எங்கேயும் எப்போதும்

 

வெளிநாட்டில் நாயகி, நாயகனை ஆடிப் பாடச் சொல்லி கேட்கவில்லை, ஒற்றைப் பாடல் நாயகியின் ஆபாசமான அசைவுகளைப் பார்க்க சகிக்கவில்லை, ரெட்டை அர்த்த சிரிப்பு நடிகர்களோ டாடா சுமோ எதிரிகளையோ அதிலும் மும்பை இறக்குமதிகளையோ, ஏய், ஏய் என்று கூவும் தெலுங்கு இறக்குமதிகளையோ பார்க்க முடியவில்லை. பஞ்ச் நாயகனோ அந்த நாயகனைப் புகழ்ந்து கோரஸ் பாடி ஆடும் கூட்டத்தைப் பார்க்கும், பாராட்டும் பைத்தியக்காரர்களில்லை . தமிழே தெரியாத, பின்னணி பேசுவரால் கூட சரியாக உச்சரிக்க முடியாத வெள்ளைத் தோல் கவர்ச்சிக் கன்னிகளைத் தான் எங்கள் கண்கள் பார்க்கும் என்று மல்லுக் கட்டவில்லை. பக்கம் பக்கமாக வசனங்களைக் கேட்கும் பொறுமை இல்லை. ஒல்லி நடிகர் கில்லியாய் நூறு பேரைப் பறந்து அடிக்கும் நம்ப முடியாத சாகசக் காட்சிகளைப் பார்க்கும் தியாக உள்ளங்கள் இல்லை.
 
எளிமையான கதைக்குப் பொருந்தும் அழகான நடிகர் நடிகைகள், நல்ல கதை, இயக்கம், நல்ல உரையாடல், இசை,நல்ல செய்தி இருந்தால் போதும் என்ற நியாயமான எதிர்பார்ப்பால் கிட்டிய வரம் தான் எங்கேயும் எப்போதும். முருகதாஸின் உதவி இயக்குனர் சரவணன் அறிமுக இயக்குனராய் தன் முதல் படத்திலேயே அசத்தியிருக்கும் படம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல்களையோ காட்சிகளையோ பார்க்காமல் திரையரங்கில் போய் ரசிக்கும் ரசிகர்களுக்கு எதிர்பாராத அசத்தல் தீபாவளி விருந்து நிச்சயம். விருந்துடன் மருந்தும் கொடுப்பது போல் சமூக விழிப்புணர்வுச் செய்தியும் உண்டு.
 
கதை,கதை சொல்லும் உத்தி, இயக்கம், பாடல், ஒளிப்பதிவு, பாத்திரத்தேர்வு என்று அனைத்திலும் கச்சிதம். கதையை வெள்ளித்திரையில் பார்க்க வசதியாய் கதையைப் பற்றி எதுவும் எழுதப் போவதில்லை.
 
ஒரு திரைப்படத்தின் இறுதிக்காட்சியை முதலில் காட்டி விட்டு கதையை ஸ்வாரஸ்யமாகக் காட்ட முடியுமா? என்றால் சந்தேகமே. ஆனால் தன் மேலும் கதையின் மேலும் வைத்த நம்பிக்கை இயக்குனரை அப்படி இயக்க வைத்திருக்கிறது. சாலை விபத்துகள் பற்றிய செய்திகளை சாதாரணமாகப் படித்து  உச் கொட்டி விட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டும் அனைவரையும் உற்று நோக்க வைக்கும் கதை. பயணத்தின் முன்பு பேருந்து ஓட்டுனர்கள் மட்டுமல்லாமல் இரு சக்கர, மூன்று சக்கர வாகன ஓட்டிகளும் கவனமாக வாகனங்களைக் கையாண்டால் பெருமளவில் விபத்துகள் தவிர்க்கப்படும் என்பதை பளீரென பாத்திரங்கள் வாயிலாக உணர்த்திய நேர்த்தியான திரைக்கதை.
 
படம் முழுக்க அத்தனை யதார்த்தம். ஒன்றுக்கு இரண்டு நாயகர்கள், இரண்டு நாயகிகள். பத்திரமாத்து தங்கங்களாய் இயக்குனரின் செல்லப்பிள்ளைகளாய் சொன்னதைச் செய்து பாத்திரங்களுக்கு உயிரூட்டி மனங்களை அள்ளிச் செல்கிறார்கள்.
 
ஜெய் கதிரேசனாகவும் அஞ்சலி மணிமேகலையாகவும் வாழ்ந்துள்ளனர், அஞ்சலியின் ஆட்டம் கொஞ்சம் மிகைப்படியாகத் தோன்றினாலும் கடைசிக் காட்சியில் தன் காதலை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். அனன்யா- சர்வா ஜோடி ஜெய் ஜோடியை விட மனதில் ஒட்டிக் கொள்கிறது. அதிலும் அனன்யாவின் கண்களும் குழந்தைத்தனமான முகமும் நடிக்கும் முன்பே கைதட்டல்களை அள்ளிக் கொள்கிறது. பேருந்தில் பயணிக்கும் புதுமணத்தம்பதியர், பேருந்தில் காதல் கொள்ளும் மாணவர், சிறு குழந்தை, தன் குழந்தையைப் பார்க்க வெளி நாட்டிலிருந்து வரும் தந்தை, அவரது ரிங் டோன், அனன்யாவின் அக்கா என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் ஒரு நொடி கவனக்குறைவால் ஏற்படும் பின்விளைவுகளையும் விபரீதங்களையும் உணர்ந்து கவனமாகப் பயணிக்க வேண்டும்.
 
வேல்ராஜின் ஒளிப்பதிவு பேருந்துகளின் வேகத்தைக் காட்டும் போது திகிலாகவும் காதல் காட்சிகளின் போது கவிதைபதிவாகவும் மிளிர்கிறது.சத்யாவின் இசையில் 'கோவிந்தா' 'உன் பேரே தெரியாது' பாடல்கள் பார்க்கவும் கேட்கவும் நன்றாக அமைந்துள்ளன. யதார்த்தை மீறாத எளிமையான உரையாடல்கள் அட போட வைக்கின்றன.
 
பத்துக்கு பாதி திரைப்படங்கள் ஹீரோயிசத்தை நம்பியே எடுக்கப்படுவது வேதனையான விஷயம். அதில் ஓரிரு படங்கள் சதைகளை நம்பாமல் கதைகளை நம்பி எடுக்கப்படுவது ஆறுதல். புதுமுக இயக்குனருக்கு முகவரி கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சரவணனும் இவர் நம்பிக்கையைப் பொய்க்கவில்லை.
எங்கேயும் எப்போதும்-வாகன ஓட்டிகள் கவனம்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “எங்கேயும் எப்போதும்

  • October 11, 2011 at 8:01 pm
    Permalink

    Dear Mrs Gayathri…a well analysed and justified review…Please do contribute more…GOOD…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 11, 2011 @ 2:03 pm