செயற்கரிய செய்யவல்லார்

 

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார்” என்று திருவள்ளுவர் ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றித்தான் சொல்லி இருக்கவேண்டும்.

இன்று, சற்று நேரமுன்பு ஸ்டீவ் ஜாப்ஸ் தன் 56வது வயதில் அகால மரணம் அடைந்தார் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

நேற்றைய ஆப்பிள் புதுவரவான ஐஃபோன் 4S பற்றிக் கிண்டலும் கலாட்டாவுமாக ட்விட்டரில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்தநாளே எங்களுக்காக இப்படி ஒரு அதிர்ச்சிச்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது என்பது யாருக்குமே தெரியவில்லை.

ஆப்பிள் கம்பெனி பற்றியோ அதன் தயாரிப்புகள் கணினி மற்றும் கைபேசி மார்க்கெட்களில் அது தனி இடம், முதல் இடம் பிடித்து அசத்துவது பற்றியோ நான் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. உலகளாவிய கணினி / கைபேசி கம்பெனிகளில்  ஆப்பிளுக்கு மட்டுமே அதிதீவிர ரசிகர் கூட்டம் என்பது மற்ற கம்பெனிகளுக்கெல்லாம் காதில் புகை வரவழைத்த, பல கம்பெனி அதிபர்களின் தூக்கத்தைத் தொலைக்கவைத்த உண்மை. 

கணையப் புற்றுநோயால் ஸ்டீவ் வாடிக் கொண்டிருந்தாலும், கம்பெனி தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் அடிக்கடி விலக நேர்ந்தாலும், மறுபடியும் இன்னொரு முறை அவர் ஆப்பிள் தலைமை அதிபர் பதவியை ஏற்க வருவார் என்றுதான் பலரும் நம்பி இருந்தார்கள்- இன்றைய அதிர்ச்சித் தகவல் வரும்வரை.

தற்போதைய ஆப்பிள் கம்பெனியின் உலகளாவிய அசுர வளர்ச்சி பற்றித் தெரியாதவர் யாருமே இல்லை. இத்தனைக்கும் ஒரே ஒரு தனி மனிதர் மட்டுமே காரணம் என்பது தான் ஆச்சரியப்படவைக்கும் உண்மை.

பத்து வருடமுன்புகூட ஆப்பிளின் ‘என் வழி தனி வழி’ முரட்டுக் கொள்கை, யாருக்கும் பயப்படாத ஒரு சட்டாம்பிள்ளை தனிப்போக்கு எல்லாவற்றையும் பார்த்து ஆப்பிளை காலாவதியாகப் போகும் போண்டிக் கம்பெனி என்று எள்ளி நகையாடியவர்கள் பலர். தன் கம்பெனியின் மேனேஜ்மெண்ட் போர்டிலிருந்தே ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டுப் பின்னர் அதே கம்பெனியில் திரும்பவும் சேர்ந்து அந்தக் கம்பெனியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்வதெல்லாம் செயற்கரிய செய்யவல்லாரால் மட்டுமே முடியும்.

மக்கிண்டாஷ், ஐபாட், ஐபேட் ஐஃபோன்- எத்தனை எத்தனையோ புத்தம்புது தயாரிப்புகள் அத்தனையும் தனிப்பட்ட முறையில் அவர் மூளையில் தோன்றியவைதாம். இத்தனைக்கும் அவர் என்ஜினியரிங் பட்டதாரியோ, எலெக்ட்ரானிக்ஸ் பட்டதாரியோ இல்லை. ஏன், அவர் பட்டதாரியே இல்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. 

அவர் கல்லூரிப் படிப்பைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை. பிறக்கும்போதே பணக்கார வீட்டுச் செல்லக் குழந்தை இல்லை. எந்தக் கம்பெனியிலும் போய் அவர் மேனேஜ்மெண்ட் டிரெய்னிங் எடுத்துக் கொள்ளவில்லை. எந்த ஒரு புது ஆப்பிள் தயாரிப்புக்கும் டிஸைன் டெஸ்ட், மார்க்கெட்டிங் டெஸ்ட் எதுவுமே செய்ததில்லை.  எல்லாமே அவர் மூளையில் உருவாகிய தயாரிப்புகள்தான். உண்மையான சுயம்பு என்றால் அது ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. 

பல கோடி ஐஃபோன்களிலும் ஐபேட்களிலும் இன்னும் வரப்போகும் எத்தனையோ ஆப்பிள் அதிசயங்களிலும் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆன்மா நிறைந்திருக்கும்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 6, 2011 @ 12:23 pm