சீசன் கச்சேரியை சிம்பிளாக் கேட்கலாம்

செல்ல முடிந்தவர்கள் பல ஆயிரம் என்றால், குழந்தைகளின் பள்ளி, விடுப்பு எடுக்க முடியாத நிலமை, வெகு தூரத்தில் இருந்து சென்று வரும் செலவு என்று பல காரணங்களினால் சென்னைக்கு செல்ல முடியாமல் இருக்கும் ரசிகர்கள், அவர்களில் பல மடங்கு. புத்தகங்களிலும் வலைத்தளங்களிலும் வரும் விமர்சனங்கள், பாடப்பட்ட பாட்டுகளின் அட்டவணைகள், சமயத்தில் கிடைக்கும் ஒலிப்பதிவுகள், எப்பொழுதாவது கிட்டும் நகர்பட துணுக்குகள் என்று கிடைத்ததை வைத்து திருப்திப்பட்டுக்குக் கொள்ளும் நிலைமைதான் இவர்கள் நிலைமை. ஜெயா டிவியில் வரும் மார்கழி மகோத்ஸ்வம் நிகழ்ச்சிதான் ஒரு கச்சேரியை முழுமையாக பார்க்கவும் கேட்கவும் கிடைத்த சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனால் இதைத் தவிர தொலைவில் இருந்து பங்கு பெற வழி இல்லையா? அதற்குத் தொழில்நுட்பம் இல்லையா என்பது இந்த ரசிகர் குழாமின் தொடர்ந்த கேள்வியாக இருந்தது.

கடந்த சில வருடங்களாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில கச்சேரிகள் இணையத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் இணைய வேகம் காரணமாகவும் வேறு சில தொழில்நுட்பப் பிரச்சினைகளாலும் இது போன்ற முயற்சிகள் அரிதாகவே நடந்தன. அது மட்டுமில்லாமல் நேரடி ஒளிபரப்பு என்றானதால் மற்ற நாடுகளில் வசிப்பவர்களுக்கு அது உகந்த நேரத்தில் வருவதில்லை. பதிவு செய்யப்பட்டு பின் காணக்கூடிய வகையில் கிடைத்த கச்சேரிகளின் எண்ணிக்கையை விரலை விட்டு எண்ணி விடலாம். சார்சுர் போன்ற நிறுவனங்கள் சில கச்சேரிகளை சிடிகளாக கொண்டு வரும் பொழுது அந்த கச்சேரிகளை அவர்களின் இணைய தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொள்ளவும் வழி செய்து இருக்கின்றனர். இந்த வருடம் ஸ்வானுபவா என்ற அமைப்பு, அவர்கள் நடத்திய பல செய்முறை விளக்கக் கூட்டங்களையும் கச்சேரிகளையும் நேரடி ஒளிபரப்பாகவும் அதற்குப் பின் சில நாட்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கும்படியாகவும் வசதி செய்து தந்திருந்தார்கள். ஆனால் இது சீசன் சமய நிகழ்வு இல்லை.

இதை எல்லாம் தாண்டி இந்த முறை மேலும் ஒரு சிறப்பான ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டு இருக்கிறது. பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் கச்சேரிகள் மூன்றினை இணையத்தின் மூலம் காண்பதற்கான வசதி செய்யப்பட்டிருக்கிறது. இவை உயர்தரத்தில் ஒளிபரப்பப்பட இருக்கின்றன. நடக்கும் பொழுது பார்க்க இயலாதவர்களுக்காக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்நிகழ்ச்சிகள் காணக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விபரங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றன – http://tmkrishna.com/webcast/streaming.php
டிசம்பர் சீசனில் பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரி இது போல் நேரலையாகக் காணக் கிடைப்பது இதுவே முதல்முறை. வரும் வருடங்களில் இது போல பல கச்சேரிகள் வந்தால் சென்னைக்குச் செல்ல முடியாதவர்கள் சீசனில் கலந்து கொள்வது என்பது நடக்கக்கூடியதாகவே ஆகிவிடும். இதெல்லாம் சரி, ஆனால் நாங்கள் சபா கேண்டீன் சமாச்சாரத்திற்கு என்ன செய்ய என்று கேட்பவர்களுக்கு சென்னைக்கு டிக்கெட் போடுவதைத் தவிர வேறு விமோசனமே கிடையாது!
Photo Courtesy : Mr. Hariharan Sankaran
Photo 3 – Dr.Sunder and Dr. Padma Subrahmanyam at the Lec Dem Festival