வேலாயுதம்

 

வரிசையாக மொக்கைப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் இந்தப் படத்தின் மூலம் கொஞ்சம் மூச்சு விட்டிருப்பார். படம் எந்த வகையிலும் புதுமையான படமில்லை. முதல்வன், அந்நியன் படங்களை நினைவுபடுத்தும் கதைதான். ஆனால் எத்தனை முறை ஊழலை எதிர்த்துப் படமெடுத்தாலும் மக்கள் பார்ப்பார்கள். அதிலும் விஜய் போன்ற ஒரு நடிகர் நடித்தால் அதை நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள். இது ஒன்றுதான் படத்தின் ப்ளஸ். இதனைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ, இயக்குநர், ஒரு படம் ஓடுவதற்கு என்ன தேவையோ அதனை சரியாகக் கலந்துகொடுத்துவிட்டார்.
 
படத்தின் முதல் 20 நிமிடங்களுக்கு விஜய் வரவே இல்லை. என்னவோ ஆப்கானிஸ்தான் எல்லை என்றெல்லாம் சொல்லி, ஒரு தெலுங்கு படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை வரவழைத்துவிட்டார்கள். இது தெலுங்கு படத்தின் ரீமேக்தான். அதற்காக தெலுங்கு படம் போலவே இருந்தால் எப்படி என்ற உணர்வு வரத் தொடங்கிவிட்டது. ஆனால் விஜயின் எண்ட்ரியிலிருந்து இடைவேளை வரை ஒரே காமெடி மழை. இதுதான் படத்தைக் காப்பாற்றப் போகிறது. அண்ணன் தங்கை படம் என்றதும் செண்டிமெண்ட் காட்சிகளில் அழ விடப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அத்தனை பாசக் காட்சிகளையும் காமெடியில் காட்டிவிட்டது இயக்குநரின் பெரிய வெற்றி. இப்படி காமெடி மழையில் நனைய வைக்கத்தான் முதல் 20 நிமிடங்களில் படபடவென கதையை ஒப்பித்துவிட்டார்கள் போல.
 
இடைவேளைக்குப் பிறகு ஒரு மணி நேரம் விடாமல் காதில் பூ சுற்றுகிறார்கள். லாஜிக் என்பது சுத்தமாகக் கிடையாது. விஜய் ஒரு முகமூடி மாதிரி உடையைப் போட்டுக்கொண்டு என்ன என்னவோ செய்கிறார். சொல்லி வைத்த மாதிரி குண்டு வைக்கும் கூட்டத்தைக் கண்டுபிடிக்கிறார். டிரயினை பிரேக் போட்டு நிறுத்தி சென்னையைக் காப்பாற்றுகிறார். பல பெண்களையும் கற்பையும் சேர்த்துக் காப்பாற்றுகிறார். எப்படா முடிப்பீங்க என்ற எண்ணம் வரும்போது, மீண்டும் இயக்குநர் சாமர்த்தியமாக, காமெடிக்குத் தாவுகிறார். பின்னர் ஒரு அசத்தல் கிளைமாக்ஸ். அதில் விஜய் 6 பேக்கோடு வரும் காட்சி மட்டும் காமெடி என்று எடுத்துக்கொள்ளவேண்டும். 
 
கிளைமாக்ஸில் வரும் வசனங்கள் பளிச். இரண்டு ஹீரோயின்கள் அதைவிட பளிச்! பாடல்கள் படத்துக்கு பெரிய பலம். அதுவும் ‘முளைச்சு மூணு இலைய விடலை’ பாடல் அட்டகாசம்.
 
படம் முழுக்க சுறுசுறு விஜயைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. காமெடி, சீரியஸ், செண்டிமெண்ட் காட்சிகள் என கலக்குகிறார் விஜய். கடந்த மூன்று படங்களின் தோல்வி தந்த எந்த ஒரு தடயமும் இல்லை. படம் முழுக்க ஃப்ரெஷான விஜயைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஆனாலும் அந்த சிக்ஸ் பேக் காட்சியை மறுத்திருந்திருக்கலாம்.
 
படம் முழுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அணில் வேலையைக் காட்டுகிறார் விஜய். எப்போதெல்லாம் டிவி வருகிறதோ அப்போதெல்லாம் அதில் ஜெயா டிவி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் தான் ஆளுங்கட்சி என்கிறார் விஜய். இது இப்போது விஜய்க்கு நன்றாகக் கைக்கொடுக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் தேவையற்ற ஒன்றாகவே அமையும். 
 
படத்திற்கு என்ன வில்லனை போடுவது என்ற குழப்பம் வந்தால் பேசாமல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் போட்டுவிடலாம் என்று திரையுலகம் முடிவு செய்துவிட்டது போல. ஏன் எதற்கு என்று தெரியாமல் இஸ்லாமியத் தீவிரவாதம். எனக்கே இவர்கள் மேல் பரிதாபம் வந்துவிடும் போல. இஸ்லாமியத் தீவிரவாதம் என்றால் உடனே ஒரு நல்ல இஸ்லாமிய போலிஸ் வரவேண்டும். இங்கேயும் அப்படித்தான். என்னென்னவோ வசனம் பேசிவிட்டு இந்தியன் என்றதும் குண்டடி பட்டுச் சாகிறார் அந்த போலிஸ். பாவம். இன்னொரு காட்சியில் ஒரு இஸ்லாமியர் அல்லா மேல் ஆணையா சொல்றேன் வேலாயுதம் வருவான் என்கிறார். கற்பனை கதாபாத்திரத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஜெனிலியா யோசிக்கும்போது வேலும் முருகனும் கண்ணில் தெரிய, எங்கே இரண்டு பேருக்கு சாமி வந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு பக்தி மயம்! 
 
இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்து, இஸ்லாமியத் தீவிரவாதம் அது இது என்பதையெல்லாம் ஒழித்துக்கட்டி, அரசியல் ஊழல் படமாக்கி, கொஞ்சம் டிரிம்மாக்கி இருந்தால், இன்னொரு கில்லியாக வந்திருக்கும். ஆனாலும் இது விஜயைப் பொருத்தவரை இது ஒரு வெற்றிப்படமாகவே இருக்கும்.

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “வேலாயுதம்

 • January 24, 2012 at 5:56 am
  Permalink

  விஜய் இடம் காசு வாங்கிவிட்டு விமர்சனம் எழுதின மாதிரி தெரிகிறது!

  Reply
 • November 10, 2011 at 10:35 am
  Permalink

  படத்தில்தான் காதில் பூ சுற்றுகிறார்கள் என்றால், விமர்சனம் அதற்கு மேலாக இருக்கிறது. படத்தில் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக இருந்த காட்சிகள் என்றால், டிரெய்னில் வரும் காமெடியும், கிளைமேக்ஸ்க்கு முன்னால் வரும் காமெடியும் மட்டுமே. மற்ற எல்லா காட்சிகளுமே ஏதொ ஒரு படத்திலோ அல்லது ஏகப்பட்ட படத்திலோ பார்த்து ஏற்கனவே ரசிக்காதவை. அதுவும் விஜய்,பாசமலர் தங்கச்சிக்காக கோழி பிடிக்கும் காட்சி மகா கண்றாவி. அவன் அவன் 7 ஆம் அறிவு 8 ஆம் அறிவை பயன்படுத்தி படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, நம்மிடமிருந்து விடை பெற்றுக்கொண்டிருக்கும் தேவையற்ற அறிவை தேவையில்லாமல் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த படங்களின் தோல்வியின் சுவடே இல்லை என்பது உண்மைதான். அந்தச் சுவடுகளை அந்த படங்களின் தயாரிப்பாள்ர்களிடம் அல்லவா.
  கொடுத்து வந்துள்ளார் விஜய். ஆறறிவு முழுமையாக வளராத என் குழந்தைகளுக்கு படம் பிடித்துபோனதில் மட்டும் எனக்கு திருப்தி.

  Reply
 • November 10, 2011 at 10:33 am
  Permalink

  மனசுல(காயம்) பட்டதை சொல்லவா?

  Reply

Leave a Reply to வெங்கட்ராமன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 27, 2011 @ 1:36 pm