மன அழுத்தமா ? போயே போச்சு !!!

இன்றைய காலக் கட்டத்தில் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும் விஷயங்களில் ஒன்று திருமணமான  இளையத் தலைமுறை இடம் காணப் படும் மனஅழுத்தம் .அதுவும் குறிப்பாக பெண்கள்  தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகு பாடே இல்லாமல் இதற்கு ஆளாவது மிகவும் வருத்தத்திற்குரியது. அதே சமயம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. ஒரு காலத்தில் இத்தகைய மன அழுத்தம் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் காணப் பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்து வந்தன. குடும்பச் சுமை, பணமின்மை, அதிக பொறுப்பு, கடமையை சரி வர செய்ய முடியாத இயலாமை, பலரின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இப்போது அத் தகைய நிலை மிகவும் மாறி விட்டது. இருந்தும் ஏன் இந்த நிலை;
 
இன்றைய வளர்ப்பு முறைக் கூட ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு  அதிக சுதந்திரம் ,பொறுப்பில்லாத வாழ்கை ,ஒன்றோ இரண்டோ தான் மக்கட் செல்வம்  அதனாலேயே அவர்கள் மேல் பொறுப்பை திணிக்க விரும்பாத பெற்றோர். இதனால் சிறு சிறு விஷயங்களைக் கூட சரியாக ஆளத் தெரியாமலும்  அனுசரித்துப் போக முடியாமலும் திண்டாடுகின்றது இத் தலை முறை. அதுவும் வாழ்வின் முக்கியக் கட்டமான திருமணம் என்று வரும் போது அதிகமாகவே உணரப்படுகிறது.
 
முன்பு எப்படி சிறிய ஊர்களிலுருந்து திருமணத்திற்கு பிறகு  நகரத்திற்கு வாழ வருபவர்கள் அதிகமோ இப்போது நகரத்திலிருந்து வெளி நாடு செல்வது அதிகமாகி விட்டது. அப்பவும் நகரத்து வாழ்க்கைக்கு சிலர் தங்களை பழக்கிக் கொள்ள மிகவும் தடுமாறுவார்கள். ஆனால் வீட்டுப் பெரியவர்கள் அப்பப்போ வந்து சரியான ஆலோசனை வழங்கி வழி நடத்த ஒரு வாய்ப்பு இருந்தது. மேலும் பெரிய படிப்பு படித்திருக்கும் பெண்களின் விழுக்காடும் குறைவு. பெரியவர்கள் அனுபவத்தில் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவமும் இருந்தது.
 
ஆனால் இப்போது பொதுவாகவே பெண்கள் நிறைய படிக்கின்றனர்; அதுவும் திருமணம் முடிந்து அதிகம் வெளி நாடு  தான் செல்கின்றனர். அங்குள்ளவர்களுக்கு விடுமுறை குறைவு என்பதால் விசா ஏற்பாடெல்லாம் முன்னமே செய்து திருமணம் முடிந்து கூடவே அழைத்தும் செல்கின்றனர்.
 
அப்படி போகும்போது படித்த படிக்காத பெண்களுக்கு முதலில் ஏற்படுவது கலாசார அதிர்ச்சி. என்னதான் ஓரளவு வெளி நாட்டு வாழ்கை பற்றி அறிந்திருந்தாலும் அதை எதிர் கொள்ளும் போது தடுமாற்றமும் , பக்குவம் இல்லாததால் பிரச்சனையை சமாளிக்கும் திறமையும் தைரியமும் காணமல் போய் விடுகிறது. மேலும்  கணவனுக்கோ உடனே வேலையில் சேர வேண்டியக் கட்டாயம்; கூட இருந்து சொல்லிக் கொடுப்பது என்பது இயலாதது. மனைவி வீட்டு வேலை வெளி வேலை எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டிய சூழ்நிலை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சகஜமாக பேச முடியாத நிலை, மொழி பிரச்சனை , வீட்டு உபயோகத்திற்கான உபகரணங்களைக் கூட சிலருக்கு எப்படி பயன் படுத்துவது என்பது தெரியாது; என்னதான் F.B, chat எல்லாம் இருந்தாலும் மனதை ஒரு வெறுமை சூழ்ந்துக் கொள்வதை மறுக்க முடியாது. திக்குத் தெரியாத காட்டில் குழந்தையை போல் தவிக்கின்றனர்.
 
குறிப்பாக முன்பு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு வந்த இடத்தில் உடனே வேலைக்கு போக முடியாது; தினமும் பல தரப் பட்ட மக்களை சந்தித்தும்  நண்பர்களுடன் பழகியும் வேலைப் பார்த்தவர்களுக்கு வீட்டிலேயே அடைந் து இருப்பது இயலாத ஒன்று. கணவருக்கோ வேலை பளுவினால் மனைவியின் மன ஓட்டத்தை புரிந்துக் கொள்ள கூட நேரம் இருக்காது. வந்த புதிதில் நண்பர்களை , புதிய இடத்தையும் பார்ப்பதில் ஒரு மாதம் போகலாம்; பிறகு தனிமையும் வெறுமையும் தான் வாட்டும். இந்த சுழலில் தான் சில பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளக்  கூட யாரையும் நாட முடியாமல் தவிக்கின்றனர். அனால் இந்த ஆரம்பக் கட்டத்தை சமாளித்து தாண்டி விட்டால் பிறகு வாழ்க்கை சொர்க்கம் தான்.
 
இந்த மன அழுத்தத்தை தவிர்க்க மனதை தங்களுக்கு விருப்பமான விஷயத்தில் திசை திருப்ப வேண்டும். ஏதேனும் ஒரு கலையைக் கற்று அதனை வளர்த்திக் கொள்ளும் சந்தர்ப்பமாக இந்த நேரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக் கொள்ளலாம்; கூடுமானவரை மனதை அலைய விடாமல் பிடித்தமான hobby இல் கவனம் செலுத்தலாம். எல்லா இடமும் நாம் நினைப்பது போல் அமைவது அத்தனை சுலபம் இல்லை. மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது; அதை உணர்ந்து அந்தந்த இடத்திற்கு ஏற்ப வாழ மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இதை புரிந்துக் கொண்டால் தேவையல்லாத உளைச்சலும் மன அழுத்தமும் ஏன் ஏற்பட போகிறது?.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 10, 2012 @ 9:52 pm