சபாஷ் ஜெ!

”விழாவில் கலந்து கொண்டவர்களுக்கான தங்குமிடச் செலவுகள் – 2.50 லட்சம் ரூபாய்; போக்குவரத்துச் செலவுகள் – 2 லட்ச ரூபாய்; கலந்து கொண்டவர்களுக்கான நினைவுப் பரிசுகள் – 23 லட்ச ரூபாய்; பூங்கொத்துகள் – 2.16 லட்ச ரூபாய்; சாப்பாட்டு செலவு – 9.18 லட்ச ரூபாய். ஆக மொத்தம் சுமார் 1 கோடி ரூபாய்” – இது என்ன கணக்கு என்கிறீர்களா?
 
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் துவக்க விழாவுக்கான செலவுகளின் பட்டியல் இது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி அறிவரசு பாண்டியன் என்பவர் எழுப்பியிருந்த கேள்விகளுக்காக கிடைத்துள்ள பதில் தான் இது!
 
இதைத் தவிர, “கொடையாளிகள் தரப்பிலிருந்து விழாவிற்காக 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது” என்றும் சொல்லியிருக்கிறார்கள். ”யாரந்த கொடையாளிகள்? என்ன செலவு செய்தார்கள்?” – விபரம் இல்லையாம்!
 
இதைத் தவிர, ”விதிமுறைகளின்படி, மாநிலத்தில் ஒரு நூலகம் அமைக்கப்பட வேண்டுமென்றால் அது குறித்து Director of Library மூலமாக வேண்டுகோள் எழுப்பப்பட்டு, அதனை அரசாங்கம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பொறுத்த வரை அப்படி ஒரு கோரிக்கை எழுப்பப்படாமல், கன்னிமாரா நூலகத்தின் இயக்குநர் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அதுவே விதிமுறைகளை மீறிய செயல் தான்” என்று சொல்லப்படுகிறது.
 
மொத்தம் புத்தகங்கள் வாங்கியதிலும் எக்கச்சக்க முறைகேடுகள் உள்ளன என்றும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவருகிறது.
 
அறிவரசு பாண்டியன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி எழுப்பிய மற்றொரு கேள்விக்கு கிடைத்துள்ள பதிலின் படி, கிட்டத்தட்ட 39 புத்தகங்களை அவற்றின் விற்பனை விலையை விட கூடுதலாக வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் அதிகத் தொகை செலவிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
அண்ணா நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்திற்கும் டெண்டர் கோரப்பட்டதா அல்லது விளம்பரம் செய்யப்பட்டதா என்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விக்கு, “இல்லை.. எந்த எந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்தது. அதைத்தான் வாங்கியுள்ளோம்” என்றும் பதில் வந்துள்ளது.
 
டெண்டர் சட்டப்படி 50 கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் அது ஓபன் டெண்டர் மூலமாகவே செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
 
ஆக, விலையெல்லாம் நன்கு தெரிந்த புத்தகங்களிலேயே இவ்வளவு தகிடுதத்தம் என்றால் இதைத் தவிர அந்த ஒட்டு மொத்த கட்டடத்தை கட்டுவதிலும் என்ன என்ன தில்லுமுல்லுகள், முடிச்சவிக்கித்தனங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை எத்தனை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பி கண்டு பிடிக்க வேண்டுமோ!
 
ooOoo
 
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கன மழை! சாலைகள் படு மோசமாக பாதிக்கப்பட்டு விட்டன.
 
சென்னையின் முக்கியமான ஆற்காடு சாலையில் ஆங்காங்கே படு பயங்கர குழிகள். தினமும் பலர் வண்டியுடன் விழுந்து அடிபட்டு ரத்தக் காயத்துடன் தான் வீட்டிற்குத் திரும்பினர்.
 
ஆற்காடு சாலையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள சென்னை பைபாஸ் ரோட்டிலும் இதே கன மழை தான் பெய்தது. ஆனால் அந்தச் சாலை மட்டும் எப்படி எந்த பாதிப்பும் இல்லாமல் வழ வழ என்று இருக்கிறது?
 
ஈ.சி.ஆர். சாலையும் அப்படி தான். எந்தப் பிரச்னையும் இல்லை!
 
ஆக தனியார் பராமரிக்கும் சாலையின் பிரச்னை இல்லை. மலை முழுங்கி மகாதேவன்கள் காண்ட்ராக்ட் எடுத்துப் போடும் சாலைகள் தான் பிரச்னையே! 
 
தமிழக அரசு பேசாமல் அனைத்து சாலைகளையும் தனியார் வசம் ஒப்படைத்து விட வேண்டும்.
 
ooOoo
 
தொடர் தேர்தல் தோல்விகளாலும், ரவுண்டு கட்டி அடிக்கும் நில ஊழல் கம்பி எண்ணல்களாலும் பைத்தியம் பிடித்துத் திரிகிறார்கள் திமுகவினர். 
 
இவர்கள் என்ன சொன்னாலும், பேசினாலும் மக்கள் மத்தியில் துளிக்கூட எடுபடாது என்பது நிருபணம் ஆகி விட்டது.
 
ஆனாலும் இருப்பைக் காட்டிக் கொள்ள குரல் கொடுக்க வேண்டுமே. அதைக் கூடச் செய்யாவிட்டால் நேற்று வந்த விஜய்காந்த் கட்சியினர் கூட காறித் துப்புவார்களே!
 
அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மண்டை குழம்பி போய் அவர்கள் கட்சித் தலைமையின் பாணியில் ஜாதியைப் பிடித்து திட்டும் அநாகரிக அசிங்க அரசியலில் குதித்துள்ளார்கள்.
 
‘பார்ப்பன’ ஜெயலலிதா, ‘பார்ப்பன’ தினமலர், ‘பார்ப்பன’ சோ, ‘பார்ப்பன’ சுப்ரமணிய சாமி… இப்படி அவர்கள் பார்க்குமிடமெல்லாம் பார்ப்பனர்கள் தான் எதிரிகள்! சோ. அய்யர் என்று பெயர் வைத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூட இவர்களுக்கு ‘பார்ப்பனர்கள்’ தான்! கொடுமை!
 
ஜெ. பெங்களூர் வழக்கில் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்குவதை குறை சொன்ன இவர்களாம் டெல்லியில் கனிமொழிக்கு ஜாமீன் மனுவுக்கு மேல் ஜாமீன் மனு போடாமல் இருக்க முடியவில்லை. இன்னும் கொஞ்ச நாள் ஆனால், உலகிலேயே அதிக ஜாமீன் மனு போட்ட ஒரே கைதி கனிமொழி தான் என்ற கின்னஸ் ரெக்கார்ட் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
 
”கருணாநிதி ஊதுவதில் வல்லவர்” என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒருமுறை கூறியதற்கு, “ஐயகோ, இளங்கோவன் என்னை ஜாதியைக் குறிப்பிட்டு அப்படி சொல்லிவிட்டார்” என்று புலம்பல் கீதம் பாடிய கருணாநிதி & குழுவினர் தான் இப்போது மூச்சுக்கு முன்னூறு தடவை ‘பார்ப்பன’ ஜெயலலிதா என்கிறார்கள்.
 
“ஆமாம்.. நான் பாப்பாத்தி தான்” என்று சட்டசபையிலேயே முழக்கமிட்டார் ஜெ. என்ன செய்ய முடிந்தது இவர்களால்?!
 
மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். இனியும் தொடர்ந்து கருணாநிதி & குழுவினர் இப்படி ஜாதியை இழுத்து பேசி, ஒத்து ‘ஊதி’க் கொண்டிருந்தால் மக்கள் இன்னமும் மரண அடியைத்தான் தருவார்கள் என்பது நிச்சயம்! (இல்லாவிட்டால் மட்டும் என்ன. அதே கதி தான் என்கிறீர்களா? அதுவும் சரி தான்!)
 
ooOoo
 
தமிழகம் முழுவதும் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்கள் நலப் பணியாளர் பதவி 1990-ல் திமுக ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் உதவி புரிவதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார்கள் என்று சொல்லப்பட்டது.
 
நியமிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் பேரும் ஏற்கனவே 1991 மற்றும் 2001ல் அதிமுக ஆட்சியின் போது நீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பதும்,  நீக்கம் செய்யப்பட்டிருந்த பணியாளர்கள் மீண்டும் கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இப்போது கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின் போது இந்த மக்கள் நலப்பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபட அரசு தடை விதித்திருந்தது.
 
“திமுக ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டதாலேயே இவர்களை பணியிலிருந்து அரசு தூக்கிவிட்டது” என்று திமுகவினர் தரப்பில் சொல்லப்படுகிறது. உண்மை தான். இவர்களுக்கு தொகுப்பூதியம் தான் வழங்கப்பட்டது. இவ்வாறு மக்கள் நலப்பணியாளர்களாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அனைவருமே திமுகவினர் என்பது அனைவருமே அறிந்த உண்மை.
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே பல இடங்களில் இந்த மக்கள் நலப் பணியாளர்கள் தேர்தல் நடைவிதிகளை மீறி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரத்திலெல்லாம் கூட ஈடுபட்டார்கள்.
 
இந்த மக்கள் நலப்பணியாளர்களால் கிராமப்புறங்களில் உருப்படியாக ஒரு வேலையும் நடைபெறவில்லை என்பது தான் உண்மை.
 
எனவே, அவர்களை வேலையிலிருந்து தூக்கியது தான் நல்லது!
 
ஏற்கனவே வேலையில் வைத்தாகிவிட்டது என்பதற்காக பரிதாபப்பட்டு தொடர்ந்து தொகுப்பூதியம் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க அரசு என்ன தர்மசத்திரமா என்ன?!
 
சபாஷ் ஜெ!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “சபாஷ் ஜெ!

  • November 10, 2011 at 12:44 am
    Permalink

    ஒரு கட்டிடத்தை கட்டுவதில் ஊழல் என்பதால் அதை மாற்ற தேவைஇல்லை.. 2G ஊழல் என்பதால் ஒட்டு மொத்த தொலைதொடர்பு சேவையை நிறுத்தச்செய்தால் எப்படி இருக்கும் .! பயன்பாடு முக்கியம். தவறு செய்பவனை தண்டிப்பது அதைவிட முக்கியம்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 9, 2011 @ 11:07 pm