சச்சினா ! சதமா ?!

ஒவ்வொரு தொடரின் பொது இதையே பிராதனமாக கொண்டு பேசப்படுவது தேவையில்லாத ஒன்று. இப்பொழுது ஆஸ்திரேலியா தொடரை மேலும் சொதப்பாமல், விழித்துக் கொள்ளும்படியான உண்மையான விமர்சனங்கள்தான் நம்மவர்களுக்கு தேவை. நன்றாக ஆடும் போது ஒரேடியாக பாராட்டுவதும் சரியாக விளையாடவில்லை என்றால் அப்படியே கீழே போடுவதுமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சச்சின் சதம் அடித்தால் ஒரு அரசாங்கம் அவருக்கு (அரசவையில் அறிவிப்பது போல்) நூறு தங்க காசுகள் பரிசாக கொடுக்கப் படும் என்பதுதான். நல்ல வேளை அந்த முறை அவர் அடிக்கவில்லை; இல்லை என்றால் காசுக்காகத்தான் அடித்தார் என்று சொன்னாலும் சொல்வார்கள். சச்சினுக்கு இன்னமும் கிரிக்கெட்டின் மீதான passion, மதிப்பு குறையாததால் தான் அவரால் சாதனை படைக்க முடிகிறது. இம்மாதிரி அறிவிப்பின் மூலம் அவரது திறமையை சிறுமை படுத்தல் கூடாது. இனியும், உலகிற்கு அவர் திறமையை உணரவைக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. நம்மை விட அவருக்கும், தான் சாதனையை படைக்க ஆவல் இருக்கும் என்பதை உணர வேண்டும். காலம் கொஞ்சம் ஆனாலும் கூடிய சீக்கிரமே அந்த மைல் கல்லை அடைய வாழ்த்துவோம்.