அரசு சார்பில் காலண்டரே தேவையில்லை

ஏப்ரல் 13-ம் தேதியன்று தேர்தல் தமிழக மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
 
மே-13ம் தேதியன்று அதிமுக அரசு மக்களால் அமோக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மக்களின் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது மறைமுகமாக. 
 
எப்படி தெரியுமா?
 
அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த தமிழக அரசின் அதிகாரப்பூர்வ காலண்டர் தூக்கி கடாசப்பட்டது.
 
அனைத்திலும் கருணாநிதியின் புகைப்படங்களும் அவரது அருமை, பெருமைகளும் இருந்ததே!
 
கூடவே மாநிலம் முழுவதும் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் ‘நான், எனது என்றால் வாய் ஒட்டாது.. நாம் என்றால் தான் உதடுகள் ஒட்டும்” என்ற உலகப் பெருமை வாய்ந்த மஞ்சள் கலரில் பின்னணியில் எழுதப்பட்டிருந்த பொன்மொழிகளும் மறைக்கப்பட்டன.
 
புதிதாக காலண்டர் அச்சிடப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டன. நல்லவேளை.. அதை மே மாதம் முதல் அச்சடித்தார்கள். எந்தப் புண்ணியவானாவது உட்கார்ந்து யோசித்து ஜனவரி முதல் இன்னும் 5 மாதங்கள் சேர்த்து அடித்தால் இன்னும் காசு பார்க்கலாம் என்று கிளப்பி விடாமல் விட்டார்களே.
 
எத்தனை செலவு? யார் வீட்டு காசு?
 
இதில் புதிய ஆட்சியைக் குறை செய்ய முடியாது. போன ஆட்சி தான் முழுக் குற்றவாளி.
 
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். 
 
இந்த காலண்டர்கள் அச்சிடுவதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்துத் துறை கூட்டத்திலேயே இது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டதாம். “அப்போ திரும்ப நாங்க ஆட்சிக்கு வரமாட்டோமுன்னு சொல்றீங்களா?” என்று பதில் கேள்வி வந்ததாம்.
 
எப்போதுமே தேர்தல் நடுவில் தான் வருகிறது. எனவே தேர்தல் வரும் ஆண்டில் அரசு சார்பில் காலண்டர் அச்சடித்தால் அதில் முதல்வர் படமோ, அந்த அரசு அறிவித்த திட்டங்களின் பெயரோ இல்லாமல் பொதுவாக தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள், சுற்றுலாத் தலங்கள் குறித்து மட்டுமே படங்கள், தகவல்கள் அச்சடிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
 
அதை விட, அரசு சார்பில் காலண்டரே தேவையில்லை என்று கூட திட்டம் கொண்டு வரலாம். 
 
ooOoo
 
''தமிழகத்துக்கும் கேரளாவுக்குமான எல்லைப் பகுதியில் மட்டுமே நடமாடிவந்த நமது இன்டெலிஜென்ஸ் போலீஸார், மஃப்டியில் கேரளத்துக்குள் நுழைந்து இருக்கிறார்களாம். கேரளாவில் நடப்பதை முதல்வருக்கு உடனடியாகச் சொல்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. முதல்வரின் கறார் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை'' என்று சொல்லி விட்டுப் பறந்தார்.
 
– ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் இப்படி ஒரு பெட்டிச் செய்தி வெளியாகியிருக்கிறது. ’டெஸ்க்டாப் ஜர்னலிஸம்’ என்றால் உட்கார்ந்த இடத்திலிருந்தே கதை விடுவது என்று ஒரு அர்த்தம் சமீப காலங்களில் பத்திரிகை உலகில் சரளமாக புழங்கி வருகிறது.
 
பாரம்பரிய பத்திரிகை என்று பெயரெடுத்த ஒரு பத்திரிகையில் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
 
ஏற்கனவே இரு தரப்பிலும் கொழுந்து விட்டெறியும் பிரச்னையில் இப்படியெல்லாம் கிளப்பி விட்டால் பிரச்னை இன்னமும் அதிகமாகத்தான் செய்யும்.
 
இந்த மாதிரியான ‘இருக்கிறார்களாம்’ டைப் செய்திகளில் இரண்டு வகை உண்டு. முதலாவது, உண்மையிலேயே நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் சொல்லி அதனை வெளிப்படையாக எழுத முடியாதது. உதாரணத்திற்கு மேலே உள்ள காலண்டர் செய்தியில் அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு உயரதிகாரியே நேரில் சொல்லி வருந்திய செய்தி அது! அடுத்தது பொதுவாக நாமே நினைத்ததை “சொன்னார்களாம்.. போனார்களாம்” என்று எழுதுவது. இதற்கெல்லாம் ஆதாரமும் கேட்க முடியாது. 
 
சமீப காலங்களில் ஜூனியர் விகடன் கட்டுரைகளைப் படித்தால் முழுக்க முழுக்க இந்த மாதிரியான ‘போனார்களாம், வந்தார்களாம்’ என்ற ரீதியிலான கட்டுரைகள் தான் அதிகம். 
 
’ரொம்ப ஸேஃப்ஃபா ப்ளே பண்றாங்களாம்’!
 
ooOoo
 
அமைச்சர் பதவியிலிருந்து பரஞ்சோதி ராஜினாமா செய்த (நீக்கப்பட்ட) சில மணி நேரங்களுக்கு முன்..
 
திமுகவின் ஜால்ராக்கள் நடத்தும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து ஒரு தகவல் எனக்கு நண்பர் ஒருவர் மூலம் மெயில் அனுப்பப்பட்டது. சாதாரணமாக இந்த காமெடி பீஸ்களை நான் கண்டு கொள்வதில்லை என்றாலும் அன்று பொழுது போகாமல் பார்த்துத் தொலைத்தேன்.
 
‘அக்யூஸ்ட் பரஞ்சோதியை இன்னமும் அமைச்சராக வைத்திருக்கிறார் அக்யூஸ்ட் முதல்வர்”
 
கொஞ்ச நேரத்தில் பரஞ்சோதி பதவி போன உடனே, அதே காமெடி பீஸ் அடுத்த ஸ்டேட்டஸ் மெசேஜ் : “பரஞ்சோதி பதவி பறிப்பு. தினம் தினம் அமைச்சர்களை மாற்றுகிறாரே துக்ளக் தர்பாரில்!” என்று புலம்பல்.
 
குறுநில மன்னர்களைப் போல கால காலமாக என்ன தப்பு செய்தாலும், கொலையே செய்தாலும் அவர்களைத் தவிர சொந்தக் கட்சியிலேயே (?!) வேறு எவனும் முன்னேறிவிடக்கூடாது என்று காட்டாட்சி நடத்துவது சரியா? அல்லது நிர்வாக சீரமைப்புக்காக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் தொடர்ந்து கண்காணித்து சரியில்லாதவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து புணரமைப்பது சரியா?

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “அரசு சார்பில் காலண்டரே தேவையில்லை

 • December 12, 2011 at 10:02 pm
  Permalink

  உண்மையை அப்படியே எழுதியிருக்கீங்க! ஜூவி ஆரம்பித்த நாள் முதல், வாசகியான நான் இப்பொழுது அதன் ரிபோர்டிங் தரத்தில் வித்தியாசத்தை உணர்கிறேன்.
  amas32

  Reply
 • December 12, 2011 at 9:19 pm
  Permalink

  அதை விட, அரசு சார்பில் காலண்டரே தேவையில்லை என்று கூட திட்டம் கொண்டு வரலாம்.

  100% true. even in Karnataka the same issue.

  Reply
 • December 12, 2011 at 9:09 pm
  Permalink

  மூன்றுமே சிந்தனையை தூண்டும் விசயங்கள். மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். கட்சித் தொண்டர்களும் சிந்திக்க வேண்டும்.

  Reply
 • December 12, 2011 at 8:54 pm
  Permalink

  கோடிகளில் மக்கள் வரிப்பணம் பல வகைகளில் வீணாவதை அறிவேன். ஆனால் இந்த காலண்டர் விஷயம் மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.இனி அரசு அச்சடிக்க தேவை இல்லை என்ற உங்கள் கூற்று மிக சரியானது. (௨) ஊர்ஜிதப்படுத்தாத விசயங்களுக்காக ஜுவி செய்து கொண்டிருக்கிறது.தொழில் போட்டி? (3)அந்த அம்மா மன நிலை அறிந்து தக்க சமயத்தில் கோல்மூட்டி விடுபவர்களின் கைகளில்தான் எல்லா திடீர் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.இந்த அம்மாவுக்கு ஒரு பக்கம் பயம், ஜோதிடம்,ஸ்டடி இல்லா மைண்டு.
  நன்றி தொடர்ந்து என்போன்றவர்களுக்கு தெரிய படுத்திக்கொண்டே இருங்கள். வாழ்த்துகள்.

  Reply

Leave a Reply to amas32 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 12, 2011 @ 3:42 pm