அதே நேரம் அதே இடம்
ஜெய் வேலையில்லாப் பட்டதாரி. நாலு நண்பர்களுடன் வெட்டிப்பேச்சு செய்வது மட்டுமில்லாமல் அடிக்கடி டாஸ்மார்க்கில் நண்பர்களுடன் குடித்துக் கும்மாளமிடும் சராசரி இளைஞர். இவர் பார்வையில் விஜயலெட்சுமி விழ ஜெய்க்குக் காதல் வியாதி பற்றிக் கொள்கிறது. இரண்டு, மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு விஜியும் காதலில் விழ, ஜெய்யின் தந்தை ஜெய்யை ஆஸ்திரேலியாவிற்குச் சென்று ஓராண்டு வேலை பார்க்க வேண்டும் என்றும் அதுவும் காதலியுடன் எந்த வழியிலும் பேசக் கூடாது என்றும் கட்டளையிட, ஜெய் ஆஸ்திரேலியா போகிறார். திரும்பி வரும் ஜெய்க்கு விஜிக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்ற பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஜெய்யின் நிலை என்ன? விஜயலெட்சுமி கல்யாணம் செய்து கொண்டது ஏன்? என்று இப்படியாக நீளும் கிளைமாக்ஸ் எதிர்பாராத விதமாக முடிகிறது.
ஜெய் அழகாக இருக்கிறார். இளைய தளபதியின் சாயலை ஒத்து இருக்கிறார். காதல்,காமெடி,சோகம் எல்லாம் நன்றாகவே வருகிறது. குடும்பக் குத்துவிளக்காக இருந்த நம்ம வீட்டுப் பொண்ணு விஜியா கவர்ச்சிப் பந்தியை விரித்தது, நம்ப முடியவில்லையே. ஆழமில்லாத சிலரின் காதலைப் பதிவு செய்ய எண்ணி இயக்குனர் படம் பிடித்திருக்கிறார். ஆனால் அவரும் குழம்பி மற்றவரையும் குழப்பி விடுகிறார்.
இயக்குனர்கள் ஏன் வேலையில்லாத இளைஞர்கள் யாராக இருந்தாலும் குடிப்பார்கள், வெட்டி அரட்டை அடிப்பார்கள் என்று சிந்திக்கிறார்களோ? இது கற்பனை வறட்சியையே காட்டுகிறது. 'வெண்ணிலவு ஜன்னலில்''முதல் முறை உன்னைப் பார்த்த போது' பாடல்கள் கேட்கத் தூண்டும் ரகம்.
முற்பாதி படம் சோர்வுடனே சுறுசுறுப்பில்லாமல் பயணிக்கிறது. ஜெய் தம்பிக்கு ஆருடம் தெரியுமோ என்னவோ தெரியவில்லை. தன் படங்களில் 'வாமனன்'மட்டுமே வெற்றி பெறும், மற்றவை தோற்கும் என்று வாய் மொழிந்தாரே அது படம் பார்க்கும் போது பலித்திருப்பதை உணரலாம். அதே நேரம் அதே இடம்-காதலனுக்குத் துரோகம் செய்யும் காதலிகளுக்கு எச்சரிக்கைத் திரைப்படம்.