பிரம்பில்லாத பாரா!

பாரா ஒரு பிரம்படி மாஸ்டர். அவருக்காக வெண்பா புத்தகம் எழுதும் பொழுதும் சரி, கொத்தனார் நோட்ஸ் எழுதும் பொழுதும் சரி, அவர் விதித்த கெடுவிற்குள் நம்மை எழுத வைத்துவிடுவார். அந்நேரங்களில் அவர்  மின்னரட்டை செய்ய வந்தால் என்ன சொல்லப் போகிறாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஆனால் அவர் அப்படி இருந்ததால்தான் என்னை மாதிரியான ஒரு சோம்பேறி கொடுத்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடிந்தது.  இப்பொழுது அவருக்குத் தர வேண்டியது எதுவும் இல்லை என்பதால்தான் எழுதுவது சுணங்கிப் போனது என்பது நிஜம்.
 
எவ்வளவோ புது முயற்சிகளை நானும் செய்து பார்த்துவிட்டேன். மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்று எல்லாமே கொஞ்சம் நாளைக்கு மும்முரமாகப் போகும். அதன்பின் மெதுவாக அப்படியே கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆன கதையாய் காணாமல் போய்விடும். பதிவுகள் எழுதுவதாகட்டும், புதைபுதிர்கள் போடுவதாகட்டும், ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதுவதாகட்டும், புதசெவி பத்திகளாகட்டும், விக்கிபசங்க தளமாகட்டும், எல்லாமே இவ்வழிதான். 
 
வேலைப்பளு, நேரமில்லை, கூட யாரும் சேர்வதில்லை என்று அநேக காரணங்கள் சொன்னாலும் அவை எல்லாம் வெறும் சாக்குகள்தான். சோம்பேறித்தனமும் எழுத வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமே கிடையாது. சொக்கன் போன்ற நண்பர்களுக்கு இருக்கும் சுயக்கட்டுப்பாட்டைப் பார்த்தால் எனக்கு ரொம்பவே பொறாமை. ஒன்று செய்து முடிக்க வேண்டும் என மனதில் நினைத்துவிட்டார்களானால் செய்யாமல் விடுவதில்லை. அது ஒரு நாளைக்கு ஒரு பா விளக்கம் என்பதாகட்டும் அல்லது பத்தாயிரம் அடிகள் நடப்பதாகட்டும். எனக்குத்தான் அது போல ஒரு கட்டுப்பாடே இல்லை.  
 
ஆனாலும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் குறையவில்லை. பல பதிவுகள், தளங்கள், பாஸ்டரஸ் (posterous), ட்விட்டர் என பல இடங்களிலும் வெண்பா, வெண்பாம், ரசிக்கத் தகுந்த தளங்கள், ட்விட்டுகள், யாரேனும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள், மற்றவர் பதிவில் பின்னூட்டங்கள் என ஏராளமான இடங்களிலும் எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம். எங்கு எதை எழுதினோம் என்றும் ஞாபகத்தில் இருப்பதில்லை, பின்னால் எதையாவது தேட முனைந்தோம் என்றால் எழுதியது பல சமயங்களில் கிடைப்பது இல்லை. குறைந்த பட்சம் இவைகளையாவது ஒரு இடத்தில் தொகுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். 
 
இவை தவிர பின்னால் எழுத நினைத்து கிறுக்கி வைக்கும் குறிப்புகள், அரைகுறையாக எழுதப்பட்ட கதைகள், பத்திகள், சில எண்ணவோட்டங்கள் என வெளியுலகுக்குத் தெரிய தேவையில்லாத எழுத்துகளும் இருக்கின்றன. இவைகளை ப்ளாக்கர் தளத்திலோ, பாஸ்டரஸ் தளத்திலோ சேமித்து வைத்தால் மறந்து போய் என்றேனும் வெளியிட்டு விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற தளங்கள் எல்லாம் நாம் பிறருடன் கலந்து நம் கருத்துகளை வெளியே சொல்வதற்கான தளங்களாகவே இருக்கின்றன. நமக்காக இணையத்தில் கிடைக்கும் ஒரு நாட்குறிப்பாக, ஒரு டைரியாக, வெளி ஆட்கள் யாரேனும் பார்க்க முடியாத ஒரு தளம் இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது. 
 
 
மைக்ரோசாப்டில் இருந்து வரும் ஒன்நோட் என்ற மென்பொருள் இதற்கு சரியான தீர்வாக இருந்தது. நான் நினைத்தவற்றை எழுதி சேமிக்க முடிந்தது. தேவையானால் இதை நம் கணினியிலிருந்து மட்டுமில்லாமல் இணையத்தின் மூலமாகவும் இந்த மென்பொருளை பாவிக்க முடியும் என்பது வசதியாக இருந்தது. ஆனால் மென்பொருள் எழுதும் வசதியைத்தானே தரும். பிரம்படி போட்டு எழுதவா வைக்கும்? எனவே எப்பொழுதாவது கொஞ்சம் எழுதினேனே தவிர தொடர்ந்து எழுத கை வரவே இல்லை.
 
இந்நிலையில்தான் நண்பர் ஸ்கேன்மேன் www.750words.com என்ற தளத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார். இருக்கிற தளமெல்லாம் போதாதா என கொஞ்சம் அசுவாரசியமாகவே நுழைந்த எனக்கு இது அடுத்த போதை என்பது புரிய வெகு நேரமாகவில்லை. அப்படி என்ன வித்தியாசம் இந்த தளத்தில்? முதலில் இந்த தளம் பற்றிப் புரிந்து கொள்வோம். 
 
வெகு எளிதான ஒரு அறிமுகம் தர வேண்டுமானால் இது உங்களின் டைரி! அவ்வளவுதான். உங்களுக்கு வேண்டுமென்பதை எழுதிக் கொள்ளலாம், கதைகள், கட்டுரைகள், பத்திகள், கேட்டது, படித்தது என்று எதை வேண்டுமானாலும் எழுதலாம். பிடிக்காதவர்களை என்ன சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். ஏன் கவிதை கூட எழுதலாம்.  வெளியில் தெரியாது என்பதால் உங்கள் பேர் கெடாது. 
 
ஆமாம். இந்த தளத்தில் நீங்கள் எழுதுவது உங்கள் பார்வைக்கு மட்டுமே. இதில் எழுதியது நன்றாக வந்திருக்கின்றது என்றால் அதை நகலெடுத்து உங்கள் தளத்தில் பதிவாக போட்டுக் கொள்ளலாம். ஆனால் இந்த இடம் உங்களுக்கானது மட்டுமே! தலைப்பு வைக்க வேண்டாம், தேடுகுறிச் சொற்களைச் சேர்க்க வேண்டாம், பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லி மாள வேண்டாம். நீங்கள் நினைப்பதை மட்டும் எழுதித் தீர்க்க ஒரு இடம். சரி, வேறு யாரும் பார்க்க மாட்டார்கள் ஆனால் எழுத வேண்டியது நான்தானே, என்னை எழுத வைக்க இங்கு என்ன இருக்கிறது? 
 
”பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்” என்ற ரஜினி பாடல் சொல்வது போல போட்டி, சவால் என்றால் அதை முடித்துக் காட்ட வேண்டும் என்பது நம் இயல்பான குணம். அதைத்தான் இவர்கள் தூண்டி விடுகிறார்கள். ஒரு நாளைக்கு 750 வார்த்தைகளுக்குக் குறையாமல் எழுத வேண்டும். என்ன வேண்டுமானலும் எழுதலாம். முழுமையான ஒரு கட்டுரையாகவோ பத்தியாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. மனதிற்குத் தோன்றுவதை எழுதலாம். ஆங்கிலத்தில் எழுதலாம், தமிழில் எழுதலாம். ஒரேடியாக எழுத வேண்டும் என்பதுமில்லை. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வந்து எழுதலாம். 750 வார்த்தைகள் எழுத முடியவில்லையா அதுவும் சரிதான். 
 
ஆனால் உங்களை எழுதத் தூண்டுவதற்காக பல விதங்களில் ஊக்கப்படுத்துகிறார்கள். 24 மணி நேரத்தில் நூறு வார்த்தைகள் எழுதினால் ஒரு மதிப்பெண், 750 வார்த்தைகள் எழுதினால் மேலும் ஒரு மதிப்பெண். தொடர்ந்து 750 வார்த்தைகளையும் ஒரே நேரத்தில் எழுதினால் இன்னும் ஒரு மதிப்பெண். தொடர்ந்து இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என நாளொன்றுக்கு 750 வார்த்தைகள் எழுதினால் அதற்காக சிறப்பு மதிப்பெண்கள். இப்படி பெறப்படும் மதிப்பெண்கள் பட்டியலை அனைவரும் பார்க்கும்படி வைக்கிறார்கள். எனவே அதிக மதிப்பெண் வாங்கி பட்டியலின் முதலில் வர நீங்கள் தினமும் எழுதி வர வேண்டும். 
 
இது போதாதென்று, ஒரு மாதத்தில் எல்லா நாட்களிலும் 750 வார்த்தைகள் எழுத வேண்டும் என்று ஒரு போட்டி. அதில் கலந்து கொண்டு மாத ஆரம்பத்திற்கு முன்னாலேயே நான் இந்த மாதம் எழுதுவேன் எனச் சொல்லி போட்டியில் குதிக்க வேண்டும். வென்றோர்கள், விழுந்தோர்கள் என இந்தப் போட்டிக்குத் தனியாக அட்டவணைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. 
 
மூன்றாவதாக குறிப்பிட்ட சில இலக்குகளை எட்டினால் பல விதமான பறவைகள், விலங்குகள் பெயரில் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக மூன்று நாட்கள் தொடர்ந்து எழுதினால் வான்கோழி பதக்கம் (இது பௌலிங் விளையாட்டில் தொடர்ந்து அனைத்து கம்புகளையும் மூன்று முறை வீழ்த்துவோருக்கு வழங்கப்படும் பெயர். அங்கிருந்து எடுத்தாண்டு இருக்கின்றனர். மதிப்பெண்கள் வழங்கும் முறையும், அதை தெரிவிக்கும் பக்கத்தின் வடிவமைப்பும் கூட இவ்விளையாட்டினை ஒற்றியே இருக்கின்றன. இத்தளத்தை வடிவமைத்தவர் பெரிய பௌலிங் ரசிகராய் இருக்கலாம்.) தொடர்ந்து பத்து நாட்கள் எழுதினால் பிளமிங்கோ, 30 நாட்கள் எழுதினால் ஆல்பட்ராஸ் என வகைவகையாகப் பதக்கங்கள். 
 
தொடர்ந்து எழுதுவது மட்டுமில்லாமல், பத்து நாட்கள் காலை வேளையில் எழுதினால் சேவல் பதக்கம், இரவில் எழுதினால் ஆந்தை பதக்கம், வேகமாக தட்டச்சினால் சிறுத்தை, விடாமல் தொடர்ந்து ஒரே மூச்சில் எழுதினால் ஹேம்ஸ்டர், லட்சம் வார்த்தைகள், இரண்டரை லட்சம் வார்த்தைகள் என்று பலவிதமான இலக்குகளுக்கு இந்தப் பதக்கங்களைத் தருகிறார்கள். எழுதுபவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்தப் பதக்கங்களின் படங்களும் இடம் பெறும். முட்டை, அதிலிருந்து வான்கோழி, பின் பென்குயின், ப்ளாமிங்கோ என்று வரிசைக்கிரமமாக வாங்க வேண்டிய பதக்கங்கள் என்னவென்று தெரிவதாலும், அவற்றை வாங்கும் இலக்குகள் சரியான அளவில் இருப்பதாலும் அவற்றைப் பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். 
 
நண்பர்கள் சிலர் சேர்ந்து எழுத ஆரம்பித்தால் அவர்களை விட அதிக மதிப்பெண்கள், அதிக பதக்கங்கள் வாங்க வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். எனக்கு சொக்கன், பெனாத்தல் சுரேஷ், ஸ்கேன்மேன் என்று அருமையானதொரு செட்டு சேர்ந்திருக்கிறது. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தால் நானும் அவர்களைப் போல் நன்றாக எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 
 
சரி, எல்லாமேவா நன்றாக இருக்கிறது? இதில் குறைகள் என்று ஒன்றும் இல்லையா? ஒரு பைசா காசு கேட்காமல் கிடைக்கின்ற வசதி. இதில் என்ன குறை சொல்ல. ஆனா சில விஷயங்களை மாற்றலாம். என்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு நாளைக்கு 750 வார்த்தைகள் எழுத கஷ்டமா இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் அவரவருக்கு ஏற்ற இலக்கினை முடிவு செய்து கொள்ளக் கூடிய வசதி இருந்திருக்கலாம். இருந்திருந்தால், என் பையன் ஒரு நாளைக்கு 50 வார்த்தைகள் எழுதும் படி செய்திருப்பேன். 
 
வாரம் முழுவதும் எழுதுவது என்பதற்குப் பதிலாக வாரயிறுதிகளில் எழுதாமலிருப்பதை ஒரு தெரிவாகத் தந்திருக்கலாம். வாரயிறுதியில் ஏகப்பட்ட வேலைகள் வந்து குவியும் என் போன்ற பராகபுரி ஆட்களுக்கு அது ஒரு பெரும் வசதியாக இருந்திருக்கும்.  
 
ஆனால் தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம். இந்தத் தளத்திலேயே கொஞ்சம் பணம் கட்டினால் சில மேலதிக வசதிகள் கிடைக்கின்றன. அது பத்தி நான் ரொம்ப ஆராய்ச்சி செய்யலை. இப்போதைக்கு எனக்கு மீண்டும் எழுத ஒரு உத்வேகத்தை குடுத்து இருக்கு இந்தத் தளம். அதே சமயம் முடியாத பொழுது எழுதி ஆக வேண்டும் என்ற கட்டாயமும் தராத இந்த தளம் – ஒரு பிரம்பில்லாத பாராதான்!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “பிரம்பில்லாத பாரா!

  • December 24, 2011 at 9:02 am
    Permalink

    பாரா மின்னஞ்சல் கொடுங்க. உங்களை விரட்டச்சொல்லி கேட்டுக்குறேன்!
    ஹும்ம்ம் எப்படியோ இப்படியாவது எழுதினா சரி!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 22, 2011 @ 9:38 am