வெண்டைக்காய் வத்தக்குழம்பு

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

 

 

 

தேவையானவை

வெண்டைக்காய்- 12

புளி- எலுமிச்சை அளவிற்கும் மேல்

மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை- 1 இணுக்கு

கொத்தமல்லி- அலங்கரிக்கச் சிறிதளவு

 

அரைக்க:

கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

துவரம்பருப்பு- 1/2 டீஸ்பூன்

தனியா- 1 டீஸ்பூன்

வெந்தயம்- 1/4 டீஸ்பூன்

மிளகாய்வற்றல்- 3(பெரியது)

காயம்- சிறிதளவு

வெங்காயம்- 1

தக்காளி- 1/2

பூண்டு- 3 பல்லு

 

தாளிக்க:

நல்லெண்ணெய்- 3 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

செய்முறை:

1. ஒரு வாணலியில் எண்ணெயிட்டு(குறிப்பிட்ட எண்ணெயில் பாதி) கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளிசம் செய்து கொள்ள வேண்டும்.

2. கடுகு வெடித்தவுடன் அலம்பி நறுக்கின வெண்டைக்காய்த் துண்டுகளை தாளித்தவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

3. ஊற வைத்த புளித்தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி,காயம் போட்டு காயை வேக விடவும்.

4. இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், தனியா, மிளகாய்வற்றல் ஆகிய பொருட்களைச் சிவக்க வதக்க வேண்டும்.

5. வதக்கின பொருட்களை வேறொரு தட்டில் ஆற விட்டு அதே வாணலியில் வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். வதங்கும் போதே பூண்டையும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

6. வதங்கின பொருட்கள் ஆறினவுடன் மிக்சியில் வதக்கி வைத்த பருப்புகள், வெங்காயக்கலவை ஆகிய அனைத்தையும் இட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

7.காய் வெந்திருக்கும், அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும்.

8. கொதித்தவுடன் கறிவேப்பிலையைக் கசக்கி குழம்பில் விடவும்.

9. தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சி குழம்புடன் சேர்க்கவும்.

10.கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.

 

வேறொரு முறை

மேற்கூறிய முறையல்லாது எதையும் அரைக்காமல் 2 டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்தும் வத்தக்குழம்பு தயாரிக்கலாம்.

இன்னொரு முறையில் 1 டீஸ்பூன் காரப்பொடி சேர்த்தும் செய்யலாம். காரப்பொடி சேர்த்து செய்ய விரும்புவர்கள் அவரவர் ஊர்களில் கிடைக்கும் காரப்பொடியின் காரத்திற்கேற்ப காரத்தைக் கூட்டியோ குறைத்தோ செய்து கொள்ள வேண்டும்.

கூடுதல் குறிப்புகள்

1. பொங்கல், இட்லி, தோசை, தயிர்சாதத்திற்கும் இந்தக் குழம்பைத் தொட்டுக் கொள்ளலாம்.

2. புளியைக் கூடுதலாக எடுத்துக் கொண்டு இந்தக் குழம்பைப் புளிக்குழம்பாகவும் செய்யலாம்.

3. புளி, உப்பு, காரம் குறைத்து செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

4. உப்பும் உறைப்புமாக செய்ய விரும்புபவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்தால் நல்லது.

5. எளிமையான சுவையான அசத்தலான இந்த வத்தக்குழம்பில் வெண்டைக்காய் மட்டுமில்லாமல் கத்திரிக்காய், கோவக்காய், மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தல் போட்டும் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

6. மணக்க மணக்க செய்யும் வத்தக்குழம்பிற்குப் பொருத்தமான ஜோடிகள் பருப்புசிலியும் சுட்ட அப்பளமும் தான்.

எங்கே கிளம்பிட்டீங்க? வத்தக்குழம்பு செய்யத்தானே.


கொத்தவரங்காய் பருப்புசிலி

 

 

 

தேவையானவை

கொத்தவரங்காய்- 3 கைப்பிடி

கடலைப்பருப்பு- 1 டம்ளர்

உப்பு- தேவையான அளவு

காயம்- சிறிதளவு

 

தாளிக்க:

எண்ணெய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1

கறிவேப்பிலை- 1 இணுக்கு

 

செய்முறை:

1. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்திருக்க வேண்டும்.

2. கொத்தவரங்காயை நன்றாக அலம்பிக் கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

3. கொத்தவரங்காயைத் தனியே நீரிட்ட பாத்திரத்தில் உப்பு

போட்டு வேக வைக்க வேண்டும்.

4. வெந்தவுடன் தண்ணீரை நீக்கி காயைத் தனியே வைக்கவும்.

5. ஊற வைத்த பருப்பை மிக்சியில் உப்பு, காயம், இரண்டு மிளகாய் வற்றல் போட்டு நற நறவென அரைத்துக் கொள்ள வேண்டும்.

6. ஒரு வாணலியில் அரைத்த கலவையை இட்டு வதக்க வேண்டும். மைக்ரோ வேவ் வைத்திருப்பவர்கள் அதில் 4 நிமிடங்கள் வைத்து எடுத்து விட்டு வாணலியில் வதக்கலாம். இட்லி குக்கரில் எண்ணெய் தடவி வேக வைத்து எடுத்து உதிர்க்கலாம்.

7.வதக்கி உதிர் உதிராகப் பருப்புகள் உதிர்ந்தவுடன் வேறொரு வாணலியில் தாளிக்கத் தேவையான பொருட்களை வதக்கி உதிரான பருப்பைச் சேர்க்கவும்.

8. அதனுடன் வேக வைத்த காயையும் சேர்க்கவும்.

9. ஒன்று கலந்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு சூடாகப் பரிமாறவும்.

 

கூடுதல் குறிப்புகள்

1. கொத்தவரங்காய் வேக வைத்த தண்ணீரைத் தூரக் கொட்டுவது நல்லது. ஏணென்றால் அந்த தண்ணீரை உணவில் சேர்த்தால் பித்தம் வரும் என்று பெரியவர்கள்

 சொல்லுவார்கள்.

2. கடலைப்பருப்பிற்குப் பதில் 1 டம்ளர் துவரம்பருப்பு அல்லது 1/2 கப் கடலைப்பருப்பு, 1/2 கப் துவரம்பருப்பு என்ற விகித்ததில் கூட ஊற வைத்து உசிலி செய்யலாம்.

3. கொத்தவரங்காய் மட்டுமில்லாமல் பீன்ஸ், அவரைக்காய், கோஸ், கோவைக்காய், குடமிளகாய், புடலங்காய் போன்ற காய்களிலும் உசிலி செய்யலாம்.

4.காயிலும் உப்பு போட்டு பருப்புசிலியிலும் உப்பு போடுவதால் சிறிதளவு உப்பு போட்டு தேவையென்றால் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

5. மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்பிற்கு பருப்புசிலியை அடித்துக் கொள்ள வேறு ஜோடியே இல்லை எனலாம்.

 

கொசுறுச்செய்தி:

சூடான சாதத்தில் வத்தக்குழம்பைப் போட்டு அதில் கொஞ்சம் நல்லெண்ணெயிட்டு பிசைந்து பக்கத்தில் பருப்புசிலியைப் பரிமாறி முடிந்தால் உளுந்து அப்பளம் பொரித்தோ சுட்டோ உங்களவருக்குப் பரிமாறிப் பாருங்களேன், அப்புறம் உங்களுக்குக் கிடைக்கும் சமையல் ராணி பட்டம் தான்(ரொம்பக் கவனம்: வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிமாறும் முன் உப்பு, காரம் இன்ன பிற விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்று சோதித்து விட்டு பரிமாறுவது உங்கள் சாமர்த்தியம்.)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 18, 2011 @ 1:38 pm