அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்

 

ஜெயமோகனின் ஒரு புதிய புத்தகம் வெளிவந்ததுமே அதைப் படித்து முடிப்பது எனக்குப் புதியதல்ல. 97-98 வாக்கில் விஷ்ணுபுரம் படித்தபோது தொற்றிக்கொண்ட வேகம். என் ரசனையில் பல எழுத்தாளர்கள் பின்னுக்குப் போவதும், முன்னுக்கு வருவதுமாக இருக்க, ஜெயமோகன் மட்டும் எப்போதும் பெரிய பிரமிப்பாகவே எனக்குள் மிஞ்சி நிற்பது பெரிய ஆச்சரியம்தான். 

இணையத்தில் ஜெயமோகன் எழுதத் துவங்கியதுமே, அது சரியான செயல் என்று நினைத்தேன். அப்போதே அவரிடம் சொன்னதாகவும் நினைவு. இன்று இணையத்தின் வழியாக ஜெயமோகன் எழுதிக் குவிப்பதைப் பார்க்கும்போது, இந்த இணையம் என்ற ஒன்று இல்லாவிட்டாலோ, அதில் ஜெயமோகன் எழுதுவது என்பது சாத்தியப்படாவிட்டாலோ, எத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது புரிகிறது. அதோடு பெருகி வரும் ஜெயமோகனின் வாசகர்களும் இணையத்தாலே சாத்தியமானதுதான்.

அதிலும் குறிப்பாக அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை ஒட்டி ஜெயமோகன் தொடர்ந்து எழுதிக் குவித்த பதிவுகள், தொடர்ந்து இணையத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கின. இணையத்தின் பெரிய அவசியத்தை ஜெயமோகன் மீண்டுமொருமுறை உணர்ந்திருக்கக்கூடும். 

13 வருடங்களாக ஜெயமோகனைப் படிக்கிறேன். இதுபோன்று ஒரு மூர்க்கம் கொண்டு ஜெயமோகன் யாரையும் ஆதரித்து நான் பார்க்கவில்லை. ஒருவகையில் ஆச்சரியமாகவும், இன்னொரு வகையில் ஏமாற்றமாகவும் இருந்தது. நாளையே அண்ணா ஹசாரேவின் நேர்மைக்கு எதிரான ஒரு விஷயம் பொதுவெளியில் பேசப்படுமானால், அதுவும் மறுக்கத்தக்க ஒன்றாக இல்லாமல் இருக்குமானால், அதனை ஜெயமோகன் எப்படி எதிர்கொள்வார் என்றெல்லாம் யோசித்தேன். ஆனால் இந்த யோசனைகள் எல்லாம் ஜெயமோகனுக்கு இருந்ததாகவே தெரியவில்லை. பலவிதமான கேள்விகளுக்கு அவர் வரலாற்றை மையமாக வைத்து, கடந்த கால அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொண்ட பாடங்களைச் சார்ந்து தனது பதில்களை முன்வைத்தபடி நகர்ந்து சென்றுகொண்டிருந்தார். இதில் அண்ணா ஹசாரே மீது ஏதேனும் ஐயங்கள் நேருமானால்கூட, ஜெயமோகன் விவாதித்த முறை என்றென்றும் ஏற்கக்கூடியதாகவே இருக்கும் என்ற வகையில் அமைந்திருந்தது அவரது பதில்கள்.

அண்ணா ஹசாரே பற்றிய பல ஐயங்கள் எனக்கிருந்தன. ஜனநாயகத்துக்கு இது உகந்ததா, வெள்ளையர்களின் காலணி ஆதிகத்தை எதிர்த்து காந்தி மேற்கொண்ட வழிமுறைகளை அப்படியே அண்ணா ஹசாரே ஒரு ஜனநாயக அரசை நோக்கிச் செலுத்தும்போது எப்படி ஏற்பது, நாளையே இது தவறாக நகலெடுக்கப்படாதா, இது காங்கிரஸின் வேலையா என்றெல்லாம் பற்பல சந்தேகங்கள். இந்த சந்தேகங்கள் எல்லாவற்றுக்குமே ஜெயமோகன் ஏற்கும்படியான பதில்களை இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் காரமாக. தவறான கேள்வியைக் கேட்டு ஆசிரியரிடம் திட்டு வாங்குவது போன்ற பாவத்துடன் அவற்றையெல்லாம் படிக்கவேண்டியிருந்தது! அவற்றைத் தொகுத்தால் இப்படிச் சொல்லலாம்: இப்படித்தான் காந்தியின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன, இதுவரை நாம் காந்தியப் போராட்டத்தை எதிர்கொண்டதில்லை என்பதால் இத்தகைய ஐயங்கள் எழுகின்றன, வெள்ளையர்களை போல இந்திய அரசியல்வாதிகள் தொடர்ந்து அண்ணா ஹசாரேவின் மீது பொய் புரட்டுகளை பரப்பிக்கொண்டே இருப்பார்கள், ஆனால் காந்தியம் இந்த எல்லாவற்றையும் எதிர்கொண்டு வெல்லும் என்பதே. இந்த பதில்களைத்தான் ஜெயமோகன் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடனும், வரலாற்றுப் பார்வையோடும் முன்வைக்கிறார்.

ஜெயமோகனை மறுப்பவர்கள்கூட, அவர் தனது வாதத்தை முன்வைக்கும் விதத்தை மறுக்கமுடியாது. இன்றைய காந்தியிலேயே நான் இதனைப் பார்த்திருக்கிறேன். அண்ணா ஹசாரேவில் அது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. இடதுசாரிகள், வலதுசாரிகள் என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. இவர்களில் அவர்கள் பரவாயில்லை என்ற பொதுப்புத்தியையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டார்.

வலதுசாரிகள் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தைக் கைக்கொள்ளப் பார்க்கிறார்களா என்ற ஐயம் எழுந்தபோது அண்ணா ஹசாரே தனது போராட்டத்தில் இருந்த பாரத மாதா படத்தையும், விவேகானந்தர் படத்தையும் எடுத்துவிடுகிறார். இது பற்றிய பதிலுக்கு, வைக்கம் போராட்டத்தில் இப்படி ஒரு நிலை வந்தபோது, காந்தி மாற்றுமத சகோதரர்கள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை விட்டதைச் சொல்கிறார். அண்ணா ஹசாரேவும் நேரடியாகவே இப்படி ஒரு கோரிக்கையை ஆர் எஸ் எஸுக்கு விட்டிருந்தால் என்னாகும் என்று யோசித்துப் பார்த்தேன். மோடியின் ஒரு பாராட்டுக் கட்டுரையைக்கூட வலதுசாரி எதிர்ப்பாளர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அதன் அழுத்தம் ஹசாராவின் தடுமாற்றத்தில் தெரிந்தது. இது ஒருவகையில் தவிர்க்கமுடியாததே. இந்துத்துவத்தை விவேகானந்தருடன் சம்பந்தப்படுத்துவது அயோக்கியத்தனம் அன்றி வேறல்ல என்ற ஜெயமோகனின் குரலில்கூட காந்தியின் குரலைப் பார்க்க நேர்ந்தது தொடரும் துரதிர்ஷ்டம். இதே குரல் அண்ணா ஹசாரேவின் குரலிலும் ஒலித்திருக்கலாம் என்று தோன்றுவதையும் தவிர்க்கமுடியவில்லை. சமரசம் தவறல்ல. அதிலும் நேர்மைக்கான நேர்மையான சமரசம் முக்கியமானதே. சமரசம் எப்படி நேர்மையானதாக இருக்கும் என்ற கேள்விகள் இங்கே எழாது என்றே நினைக்கிறேன். எழுந்தால் அதனை எழுப்புபவர்கள் படிக்கவேண்டியது, காந்தியத்தையும், காந்தியின் வாழ்க்கையையும், இன்றைய காந்தியையும், அண்ணா ஹசாரே ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டத்தையுமே.

இன்னொரு இடத்தில், பாரதிய ஜனதா அண்ணா ஹசாராவின் குழுவை இடதுசாரிக் குழு என்று சொல்லியதாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். பல இடங்களில் இதனை காங்கிரஸின் நாடகமே என்று வலதுசாரிகள் நம்பியதாகவும் வருகிறது. இடதுசாரிக் குழு என்று பாரதிய ஜனதா சொன்னதை நான் வாசிக்கவில்லை. எப்படியோ விட்டுவிட்டேன். இப்படி பாஜக சொல்லியிருந்தால், அது அநியாயம். இது ஒருபுறம். பாரதிய ஜனதாவின் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இதனைக் காங்கிரஸின் நாடகம் என்று கண்டார்கள். ஒரு அமைப்புக்குள்ளிருப்பவர்களுக்கு இதுபோன்ற ஐயங்கள் எழுவது சகஜமே. ஒருவகையில் இவர்கள் வரலாற்றுத் தருணத்தை தவறவிட்டவர்கள்தான். இன்னொரு வகையில் இவர்கள் சூழ்நிலைக் கைதிகள் கூட. ஜெயமோகனின் தனிப்பட்ட சுதந்திரத்தைவிடவும் அதிகம் கடினமானது ஒரு அமைப்புக்குள்ளிருந்துகொண்டு ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டு பேசுபவர்களின் சுதந்திரமின்மை. ஆனால் பாஜகவின் இன்னொரு பிரிவினர் அண்ணா ஹசாராவின் போராட்டத்தைப் பெரிய அளவில் ஆதரித்தார்கள்.  இவர்கள் தனது அமைப்படைவிட இத்தருணம் முக்கியம் என்று கண்டுகொண்டவர்கள். அமைப்பையும் கைவிடாமல், இதனை ஆதரிக்கவும் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவர்கள். அது மட்டுமல்ல, ஆர் எஸ் எஸ்ஸின் தொண்டர்கள் இந்தப் போராட்டத்தைப் பெரிய அளவில் கொண்டு சென்றார்கள். இதனை ஆர்.எஸ்.எஸ்ஸால் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை என்பதும் உண்மைதான். அதைச் செய்யாததும் நல்லதே. இல்லையென்றால், மக்கள் போராட்டம் காவியடிக்கப்பட்டிருக்கும். காந்தியின் வேலையை பின்பு ஆர்.எஸ்.எஸ் செய்தாலும் – அதாவது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களே வெளியேறுங்கள் என்று சொன்னாலும் – அது எடுபடாது. காவியடிப்பின் ஒரே ப்ளஸ், அதனை ஒரு தடவை அடித்தால் போதும் என்பதுதான்!

வரலாற்றுத் தருணத்தில் பங்குகொண்ட ஒரே தமிழகத் தலைவர் திருமாவளவன், அவருக்குப் பாராட்டுகள் என்கிறார் ஜெயமோகன். பாஜகவும், ஆர் எஸ் எஸ்ஸும் பல காரணங்களால் விக்கித்து நின்றபோது, அந்த வரலாற்றுத் தருணத்தை சரியாகக் கண்டுகொண்டவர் மோடியும்தான். இத்தனைக்கும் மோடியைத் தவிர்க்கவேண்டிய கட்டாயம் அண்ணா ஹசாரேவுக்கு இருந்தது. அப்படி இருந்தும் மோடி அதிலிருந்து பின்வாங்கவில்லை. இதுவும் ஒரு முக்கியமான விஷயமே – என்னளவில்.

இந்தப் புத்தகத்திலிருந்து மிக முக்கியமான வரிகள் என்று சிலவற்றை எடுத்துப் போடலாம். அவை மிகப்பெரிய உண்மைகளை சரியான வரிகளில் சுருக்கமாக விளக்கும் ஆற்றல் பெற்றவை. வரலாற்றைப் பற்றியும், நிகழும் யதார்த்தத்தைப் பற்றியும் சரியான புரிதல் இல்லாமல் இப்படிப்பட்ட சிறிய வரிகளில் பெரிய உண்மைகளைப் புதைத்து வைக்க இயலாது. அந்த வகையில் ஜெயமோகன் பெரிய பெரிய ஆச்சரியங்களை நிகழ்த்தியவண்ணம் இருக்கிறார். இடதுசாரி அரசியல்வாதிகள் பற்றிய இவரது கடுமையான விமர்சனங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. அத்தனை கூர்மை. வலதுசாரிகளுக்கும் இதுதான் பிரச்சினை. ஆனாலும் இடதுசாரிகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே அழுத்தம் இருப்பது போன்ற உணர்வு. அல்லது அப்படி நான் விரும்புகிறேன்!

அண்ணா ஹசாரேவின் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் காந்தியப் போராட்டத்தை மையப்படுத்தி ஜெயமோகன் சொல்லியிருப்பது இந்நூலை காலம் கடந்த ஒன்றாக மாற்றுகிறது. பொதுவாகவே எந்த ஒன்றையும் வரலாற்றுப் புலத்தில் தொகுத்துப் பார்ப்பது ஜெயமோகனின் பார்வை. அதுவே இந்நூலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அண்ணா ஹசாரேவின் மீது ஐயம் கொண்டிருந்த நான் இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, செய்யக்கூடாத ஒன்றைச் செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. உடனே அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்பது வேறு விஷயம். ஆனால் அப்படி ஒரு எண்ணத்தையும், அதைத் தொடர்ந்த சிந்தனைகளையும் விதைத்ததுதான் இந்நூலின் சாதனை. ஜெயமோகனின் சாதனை.

தொடர் விவாதம் தொடர் கண்காணிப்பு மூலமாகவே ஊழலுக்கெதிரான இப்போராட்டம் முழுமையை அடையமுடியும் என்கிறார் ஜெயமோகன். இதன் மீதான தொடர் கண்காணிப்பை ஜெயமோகனும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தையும் இந்நூல் உருவாக்கியிருக்கிறது.

அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், விலை: 80/-, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-688-9.html

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்

 • September 8, 2011 at 12:03 am
  Permalink

  ஆனந்த கணேஷ், எனக்கு பக்தி என்றால் உங்களுக்கு வெறுப்பு. இரண்டும் ஒரே மனநிலைதான். உங்களுக்கான ஜெமோ வெறுப்பின் அடிப்படையை நீஙக்ளே யோசித்து பாருங்கள். உண்மை முகத்தில் அறையும். இடதுசாரிகள் முதலில் இருந்தே ஆதரவு தருகிறார்கள் என்று ஜெயமோகன் எங்கே சொன்னார் என்ற லிங்க் வேண்டும்.

  குறிப்பு: ஜெயமோகன் பிடிக்கும் என்பது பக்தியாகாது. ஆனால் அதை அப்படித்தான் உங்க்ளுக்குப் பார்க்கத் தோன்றும். ஏனென்றால் ஒரு கட்டுரை, அக்கட்டுரையின் மீதான விமர்சனம், இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை சார்பில்லாமல் படித்து புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்காது என்பதே என் கணிப்பு. அப்போது இப்படித்தான் பக்திச் சாயம் பூசி ஓடத் தோன்றும்.

  Reply
  • September 8, 2011 at 2:40 pm
   Permalink

   நான் உங்களிடம் இருப்பது பக்தி என்பதற்கான காரணங்களைச் சொல்லி உள்ளேன். அவை தவறு என நீங்கள் விளக்கினால், நிச்சயமாக, நீங்கள் சொல்வது போல எனக்கு இருப்பது வெறுப்புத்தான்.

   .

   Reply
 • September 7, 2011 at 10:32 pm
  Permalink

  ஒரு ஜெயமோகன் பக்தரின் கட்டுரை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட உங்களின் நேர்மையைப் பாராட்டுகிறேன். உங்கள் தெய்வத்திற்கு இந்த நேர்மை வாய்ப்பதாக.

  உங்களிடம் உள்ள இந்த பக்தி ஜெயமோகனிடம் உள்ள குறைகளைக்கூட உணர்வு ரீதியாக அணுகச் செய்கிறது. இந்த விமர்சனத்தின் மிகப் பெரிய குறை இதுதான்.

  அன்னா ஹஸாரே பற்றி ஆதரவாக ஆரம்பத்தில் இருந்தே பேசிவருபவை ஜெயமோகனின் தளமும், தமிழ் இந்து தளமும். இதில் தமிழ் இந்து தளம் சாதாரணப் பொதுஜனங்களின் மன்நிலையை மட்டுமே பிரதிபலிக்கிறது. அலசல்கள், மாறுபடும் கருத்துக்களைச் சொல்லும் கட்டுரைகள் அதில் இல்லை. ஆனால், ஜெயமோகனின் தளமோ பக்திப் பஜனைக் கட்டுரைகளாகத்தான் இருக்கிறது. அந்த பஜனைப் பாடல்களின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம்.

  இவ்விமர்சனத்தில் நீங்கள் சொல்வதற்கு மாறாக, மிகக் குழந்தைத்தனமான வாதங்கள் பலவற்றை ஜெயமோகன் இந்தத் தொடரில் முன்வைக்கிறார். “ராம்தேவ் ஆட்கள்ல பாதிப்பேரு அன்னா பின்னாடி வந்துட்டானுங்கல்லா” என்று குதுகூலிக்கிறார். இதேபோலத்தான் ஒரு காலத்தில் ராம்தேவ் ஆட்களும் குதுகூலித்தனர்.

  இந்தப் போராட்டத்திற்கு இடது சாரிகள் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு அளிப்பதாகச் சொல்லுகிறார். முற்றிலும் தவறு. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கம்யூனிசக் கட்சிகள் இன்று வரை அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.

  அன்னா ஹஸாரேவின் 12 நாள் போராட்டத்தின் இறுதி நாட்களில் பல நக்ஸலிச இடது சாரி அமைப்புக்கள் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்துக் கைதானதாக அவர்கள் அமைப்புத் தலைவர்கள் பெயர்களைப் போட்டுப் போஸ்டர்கள் ஒட்டின. தமிழ்நாட்டில் மாலெ போன்ற அமைப்புக்கள். மக்களின் ஆதரவு பெற்ற இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதன்மூலம் தங்கள் பக்கம் கூட்டம் சேர்க்க அவை செய்யும் முயற்சிகள் மட்டுமே அவை. அவற்றிற்கு அன்னா ஹஸாரேவின் நோக்கம், வழிமுறை என்ற இரண்டு விஷயங்களிலும் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அவற்றின் இருப்பே இந்த இரண்டையும் அழிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால், ஜெமோ முற்றிலும் திரிக்கிறார்.

  இந்துத்துவத்தை விவேகானந்தருடன் சம்பந்தப்படுத்துவது அயோக்கியத்தனம் என்று ஒருவர் சொன்னால், அதைவிட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது. அதை ஜெயமோகன் போன்ற ஒருவர் சொன்னால், சாரு நிவேதிதா அவரைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு குறையும் மென்மையானதாகவே எனக்குப் படுகிறது.

  அன்னா ஹசாரேவின் குழு ஒரு இடதுசாரிக் குழு என்று பாஜபா சொல்லி இருந்தால், அதை மீடியாக்கள் சும்மா விட்டிருக்குமா ? அன்னா ஹஸாரேவை பாஜக எதிர்க்கிறது என்று போட்டுத் தூள் செய்திருப்பார்கள் அல்லவா ? உங்கள் கண்ணில் படாமல் போயிருக்குமா ? ஜெமோ மீதான பக்திப் பரவசக் கண்ணீரையும் தாண்டி அது உறுத்தி இருக்கும் அல்லவா ?

  பாஜகவின் ஒரு பிரிவினர் அன்னா ஹஸாரேவை ஆதரித்ததாகவும், இன்னொரு பிரிவினர் எதிர்த்ததாகவும் ஜெமோ சொல்வதெல்லாம் அவரது தேவைகளின் அடிப்படையில் எழும் கருத்துக்கள். ஆர்.எஸ்.எஸ். தலைமையின் தூண்டுதல் இன்றி சுயம்சேவகர்களாக இருப்பவர்கள் செயல்படுகிறார்கள் என்றெல்லாம் ஜெ எழுதுகிறார். அப்பட்டமான பொய்.

  காந்தியின் போராட்டம் போலவே, அன்னா ஹஸாரேவின் போராட்டம் அமெரிக்க ஊடக பலத்தினால் கட்டப்படுகிறது. அதனால் இந்தியர்களுக்கு நன்மை நடந்தால் நல்லதுதான். நடக்குமா என்பது சந்தேகம்.

  நடக்கக்கூடாது என்பதுதான் இந்திய எதிரிகளின் உள்மனக் கிடக்கை.

  இந்தியாவில் சமையற் குறிப்புப் புத்தகங்கள் மட்டுமே நேர்மையான புத்தகங்கள். ஏனெனில், ஆர்.எஸ்.எஸ் பற்றித் திட்டி எழுதினால்தான் விற்பனையாகும் என்ற கட்டாயம் அதற்கு ஏற்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஜெமோ சமையற்குறிப்புப் புத்தகங்கள் எழுதுவதில்லை.

  .

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 4, 2011 @ 11:52 am