கொஞ்சம் நில்லுங்கள் !!!

 

இந்தியா என்றாலே எல்லோரும்  நம் கலாச்சாரம், கூட்டுக் குடும்பம், உறவுகளுக்கு மதிப்புக் கொடுத்து அணைத்துச் செல்பவர்கள் என்று தான் பெருமையாக பேசுவார்கள். ஆனால் இன்று அந்த பெருமையும், அடையாளமும் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போவதை கண் கூடாகப் பார்க்கிறோம்.முழுமையாக விலகும் முன்பே சுதாரித்துக் கொள்வது தான் பெற்றோர்க்கும், இளைய தலை முறைக்கும் நல்லது. பணப் புழக்கமும், வசதிகளும், தேவைகளும் அதிகமாக அதிகமாக மனித தன்மை கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போகிறதோ?

இன்று முதியோர் இல்லங்களும், பெற்றவர்களை பேணுவதை தவிர்க்க நினைக்கும் தலை முறைகளும் பெருகிவிட்டன. இதற்கு எப்போதும் போல் இந்த தலை முறையேயை குறை சொல்லாமல், அவர்கள் கோணத்திலிருந்தும் பார்த்தால் ஒரு வேளை தீர்வு கிடைக்கலாம். இந்த நிலைக்கு பெரியவர்களும் ஒரு விதத்தில் காரணம். அவர்களிடம் சுயப் பச்சாதாபமும் வறட்டு பிடிவாதமும், அதிகமாகிக் கொண்டு வருகிறது. நான் தான் கஷ்டப்பட்டு பெற்று,வளர்த்து ஆளாக்கினேன்; அதனால் தங்களுக்குத் தான் உரிமை, எல்லாம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இதனால் தானாக கிடைத்த அன்பு, பாசம் எல்லாம் கட்டாயத்தின் பேரில் பெறபடுகிறது. ஒரு காலக் கட்டம் வரை குழந்தைகளுக்கு பெற்றவர்களின் அரவணைப்பு தேவை; பின் பருவத்திற்கு ஏற்ப, தேவைகள் மாறுபடும் போது அதை உணர்ந்து, பெற்றவர்கள் தள்ளி இருந்து ரசித்து பெருமை பட வேண்டும். குழந்தைகளின் திருமணத்திற்கு பிறகு தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.

திருமண புதிதில் அவர்களுக்கு உண்டான space ஐ கொடுத்தால் அன்பும், புரிதலும் சரியாக அமைய வாய்ப்பு உண்டு. ஆரம்பக் கால சரியான புரிதல் தான் வலுவான உறவு பாலம் அமைக்க உதவும். இது சரியாக இருந்தாலே, பிற்காலத்தில் நம்மை ஒதுக்குவர்களோ என்ற அச்சம் எழாது. இன்றைய பொருளாதார சூழ்நிலை காரணமாக இரு பாலரும் வேலைக்கு போக வேண்டிய நிலை, இதனால் பெரியவர்களுக்கு சில சங்கடங்கள்; இரு சாரரும் புரிந்துக் கொண்டால் பிரச்சனை குறைய வாய்ப்பு உண்டு. பெரியவர்களும் தனக்கென்று ஒரு தொகையை தனியாக வைத்துக் கொள்வது நல்லது. எல்லாவற்றையும் கொடுத்து விட்டு பிற்காலத்தில் வருந்த நேரும் நிலையை தவிர்க்கலாம். 

முதியோர் இல்லங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் சென்று சேவை செய்கிறேன் என்று சொல்வது, இப்போது ரொம்ப நாகரிகமாகி விட்டது. ஆனால் அந்த சேவை மனப்பான்மை வீட்டில் உள்ளவரிடம் வருவதில்லை ஏன்? என்னதான் மனம் ஒரு காரணம் என்று சொன்னாலும், அந்த உறவுகளால் ஏற்பட்ட மனக் கசப்பு தான் பிரதான காரணமாக இருக்க முடியும்.முன்பின் தெரியாதவர்களால் எந்த பாதிப்பும் இல்லாததால் சேவை செய்ய முடிகிறது; உறவுகளைப் பார்க்கும் போது, ஆஹா, இவர்களால் என்னன்ன கஷ்டங்களும்.பேச்சும் கேட்க வேண்டி இருந்தது, எவ்வளவு துன்பம் அனுபவித்தோம், என்ற கசப்பான நினைவு தான் முன்னே நிற்கும். ஏன் செய்ய வேண்டும் என்று மிக சாதாரண மனிதர்களை போல் எண்ணுகிறார்கள். 

நண்பர்களே! இது தவறான கண்ணோட்டம் அல்லவா? அடுத்த தலைமுறைக்கும் தவறான பாதையை அல்லவா தொடர்ந்து காட்டுகிறோம். முதுமை பருவத்தில் கண்டிப்பாக தவறை உணர்ந்து அன்பிற்கும், அரவணைபிற்கும் ஏங்கி நிற்கும் தருணம். தவறை உணர்ந்தவர்கள் மேதை, அதை மன்னிக்க தெரிந்தவர்கள் மாமேதை என்பார்கள். இதை எல்லாம் மனதில் கொண்டு அவரவர்கள் பார்வையை கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாமே!

உறவுகளின் மதிப்பை, தன்னலமற்ற அன்பும்,புரிந்து கொள்வதனலுமே உயர்த்த முடியும். காளான் போல் முளைத்து வரும் முதியோர் இல்லங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறோமோ இல்லையோ, கமா வைக்காவது முயற்சிசெய்யலாம் அல்லவா ?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 5, 2011 @ 10:56 pm