தித்திக்கும் தீபாவளி

,வெடிச்சத்தம் என்று நகரங்கள் களை கட்டுகின்றன. தீபாவளி என்றால் சிலருக்கு இனிப்புகள், காரங்கள் உண்பது சிலருக்குப் பட்டாசு, வெடி வெடிப்பது, சிலருக்குப் புத்தாடையின் மீது மோகம், இன்னும் சிலரோ தீபாவளி அன்று வெளிவரும் திரைப்படங்களைப் பார்க்கச் செல்கின்றனர்.
விடுமுறை கொண்டாட்டத்தில் குதூகலிக்கும் மாணவப்பட்டாளம், தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்கத் துடிப்பவர்கள், சொந்த ஊருக்குத் தீபாவளிக்காகச் செல்லுபவர்கள், புத்தம் புதுக் கனவுகளைச் சுமந்து வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் நீச்சல் போடுபவர்கள் என்று மனிதர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இனிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது மட்டும் தீபாவளியன்று, தூய மனதுடன் இனிய எண்ணங்களை மனதில் விதைப்பதே உண்மையான தீபாவளி.
நாம் மட்டுமே புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பதற்குப் பதில் இயலாத ஏழைகளுக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாமே. ஏழைகள் என்றதும் அங்கும் இங்கும் தேடி அலைய வேண்டாம். பெரிய கடைகளில் விலை உயர்ந்த புடவைகளோ உடைகளோ பிடித்திருந்தால் என்ன விலை என்றாலும் கவலைப்படாமல் பணத்தை அள்ளி இறைக்கும் மனது தன் வீட்டு வேலைக்காரிக்கு ஒரு இருநூறு ரூபாயில் புடவை எடுத்துக் கொடுக்கத் தயங்குவது ஏன்? உங்கள் வீட்டு வேலைக்காரிக்கும் அவளது குடும்பத்திற்கும் துணிமணிகளும் பணமும் கொடுத்து அவர்கள் பூ முகத்தில் மத்தாப்பு பூப்பதை ரசித்துத் தான் பாருங்களேன்.
படிக்க வசதியில்லாத உங்கள் சொந்தத்திலேயே இருக்கும் ஏழை மாணவருக்குப் பருவத்தேர்விற்கோ கணினிப் பயிற்சிக்கோ பணம் கொடுத்து அவர்கள் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றலாம். வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்குப் புடவையோ வேஷ்டியோ எடுத்துக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் ஆசையுடன் அவர்கள் மனம் கவர்ந்த பொருட்களை தீபாவளி அன்று பரிசளிக்கலாம். சர்க்கரை நோயால் இனிப்புகளை உண்ண முடியாதவர்களுக்கு இனிப்புகளையே பரிசளிப்பதற்குப் பதில் தரமான சுயமுன்னேற்ற நூல்களைப் பரிசளிக்கலாம். தலை தீபாவளி காணும் தம்பதியினருக்கு குடும்பம் மற்றும் உறவுகளின் மேன்மை சம்பந்தமான புத்தகங்கள் கொடுத்து அசத்தலாம்.
வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டினருகில் இருந்தால் அதிகமாக வெடி வெடித்து தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும், அதுவே அவர்களுக்கு நிம்மதியான தீபாவளி.
தீபாவளியன்று காலையில் எழுந்தோம், கங்கா ஸ்நானம் செய்தோம்,பெருமாள் சேவித்தோம், பட்சணங்கள் சாப்பிட்டோம், தொலைக்காட்சி பார்த்தோம், வெடி வெடித்தோம் என்று சராசரியாகத் தீபாவளியைக் கொண்டாடாமல் வித்தியாசமானதாக அர்த்தமுள்ளதாகத் தீபாவளியாகக் கொண்டாடினால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை அனுபவித்து தான் பாருங்களேன்.
நாம் நம் குடும்பம் என்ற குறுகிய எண்ணங்களோடு இராமல் பிறர் வாழ்வில் தீப ஒளியை ஏற்றினோமானால் தீபாவளி இன்னும் தித்திக்காதா?
மனதில் உள்ள அசுர( நரகாசுர) எண்ணங்களை எரித்து புத்தம் புதியதாய் நல்லெண்ணங்களை மனதினில் ஏற்றி மனத்தூய்மையுடன் இறையைப் பிரார்த்தித்து நம்மால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி தீபாவளியைத் தித்திக்கச் செய்வோமே. உங்கள் தீபாவளி அர்த்தமுள்ளதாய்த் தித்திக்க மனம் கனிந்த நல்வாழ்த்துகள்.
Mrs Gayathri Venkat…Thank u very much for this memorable contribution; U have written very thoughtfully…lot many things to ponder over about our festivals and the way we celebrate them…As u say let us burn off all the bad thoughts from our heart and light the lamp of love & faith…the last paragraph of your article is truly appreciable, Gayathri…we expect regular such valuable contributions from you, Madam, PLEASE….