அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

 

சென்ற ஞாயிறு சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடந்த பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பாரதி கிருஷ்ணகுமாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய குட்டியாப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கல்லூரியில் நடந்தபோது அவர் வந்து பேசியுள்ளார். அப்போது நான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உயரமும், அழகிய தோற்றமும், வசீகரமான பேச்சும், கம்பீரமான குரலும் யாரையும் வசீகரிக்கும். 
 
சமீபகாலமாகத்தான் அவரை நான் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தேன். அவரது குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு, அவை பற்றி எழுதவும் செய்தேன். டைரக்டர், தயாரிப்பாளர், பேச்சாளர், இப்போது எழுத்தாளர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். எனினும் அவரது அப்பத்தா என்ற சிறுகதைத் தொகுப்பை விமர்சன நோக்கோடுதான் படித்தேன். அது பற்றிய என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.
 
எதிர்மறையானதொரு தொனியோடு தொடங்கி நேர்மறையாக முடியும் அழகானதொரு கவிதையோடு துவங்குகிறது தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள். சிறுகதைகள் என்ற பெயருக்கு ஏற்றாற்போல சின்ன கதைகள். ஐந்து பக்கங்களுக்கு மேல் எந்தக் கதையும் போகவில்லை. ஆனால் ஐம்பது பக்கங்கள் அல்லது ஐநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவல்கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன.
தொகுப்பு அம்மாவுக்கும் கந்தர்வனுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னுரையில் பிகே (பாரதி கிருஷ்ணகுமார்), “எனது எல்லாப் படைப்புகளிலும் ஏதேனும் ஓரிடத்தில் ஏதேனுமோர் வடிவத்தில் அம்மா ஒளிர்ந்துகொண்டே இருக்கிறாள். அந்த ஒளியில்லாத உலகில்,என்னால் எதையும் எழுதிவிட முடியாது. இதனை எழுதுகிறபோதுகூட அம்மா எதிரே இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள்” என்று கூறுகிறார். பிகே எப்படிப்பட்ட மனிதர், அவரது எழுத்து எப்படியிருக்கும் என்பதன் குறிப்பு இங்கே கிடைக்கிறது. தர்க்கங்களை மீறிய தெளிவும் உறுதியும் மின்னும் எழுத்து.
 
பத்து கதைகளில் நான்கு கதைகளின் கருவாக இருப்பது இறப்பு. “வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக் காற்று, உள்ளிருந்து தொண்டைக்குழிக்குள் மோதித் திரும்பிக்கொண்டே இருந்தது.” “தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது பாவம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள்” (அப்பத்தா) என்ற சொற்கள் நம்மை என்னவோ செய்கின்றன. இது தகவல் அல்ல. மரணத்தின் மீதான ஒரு கலைஞனின் மனக்குவிப்பு. இறப்பு இங்கே எழுத்தில் மறு உயிர்ப்பு செய்யப்படுகிறது. இக்கதைகளில் வரும் மனிதர்கள் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்தான். ஆனால் நாம் கண்டும் காணாமல் விட்ட விஷயங்களை பிகே பார்க்கிறார். 
 
எழுத்தில் ஒருவிதமான கவிதா தன்மை கைகூடி வந்திருக்கிறது. ஒரு எழுத்தாளனின் கற்பனையில் எதுவும் அழகிய இலக்கியமாக அழகுடன் பரிணமிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. உன் சகோதரன் கடலில் மூழ்கி இறந்துவிட்டான் என்பதை டெம்பெஸ்ட் நாடகத்தில் ஏரியல் என்ற பூதம் அல்லது ஜின் இப்படிச் சொல்கிறது: “Those are pearls that were his eyes”! ஷேக்ஸ்பியரைத் தவிர வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்? பிகேயின் ஒரு கதையில் கணவன் மனைவி உறவும், அதனூடாக ஒரு பெண்ணின் மனதும் வெகு அழகாக, வெகு நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது: 
 
“ஊடலுக்கு பிந்திய காமத்தில், ஊடலின் கரையாத வண்டல் என்று எதுவுமே மிஞ்சியதில்லை…மெல்லிய இழைகள் முறுக்கேறி, முடிச்சாகி, இறுகிய பாறையாக எழுந்து நின்றது. போகத்தின், சமகால போகத்தின் நறுமணம் எழவேயில்லை. பலாத்காரத்தின் துர்நாற்றம் என் உதடுகளுக்குள்ளும், குழந்தைகள் உயிர்த்திருந்த உயிர்ப்பாதைக்குள்ளும் வேட்டை நாயாய் விரைந்தது” (அறம் வளர்த்த நாதன்).
பிகேயின் கதை மாந்தர்கள் மிகமிக மென்மையானவர்கள். வீட்டுக்குள் வந்து கண்ணாடியில் உட்கார்ந்த வண்ணத்துப் பூச்சிக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென்று மின்விசிறியை நிறுத்தும் மனம் கொண்டவர்கள்(தெய்வநாயகம் சார்). ஒருவகையில் பிகேகூட இப்படிப்பட்டவர்தான். அவர் மேடைகளில் பேசும்போது கேட்டிருக்கிறேன். பம்பாயில் குண்டு வெடித்தபோது அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் செத்த புறாக்களை ஆறு சாக்குகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு கார்ப்பரேஷன் போனது என்று சொல்லும்போது கண் கலங்குபவர். 
 
மேடைகளில், பொதுமக்கள் முன்னிலையில், பிரார்த்தனைக் கூட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்று பிரார்த்திக்கும் சிலர் திடீரென்று உரத்த குரலெடுத்து அழுவதை நான் கேட்டிருக்கிறேன். “எங்கள் பாவங்களை மன்னித்துவிடு இறைவா! எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக இறைவா!” என்று சொல்லும்போதெல்லாம் அழுதுகொண்டே சொல்வார்கள். 
 
ஆனால் அது மேடைக்கண்ணீர். முதலைக் கண்ணீர். உண்மையில் அது கண்ணீரே அல்ல. பொய்யான பக்தியை திறமையாக மறைத்து, கேட்பவர்களை முட்டாளாக்கிவிட்ட வெற்றிச் சிரிப்பு அது. திரவப் புன்னகை. நரகம் என்று ஒன்று இருக்குமானால் நிச்சயமாக அந்த அழுகுணிகளுக்கு அதில் இடமிருக்கும். ஆனால் போலியான மேடை நாகரீகம் எதையும் பொருட்படுத்தாத பிகேயின் தழுதழுப்பில் நேர்மை இருந்தது. பிகேயின் பேச்சிலும் எழுத்திலும் இரண்டு விஷயங்களை நான் பார்க்கிறேன்: ஒன்று உண்மை. இன்னொன்று உணர்ச்சி. தலையால் வாழ்பவர்கள் அறிவாளிகள். இதயத்தால் வாழ்பவர்கள் மனிதர்கள். நானும் பிகேயைப் போல ஒரு மனிதனாகவே வாழ விரும்புகிறேன். முத்துக்கனிமா என்றொரு பெரியம்மா எனக்கிருந்தார்கள். ஏதோ படம் பார்த்து அழுதுகொண்டிருந்த அவர்களிடம் நான் கேட்டேன், “சினிமா பார்த்து அழுவது முட்டாள்தனமில்லையா?”. அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சினிமா பார்த்து சிரிக்கலாம் என்றால், ஏன் அழக்கூடாது?”
உண்மைதான். ஏன் அழக்கூடாது? மனிதர்கள் மீதும், மரம், செடி கொடி, பூச்சிகள், பறவைகள், கிணறு, ஆறு போன்ற இப்பிரபஞ்சத்தின் மீதுமான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு இதயத்தை இக்கதைகளில் நாம் தரிசிக்கலாம். 
 
’அம்மாவும் அந்தோன் சேக்கவும்’  என்ற முதல் கதையின் முடிவில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இறந்து போன அம்மாவை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட மகன் போகிறான். அக்கா வருவதற்குத் தாமதாமாவதால் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மயானத்திலேயே அவன் அந்தோன் சேக்கவின் ”ஆறாவது வார்டு” என்ற கதையை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறான். 
இது நடைமுறைக்கு மாற்றமாக, கொஞ்சம் செயற்கையாக உள்ளது. அம்மாமீது பாசமில்லாத மகனாகவும் அவன் காட்டப்படவில்லை. ரொம்ப ‘ப்ராக்டிக்கலானவன்’ என்பதற்காக இது நுழைக்கப்பட்டிருந்தாலும் சரியென்று தோன்றவில்லை. சல்மாவின் ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வீட்டில் கிடத்தி வைத்திருக்கும்போது சுற்றியிருக்கும் பெண்கள் செக்ஸ் பற்றி சிலாகிப்பது போன்ற காட்சி விவரிக்கப்படுவது நினைவுக்கு வருகிறது. சல்மாவைப் பொறுத்தவரை அக்காட்சி போலித்தனத்தின் உச்சம். ஆனால் பிகேயின் கதையில் வரும் இறுதிக்காட்சி லேசான சறுக்கலாகவே தோன்றுகிறது. தவிர்த்திருக்கலாம். 
 
சில தலைப்புகளை மாற்றியிருக்கலாம், சில இடங்களில் வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று எனக்கு ஆங்காங்கு தோன்றினாலும், அவற்றையெல்லாம் நான் இங்கே சொல்லப் போவதில்லை. ஏனெனில் இது இவரின் முதல் தொகுதி என்ற ஆச்சரியத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை.
 
அப்பத்தா. The Roots வெளியீடு. பக்கங்கள் 96. விலை ரூ 100/- அவரது மின்னஞ்சல்: bkkumar.theroots@gmail.com

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 18, 2011 @ 1:21 pm