தீபாவளி கொண்டாடிய தீவிரவாதிகள்

 

டெல்லியில் உயர்நீதிமன்ற வளாகத்தில் தீபாவளி கொண்டாடிவிட்டுப் போயிருக்கிறார்கள் தீவிரவாதிகள். இப்படி நம் நாட்டில் அடிக்கடி வந்து பட்டாசு கொளுத்தி விட்டுப் போவதற்கென்றே அவர்களும் காத்திருக்கிறார்கள். நம் நாட்டு எழவுத்துறைகளும் காத்திருக்கும் போல!

9/11 சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவில் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியவில்லை தீவிரவாதிகளால். ஆனால் நம்மூரில் தினந்தினம் 9/11 தான்!

இன்னும் எத்தனை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தாலும் நம் அரசாங்கம் திருந்தப் போவதில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து சாட்டையடி கொடுக்க வேண்டும். தீவிரவாதம் எங்கு எப்படி எழுந்தாலும் ஆரம்பத்திலேயே அதை அழித்தொழிக்க வேண்டும். 

தொடைநடுங்கிகளும், முடிவெடுக்க முயலாதவர்களும் முன்னே நிற்கையில் நம் நாடு எப்போதுமே எல்லாவற்றிலும் பின்னே தான் போக வேண்டும்.

ஹூஜி இயக்கம் இதற்கு பொறுப்பேற்றிருக்கிறது. ஆனால் ‘அவர்கள் நியாயவாதிகள்’ என்று சப்பைக்கட்டு கட்ட ஒரு கும்பலே கிளம்பி வரும். 

தப்பித்தவறி குற்றவாளி(கள்) பிடிபட்டாலும் அவர்களுக்கு உள்ளே வைத்து ராஜமரியாதை நடத்தப்படும். கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் வீணாகும்.

இதற்குள் சில பல மாதங்கள் ஓடிவிடும். மக்கள் அனைத்தையும் மறந்து விட்டு அடுத்த வேலையையும், அடுத்த பரபரப்பையும் பார்க்க ஓடி விடுவார்கள். கொஞ்ச நாள் கழித்து அடுத்த குண்டு வெடிப்பு. மீண்டும் ஆரம்பத்திலிருந்து அதே கதை!

இதான் இந்தியா!!

ooOoo

அரசு கேபிளில் சன் டிவி, விஜய் டிவி போன்ற கட்டண சானல்கள் காண்பிக்கப்படவில்லை என்று மக்கள் பொங்கி எழுந்து விட்டார்கள் என்று சன் டிவியிலும் அதைச் சார்ந்த ஊடகங்களான தினகரன் மற்றும் ஜூவியிலும் செய்திகள் வெளியாகின.

மக்களிடம் எதிர்ப்பு உண்டானது உண்மை தான். ஆனாலும் ஓரிரு நாட்களில் மக்களே கிடைக்கும் சானலில் திருப்தி அடைந்து விடுவார்கள் என்பதும் உண்மை தான்.

ஆனால் இதில் இழப்பு மேற்படி சானல்களுக்கு தான்!

எல்லாருமே டி.டி.ஹெச் தொழில்நுட்பத்துக்கு மாற மாட்டார்கள். இப்போதைக்கும் மக்களுக்கு இருக்கும் மன நிலையில் “டி.டி.ஹெச். இலவசமாகத் தருகிறோம்” என்று சொல்லி மாதா மாதம் அரசு கேபிளை விட கட்டணம் குறைவாக வசூலித்தால் வேண்டுமானால் மக்கள் டி.டி.ஹெச். பக்கம் திரும்ப வாய்ப்புண்டு.

மற்றபடி கிராமப்புறங்களில் ஓரிருவர் டி.டி.ஹெச்.சிற்கு மாறலாம்.

ஓரிரு வாரங்கள் இப்படி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் விட்டு விட்டால் மக்களும் அடுத்த சானல் பக்கம் திரும்ப ஆரம்பித்து விடுவார்கள். சர்க்கரை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல. அதற்காக இந்த சானல்களும் சர்க்கரை இல்லை. இவைகள் யாவும் கூட இலுப்பைப்பூ தான்!

ஆனால் அந்த ஓரிரு வாரங்களுக்குள் மேற்படி சானல்களுக்கும், அதன் நிகழ்ச்சிகளுக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங் அடிபட ஆரம்பிக்கும். அப்போது விளம்பரதாரர்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். பிரச்னைகள் வர ஆரம்பிக்கும்.

இதையெல்லாம் எதிர்பார்த்து தான் மேற்படி சானல்கள் இல்லாததால் உலகமே இருண்டு விட்டதைப் போல ஒரு மாயத் தோற்றத்தை திட்டமிட்டே உருவாக்கி வருகிறார்கள் ஒரு சிலர்!

ooOoo

’நீதிமன்ற வளாகத்திலேயே குண்டு வெடிக்கிறார்களே.. இப்படி இருக்கும் போது நீதிமன்றம் வந்தால் முதல்வருக்கு பாதுகாப்பு இருக்குமா?’ என்று அருகாமை டீக்கடை ஒன்றில் ரத்தத்தின் ரத்தம் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் ஞானோதயம் தோன்றுமோ? இப்படி புதிது புதிதாக காரணம் கண்டு புடிக்க ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? ஆனால் இதற்கு மேல் என்ன சொன்னாலும் எதுவும் நடக்காது என்பதால் ‘அம்மா’ கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியே தீர வேண்டும் போல! பார்ப்போம்!

ooOoo

ப்ளாஷ்-பேக்:

ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு பெரிய கிராமம். அங்கே உள்ளூர் பிரபலம் ஒருவர் முக்கிய அரசியல் கட்சியின் முக்கியப் புள்ளி. அந்தக் கட்சியின் தலைமையுடன் படு நெருக்கம் பால்ய காலத்திலிருந்தே! அவருடைய இளைய மகன் உள்ளூரிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி வளைத்து விட்டான். எத்தனை நாட்கள் தான் வெளியில் தெரியாமல் இருக்கும். ஓரிரு ‘மாதங்களிலேயே’ மேட்டர் வெளியாகிவிட்டது. பெண்ணின் தரப்பில் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து விட்டார்கள். ”இந்தப் பெண்ணை யாரென்றே தெரியாது” என்று பையன் தடாலடியாக பின் வாங்க ஆரம்பித்தான். அந்தப் பெண் கண்ணீர் விட்டு கதறியும் ஒன்றும் நடக்கவில்லை. ஜாதி வித்தியாசம் தான் காரணம் காட்டப்பட்டது. 

இந்நிலையில் பையன் வீட்டிலிருந்து கொஞ்சம் தொகை பெண் வீட்டிற்கு கொடுத்து வாயை அடைக்கப்பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ரொம்பத் தெளிவாக அந்தப் பணத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மற்றொரு தனி சந்தர்ப்பத்தில் அந்தப் பையனும், பெண்ணும் மீண்டும் சந்தித்திருக்கிறார்கள். பழைய நினைவில் பையன் மீண்டும் அத்து மீற முற்பட, கையும் களவுமாக பிடித்து விட்டார்கள் இதற்கெனவே காத்திருந்த பெண் தரப்பார்!

தப்ப முடியாத நிலை. வேறு வழியே இல்லாமல் அந்தப் பெண்ணின் கழுத்தில் பையன் தாலி கட்டினான்.

அதன் பிறகு தான் பிரச்னையே!

ஊர் பெரியவர்களால் (?!) பெண்ணின் தரப்பாரோ, இந்தப் பையனின் குடும்பத்தாரோ ஊருக்குள் யாருடனும் பேசக்கூடாது, ஊருக்குள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று தடை போடப்பட்டது. போலீஸ் வரை சென்றும் எதுவும் நடக்கவில்லை. பையன் தரப்பிலிருந்து தகவல் வந்தது. நானும் ஒரு புகைப்படக்காரரும் அந்த ஊருக்குச் சென்றோம். ஊரினுள் சென்று அவர்கள் வீட்டை விசாரித்த போதே யாரும் பதில் சொல்லவில்லை. மேலும் கீழும் பார்த்து விட்டு கடமையே கண்ணாயினர்!

ஒரு வழியாகத் தேடிப் பிடித்து அவர்கள் வீட்டை அடைந்து பேச ஆரம்பித்தால் ஒரே புலம்பல். இத்தனைக்கும் கல்யாணம் ஆகியும் அந்தப் பெண்ணை இவர்கள் வீட்டினுள் சேர்க்கவில்லையாம். கொல்லைப்புறத்தில் ஒரு கீற்றுக் கொட்டகையில் தான் அந்தப் பெண்! அவ்வப்பொது பையன் மட்டும் அங்கே சென்றுவிட்டு வருவானாம். என்ன கொடுமை சார் இது?!

அவர்கள் புலம்பலையெல்லாம் கேட்டுவிட்டு ஊர் நாட்டாமையிடம் சென்றால் அவர் பத்தடி தள்ளி நின்று தான் எங்களிடம் பேசவே ஆரம்பித்தார். ”ஊர் பஞ்சாயத்து முடிவின்படி தள்ளி வெச்சிருக்கோம். அவ்வளவு தான். வேற எதுவும் சொல்ல முடியாது” என்று முரண்டு பிடித்தார். பேசிக் கொண்டிருக்கும் போதே கூட வந்த புகைப்படக்காரருக்கு தண்ணீர் தாகம். கேட்டதற்கு, “அவன் வூட்டுக்குள்ளே போயிட்டு வந்திருக்கீங்க. உங்க கூட பேசுறதே தப்பு. இதிலே தண்ணி வேறயா? அதெல்லாம் முடியாது” என்று கடுமையாகச் சொல்லிவிட்டார்கள். 

போலீஸெல்லாம் வந்து வேலைக்காகாது என்றும் தெரிந்து விட்டது.அதற்குள் நாங்கள் வந்திருந்த விஷயம் தெரிந்து ஊர்மக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் மருந்துக்கு கூட யாருமே எங்களிடம் நேரடியாகப் பேசவேயில்லை. எல்லாமே நாட்டாமை தான். எங்களிடம் எதுவும் சொல்ல வேண்டுமென்றால் கூட நாட்டாமையிடம் சொல்லுவது போல சொல்வார்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து பதில் சொன்னால் அவர்கள் வேறு எங்கோ பார்ப்பார்கள்! நாங்கள் அந்தப் பையன் வீட்டிற்குள் நுழைந்து விட்டு வந்தது தான் காரணமாம்!

மறுபடியும் மறுபடியும் பேசிப் பார்த்துக் கொண்டே இருந்தோம். அன்றிரவு விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம். ஒரு வழியாக அவர்கள் ஒரு சலுகை அறிவித்தார்கள். அந்தப் பையனும், பெண்ணும் கண்காணாத ஊருக்குப் போய் விட வேண்டும். ஊரில் உள்ள கோயிலுக்கும், பஞ்சாயத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை பையன் மற்றும் பெண் வீட்டுத் தரப்பிலிருந்து தர வேண்டும் என்று சொன்னார்கள்.

அந்த நட்ட நடு ராத்திரியில் மீண்டும் பையன் வீட்டுக்குப் படையெடுத்து விஷயத்தைச் சொன்னதும், ”காசு தந்திடலாம், ஆனா பையனை அனுப்ப முடியாது” என்று பையனின் அப்பா முரண்டு பிடித்தார். பெண்ணின் தரப்பிலோ, “வெளியூருக்கு அனுப்பிடலாம். ஆனா தர்றதுக்கு காசு இல்லை” என்றார்கள்.

திரும்பவும் அவர்கள் தரப்பில் பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி ஒருவழியாக சம்மதப்படுத்தி, ஊர் நாட்டாமையிடமும் சொல்லி கை குலுக்க வைத்து விட்டு கிளம்பினோம்.

ஓரிரு நாட்களில் அந்தப் பையனும், பெண்ணும் வெளியூருக்கு சென்று விட்டதாகவும், ஒப்புக் கொண்டபடி பையன் தரப்பிலிருந்து காசு தரப்பட்டதாகும், பெண்ணின் தரப்பில் காசு கொடுக்க இயலாத நிலைமையில் பையன் தரப்பிலிருந்தே அதையும் தர ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

ஓரிரு வாரங்கள் கழித்து மீண்டும் அந்த ஊருக்குச் சென்ற போது பையன் தரப்பும் ஊர் மக்களும் கொஞ்சிக்குலாவிக் கொண்டிருந்தார்கள். பையன் குடி போன ஊருக்கும் சென்றோம். அங்கேயும் புதுமணத் தம்பதியர் (?!) அந்நியோனியமாய் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தனர்.

பிரச்னை அங்கேயே சரி செய்யப்பட்டு விட்டதால் இதனை ஒரு ரிப்போர்ட்டாக எழுதி பத்திரிகையில் வெளி வருவதை நான் விரும்பவில்லை. இது குறித்து தெரியப்படுத்திய போது அலுவலகத்திலும் அதே சொல்லப்பட்டது. “நம் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிடப்படுவதே அதற்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதற்காகத்தான். பத்திரிகை செய்தி வெளியாகாமலேயே அது தீர்க்கப்படுமானால் கண்டிப்பாக மகிழ்ச்சியான விஷயம் தான். எனவே அதை மீண்டும் வெளியிட்டு வெந்து தணிந்த புண்களை குத்திக் கிழிக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். 

மேற்படி சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகின்றன. சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக அந்த கிராமத்தின் வழியாக செல்ல நேரிட்டது. இந்த சம்பவம் நியாபகத்தில் வரவே, ஒரு ஆர்வத்தில் ஊருக்குள் நுழைந்தேன். இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. அப்படியே தான் இருந்தது ஊர்.

நேராக நாட்டாமை வீட்டிற்கு சென்றேன். அவர் இறைவனடி சேர்ந்ததாகச் சொன்னார்கள். அங்கிருந்து பையனின் வீட்டிற்குச் சென்றேன். பையனின் அப்பாவும் இல்லை. பையனின் அம்மாவிற்கு என்னை நியாபகம் இல்லை. பத்திரிகை பெயரைச் சொல்லி சொன்ன போதும் கொஞ்சம் யோசித்தார். “பையன் வெளில போயிருக்கான். .இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்திடுவான்” என்றார். “ஓ.. அப்போ பையன், மருமகள் எல்லாம் இங்கேயே வந்தாச்சா? நல்ல விஷயம் தான்” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன்..

கூடத்தின் நடுவில் ஒரு பெரிய புகைப்படம்.. அந்தப் பையனும், பெண்ணும் மணக்கோலத்தில்! நன்கு உற்றுப் பார்த்தேன்.. மணக்கோலத்தில் இருந்தது அந்தப் பெண் அல்ல! மேலதிக விபரங்களைச் சொல்ல அந்த அம்மா தயாரில்லை.

பெண்ணின் வீடும் நியாபகத்திற்கு இருந்தது. அங்கே சென்ற போது பெண்ணின் தந்தை இருந்தார். “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே உங்களை” என்றார். விபரம் சொன்ன போது, மையமாகச் சிரித்து விட்டு “பொண்ணை பக்கத்து ஊரிலே கட்டிக் கொடுத்தாச்சு சார்.. மூணு பசங்க” என்றார்.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “தீபாவளி கொண்டாடிய தீவிரவாதிகள்

 • September 8, 2011 at 3:36 am
  Permalink

  தீவிரவாதிக்கு கூட தமிழ்நாடு இந்தியாவ தெரில…! வட இந்தியனை போலவே நம்மளை ஒதுக்கி வைசுடனுன்களோ..?!!

  Reply
  • September 8, 2011 at 10:40 am
   Permalink

   எதுக்கு இப்படி நாம நிம்மதியா இருக்கறது உங்களுக்கு புடிக்கலையோ?

   Reply
 • September 7, 2011 at 10:50 pm
  Permalink

  பயங்கரமான கிராமமாக இருக்கும் போல. எனக்கு என்னமோ மக்கள் இந்த கேபிள் குளறுபடியில் அமைதியாக மாட்டார்கள் என்று தோன்றுகிறது. குண்டு வெடிப்பே நம்ம உளவுத்துறையின் உள்குத்தாமே. காங்கிரஸ் மாட்டிக்கொண்டிருக்கும் ஏராளமான பிரச்னையை திசைத் திருப்பத்தான் இந்த குண்டு வெடிப்பாம்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 7, 2011 @ 2:45 pm