அண்ணா நாமமா ? இல்லை அண்ணாவுக்கு நாமமா ?

“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று”

– அறிஞர் அண்ணா குறித்து முதல்வர் ஜெ. வெளியிட்டு அறிக்கையின் முதல் வரி தான் இது!

இந்தக் கட்டுரை வெளியாகும் தினத்தன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 103-வது பிறந்த தினம்! இதையொட்டி அ.தி.மு.க. அரசின், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்த இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி உள்ளிட்ட இலவச திட்டங்களை நாளை முதல்வர் ஜெயலலிதா நாளை திருவள்ளூரில் துவக்கி வைக்க உள்ளார்.

அறிஞர் அண்ணாவாகட்டும் அல்லது நினைவில் நிற்கும் பெருந்தலைவர்கள் யாராகட்டும், நிகழ்கால அரசியல்வாதிகள் அவர்களது பிறந்த மற்றும் நினைவு தினத்தில் மட்டுமே அவர்களது சிலைக்கு மாலை போடவும், மரியாதை செலுத்தவும், அன்று ஒரு நாளைக்கு புகழாஞ்சலி செலுத்தவும் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள்.

அண்ணாவின் வளர்ப்பு மகன் ஒரு சில வாரங்களுக்கு முன் மருத்துவ சிகிச்சைக்கு கூட காசு இல்லாமல் கடும் சிரமத்தில் இறந்து போனது நினைவிருக்கலாம். முன்னாள் முதல்வரின் மனைவி 10,000 ரூபாய் அன்பளிப்பு அளித்து விட்டு வந்தாராம். 

இன்றைய கழகங்களின் ‘காட் ஃபாதர்’ அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனின் மதிப்பு அவர்கள் பார்வையில் வெறும் 10,000 தான் போல!

மூச்சுக்கு முன்னூறு தடவை ‘அண்ணா நாமம் வாழ்க’ என்று சொல்வதில் ஒரு குறையும் யாரும் வைப்பதில்லை!

ooOoo

சீனாவில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்களுக்கு தலா 25,000 ரூபாய் சன்மானமாக வழங்குவதாக மிகப் பெருந்தன்மையுடன் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார்.

நாடெங்கிலும் கடும் அதிருப்தி கிளம்பியது. உடனடியாக ஜகா வாங்கிய அமைச்சர், “இந்தத் தொகை மத்திய அரசு வழங்குவதல்ல. ஹாக்கி இந்தியா என்ற அமைப்பு வழங்குவது” என்று ட்வீட்டரில் தகவல் தெரிவித்திருக்கிறார்.

“எங்ககிட்ட காசு வெச்சுக்கிட்டு வஞ்சகமா பண்றோம். இதைக் கொடுப்பதே படு சிரமமாக இருக்கிறது” என்று அந்த அமைப்பும் அதன் பங்கிற்கு புலம்பியிருக்கிறது.

”இந்தப் பரிசுத் தொகையை வைத்துக் கொண்டு நல்ல ஹாக்கி மட்டை கூட வாங்க முடியாது” என்று சொல்லி ஹாக்கி அணியினர் தொகையை வாங்க மறுத்துவிட்டனர். 

சும்மா இருந்தவர்களை சொறிந்து விட்டுவிட்டு திண்டாடிக் கொண்டிருக்கிறார் அந்த அமைச்சர்.

ooOoo

மீண்டும் ஒரு ரயில் விபத்து தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. அரக்கோணம் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் இந்த செய்தியை தட்டச்சும் வரை 10 பேர் இறந்திருக்கிறார்கள். பலர் காயமடைந்த்திருக்கிறார்கள்.

வழக்கம் போல அரசு நிவாரணத் தொகையை இறந்தவர் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பிச்சை போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடும். 

அடிக்கடி ரயில் விபத்துகள் நிகழ்வதற்கு காரணம் என்ன என்பதை அரசு யோசிக்க வேண்டும். ரயிலில் பயணம் செய்தால் பாதுகாப்பு என்று நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் ஒரு நல்லெண்ணம் படிப்படியாக தகர்ந்து வருகிறது.

மற்றொரு சம்பவத்தில் ரயில் தண்டவாளத்தில் லெவல் கிராஸிங் கதவை பிடுங்கி எடுத்து வைத்திருக்கிறார்கள். ரயில் ஓட்டுநர் சமயோசிதமாக அதைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அங்கும் ஒரு பெரு விபத்து நிகழ்ந்த்து செய்தியாகியிருக்கும்.

இந்த மாதிரி அடுத்தவர் உயிருடன் விளையாடுபவர்களைப் பிடித்து விசாரணை என்ற பெயரில் பலத்த செலவு செய்து, கொஞ்ச காலம் சிறையில் வைத்திருந்தால், அவர்களுக்க்கு தூக்கு தண்டனை எல்லாம் கொடுக்கக்கூடாது, அவர்கள் ரயிலைக் கவிழ்க்க தான் தடுப்பை வைத்தார்கள். அதில் உள்ள பயணிகளை சாகடிக்கும் நோக்கமே அல்ல என்று சப்பைக்கட்டு கட்டி போராடி காப்பாற்றவும் நான்கு பேர் கிளம்பி வருவார்கள். அதான் இந்திய ஜனநாயகம்!

ooOoo

ப்ளாஷ்-பேக்

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள இந்திய தூதரகம்.. வழக்கமான இந்திய தூதரகங்களுக்கே உரிய பிரத்யேக குணங்கள் அனைத்தும் கொண்டது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது கடவுச்சீட்டின் பக்கங்கள் முடிவடைந்ததால், புதுப்பிக்கக் கோரி தூதரகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன என்ன ஆவணங்கள் தேவை என்று கேட்டேன். நேரில் வந்து கேட்டுச் செல்லவும் என்று சொன்னார்கள். 

மறுநாள் காலையில் 9 மணிக்கெல்லாம் சென்றால் அங்கே ஊர்பட்ட கும்பல். அப்ளிகேஷனைக் கொடுப்பதிலிருந்து, அதனை பெறுவதிலிருந்து, காசு வாங்குவதிலிருந்து, விசாரணைகளுக்கு பதில் சொல்வது வரை ஒரே ஒரு கவுண்டர் தான். வரிசையோ, டோக்கனோ கிடையாது. தியேட்டர் திறந்த உடன் அப்படியே உள்ளே ஓடும் கூட்டத்துக்கும் சற்றும் குறைவில்லாத கூட்டம். அடித்துப் பிடித்து நானும் உள்ளே நுழைந்து ஒரு வழியாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அப்ளிகேஷன் வாங்கினேன். வேறு என்ன ஆவணங்கள் தேவை என்று கேட்டது தான் தாமதம்.. திரைப்படங்களுக்கு முன்பு திரையிடப்படும் மத்திய அரசின் விளம்பரம் போல ‘ராஷ்ட்ரீய பாஷா’வில் பதில் வர ஆரம்பித்தது. “ஐயன்மீர்.. எனக்கு ஹிந்தி தெரியாது.. எனவே ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்று கேட்டவுடன், வழக்கமான பதில் வந்தது. “இந்தியாக்காரன்.. ஹிந்தி தெரியாதா?”. ஒருவழியாக பல்லைக்கடித்துக் கொண்டு “ஐயா.. தெரியாதய்யா” என்று சொல்லி தேவைப்படும் ஆவணங்களைக் கேட்டு வெளியில் வந்து வெயிலில் நின்று அப்ளிகேஷனை பூர்த்தி செய்து மீண்டும் உள்ளே சென்றேன். முன்பை விட கூட்டம் அதிகம். அதே மாதிரி அடித்துப் பிடித்து நான் சென்று அப்ளிகேஷனை கொடுக்கும் போது சரியாக “12 மணியாகிடுச்சு.. இனிமே நாளைக்குத் தான்” என்று சொல்லிவிட்டு மறு பேச்சு பேசாமல் எழுந்து சென்று விட்டார் அந்த நபர்!

ஒன்பது மணி அலுவலகத்துக்கு 9.30 மணிக்கு வந்ததோ, நடுநடுவில் அருகில் அமர்ந்திருந்த அம்மணியிடம் கதை அடித்துக் கொண்டிருந்ததோ, காஃபி குடிக்க கால் மணி நேரம் ஒதுக்கியதையோ, இயற்கை உபாதைக்கு வெளியில் சென்று 20 நிமிடங்கள் கழித்து வந்ததையோ அவர் கணக்கில் வரவில்லை! 

மறுநாள்.. அதே 9 மணி.. அதே போன்ற கூட்டம்.. அதே போல 1 மணி நேரத்தில் சென்று அப்ளிகேஷனைக் கொடுத்த போது, “போன பாஸ்போர்ட் திருச்சியிலே எடுத்ததா? அப்போ அந்த விபரத்தையெல்லாம் ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு எடுத்துக்கிட்டு வா” என்றார். “நேற்று எல்லாவற்றையும் காட்டிவிட்டு கேட்டேனே. அப்போதே ஏன் சொல்லலை? அதுவுமில்லாம அது என்ன திருச்சியில கொடுத்த பாஸ்போர்ட்டுக்கு மட்டும் ஸ்பெஷலா அப்படி?” என்று கேட்டதற்கெல்லாம் பதில் இல்லை. அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த நபரிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்து விட்டார்.

வெளியில் வந்து பேப்பர் வாங்கி எழுதி மீண்டும் அடித்துப் பிடித்து உள்ளே சென்று கொடுப்பதற்குள் அதே 12 மணி..ட்யூட்டி டைம் முடிந்த பிரச்னை!

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கணக்காய் மீண்டும் மறுநாள் படையெடுத்தேன்.

ஒருவழியாக பாஸ்போர்ட் மற்றும் இதர ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்தவுடன், எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டு மளிகைக் கடையில் கொடுக்கும் துண்டுச்சீட்டை விட சிறிய அளவில் ஒரு பேப்பரை கையில் எடுத்துக் கொடுத்து ஒரு மாதம் கழித்து வந்து புதிய பாஸ்போர்ட் வந்து விட்டதா என்று செக் செய்து கொள்ளவும் என்றார்கள். அதுவும் கூட வந்துவிட்டதா இல்லையா என்று தான் ஒரு மாதம் கழித்து தெரியுமாம்!

தாய்லாந்தில் வீட்டை விட்டு வெளியில் காலடி வைத்தாலே கையில் பாஸ்போர்ட் அவசியம். ஏராளமானோர் ஓவர்-ஸ்டேவிலும், விசா இல்லாமலும் தங்கி விடுவதால் அடிக்கடி இமிக்ரேஷன் போலீஸ் செக்கிங் நடக்கும். என்ன தான் நமக்கு நன்றாக உள்ளூர் மொழி பேசத் தெரிந்தாலும் பாஸ்போர்ட் எப்போதும் வைத்திருப்பது நமக்கு நல்லது.

ஒரு மாதத்திற்கு பாஸ்போர்ட் இல்லாமல் தம்மாத்தூண்டு துண்டுச்சீட்டை கையில் வைத்துக் கொண்டு அலைவது சிரமம் என்று சொல்லி கேட்டதற்கு, “இத்தனை பேரு அதான் வாங்கிட்டு போறாங்க. உன்னை மட்டும் போலீஸ் புடிக்குமா? புடிச்சா என் பேரைச் சொல்லு” என்ற ரீதியில் பதில் வந்தது.

மீண்டும் மீண்டும் அங்கே பேசிப் பிரயோஜனமில்லை என்றவுடன் அலுவலகம் வந்து உட்கார்ந்து மொத்த ஆத்திரத்தையும் மின்னஞ்சலில் உள்துறை அமைச்சகத்திலிருந்து பாஸ்போர்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பி வைத்தேன்.

மறுநாள் மதியம் தூதரகத்திலிருந்து ஃபோன்! துணைத்தூதர் பார்க்க விரும்புகிறார் என்று!

நேரில் சென்றேன். தூதரக அலுவலகர்கள் 5 பேர் ரவுண்டு கட்டி உட்கார்ந்தார்கள்.  “என்ன பிரச்னை என்றாலும் எங்ககிட்டயே சொல்லிருக்கலாமே” என்று கொஞ்சம் உச்சஸ்தாயியில் பேச ஆரம்பித்தார். பதிலுக்கு நானும் குரலை உயர்த்தினேன். ”என்ன செய்யுறீங்க?” என்று கேட்டார். எனது அலுவலகத்தையும் எனது பணியையும் சொன்னேன். கூடவே நான் நிருபராக இருந்ததையும் குறிப்பிட்டேன். எந்த பத்திரிகை என்ற கேள்வி. சொன்னவுடன் அங்கே இருந்த ஒருவர் மட்டும் சற்று நெளிந்தார். மெல்ல ஹிந்தியில் பத்திரிகையின் அருமை-பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார். பார்த்தால் அவர் தமிழராம்!

அதன் பிறகு அங்கே கலவரம் நிலவரமாகியது. நன்கு உபசரித்து விரைவில் அனைத்தையும் சரி செய்து விடுவதாகச் சொல்லி அனுப்பினார்கள்.

ஒரு மாதம் கழித்து தகவல் வந்தது. பாஸ்போர்ட் கிடைத்தது. அப்போது புதிதாக ‘ரிசப்ஷனிஸ்ட்’ இருவர் இருந்து அனைவருக்கும் வேண்டிய தகவல்களைச் சொல்லி, வரிசையில் செல்வதற்கான எண்ணும் வழங்கிக்கொண்டிருந்தார்கள். 

‘இந்திய தூதரகம்’ என்று அச்சிடப்பட்ட ரசீது அனைவருக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த ஓரிரு வாரங்களில் மின்னனுக் கருவி மூலம் தானியங்கி க்யூ சிஸ்டம் கொண்டு வரப்பட்டது. அதையும் ஃபோனில் அழைத்துச் சொன்னார்கள்.

ஆனால் அதன் பிறகு முன்பு கவுண்டரில் உட்கார்ந்து கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அலுவலரை மட்டும் நான் பார்க்கவே முடியவில்லை. ஏறக்குறைய பல ஆண்டுகள் அனுபவமாம் அந்த தூதரகத்தில் அவருக்கு!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “அண்ணா நாமமா ? இல்லை அண்ணாவுக்கு நாமமா ?

  • September 14, 2011 at 10:19 pm
    Permalink

    பாட்ஷா ரஜினி மாதிரி தாய் இந்திய தூதரகத்தில் கலக்கிடீங்க 🙂 வெளிநாட்டிற்கு போயும் நம்ம ஆபிசர்களோட தொல்லைகளுக்கு ஆளாவது பெருங் கொடுமை. நம்ம ஆபிசர்ங்க வெளிநாட்டுக்காரங்க எல்லாம் எப்படி மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பது பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 14, 2011 @ 11:44 am