உங்கள் ஜாதியினர் நம் மாநிலத்தில் எவ்வளவு பேர்?

’கே டிவியில்’ கடந்த ஞாயிறு அன்று ‘முதல்வன்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஷங்கரின் இயக்கத்தில் சுஜாதா வசனத்தில் அர்ஜூன் நடித்த திரைப்படம் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த செய்தி. இந்தப் படத்தில் உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தது. அவரை கதாநாயகனாக வைத்து தான் கதையும், வசனமும் எழுதப்பட்டதாம். ஆனால் அன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்தப் படத்தில் தான் நடிப்பது சரி வராது என்று வழக்கம் போல ‘தலைவர்’ தவிர்த்து விட, வாய்ப்பு அர்ஜூனுக்கு கிடைத்தது.

‘ஒரு நாள் முதல்வர்’ என்ற அந்த கான்செப்ட் – அருமை. ”ஒரு நாளிலே நான் எந்த சாதனையும் செய்யலை. என் கடமையைத் தான் நான் செஞ்சிருக்கேன். இதையே நீங்க 5 அருஷம் செஞ்சிருந்தா நம்ம தமிழ்நாடே சொர்க்கபூமியா இருந்திருக்கும்” என்று வசனம் பேசுகிறார் அர்ஜூன்.

ரூம் போட்டு யோசித்து யோசித்து எழுதப்பட்ட வசனங்கள் போல. பல இடங்களில் இன்றளவிலும் கூட பொருந்திப் போகும் வசனங்கள்!

இந்த மாதிரியான வசனங்களையும், காட்சிகளையும் நாம் திரைப்படங்களில் (மட்டுமே) பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியது தான் போலிருக்கிறது.

ooOoo

“அரசு கேபிளில் எல்லாரும் பார்க்கிற சானல்கள் இல்லாமல் மொக்கை சானல்கள் மட்டும் கொடுத்தால் இப்படி தான்! வேலையில்லாம சாதிக்கலவரத்தை ஆரம்பிச்சிட்டானுங்க பாருங்க” என்று ட்வீட்டியிருக்கிறார் யாசவி (yasavi@twitter.com). உண்மை தான்!

மதுரை அருகில் சாதிக்கலவரம் பெருந்தீயாய் கொழுந்து விட்டு எரிகிறது. அணைக்க வேண்டிய தலைவர்கள் சிலர் தான் நல்ல பிராண்டு நெய்யாக வாங்கி ஊற்றுகிறார்கள் இன்னமும் பெருக! ”போலீஸ் இந்தச் சம்பவத்தில் தவறு செய்து விட்டது” என்று திருவாய் திறந்திருக்கிறார் ஒரு தலைவர். இப்படி ஒரு கலவரம் நிகழும் என்று கூட முன்னரே காவல்துறையின் உளவுப்பிரிவு எதிர்பார்த்திருக்க வேண்டும். அதை செய்ய்யாதது அவர்கள் தவறு தான்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய முதல்வர் அனைத்து சாதிச் சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களையும் அழைத்து, “உங்கள் ஜாதியினர் நம் மாநிலத்தில் எவ்வளவு பேர்?” என்று கணக்கு கேட்டாரம். அந்தந்த சாதிச் சங்கத் தலைவர்கள் கொடுத்த பட்டியலை எடுத்து கணக்கை கூட்டிப் பார்த்தால் தமிழக மக்கள் தொகையை விட ஏழெட்டு மடங்கு அதிகமாக இருந்ததாம் அந்த லிஸ்ட்! இதே நிலை தான் இன்றளவும். 

அரசியல் சுயலாபத்திற்காக ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள ஒவ்வொரு உட்பிரிவினரும் ஆளுக்கு பத்து கட்சிகள் தொடங்கி கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஊர்ப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கப்போகிறோம் என்று தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். மக்கள் மனதிலிருந்து என்றைக்கு ஜாதி ஒழிகிறதோ அன்றைக்கு தான் சண்டைகள் ஓயும்.

“சாதியே இல்லை” என்று சொல்பவன் தான் முதலில் தனது சாதியை தாங்கிப் பிடிக்கிறான் இங்கே!

தென்மாவட்டங்களில் கலவரம் நடந்ததால் நிகழ்ந்திருக்கும் ஒரு நல்ல விஷயம், அங்கெல்லாம் காலவரையறையின்றி டாஸ்மாக் மூடப்பட்டிருக்கிறது! டாஸ்மாக் ஒன்றில் தான் மக்கள் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ‘சரக்கு’ கொள்முதல் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம்!

ooOoo

”போலீஸ் சொல்ற ‘அவரு’  யாருன்னே எனக்குத் தெரியாதுங்க” என்று ஒருவர் ஒப்பாரி வைத்த காட்சி ஒன்று ஓரிரு நாட்கள் முன்பு தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானது. குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட போது தன்னை போலீஸ் அடித்து துன்புறுத்தியதாக கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த காட்சி அது.

என்ன தான் குற்றம் செய்திருந்தாலும் உடல் ரீதியாக துன்புறுத்துவது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ‘போலீஸ் அராஜகம்’ என்று ஒரு வார்த்தையில் கண்டித்து விட்டுச் செல்கிற விஷயமல்ல இது. மனித உரிமை அமைப்புகள் பல இந்த மாதிரியான சம்பவங்களில் போலீஸ் துறையை கடுமையாக கண்டித்திருக்கின்றன. ஆனாலும் இன்னமும் கூட இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது தான் வேதனையான விஷயம்.

அதே சமயத்தில், என்னவோ இந்த ஒருவரை மட்டும் அதுவும் இந்த ஆட்சியில் மட்டும் தான் போலீஸ் அடித்து துன்புறுத்தியது போல ஒரு பில்டப்பை செய்திப் பத்திரிகைகளும், டிவி சானல்களும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் (ஒளி)பரப்பி வருவது மிகவும் தவறு.

ஊடகங்களுக்கு சொந்தக் காழ்ப்புணர்ச்சியை விட பொறுப்புணர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும்.

ooOoo

ப்ளாஷ்-பேக் :

ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தை நிர்வாக வசதிகளுக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே அந்த மாவட்ட மக்கள் எழுப்பி வந்தார்கள். ‘மாயவரம்’ என்றிருந்த பெயரை ‘மயிலாடுதுறை’ என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மாற்றிய போதே, ‘மயிலாடுதுறையை தலைநகராக ஆக்கி தனி மாவட்டம் உருவாக்குங்கள்’ என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. 

1991-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெ. தஞ்சை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தார். தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட மாவட்டம் ஒன்று. நாகப்பட்டினத்தை தலைநகராகக் கொண்ட ‘நாகை காயிதே மில்லத்’ மாவட்டம் ஒன்று. 

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் உட்பட அனைத்து ஆளும்கட்சியினரும் மயிலாடுதுறையிலேயே கேம்ப் அடித்து பிரசாரம் செய்தும் திமுக வெற்றி பெற்றது. அப்போதிலிருந்தே மயிலாடுதுறை அதிமுகவின் எட்டிக்காயாக ஆகிவிட்டது.

திமுக தலைவரின் திருவாரூர் அருகிலேயே இருக்கிறது. எனவே மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக ஆக்கினால் திருவாரூரை முன்னுக்கு கொண்டு வர முடியாது. எனவே அடுத்து திமுக ஆட்சியின் போதும் தஞ்சை, நாகையைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் உருவானது.

91-ம் ஆண்டு ஜெ. ஆட்சியின் போது அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மோதல் இருந்தது அனைவரும் அறிந்ததே!

நாகை மாவட்ட துவக்க விழாவின் போது பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பிரஸ் பாஸ், விகடனுக்கு வழங்கப்படவில்லை. வேறு வழியில்லாமல் மக்களோடு மக்களாக சேர்ந்து உட்கார்ந்து செய்தியை கவர் செய்வோம் என்று கிளம்பினோம். கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு பல கிலோ மீட்டர்கள் தூரத்திலேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு அனைவரும் ‘நட’ராசா சர்வீஸில் தான் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஐந்து கிலோ மீட்டராவது இருக்கும். சுற்றிலும் மக்கள் வெள்ளம். வி.ஐ.பி.க்கள் மட்டும் மேடை வரையில் காரில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஐந்து கிலோ மீட்டரை நடந்தே செல்வதா? இது சரி வராது.. யாராவது வி.ஐ.பி. வந்தால் தொற்றிக் கொண்டு மேடை வரை சென்று விடலாம் என்று ஐடியா செய்தோம்.

அப்போதைய மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் மணிசங்கர் ஐயர் அப்போது அவ்வழியே வந்தார். பார்த்து விட்டு காரை நிறுத்தி குசலம் விசாரித்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லி அவருடைய காரில் தொற்றிக் கொண்டோம். ஓரிரு கிலோ மீட்டர் தான் சென்றிருப்போம். அவருடைய காரும் தடுக்கப்பட்டது. அந்தக் காருக்கு பாஸ் வாங்க மறந்து விட்டார்கள் போல. எம்.பி. மணிசங்கரையும் நடந்து போகச் சொல்லிவிட்டார்கள். அவர் புலம்பியவாறே நடக்க ஆரம்பித்தார். பார்த்தால் அவருக்கு முன்னால் ஒரு பெண்மணி ஆவேசமாக கத்திக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். யாரென்று பார்த்தால் நாகை தொகுதி எம்.பி. பத்மா!

என்னத்தை சொல்ல? ஒட்டு மொத்தமாக நடந்தே இரண்டு கிலோ மீட்டர்கள் சென்றோம்.

அப்படியும் எங்களை மட்டும் அடையாளம் கண்டு கொண்டு மேடைக்கருகில் விடாமல் துரத்தி விட்டது தனிக்கதை!

எம்.பி.யாக இருந்தால் என்ன, பத்திரிகையாளனாக இருந்தால் என்ன..! ‘அம்மா’ ஆட்சியில் அனைவரும் சமம் தான் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “உங்கள் ஜாதியினர் நம் மாநிலத்தில் எவ்வளவு பேர்?

  • September 11, 2011 at 11:49 pm
    Permalink

    இந்த காலத்திலும் ஜாதி கலவரம்? வேதனை அளிக்கிறது .இப்பயாவது விஜகாந்த் குரல் கொடுப்பார? அட ஏதாவது ஒருபக்கம்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 11, 2011 @ 10:17 pm