சனிப்பெயர்ச்சி யாருக்கு ?

நேர்மைக்கு பெயர் பெற்ற அதிகாரி சகாயம். மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். ஒரு அரசு ஊழியர் எப்படியெல்லாம் கை சுத்தமாக இருப்பதோடு, தனக்கான பணியை செவ்வனே செய்து மக்களுக்கு அதிகபட்ச நன்மை புரிய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு சகாயம்.
 
போன ஆட்சியின் போது நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்த போது அவர் எடுத்த பல அதிரடி நடவடிக்கைகளால் ஆளும் கட்சியினர் சிலரும் சரி, அரசு அதிகாரிகள் பலரும் சரி.. அவர் மீது படுபயங்கர கடுப்புக்கு உள்ளாகினர். “கிராம நிர்வாக அதிகாரிகள் அவரவர் பணிபுரியும் சொந்த கிராமத்தில் தான் தங்க வேண்டும்” என்பது அவர் போட்ட உத்தரவுகளில் ஒன்று. சொல்லப்போனால், அது உத்தரவு என்பதை விட, அது தான் நியாயம். அது தான் கடமையும் கூட. கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களுக்கான கிராமங்களில் தங்காமல் வேறு ஏதோ ஒரு நகரத்தில் தங்கிக் கொண்டு அவ்வப்போது பிக்னிக் செல்வது போல பணி புரியும் கிராமத்திற்கு வேண்டா வெறுப்பாக விசிட் அடிப்பது நியாயமா? ஆனால் பெரும்பாலான இடங்களில் அப்படி தான் நடைபெறுகிறது. கிராமப்புற கர்ணீகர்கள், பட்டாமணியர்கள் (மணியக்காரர்கள்) என்ற பிரிட்டிஷ் காலத்து பணி நியமனம் அந்தந்த கிராமத்தில் உள்ளவர்களையே அந்தப் பதவியில் தொடர்ந்து பணியமர்த்தி வந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தின் போது இரவோடு இரவாக அந்தப் பணி காலி செய்யப்பட்டு சுமார் 13,000க்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர். பிறகு அந்தப் பணிகளை ஒன்றிணைத்து ‘கிராம நிர்வாக அலுவலர்’ (வி.ஏ.ஓ.) என்று உருமாற்றம் செய்யப்பட்டு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது தான் இந்த மாதிரி கிராமத்துக்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லாத நபர்கள் எல்லாம் கிராம நிர்வாக அலுவலராக ஆன கதையெல்லாம் நிகழ்ந்தது. 
 
எங்கோ இருந்து வந்த கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டை ஆண்டது நமக்கெல்லாம் எப்படியெல்லாம் பிரச்னையை உண்டு செய்தது? நமது கலாசாரம், பண்பாடு, அன்றாட வாழ்க்கை நடைமுறை என எதுவுமே தெரியாதவர்கள் எப்படி நம்மை நிர்வகிக்க முடியும்? அதே போல தான், நம் ஊருக்குச் சம்பந்தமேயில்லாத அசலூர்க்காரர் நமது ஊரை நிர்வகிப்பதும்!
 
கிராம கர்ணீகர், பட்டாமணியர் முறை ஒழிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் கூட பல இடங்களில் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு யார் நிலம் யாருடையது, அதன் நான்கெல்லை என்ன என்று பல புள்ளி விபரங்களை சொல்வார்கள். அவர்களிடம் தகவல் பெறும் எத்தனையோ வி.ஏ.ஓ.க்கள் இருக்கிறார்கள்.
 
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் குறைந்தபட்சம் அவர்கள் வேலை பார்க்கும் இடத்திலாவது அவர்கள் தங்கியிருக்க வேண்டும். அப்போது தான் அந்த கிராம மக்களின் அன்றாட தேவைகளை அரசாங்க அதிகாரியாக பூர்த்தி செய்ய முடியும் என்ற எண்ணத்தில், அவரவர் வேலை பார்க்கும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் சகாயம். நம்மாட்களுக்கு இந்த உத்தரவெல்லாம் சரி வருமா என்ன? போராட்டத்தில் குதித்தனர். இதைத்தவிர லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் கலவுமாகப் பிடித்து நடவடிக்கை எடுத்ததெல்லாம் கூட பல அதிகாரிகளுக்கு கோபத்தை உண்டு செய்தது. “லஞ்சம் வாங்குவது எங்கள் பிறப்புரிமை. அதைத் தடை செய்வது எந்த விதத்தில் நியாயம்?” என்று நினைத்தார்களோ என்னவோ, “எச்சில் சோறு உண்ணும் நாயே.. ஓடிப்போ” என்று தங்கள் மேலதிகாரியான மாவட்ட கலெக்டரை எதிர்த்து அவர் அலுவலக வாசலிலேயே போராட்டம் நடத்தினார்கள். இன்னும் கேவலமாக எல்லாம் குரல் எழுப்பினார்கள்.
 
அநியாயம்.
 
அத்தனையையும் விடியோ பதிவெல்லாம் எடுத்து தனது மேலதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார் சகாயம். ஆனால் திடுதிப்பென ஒரு நாள் அவரை வடக்கே மசூரியில் 2 மாத கால பயிற்சி ஒன்றுக்கு அனுப்பியது தமிழக அரசு. அங்கே கிளம்பிச் சென்ற ஒரே வாரத்தில் கலெக்டர் பதவியிலிருந்து மாற்றியது. வேறு பதவி எதுவும் கொடுக்காமல் சுமார் இரண்டரை மாத காலத்துக்கும் மேலாக காத்திருப்பில் வைத்திருந்தது. பயிற்சியில் அவர் இருந்த சமயத்தில் இங்கே அவரது மனைவி, பிள்ளைகள் மட்டும் இருந்து கொண்டு வீடு மாறுதல், பள்ளிக்கூட மாறுதல் என படு சிரமப்பட்டிருக்கின்றனர். 
 
இந்தச் சமயத்தில் வாரமிருமுறை இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அப்போதைய சட்டமன்ற  துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி என்பவர், சகாயத்தின் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவற்றின் காரணமாக தான் முதல்வரிடம் சொல்லி அவரை நாமக்கல் கலெக்டர் பதவியிலிருந்து தூக்கியதாக பெருமையடித்துக் கொண்ட பேட்டி வெளியானது.
 
அரசு அதிகாரிகள் பணி மாற்றம் என்பது அரசு நிர்வாக நடவடிக்கையாக எடுப்பது. என்ன தான் உள் காரணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் அரசோ, அரசு சம்பந்தப்பட்டவர்களோ இப்படி வெளியில் சொல்ல ஆரம்பித்தால் தினம் தினம் அதிகாரிகளும், அரசு நடவடிக்கைகளும் சிரமமின்றி நடைபெறுவதில் கண்டிப்பாக சிக்கல் எழும். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாதவர்கள் துணை சபாநாயகர் போன்ற பதவியிலெல்லாம் இருந்தது தமிழகத்தின் தலையெழுத்து என்று தான் சொல்ல வேண்டும்.
 
நேர்மையான அதிகாரியான தன் மீது புழுதிவாரி வீசும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தும், வி.பி.துரைசாமி சட்டத்துக்கு புறம்பாக சில காரியங்களைச் செய்து கொடுக்கச்  சொல்லி அதை தான் மறுத்ததால் தான் இப்படி தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் பல ஆதாரங்களுடன் ஒரு நீண்ட கடிதத்தை அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார் சகாயம். வழக்கம் போல அதனை கண்டு கொள்ளவேயில்லை கருணாநிதி.
 
அதன் பிறகு திருப்பூர் பகுதி மேம்பாடுக் கழக நிர்வாக இயக்குநர் என்ற உப்புசப்பில்லாத பதவி அவருக்கு பெயருக்கு வழங்கப்பட்டது. அதிலும் தனது அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார் சகாயம். பிறகு தேர்தல் வந்தது. அவரது நியாயத்தை அறிந்திருந்த தேர்தல் கமிஷன் அவரை மதுரை மாவட்ட ஆட்சியராக நியமித்தது. அதன் பிறகு நடந்த அதிரடி ஆக்‌ஷன்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு வந்த அதிமுக அரசும் அவரை அங்கேயே மதுரை ஆட்சியராக தொடரச் செய்துள்ளது.
 
கடந்த மார்ச் மாதத்திலேயே மேற்படி வி.பி.துரைசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடர சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு செய்திருந்தார் சகாயம். இப்போது அது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 25 லட்சத்து 100 ரூபாய் மான நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
 
ooOoo
 
தமிழன் எப்போதுமே ஏமாளி தான் என சுற்றி உள்ள அனைவருக்குமே தெரிந்து விட்டது போல.
 
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பெருந்தன்மையோடு ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்து தன் பிள்ளையை கொடைக்கானலில் தொலைத்த கதை’தான் இப்போது நடைபெறுகிறது.
 
நம்மூரிலிருந்து செல்லும் காய்கறிகள், நம்மூரிலிருந்து செல்லும் பழவகைகள், நம்மூரிலிருந்து செல்லும் பால், நம்மூரிலிருந்து செல்லும் அரிசி, நம்மூரிலிருந்து செல்லும் அடிமாடு, நம்மூரிலிருந்து செல்லும் மினி டிவி என சகல செளபாக்கியங்களையும் நம்மூரிலிருந்து பெற்றுக் கொண்டு உண்டு கொழுத்துத் திரியும் கேரள மாநிலத்தவர் அந்த ஊரில் கூலி வேலைக்குச் செல்லும் நம்மவர்களையும், ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் நம்மவர்களியும் அடித்து உதைத்து அவமானப்படுத்தி துரத்துகிறார்கள்.
 
ஏற்கனவே நம் முதல்வர் சொல்லியபடி, “கேரளத்தில் தமிழகர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் தமிழகத்தில் அதை விட மிக மிக அதிக எண்ணிக்கையில் கேரளத்தவர்கள் இருக்கிறார்கள்”.
 
பதிலுக்கு பதில், வெட்டுக்கு வெட்டு என்றெல்லாம் பழக்கப்படாத பெருந்தன்மை தமிழ் சமுதாயம் நாம். சுருக்கமாகச் சொல்லப்போனால் ‘இளிச்சவாய் சமுதாயம்’. அதான் ஆங்காங்கே ஓட ஓட உதைக்கிறார்கள்.
 
அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்தால் இந்தச் சுண்டைக்காய்கள் சுக்கல் நூறாகிப் போய் விடும். ஆனால் செய்வோமா?!
 
ooOoo
 
25 ஆண்டுகால கூட்டணி விரிசல் விட்டிருக்கிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பி விட்டார். அவரோடும், அவருடைய கணவர் உள்ளிட்ட இன்னும் 11 பேர்களுடனும் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஜெ. உத்தரவிட்டுள்ளார். அவர்களை கழக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கியுள்ளார். இத்தனை ஆண்டு காலம் நடராசன் அதிமுக அடிப்படை உறுப்பினராகத்தான் இருந்தார் என்பதே செய்தி! 
 
சனிப் பெயர்ச்சி விரைவில் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதற்கும் மேற்கண்ட செய்திக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 20, 2011 @ 9:23 pm