மகாமகம் – ஒரு ப்ளாஷ் பேக்

வளசரவாக்கம் பகுதியில் உள்ள ‘நீல்கிரீஸ்’ பலசரக்குக் கடைக்கு அண்மையில் சென்றிருந்தேன். ஒரு சில பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்காக காசாளரிடம் சென்றேன். 5 பேர் பணம் வாங்கும் வசதி இருந்தும் ஒரே ஒருவர் மட்டும் தான் ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருந்தார். எனக்கு முன்பு நின்றிருந்தவர் பொருட்களை பில் செய்து விட்டு, காசு வாங்கி அடுத்து நான் எனது பொருட்களை எடுத்து வைப்பதற்குள் குறுக்கே நுழைந்த ஒருவர் ஒரே ஒரு பொருளை பில் செய்து விட்டு பணம் கட்டி விட்டு நகர்ந்தார். நான் பொறுமையாக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே கவுண்டரில் பில் போட்டுக் கொண்டிருந்த நபர் எனக்குப் பின்னால் நின்றிருந்தவரைப் பார்த்து, “ஒரே ஒரு ஐட்டம் தானே.. இங்கே கொடுங்கள்” என்று சொல்லி வாங்கி பில் போட ஆரம்பித்தார். நான் அவரிடம் “முதலில் என்னை முடித்து விட்டு பிறகு அவருக்கு பில் பண்ணுங்கள்” என்றேன். “ஒரே ஒரு ஐட்டம் தாங்க” என்றார். “அதற்காக நான் என்ன செய்ய முடியும்? இதற்கு முன்னால் வந்தவரையும் க்யூவில் இல்லாமல் உள்ளே புகுந்து பில் செய்தீர்கள். இவருக்கும் அப்படியா? அப்படியே இருந்தாலும் என்னிடம் பர்மிஷன் வாங்க வேண்டும். இங்கே க்யூவில் ஒழுங்காக வந்து நின்று கொண்டிருப்பவன் பைத்தியக்காரனா?” என்று சப்தமிட்டவுடன் ”ஒரே ஒரு ஐட்டம் வெச்சிருக்காரு.. அதை பில் பண்றதுக்குள்ளே பெரிசா சண்டைக்கு வர்றீங்க?” என்று அப்போதும் நியாயம் பேசினார் அந்த சிப்பந்தி.

ஒரு ஐட்டம் மட்டும் எடுத்து வருபவருக்கு தனியாக கவுண்டர் வைத்து பில் போட வேண்டியது அவர்களின் கடமை. அதை விட்டு விட்டு ஒழுங்காக க்யூவில் வருபவர்களை மதிக்காமல் இப்படிச் செய்வது கொடுமை! எத்தனை ஆண்டு காலமானாலும் நம் ஊரில் இந்த ஒழுங்கு மட்டும் வரவே வராதா?!

ooOoo

சென்னை நகரில் ஆங்காங்கே புதிய புதிய அடுக்கு மாடி கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. எகிறி வரும் விலைவாசியால் இவை எதுவும் தடையாவதில்லை. இதற்காக மணல் எடுத்து வந்து ரோட்டிலேயே கொட்டி விடுகிறார்கள். குறுகிய சந்தாக இருந்தாலும் வெளியிலேயே கொட்டப்படும் மணலால் அந்தப் பகுதியில் போக்குவரத்து இன்னமும் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

இதை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் எல்லாம் கட்டிடங்கள் கட்டுவதேயில்லையா? அங்கேயெல்லாம் இப்படி கட்டிடம் எழுப்பத் தேவையான மணலை எங்கே கொட்டி வைப்பார்கள்? நம்மூரில் மட்டும் ஏன் இப்படி?

ooOoo

சென்ற சனிக்கிழமை வெளியான ஜூ.வி.யில் ‘பழசு என்றும் புதுசு’ பகுதியில் இடம் பெற்றிருந்த ‘மகாமகம்’ கட்டுரை எனது நினைவலைகளை கொஞ்சம் தட்டிச் சென்று விட்டது. 

1992-ம் ஆண்டு மகாமகத்தை யாராலும் மறக்க இயலுமா? ’உடன்பிறவாச் சகோதரிகள்’ ஜெ & சசிகலா கலந்து கொண்டு சிறப்பித்த மகாமகம் அது! அவர்கள் கிளம்பிச் சென்றபின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்க எக்கச்சக்க பேர் இறந்து போனது நினைவிருக்கலாம்.

இப்போதெல்லாம் மகாமகம் என்றாலே அது தான் எல்லாருக்கும் நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

விகடனில் நிருபராக இருந்த காலம் அது. நான், விகேஷ், அறிவழகன் மற்றும் புகைப்படக் கலைஞர் கே. ராஜசேகர் ஆகிய நான்கு பேரும் விகடன் சார்பாக மகாமகத்தில் கலந்து கொள்ள முதல் நாளே கும்பகோணம் சென்று விட்டோம். புகைப்படக்காரர் ஒருவர், ஆனந்த விகடன் நிருபர் ஒருவர் என இரண்டு பேருக்கு தான் பாஸ் தர முடியும் என்று அரசு பி.ஆர்.ஓ. கூறிவிட்டார். எனவே நண்பர்கள் ராஜசேகர் மற்றும் விகேஷ் இருவருக்கும் பாஸ் வாங்கி விட்டு கிளம்பி வந்தோம். சிறிது நேரம் கழித்து நான் மட்டும் தனியே மீண்டு சென்று பாஸ் கேட்டேன். “அதான் அப்பவே சொல்லியாச்சே” என்றார் அவர். “சார் நீங்க பாஸ் தந்தது ஆனந்த விகடனுக்கு. நான் ஜூ.வி. சார்” என்றேன். “ரெண்டும் ஒண்ணு இல்லையா?” என்று கேட்டார் அந்த அதிகாரி. “என்ன சார் கேட்கிறீங்க? ரெண்டும் வேற வேற நிர்வாகம் சார்” என்று அடித்து விட்டேன். மறு பேச்சு இல்லாமல் பாஸ் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு பிரஸ்ஸுக்கும், அரசுக்கும் தொடர்பாளர்களாக பி.ஆர்.ஓ.க்கள் இருந்த காலகட்டம் அது.

மறுநாள் அதிகாலையிலேயே வரச் சொல்லி அரசு செலவில் ஏதோ ஒரு நல்ல ஹோட்டலில் காலை சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து ஒரு வேனில் மகாமகக் குளக்கரைக்கு கூப்பிட்டுச் சென்றார்கள்.

பிரஸ்ஸுக்கு என்று தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30 பேருக்கு மேல் அங்கே குழுமியிருந்தோம். குளத்திலும், குளக்கரையிலும் கும்பலோ கும்பல்! வால்டர் தேவாரம் கையில் பைனாகுலர் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் ‘லுக்’ விட்டுக் கொண்டிருந்தார். 

முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து குளத்துக்கு மேலே வட்டமடித்த போதே மக்கள் ஆரவாரம் களை கட்டியது.  வேத கோஷங்கள் முழங்க அவரும் சசிகலாவும் குளத்தில் இறங்கி மாறி மாறி தண்ணீர் எடுத்துக் குளித்துக் கொண்டிருந்த  போது கூட்டம் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்ப்பரித்தது. அந்நேரத்தில் வானத்தை நோக்கி டுமீல் என்று சுட்டு ஒரு மினி ராக்கெட்டை விட்டார் வால்டர். மக்கள் என்னவோ ஏதோ என்று பயந்து போனார்கள். முதல்வர் குளித்துக் கொண்டிருந்த இடத்துக்கும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சாமியார் (வட மாநிலத்தில் ஏதோ ஒரு சங்கராச்சாரியார் என்று நினைவு) மற்றும் அவர் சிஷ்யர்கள் மீது போலீஸ் திடீர் தடியடி நடத்தியது. அடி பொறுக்க முடியாமல் அவர் குளக்கரைக்கு ஓடி வந்தார். பிரஸ் கேலரியில் எல்லோர் கவனமும் முதல்வர் & கோ பக்கம் இருக்கையில் இந்தப் பக்கத்தில் நடந்த கூத்தை கவனித்து விட்ட நான் அங்கிருந்து தாவிக் குதித்துச் சென்று அந்தச் சாமியாரை புகைப்படம் எடுத்து என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதை கவனித்து விட்டு வேகமாக எங்களிடம் வந்தார் வால்டர். “எந்த பிரஸ் நீங்க?” என்று கடுகடுத்த முகத்துடன் கேட்டுவிட்டு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாஸைப் பார்த்தார். “ஜூ.வி” என்றேன். முகம் இன்னமும் கறுத்துப் போனது. “ஜூவிக்கு எவன் பாஸ் கொடுத்தான்” என்று முணுமுணுத்து விட்டு மேற்கொண்டு என்னிடம் எதுவும் பேசாமல் அந்த சாமியாரிடம் ”சீக்கிரம் இடத்தை காலி பண்ணுங்க” என்று எச்சரித்து வேறு பக்கம் அழைத்துச் சென்று விட்டார். முதல்வர் குளித்து விட்டு நகர்ந்த அடுத்த விநாடியில் சுற்றியிருந்த போலீஸாரும் எனக்கென்ன என்று கிளம்பிவிட்டார்கள்.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. வரும் போது ராஜமரியாதையுடன் அழைத்து வந்த பிரஸ் மக்களையும் அம்போவென விட்டுவிட்டு உடனடியாக கிளம்புங்கள் என்று துரத்தி விட்டார் வால்டர்! அதுவும் குறிப்பாக என்னையும், கூட இருந்த நண்பர்களையும் “சீக்கிரம், சீக்கிரம்” என்றார்.

மக்கள் கும்பலில் மாட்டிக் கொண்டோம்.

கொஞ்சம் தூரம் நடப்பதற்குள் எனக்கும் மூச்சு திணற ஆரம்பித்தது. இன்றைக்கு அவ்வளவு தான் நம்ம கதை என்று லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பர் விகேஷ் கத்தினார். “காலை தரையிலே வெக்காதீங்க. ரெண்டு பக்கமும் வர ஆளுங்க தோளிலே கையை வெச்சுக்கிட்டு காலை மடக்கிக்கிடுங்க. இல்லைன்னா சாவ வேண்டியது தான்” என்றார். வேறு வழியில்லாமல் அதைச் செய்தேன். இரண்டு பக்கமும் இருந்த முகம் தெரியாத ஆட்கள் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள்.  கையைக் காலை அசைக்கக்கூட வழியில்லை. காலைக் கீழே வைத்து தப்பித்தவறி தடுக்கி விட்டால் அத்தோடு கதை முடிந்து விடும். மகாமகக் கும்பல் அத்தனையும் நம் மீது நடந்து போயிருப்பார்கள். வழியிலேயே ஓரிருவர் அப்படி கீழே விழுந்து பரிதாபக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.அவர்களை கீழே குனிந்து பார்க்கக்கூட முடியாமல் ஒட்டு மொத்த கும்பலும் அவர்கள் மீதேறி போய்க்கொண்டிருந்தது. சொல்லப்போனால் யாருமே தானாக நடக்கவில்லை. பின்னால் இருந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கும் மேலாக அப்படித்தான் வர வேண்டியிருந்தது. ஒரு குட்டிச் சுவர் பாதியில் வந்தது. அப்படியே அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்து மூச்சு விட ஆரம்பித்தேன். அதே போல விகேஷும் வந்தார். சுமார் அரை மணி நேரத்துக்கு அப்படியே அங்கேயே மண்ணிலேயே உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். அறிவழகனும், ராஜசேகரும் எந்தப் பக்கம் போனார்கள் என்றே தெரியவில்லை. அப்படியே தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல ஆரம்பித்தோம். வீதியெங்கும் செருப்புகள், துணிமணிகள், அது இதுவென போர்க்களம்!

ஆம்புலனஸ் சப்தங்கள் ஊரெங்கிலும் அலறிக் கொண்டிருந்தது.

ஏதோ பிரச்னை என்பதும் புரிந்தது. நேரடியாக அரசு மருத்துவமனைக்கு ஓடினோம்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்தது!

அன்றைய தேதியில் நான் உயிர் பிழைக்க தோள் கொடுத்த முகமறியா அந்த இருவருக்கு(ம்) நன்றி!

 

(மகாமகம் படம் : விகடன்)

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “மகாமகம் – ஒரு ப்ளாஷ் பேக்

  • September 6, 2011 at 9:30 am
    Permalink

    ntha samayathil intha vishayam ungalakku ean gabagathu vandathu endru theriavillai. ethavathu ul kuthu irrakka?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 4, 2011 @ 8:56 pm