரினாவில் கரைக்கப் போகிறோம் என்று ஊர்வலம் வேறு இருக்கிறது!

கடவுளே நேரில் வந்து கதறி அழுதாலும் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்த மாதிரியெல்லாம் இம்சையை தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்!

ooOoo

எங்க ஏரியாவில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றில் எப்போது பொருட்கள் வாங்கச் சென்றாலும் மீதி கொடுக்கும் போது சில்லறைக் காசுக்கு பதிலாக நான்கைந்து சாக்லேட்டுகளை தள்ளி விட்டு விடுவது வழக்கம்.  குழந்தைகளோடு வரும் வாடிக்கையாளருக்கு கொஞ்சம் அதிகமான சாக்லேட்டுகளை தள்ளி விடுவதில் ஆசாமிசமர்த்தர். மீதி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை..இந்த மாதிரியான சாக்லேட்டுகள் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். கேட்பதாக இல்லை. 3 மாதங்களாக அவர் கொடுத்த சாக்லேட்டுகள் அனைத்தையும் ஒரு பாட்டிலில் சேர்த்து வந்தேன். கிட்டத்தட்ட தினமுமே அந்தக் கடையில் ஏதாவது வாங்கும் வழக்கம் உண்டு. (அன்றாடங்காய்ச்சி!)

மூன்று நாட்கள் முன்பு சென்று பொருட்கள் வாங்கியவுடன், “170 ரூபாய் சார்” என்றார். “இந்தாங்க.. இதிலே 200 ரூபாய்க்கு சாக்லேட் இருக்குது. வெச்சுக்கிட்டு மீதி 30 ரூபாய் காசாவோ, சாக்லேட்டாவோ தாங்க” என்றேன்.

நேற்றிலிருந்து மீதியை காசாகவே தந்து விடுகிறார்.

ooOoo

அண்மையில் மலேஷியாவில் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒரு இளைஞர் தான் வேலை பார்க்கும் இடத்தில் தன்னை கொத்தடிமை போல நடத்துவதாக தனது பெற்றோருக்கு நண்பரின் மூலமாகத் தெரியப்படுத்தினார்.

அவரின் பெற்றோர்களோ தனது மகனை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தவித்தனர். இன்னொரு நண்பர் மூலமாக எனக்கு செய்தி வந்தது. மலேஷிய நாட்டில் உள்ள எனது தொடர்புகளின் உதவியால் ஒருவழியாக மேற்படி இளைஞரை தொடர்பு கொள்ள முடிந்தது.

ஒப்பந்த அடிப்படையில் அங்குள்ள ஒரு ரெஸ்டாரெண்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறார் இந்த இளைஞர். ரெஸ்டாரெண்ட் என்று பெயர் தானே தவிர அது கிட்டத்தட்ட கையேந்தி பவன் தான். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை நள்ளிரவு 12.30 மணி வரை தொடருமாம். மாட்டை விட கேவலமாக வேலை பார்க்கச் செய்திருக்கிறார்கள். சம்பளம் சுமார் 15,000 ரூபாய். அதிலும் முதல் 6 மாதங்களுக்கு ஏஜெண்ட் சம்பளத்தைப் பிடிங்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது வேலைக்குச் சேர்ந்து 2 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக நம்முடன் கூடவே இருக்கும் ஒரு நபரை குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் கூட நடத்தவில்லை அவரின் முதலாளி.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த முதலாளியும் ஒரு தமிழர் தான்! ‘மலேஷியத் தமிழர்’. 

இந்த விஷயத்தின் போது கேள்விப்பட்டது, மலேஷியா செல்லும் நம் ஆட்களுக்கு மலாய் மக்களால் வரும் பிரச்னைகளை விட அங்கே உள்ள தமிழர்களால் வரும் பிரச்னை தான் அதிகமாம்.

ஆனால் அதே மலேஷிய மக்களுக்கு அங்கே பிரச்னை என்ற போது நம்மூரில் இருக்கிற வேலையெல்லாம் விட்டு விட்டு கொடி பிடித்து குதித்துக் கொண்டிருக்கிறார்கள் நம்மாட்கள்.

வந்தாரை மட்டுமல்ல.. போனோரையும் வாழ வைக்கும் தமிழகம்.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “விநாயகரே கதறி அழுதாலும்..

 • September 1, 2011 at 9:47 pm
  Permalink

  அராஜகமான சில்லறைக்கு சாக்லேட் கொடுக்கும் வழக்கத்தை நீங்கள் கண்டித்தது அருமை. ஊழல், காப்பியடிப்பது எல்லாம் மக்களிடம் இருந்துதான் ஆரம்பம் ஆகிறது. மக்கள் திருந்தினால் தான் பெரிய ஊழல்வாதிகளை திருத்த முடியும். தனி ஒரு மனிதராக சமுதாயத்தில் நடக்கும் சில்லறை தவறுகளை நீங்கள் தட்டிக்கேட்பது பாராட்டத்தக்கது.

  Reply
 • September 1, 2011 at 9:19 pm
  Permalink

  கடவுளே நேரில் வந்து கதறி அழுதாலும் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இந்த மாதிரியெல்லாம் இம்சையை தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 1, 2011 @ 1:30 pm