திமுகவோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்கக்கூடாது

 

’காங்கிரஸை கூட்டணியிலிருந்து கழட்டி விட்டு விட்டார்’ மு.கருணாநிதி. வழமையாக பொதுக்குழு, தனிக்குழு எல்லாம் கூட்டி முடிவெடுப்பதாக பீலா விடுவார். இந்த முறை அப்படியெல்லாம் இல்லாமால் நேரடியாகவே முடிவெடுத்து விட்டார். அவ்வப்போது தி.மு.க. ஜனநாயக முறையில் இயங்குவதாகக் கூறப்படும் கட்சி என்பதை மறந்து விடுகிறார். வயதாகிவிட்டதல்லவா?

இப்போது எஸ்கேப் ஆனது தி.மு.க.வா, காங்கிரஸா என்பது உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும். 

எப்படி கூட்டிக் கழித்து பார்த்தாலும் காங்கிரஸுக்கு நஷ்டமில்லை என்பது தான் உண்மை. 

‘அண்ணன் எப்போ கிளம்புவான், திண்ணை எப்போ காலியாகும்’ என்கிற கணக்கில் அந்தப் பக்கம் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போதே இந்தப் பக்கம் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கும் பழைய வழியை மீண்டும் காங்கிரஸ் தேட ஆரம்பித்துள்ளது. 

தேமுதிகவும் அதிமுகவால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.

நமக்கு இன்னொரு அடிமை சிக்கிக் கொண்டான் என்று காங்கிரஸ் அடுத்த தோளில் ஏற தயாராகிவிட்டது. 

இந்நிலையில் வேலூரில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக தொண்டர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கடும் மோதல் நிகழ்ந்திருக்கிறது! கூட்டணி வந்தால் யார் பெரியவர் என்று ஆரம்பமாகப் போதும் ஈகோ யுத்தத்தின் முதல் படியாக கருதலாமோ?!

"திமுகவோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்கக்கூடாது” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். 

oooOooo

அக்டோபர்-20ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறதே. ஆஜராவீர்களா என்று கேட்டதற்கு, “இதற்கு முன்பு பல வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகியுள்ளேன். எனவே இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல” என்று ஜெ. பதில் அளித்திருக்கிறார்.

பார்ப்போம்!

oooOooo

லேப்-டாப், ஆடு, மாடு எல்லாம் இலவசமாக வழங்க ஆரம்பமாகிவிட்டது.

பத்தாம் வகுப்புத் தேர்வில் பாஸானால் லேப்-டாப். ஃபெயிலானால் ஆடு மாடு என்று கிண்டலாக எதிர்கட்சியினரால் பேசப்படுகிறது. 

மலைவாழ் மக்களுக்கு இலவச மின் விசிறி பயன் தராது என்பதால் அங்கு உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

”திட்டங்களுக்குகாக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்று அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. எனவே மலைப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மலைப்பகுதிகளில் உள்ள இல்லத்தரசிகளுக்குப் பெரிதும் பயன் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மிக்ஸி மற்றும் கிரைண்டருடன், மின் அடுப்பு (Induction Stove)  வழங்க நான் முடிவு செய்துள்ளேன்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

சூப்பர்!

கூடவே அவர்களுக்கு மட்டுமின்றி தமிழகமெங்கும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக சென்னையில் ஓரளவிற்கு ஒரு மணி நேர கரண்ட் கட் நிறுத்தப்பட்டுள்ளது. 

oooOooo

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராட்டங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. 

இதில் எப்படி அரசியலைக் கலக்கலாம் என்று அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு யோசிக்க ஆரம்பித்துள்ளன.

அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமல் அங்குள்ள மக்களையும், சமூக சிந்தனையாளர்களையும் மட்டும் கலந்து ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் ஒரே இலக்கு அரசியல் செய்வது தான். அவர்கள்க்கு மக்கள் பிரச்னையில் எந்தளவிற்கு ஈடுபாடு இருக்கும் என்பது அனைவரும் அனைந்த விஷயம். எனவே அவர்களை கணக்கில் கொள்ளக்கூடாது!

oooOooo

ப்ளாஷ்-பேக் :

1991-ம் ஆண்டு ‘விக்டன் மாணவ பயிற்சியாளர் திட்டத்தில்’ தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை தி.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சியில் கலந்து கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அன்றைய நாளிதழை புரட்டிய போது “+1 அட்மிஷனுக்காக துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்னாள் எம்.எல்.ஏ.,” என்ற செய்தி கவனத்தை ஈர்த்தது. மேலும் படித்த போது அது எங்கள் ஊரில் நடந்த சம்பவம் என்று தெரிந்தது. ஊருக்கு போய் இறங்கிய கையோடு மறுநாள் காலை மேற்படி சம்பவம் நடந்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். கூறைநாடு நகராட்சி மேல்நிலைப் பள்ளி அது. அங்கே தான் என் தந்தை படித்திருக்கிறார். அங்கே தான் நானும் +1 மற்றும் +2 படித்தேன். எனவே அங்கே உள்ள அனைத்து ஆசிரியர்களும் பரம்பரைப் பழக்கம். அந்த வார ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகையிலெல்லாம் ஏற்கனவே மாணவ நிருபராக எனது புகைப்படம் இடம் பெற்றிருந்ததால் லோக்கல் வி.ஐ.பி. அந்தஸ்து ஏற்கன்வே வந்திருந்தது. போதாக்குறைக்கு அன்றைய தினம் வெளியாகியிருந்த ஜூ.வி.யில் பயிற்சியின் போது நாங்கள் விகடன் அச்சகத்தை பார்வையிட்ட போது எடுத்திருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. ரொம்ப சீரியஸாக அதில் நானும், நண்பர் பா. ராஜநாராயணனும் (தற்போது விஜய் டிவியில் குற்றம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்) பார்த்துக் கொண்டிருக்கும் க்ளோஸ்-அப் புகைப்படமும் வந்திருந்தது இன்னமும் அந்தஸ்தை கூட்டியது.

பள்ளிக்கூடத்தில் போய் விசாரித்தபோது, “அவரோட பையன் பத்தாவது வகுப்பில் ஃபெயில். மிகவும் குறைந்த மார்க். எனவே அவர் +1-ல் இடம் கேட்ட போது கொடுக்க இயலவில்லை. பேசிக் கொண்டே இருக்கும் போது கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்ட ஆரம்பித்து விட்டார். ஒரு வழியாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்தோம்” என்று சொன்னார்கள். புகைப்படமெல்லாம் எடுத்து விட்டு நேராக அந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வின் வீட்டிற்குச் சென்றேன். 

சம்பவத்துக்கு காரணமான அந்த பையன் எனக்கு(ம்) நண்பன். அவருடைய அப்பா பல ஆண்டுகளுக்கு முன்பு நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். எனது தந்தையையும் அவருக்கு மிக நன்கு பழக்கம். நான் அவரது வீட்டுக்கு போனவுடன் வரவேற்றவர், “என்னப்பா, நிருபரான உடனே என்னோட நியூஸ் தான் முதல் நியூஸா உனக்கு?” என்று கேட்டவாறே வரவேற்றார். “மத்த பத்திரிகையெல்லாம் வந்தாய்ங்க. யாருகிட்டயும் பேச முடியாதுன்னு அனுப்பிட்டேன். உன்கிட்ட அந்த மாதிரி சொல்ல முடியாது. ரொம்பவே தெரிஞ்சவனா போயிட்ட. என்னோட நியூஸிலேர்ந்து நிருபர் வாழ்க்கையைத் தொடங்கு” என்று வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு சம்பவத்தை விவரித்தார். முதலில் அன்று துப்பாக்கியை எடுத்துக் கொண்டே செல்லவில்லை என்றவர், பிறகு அதை துடைத்துக் கொண்டிருந்த போது ஆட்டோ வந்து விட்டதால் அப்படியே எடுத்துக் கொண்டு சென்றதாகவும், அப்படியும் கூட அதைக் காட்டி மிரட்டவில்லை என்றும் சொன்னார். தனது மீது இப்படி புகார் எழும்பியதற்கு தனது சொந்தக் கட்சியிலேயே அப்போது லோக்கலில் பிரபலமாகிக் கொண்டிருந்த இன்னொரு முன்னாள் எம்.எல்.ஏ., தான் காரணம் என்றும் சொன்னார்.

புகைப்படங்களெல்லாம் எடுத்து, தொகுத்து, எழுதி, கூரியரில் செய்தியை அனுப்பி விட்டு (அப்போதெல்லாம் ஏது இண்டர்நெட்டு, ஈமெயில் எல்லாம்?!) வீடு திரும்பினேன். வாரம் ஒருமுறை வெளியாகும் ஜூ.வி.யில் அடுத்த வாரத்திலேயே “பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் வாங்க துப்பாக்கி” என்ற பெயரில் என்னுடைய முதல் கட்டுரை வெளியானது. 

“பள்ளிக்கூடத்தில் அட்மிஷன் வாங்க துப்பாக்கியா? போற போக்கைப் பார்த்தால் காலேஜில் அட்மிஷன் வாங்க பீரங்கியுடன் வந்து நிற்பார்கள் போலருக்கே!” என்று வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் அதற்கடுத்த இதழில் பிரசுரமானதும் நினைவில் இருக்கிறது.

ஆயிற்று பல வருடங்கள்… 

தாய்லாந்திலிருந்து லீவில் ஊருக்கு வந்திருந்த போது மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற சேந்தங்குடி துர்கை அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள துர்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். கோவில் அர்ச்சகர் குமார் எனது பால்ய காலத்து சிநேகிதன். ’ஸ்பெஷல் அர்ச்சனை’ எல்லாம் முடித்து கிளம்பும் தருவாயில் கோவில் வாசலில் திடீர் பரபரப்பு. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சுற்றம் சூழ லோக்கல் அரசியல்வாதி ஒருவர் நெற்றியில் குங்குமம் சகிதம் உள்ளே வந்து கொண்டிருந்தார். துர்கை அம்மனைத் தவிர மீதி அங்கே இருந்த அனைவரும் அவருக்கு வணக்கம் வைத்திருந்தார்கள். துர்கை அம்மன் அவருக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார் போல! நேராக உள்ளே வந்தவர் என்னைப் பார்த்து, “என்னண்ணே.. நல்லா இருக்கீங்களா?” என்று முகம் கொள்ளாச்சிரிப்புடன் கேட்டார். ஒரு சில நொடிகள் ‘அது யாராக இருக்கும்’ என்று யோசித்த போதே விடை தெரிந்து விட்டது. 

அந்த முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன். நன்கு வாட்ட சாட்டமாக வளர்ந்திருந்து வேட்டை, சட்டை கெட்டப்பில் திடீரென எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் கண்டுபிடித்து நலம் விசாரித்து திரும்பினேன். 

இப்போது எங்கள் ஊரின் முக்கிய அரசியல் புள்ளி அவர். மக்கள் நலப்பணிகள் பலவற்றில் முன்னின்று செயல்படுத்துவதாக பலர் கூறக் கேள்வி.

அடுத்த ஓரிரு தேர்தல்களில் ஒருவேளை அவருடைய கட்சி மயிலாடுதுறையில் போட்டியிட விரும்பினால் நண்பருக்கு ச.ம.உ. ஆக வாய்ப்புக் கிடைக்கவும் வழியுள்ளதாம்.

அட்வான்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “திமுகவோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்கக்கூடாது

  • September 18, 2011 at 9:38 pm
    Permalink

    சுவாரசியமான கட்டுரை. ‘என்னோட நியூஸிலேர்ந்து நிருபர் வாழ்க்கையைத் தொடங்கு’ – கில்லாடியான பேர்வழி தான். அவருக்கு தப்பாமல் பிறந்திருக்கிறார் அவரின் மகன். நல்லது செய்தால் வரவேற்கலாம்.

    Reply

Leave a Reply to புலவர் தருமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 18, 2011 @ 9:24 pm