கவரும்.. கவரேஜும்

செய்தித்தாள்களிலோ, பத்திரிகைகளிலோ நமது பெயர் வர வேண்டுமென்றால், ஒரு கதையையோ, கட்டுரையையோ,கவிதையோ எழுதி அனுப்பினால், அது பிரசுரமாகும் பட்சத்தில், அந்த கதையொடு அல்லது கவிதையொடு, நமது பெயரும் இடம் பெறும் அல்லது எதாவது போட்டியில் வெற்றி பெற்றாலோ, விளையாட்டில் சாதனை செய்தலோ, பத்திரிகைகளில் நமது புகைப்படத்துடன் பெயரும் இடம் பெறும் வாய்ப்புண்டு. . இப்படி எதாவது ஒரு வகையில் தனது திறமையை காண்பித்து, தனது பெயரை இடம் பெற செய்ய, பிரம்ம பிரயத்தனம் செய்து சாதித்து நம் முன்னே இப்பொதும் மிக பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் பலர். இவ்வாறு, பத்திரிகைகளில் செய்தித்தாள்களில், தமது பெயர் இடம் பெற்றதை காட்டி காட்டி, சந்தோஷப் பட்டவர்கள் பலர். முதன்முதலில், பத்திரிகைகளில் தங்களது பெயர் இடம் பெற்ற போது அடைந்த சந்தோஷத்தை, தங்களின் வளர்ச்சியில் ஒரு அங்கமாக, பாலமாக பத்திரிகைகள் விளங்கின என்று இன்றும் அந்த பிரபலங்கள், தங்களது இன்றைய பேட்டிகளிலும் மறக்காமல் சொல்லும் போது, பத்திரிகைகளின் சக்தியை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சாட்டிலைட் சானல்கள் இல்லாத அந்த காலத்தில், செய்திதாள் மற்றும் பத்திரிகைகளின் பங்களிப்பு, மேடை நாடகங்கள், வானொலியை மீறி மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை எற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட, சரித்தரத்தின் ஒரு அங்கமான நமது சமுதாயத்தின் நான்காவது தூணான, செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளின் (இதில் சாட்டிலைட் சானல்களான ஊடகங்களும் அடங்கும்).இன்றைய நிலையை எடுத்து சொல்வதற்கு
வேதனையாக இருந்தாலும், சொல்ல வந்தது நியாயம் என்று உணர்வீர்கள் என்பது உண்மை.

கோவாவின் பிரபல ஆங்கில நாளேடான "ஹரால்டு" செய்தித்தாளின் விற்பனை மேலாளரும், அடுதத ஆண்டு அங்கு நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை "ஹிந்து" நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டதில், செய்தித்தாள்களின் சாயம் வெளுத்து போனது உண்மை. அதையே இன்னோரு செய்திதாளில் அதை வெளியிட்டது தான் ஆச்சரியம். அந்த உரையாடலின் சாரம்சம் … அந்த போட்டியிடும் வேட்பாளர், தன் பேட்டி(சுய விளமப்ரம்தான்) அந்த நாளேட்டில்
பிரசுரமாவதற்கு, அந்த நாளேட்டியின் மேலளார் அன்பளிப்பு (லஞ்சம்) கேட்டது தான். மேலும், அந்த நாளேட்டின் சாட்டிலைட் சானலிலும் அவரது பேட்டியும் இடம்பெறும் என்பது போனஸ். ஒருவர் தனது சுய விளம்பரத்திற்காகவும், மற்றவர் தன் சுய லாபத்திற்காகவும்(கல்லா கட்டுவதுதான்), பத்திரிகை தர்மத்தை தூக்கி ஏறிந்து விட்டு செய்த செயல் வெட்ககேடானது. ஆனால், இதில் ஏமாளியாக்கப்பட்டது யார் என்றால், கண்டிப்பாக நாம் தான். பத்திரிகைகளில் ஒருவர் பற்றி செய்தி வந்தால், அது உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில்
படிக்கும் மக்களுக்கு, இந்த செய்தி "இடி" தான் என்று சொன்னால் அது இல்லை என்று சொல்ல முடியும். ஏனென்றால், ஏற்கனவே பல நாலந்தர நாளேடுகள் இப்படிதான் செய்திகளை வெளியிடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நடு நிலை நாளெடு என்று சொல்லி கொண்டு வரும் பிரபல நாளிதழ்களில் இப்படி செய்தி வருமானால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல், மற்ற நாளிதழ்களும் இப்படிதான் செய்திகளை வெளியிடுகின்றன என்ற முடிவுக்கு வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அடுத்து திரு. அத்வானி அவர்களின் ரதயாத்திரையை "கவரேஜ்" செய்ய "கவர்"(அதாங்க பணம்) கொடுத்த செய்தியை அனைவரும் அறிவீர்கள். "கவர்" வாங்கிய ஒரு பத்திரிகையாளர் அதை திருப்பி கொடுத்ததுதான், விஷயம் வெளியே வர காரணம். "கவர்" கொடுத்தால் "கவரேஜ்" என்ற எழுதப்படாத உறுதிமொழியை எடுத்துக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கும் நாளிதழ்களும், பத்திரிகைகளும் எண்ணிலடங்கா. இதில் சினிமா சம்மந்தப்பட்டவர்களின் கவரேஜ்தான் அதிகம். புதுமுகம் அறிமுகம்.. சினிமா செய்திகள்.. சுய பிரதாபங்கள் (போட்டோ மற்றும் பேட்டிகள்).. பட விமர்சனங்கள்.. கிசு கிசுக்கள்.. போன்ற சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து "கவரேஜ்"களும், நம்மிடையே கொண்டு வந்து சேர்பதற்கு, மனம் இல்லை இல்லை "பணம் இருந்தால் மார்கமுண்டு" என்பதுதான் இன்றைய பத்திரிகைகளின் தாரக மந்திரம். இதில் அரசியல்வாதிகளும் சேர்ந்ததுதான், பத்திரிகைகளுக்கு கூடுதல் போனஸ். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், தங்களை பற்றி தாங்களே புக்ழந்து கொள்ள, தாங்களாகவே சொந்தமாக ஒரு பத்திரிகையை தொடங்கி, நடத்தி கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஊர் பேர் தெரியாதவர்களைப் பற்றி எதாவது பேட்டியோ, செய்தியோ பத்திரிகைகளில் வந்தால், பக்கத்திலே அவரை பற்றியோ, அவர் சார்ந்த நிறுவனத்தை பற்றியோ கட்டாயம் ஒரு விளம்பரம் இடம் பெற்றிருக்கும். விளம்பரத்திற்கு காசை வாங்கிக் கொண்டு, பேட்டியை இலவசமாக போடுவதுதான் பத்திரிகைகளின் டெக்னிக். நாட்டின் தலை சிறந்த கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் (டாப் – 10) போன்ற பத்திரிகைகளின் கவர் ஸ்டோரிகளுக்கு பின்னால் பல கவர் பரிமாற்றங்கள்தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் செக்ஸ் சர்வே என்ற பெயரில் மக்களிடைய கேட்கவே நா கூச செய்யும் கேள்விகளை கேட்டு, அதை கவர் ஸ்டோரிகளாக வெளியிடுவார்கள் (புத்தகம் வெளிவந்தவுடன் விற்றுவிடுவதுதான் கொடுமை). இந்த மாதிரி கட்டுரைகள், ஏற்கனவே, சீர் கெட்டு போன நமது கலாசாரத்தை பற்றியா அல்லது மேலும் நமது கலாசாரம் சீர்கெட வேண்டும் என்ற நல்லண்ணத்திலா என்பது அதை வெளியிடுபவர்களுக்கே வெளிச்சம் மக்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான் தங்களின் தலையாய கடமையாக என்பதை மறந்து, இப்படி தரம் தாழ்ந்து போனது எந்த விதத்தில் நியாயம்?இதை பத்திரிகை சார்ந்த தொழிலில் சம்மந்தப்பட்டவன் என்ற முறையில் சொல்லிக் கொள்வதில் மிகுந்த வேதனை அடைகிறேன்.

பத்திரிகைகளுக்கு போட்டியாக, சாடிலைட் சானல்களும் இதே போல் கல்லா கட்டுவட்டுவதுதான் கூடுதல் வேதனை. 1995-96ம் ஆண்டிலிருந்து தான் சாடிலைட் சானல்கள் ஆதிக்கம் அதிகரித்தது. அந்த ஆண்டில் இந்த ஊடகங்களில் வந்த விளம்பரங்களின் இடம் பெற்ற சில நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டாலே, உங்களுக்கு நான் சொல்ல வந்த விஷயம் புரியும். ஈஸ்வரி பைனான்ஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ், ரமேஷ் கார்ஸ், அனுபவ் பைனான்ஸ், ஸ்டர்லிங்க் ஹாலிடே ரிசார்ட்ஸ், ராயப்பெட் பெனிஃபிட் ஃபண்ட்.. மற்றும் பல. இந்த
நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்து( உங்களின் பண முதலீட்டிற்கு அதிக வட்டி) பேராசைப்பட்டு, தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை, ரிடையர்மென்ட் மூலம் கிடைத்த தங்களின் ஆயுட் கால சேமிப்பை, இந்த நிறுவனங்களின் முதலீடு செய்தவர்கள், முதலுக்கே மோசம் போய், இப்போது பூங்காவிலும், கல்யாண மண்டபங்களிலும் மீட்டிங் போட்டு தங்களின் பணம் மீண்டும் கிடைக்குமா.. கிடைக்காதா என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கு யார் காரணம்? பராசக்தி பாணியில் கேட்க வேண்டுமென்றால், பணத்தை வாங்கி ஏப்பமிட்ட அந்த நிறுவனங்களின் மேல் குற்றமா? அல்லது அந்த நிறுவனங்களின் விளம்பரங்களை எல்லாம் பட்டி தொட்டியெல்லாம் படம் போட்டு காட்டிய இந்த ஊடகங்களின் குற்றமா? அல்லது இந்த விளம்பரங்களை நம்பி பாடுபட்டு சேர்தத பணத்தை இழந்து புலம்பி கொண்டிருக்கும் மக்களின் மேல் குற்றமா? பேசுவதற்கும், எழுதுவதற்கும் வேண்டுமானால் இது நன்றாக
இருக்கலாம்.. ஆனால், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை யாருக்கு புரியும். மக்களுக்கு உபகாரம் செய்வதாக வெளியில் காட்டி கொண்டு உபத்திரங்களை செய்து கொண்டிருப்பதுதான் இந்த ஊடகங்கள். விளம்பரப்படத்தாத எந்த பொருளையும் விற்பனை செய்வது கடினம் என்ற கிழமொழி ஏற்ப, நிறுவனங்கள், போட்டி போட்டு கொண்டு விளம்பரம் செய்து மக்களை ஒரு வழியாக்கி விட்டார்கள். இதில் திபாவளி, பொங்கல் என்றால் கேட்கவே வேண்டாம். இப்போது இந்த ஊடகங்களில் வரும் சீரியலுக்கு நடுவே வரும்
விளமபரங்களை பார்கும் போது, சீரியலுக்காக விளம்பரமா அல்லது. விளமபரத்திற்காக் சீரியலா என்றே தெரியவில்லை. ஆனாலும், விளம்பரங்கள் தான் பல பேர்களுக்கு சோறு போடுகிறது என்றாலும், அதிலும் ஒரு தர்ம நியாயம் வேண்டாமா?

சமீபத்தில் ஒரு "ராஜாங்க வைத்தியர்" புழலுக்கு போனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். சென்னை மக்களுக்கே அதிகம் பரிச்சியமாகாத இந்த அஜால் குஜால் வைத்தியரை, உலக தொலைகாட்சியில் முதல் முறையாக என்று உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய பெருமை, இந்த ஊடங்கங்களே சாரும். பின்னர், அவரையே, புழலுக்கு அழைத்து செல்லும் காட்சியையும் காண்பித்து விட்டு, இதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலிருப்பதுதான், கொடுமையிலும் கொடுமை.

ஏறக்குறைய, எல்லா சாட்டிலைட் சானலிலும், இரவு 11 மணிக்கு மேல், தன் சொந்த செலவில் தன்னுடைய வீர பிரதாபங்களை (வைத்தியர்கள் மட்டுமல்ல… ஜோசியர்களும் இதில் அடக்கம்) அள்ளி விட்டு கொண்டிருப்பதை இன்றும் நீங்கள் பார்க்களாம். இவர்கள் பேச்சை கேட்டு நம்பி ஏமாந்தவர்கள் பலர். அதிலும், ஜோசியர்கள் என்ற போர்வையில் இந்த ஏமாற்று பேர்வழிகள் அள்ளி விடும் பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் அளவே இல்லை. உங்கள் பெயரை இப்படி மாற்றினால் யோகம் வரும்… பூஜையில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த எங்களின்

குபேர காசை வீட்டில் வைத்து கும்பிட்டால், குபேர கடவுள் உங்கள் வீட்டில் குத்தாட்டம் போடுவார்.. என்பதை நம்பி மக்கள் இவர்கள் சொல்லுவதை எல்லாம் செய்து நொந்து நூடுல்ஸாய் போனதற்கு, இந்த ஊடகங்களின் பங்களிப்பை என்ன்வென்று சொல்லுவது? ஆனாலும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், இது விளம்பரதாரர் நிகழ்ச்சி, இதற்கும் எங்கள் சானலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சிலேடை போட்டு விட்டால், பொறுப்பிலலை என்று ஆகி விடுமா? மக்களின் தேவை அறிந்து, அதை தாயுள்ளத்தொடு கொடுக்க வேண்டிய மிக பெரிய
பொறுப்பில் இருக்கும் இந்த ஊடகங்கள், மாற்றாந்தாய் போல் எவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன… நமக்கு கல்லா ரொம்பினா போதும் என்று பொறுப்பற்ற முறையில் செயல்படும் இவர்களை தட்டி கேட்பது யார் என்பது இப்போது கேள்விகுறி? "கவர்" இருந்தால் நல்ல "கவரெஜ்" இல்லையென்றால் உங்கள் பெயரை ஆக்குவோம் "டாமேஜ்" என்று டி. ஆர். பாணியில் சொல்லிக் கொண்டு தறிக் கெட்டு ஓடும் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது யார்?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 14, 2011 @ 3:58 pm