ஏழாம் அறிவு
கஜினி படக் கூட்டணி என்பதாலும் போதி தர்மரைப் பற்றிய வித்தியாசமான கதைக்களம் என்பதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பொய்க்கவில்லை.

போதிதர்மரால் விரட்டப்பட்ட நோயைச் சீன நாடு இந்தியாவிற்குப் பரப்ப நினைக்கிறது. அவ்வாறு நோயைப் பரப்பி அதற்கு போதிதர்மரால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைச் சீன நாடே தந்து இந்தியாவை அடிமைப்படுத்தத் துடிக்கிறது. அதற்கு சுருதியின் ஆராய்ச்சி தடையாக இருக்க அவரை அழிக்கவும் நோயைப் பரப்பவும் தன் நாட்டின் நோக்கு வர்மத்திலும் தற்காப்புக்கலைகளிலும் திறமையான ஜானை இந்தியாவிற்கு அனுப்புகிறது.
மறைந்த போதிதர்மனின் ஆற்றலையும் திறமைகளையும் மீண்டும் கொண்டு வர முடியும் என்பதைத் தன் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கும் சுருதி போதிதர்மனின் சந்ததியில் அதற்குப் பொருத்தமானவரைக்
கண்டுபிடிக்கிறார். வேறு யார்? நம் சூர்யாவே தான். சூர்யாவின் காதலைத் தன் ஆராய்ச்சிக்குச் சாதகமாக்க முயற்சிக்கிறார். சுருதியின் ஆராய்ச்சி வென்றதா? ஜானின் திட்டங்களை சூர்யா முறியடித்தாரா? சூர்யாவின் காதல்? போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ஆடல், பாடல், வித்தியாசமான சண்டைக்காட்சிகளுடன் "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று பெருமைப்படும் கருத்தையும் முன்வைக்கிறார்.
சீனர்களால் தாமோ என்று அன்புடன் அழைக்கப்படும் காஞ்சிபுரத் தமிழர் ஒருவரை இனம் கண்டு கொள்ளும் முயற்சியாக ஏ.ஆர்.முருகதாஸ் படைத்திருந்தாலும் படத்தின் சிற்சில காட்சிகளில் அழுத்தத்தையும் சுவாரஸ்யத்தையும் உருவாக்கியிருந்தால் ஏழாம் அறிவு இன்னும் அழகாய் ஜொலித்திருக்கும்.
போதிதர்மனைப் பற்றிய ஆரம்பக்காட்சிகள் அசத்தல். பிறகு ஹீரோ அறிமுகப்பாடல், வேகமாகப் பயணிக்க வேண்டிய திரைக்கதையில் சோகப்பாடல் என்று மசாலாவிற்குள் இறங்கியது ஏனோ? ரசிகர்களைத் திருப்திப்படுத்த என்று எடுத்துக் கொண்டாலும் சில காட்சிகள் படத்தில் ஒட்டாமல் தனியே தெரிந்து தொய்வை உண்டாக்குகிறது. மெய்சிலிர்க்கச்செய்யும் காதல் காட்சிகள் இல்லை.
சூர்யாவைப் பற்றித் தனியே விமர்சனம் எழுதும் அளவிற்கு அசத்தி இருக்கிறார். அவர் கடந்து வந்த பாதைகளில் இந்தப் படம் மைல்கல் என்றால் மிகையாகாது. போதிதர்மனாகவும் அரவிந்தாகவும் வேறுபட்ட நடிப்பினை வழங்கியிருக்கிறார்.
இறுதிக்காட்சியில் சூர்யாவின் சிக்ஸ்பேக் தேகமும் சண்டைக்காட்சிகளும் அவரின் தொழில் பக்தியைக் காட்டுகிறது. படத்திற்குப் படம் வித்தியாசம் காட்டும் சூர்யாவிற்குப் போட்டியாக இவரது படங்களே வந்து விடுமோ என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் மனிதர் கலக்குகிறார்.கதாநாயகனை விட நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் சுருதி நடிக்கப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்த சூர்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சண்டைக்காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறார்.
தெலுங்கு, தமிழ் பட எதிரிகள் நாக்குவர்மத்தில் பஞ்ச் வசனங்கள் பேசி ஆய்,ஊய் என்று கத்திக் கொண்டிருக்க, வசனங்கள் அதிகமில்லாமல் நோக்கு வர்மத்தாலேயே அடுத்தவர்களைத் துவம்சம் செய்பவராக அசத்தி இருக்கும் ஜானி ட்ரைங்யென் பெருமைக்குரிய வரவு. 'ஸ்பைடர்மேன்' ஆங்கிலப்படத்தில் கிரீன்காப்லின் கதாபாத்திரத்துக்கு டூப்பாக நடித்துள்ளவர். இவருக்கும் சூர்யாவிற்குமான பீட்டர்ஹெய்னின் சண்டைக்காட்சிகள் ஒவ்வொரு ரசிக ரசிகரையும் நாற்காலியின் நுனிக்கு வரச் செய்யுமளவிற்கு அட்டகாச அதிரடிகள். இவர் நோக்கும் போதும் சிரிக்கும் போதும் பின்னணியில் ஒலிக்கும் ஹாரிஜ் ஜெயராஜின் இசை அனைவரையும் பயமுறுத்தும்.
கலைக்குடும்ப வாரிசான சுருதி ஹாசனின் அறிமுகம் வெற்றிக் கூட்டணியில் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். சுருதி கொள்ளை அழகு. இவர் தொழில் பக்தியுடன் தமிழை மட்டும் இன்னும் சிறப்பாகப் பேசுவாரானால் சுருதியின் அலை அடிக்க வாய்ப்பு இருக்கிறது. சூர்யா,சுருதி, ஜானியைச் சுற்றியே கதை நகருவதால் மற்ற நடிகர்கள் குட்டிப் பாத்திரங்களில் வந்து போகிறார்கள். ஹாரிஜ் ஜெயராஜின் இசையில் 'முன்னந்திச்சாரல் நீ' பாடலும் 'ஏலோ எலம்மா' பாடலும் அருமை. ஒளிப்பதிவு செய்த ரவி.கே.சந்திரனின் கைகளுக்கு வைர மோதிரம் பரிசளிக்கலாம். அதிலும் போதிதர்மனின் பயணம் தொடர்பான காட்சிகள் அற்புதம். படத்தொகுப்பாளரின் பங்களிப்பும் கலை இயக்குனரின் உழைப்பும் சண்டைகலை நிபுணர் பீட்டர் ஹெயினின் அதிரடியும் பாராட்டத்தகுந்த அம்சங்கள்.
வரலாற்றுக்கதை என்பதற்காக அலுத்துப் போகும் காட்சிகளை வைக்காமல் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் கலகலப்பாகவும் தமிழனின் பெருமைகளை எடுத்துக்காட்ட முயன்ற ஏ.ஆர்.முருகதாஸின் உழைப்பை மனதாரப் பாராட்டலாம். இனி வரும் காலங்களில் சிறந்த படைப்பைத் தரவும் குறைகளை அகற்றிக் கொள்ளவும் இந்தப் படத்தின் வெற்றியும் விமர்சனங்களும் ஊக்கமளிக்கட்டும். ஏழாம் அறிவு-தமிழனின் வீரத்தைப் பறைச்சாற்ற முயன்ற திரைப்பதிவு.
Rubbish Movie from A R MURUGADOSS..!
If this film is a crown for Tamilan means” Why in telugu version Bodi dharmar was born in Guntur? Really the fact is 7am arivu, a movie which is running because of Advertisements!Please try to digest the above said matter.