நீதிமன்றங்கள் – இருட்டறையா… ஒளிவிளக்கா

சட்டம் ஒரு இருட்டறை… அதில் வக்கீலின் வாதம்தான் ஒளிவிளக்கு… என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்..  நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் மதிப்பை, பங்களிப்பை, முக்கியத்வத்தை ஒற்றை வரியில் எடுத்துரைக்கும் அருமையான பொன்மொழி.  சட்டங்கள் இருட்டாக இருந்தாலும், அதனால் உண்டாகும் பலன்கள், மக்களை வெளிச்சத்திற்கு (முன்னேற்றத்திற்கு) கொண்டு போக வேண்டுமே தவிர..  மேலும் இருட்டாக்க கூடாது.

 
சட்டங்கள் இயற்றப்படுவதற்கான முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருந்தாலும், அதை செயல்படுத்துவதற்கும்,. மாற்றுவதற்கும்.. ஏன் தடை போடுவதற்கும், நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு.  தற்போது, நீதிமன்றங்களின் முழு பலத்தை.. அதிகாரத்தை.. தீர்ப்புகளை, உத்தரவுகளை, கண்டனத்தை.. கண்டிப்பை.. இந்த நாட்டை ஆள்பவர்கள் அதிர்ச்சியோடும்.. ஆளப்படுகின்ற மக்கள் ஆச்சரியத்தோடும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
 
சட்டங்கள் இயற்றும் பாராளுமன்றமாகட்டும், அதை செயல்படுத்துகின்ற நீதிமன்றங்களாகட்டும், மக்கள் நலனே பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயற்றப்படவோ.. செயல்படவோ வேண்டும்.   எந்த சட்டம் இயற்றப்பட்டாலும், அதை இந்த நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைசி குடிமகன் வரை..  ஏன்.. அரசாங்கமே அதை மதித்து, கடைப் பிடிக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால்.. அப்படியா இப்போழுது நடந்து கொண்டிருக்கிறது என்றால்.. இல்லை என்று சொல்ல முடியும்.  நீதிமன்ற விவகாரங்களில் நாம் தலையிடவும்  கூடாது.. மேலும் தலையிட நமக்கு உரிமையும் இல்லை.  நீதிமன்றம் அணைக்கு ஆணை (தீர்ப்பை) போட்டதை, ஒரு மாநில அரசு நிறைவேற்ற.. மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று எப்போதோ போடப்பட்ட உத்தரவை இன்றும் கேட்டுக் கொண்டிருப்பதில் என்ன நியாயம்?  “சாமி வரம் கொடுத்தாலும்… பூசாரி வரம் கொடுக்காத” கதைப் போல் அல்லவா உள்ளது. இதில், நீதிமன்றங்கள்.. பாராளூமன்ற விவாகரத்தில் அதிகமாக தலையிடுகின்றன என்றும்.  மேலும் நீதிமன்றங்கள் தற்போது ஆளும் கட்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்.. இல்லை.. எதிரிக்கட்சிப் போல் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் வேறு.  சட்டம் தன் கடமையை செய்யும்.. ஆமாம்.. சாதாரண மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்..   ஆட்சியாளர்களுக்கும்.. அரசுகளுக்கும் இது பொருந்தாது என்று தான் இது நமக்கு உணர்த்துகிறது. .
 
உச்சநீதிமன்றத்திலும்.. உயர்நீதிமன்றத்திலும், நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கைlயில் ஒரு சில:
கடந்த வருடம் வரை,  39780 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவைவில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களில், ஏறத்தாழ 3 மில்லியன்  வழக்குகளும், 26.3 மில்லியன் வழக்குகள் அதன் கீழ்-நீதிமன்றங்களிலும், ஆக மொத்தம் 30 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவற்றில் அதிகப்பட்சமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 406958 வழக்குகளும்,  மும்பை உயர்நீதிமன்றத்தில் 362949 வழக்குகளும், குறைந்தப்பட்சமாக சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் 51 வழக்குகள் நிலவையில் உள்ளன. நிலுவையிலுள்ள வழக்குகளில், 80% மேல் உள்ள வழக்குகள், சிவில் சம்பந்தப்பட்டவை என்பதுதான் கூடுதல் தகவல்.   
 
“வக்காலத்து” வாங்கிக் கொண்டு “வாய்தா” போட்டு வழக்கை இழுத்தடிப்பது பற்றி நாம் எல்லாம் அறிந்த ஒன்று. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், நீதிமன்றத்தையே.. கேலிக்கூத்தாக்கிய சம்பவம், சமீபத்தில் குடும்ப நலக் கோர்ட்டில் அரங்கேறியது..  விவாகரத்து வழக்கு ஒன்றில்.. சம்மந்தப்பட்ட கணவன் – மனைவி இருவரும் ஆஜராகாமல், வேறு இருவர், பொய்யாக ஜோடிக்கப்பட்டு.. வழக்கறிஞர் (போலியான) மூலம்.. விவாகரத்து வழங்கப்பட்ட வழக்கு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும்,  இது நீதிமன்றத்திற்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக நாம் கொள்ள வேண்டும்.
 
காலம் காலமாக.. நீதிமன்றங்கள்.. பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அரசியல் தலையீடுகள் அதிகம் இருந்த காரணத்தினால் என்னவோ… பல தீர்ப்புகள் தற்போது தாமதமாக வந்துள்ளது.    ஆனாலும், நமக்கு நீதி கிடைக்கும்.. நியாயம் கிடைக்கும் என்று நீதிமன்றங்களை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.   இதையெல்லாம் பார்க்கும் போது சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று…
 
“ வக்கீல் ஐயா… என்னுடைய அப்பா.. உங்கள் அப்பாவிடம்.. கேஸ் கொடுத்தார்கள்… அது முடியாமல், நான் உங்களிடம் இன்று வந்துக் கொண்டிருக்கிறேன்.. இது எப்போது முடியும்” என்று கேட்தற்கு…
 
“ கவலைப்படாதீங்க… என் பையனும் லாயராக போறான்”..
 
படிப்பதற்கு காமெடியாக இருந்தாலும்… இதுதான் இன்று பல வழக்குகளின் நிலைமை என்று சொன்னால், அது மிகையாகாது
 
தாமதமாக கிடைக்கப்பட்ட நீதி.. அநீதிக்கு சமமென்றாலும்.. அதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம் என்பது நிதர்சனமான உண்மை.  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம்மிடையே இல்லாத காரணத்தால், எதற்கெடுத்தாலும் நிதீமன்றம் – வழக்கு என்று அலைவதை என்னவென்று சொல்லுவது?  இந்திய நீதிதுறை அமைப்புபடி.. சராசரியாக 10 லட்சம் மக்களுக்கு ஒரு 14 நீதிபதியும், 1467  மக்களுக்கு ஒரு வழக்கறிஞரும் இருப்பதால், வழக்குகள் தேங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.  மேலும், ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக போடப்படும் பொது நல வழக்குகளும்  அதிகரித்து வருவதால்,  மற்ற வழக்குகள் தேங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. பள்ளிக்கூடங்களில் உள்ள கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதற்கே, இங்கே நீதிமன்ற்ங்கள் தலையிட வேண்டியிருக்கிறது.
 
கடந்த செப்டம்பர் மாதம் வரை, உச்சநீதிமன்றத்திலும் மற்றும் 21 உயர்நீதிமன்றத்திலும், அங்ககரீக்கப்பட்ட 895 நீதிபதிகள் பொறுப்பில் இருக்க வேண்டிய இடத்தில், 285 இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதிலும் 69 நீதிபதிகளுக்கு, வரும் டிசம்பர் 31க்குள் பணி முடிய போவதாகவும், ஒரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. (தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பொறுப்பேற்றுள்ளதாக செய்தி வந்துள்ளது). 
 
மேலும், சமீபத்தில் நடந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. M. Y. இக்பால் அவர்கள்,
 
“தற்போது நீதீக்காக வழக்குகள் போட்டு “கால் கடுக்க” வரிசையில் காத்திருக்கும் பல்லாயிர கணக்கான மக்களிடையே. “காலே இல்லாமல்” காத்திருக்கும் .. அதாவது.. வாகன விபத்தினால் உயிர் மற்றும் உறுப்புக்களை இழந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்கும் வழக்குகளுக்கு (1.25 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளது) முக்கியத்துவம் கொடுத்து, அதுவும் 150 வது ஆண்டு நிறைவு விழாவிற்குள் துரிதமாக முடிப்பதற்கு, கிழ்-கோர்ட் நீதிபதிகள்,  தங்களின் மேலான கவனத்தை செலுத்த வேண்டும்”  என்று வேண்டுகோள் விடுத்ததை கேட்ட அனைவரையும், ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும்.. தற்போது நிலுவையில் இருக்கும் 75000 அதிகமான உள்ள  காசோலை திரும்பிய வழக்குகளையும் விசாரித்து விரைவாக தீர்ப்பதற்கும் ஆவன செய்யப்படும் என்று கூறினார்.
 
நீதிபதி திரு. V.R. கிருஷ்ண ஐயர், கொச்சியில் நடைபெற்ற ADR (ALTERNATE DISPUTE RESOLUTIONS – பிரச்னைகளைத் தீர்க்க மாற்று ஆலோசனை வழங்கும்) மையத்தின் திறப்பு விழாவின் போது,  வழக்கறிஞர்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண தங்களை தேடி வரும் மக்களுக்கு, கோர்ட்டுக்கு போகாமல், இந்த ஆலோசனை மையத்தில் மூலம் முதலில் தீர்வு காண, முயல வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும் எனவும், பிரச்னைகளைத் தீர்க்க, முதல் படியாக இந்த ஆலோசனை மையம் இருக்க வேண்டும் எனவும், கடைசி படியாகதான் நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் என்று கூறினார்.  வழக்கறிஞர்கள், தங்களின் “தேவை” மனப்பான்மையை சிறிது குறைத்து கொண்டு, “சேவை” மனப்பான்மையோடு செயல்பட்டால், நீதிமன்றங்களின் சுமைகள் குறையும் என்பதே, அவரது கூற்றின் சாரம்சம்.  ஏனென்றால்…
 
   இன்றைய நீதிபதிகள்… நேற்றைய வழக்கறிஞர்கள்;
 
   இன்றைய வழக்கறிஞர்கள்..  நாளைய நீதிபதிகள்;
 
உச்சநீதிமன்றங்களிலும்,. உயர்நீதிமன்றங்களிலும், மத்திய மற்றும் மாநில அரசாங்களுக்கு எதிராக, அதாவது அவர்களால் இயற்றப்பட்ட சட்டங்களை, முடிவுகளை.. தடுத்தோ.. தள்ளுபடி செய்தோ.. வழங்கப்பட்ட தீர்ப்புகள்,  ஊழல் புரிந்த ஆட்சியாளர்களுக்கு சிறை தண்டனை, கடும் நிபந்தனைகளோடு ஜாமீன்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது,  நீதிமன்றங்களின் உண்மையான அதிகாரத்தை, நாம் இப்போது தான் உணர்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
 
ஜனநாயகத்தின் 4 தூண்களுள் முக்கிய தூணாக விளங்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடுகள்..  “இருட்டறையில்” ஒளி வீசும் “ஒளி விளக்காக” விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால், அது மிகையாகாது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 1, 2012 @ 4:36 pm