விவாகரத்து – மறுபக்கம் !!!

 

இன்று பன்முக கலாச்சாரம் நம்மிடையே அதிகம் ஊடுருவிக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதனால் ஒரு சில நன்மைகள் இருந்தாலும் நமக்கே உரித்தான சில தனித்துவம் நிறைந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு  மறையத் தொடங்குவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். இது ஒரு  நல்ல அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது. இதில் முழுவதும் நம்மை தொலைத்து விடாமல் இருக்க  ஒரு எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவது அவசியம் என்று தோன்றுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல் எந்த ஒரு விஷயத்திற்கும் இரு பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.
 
உதாரணத்திற்கு இன்று நம்மிடையே பெருகி வரும் அதிக விவாகரத்து. முன்பு இந்த வார்த்தை எங்கேயோ  எப்போவோ கேட்ட குரலாகத் தான் இருந்தது; ஆனால் இப்போ அடிக்கடிக் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. சகிப்புத் தன்மையும் பொறுமையும் குறைந்ததை ஒருக் காரணமாகச் சொன்னாலும், சட்டத் திருத்தங்களால் இப்பொழுது எளிதில் கிடைபதால் சிலருக்கு மிகவும் சாதகமாகி விட்டது. சம்மந்த பட்ட ஆணோ, பெண்ணோ, அவரவர் தங்கள் விருப்பப்படி வேறு வாழ்க்கை துணையை தேர்வு செய்து செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் இதனால் பாதிப்பிற்கு உண்டான இன்னொரு தரப்பு பற்றி யாருமே நினைத்து பார்பதில்லை. அவர்கள் தான் சம்மந்த பட்ட ஆண் பெண்ணின் பெற்றோர்கள்! கண்டிப்பாக குழந்தைகளின் நல் வாழ்க்கை அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மனதில் ஏற்படும் அந்தக் காயத்திற்கும் பிறரின் பார்வையில் தாழ்ந்து போவதற்கும் யாரும் மருந்து போட முடியாது. எத்தனையோ கனவுகளுடன் பல மாதங்களாக பார்த்து பார்த்து பிரமாண்டமாக செய்யப்படும்  திருமணம் சில சமயங்களில் அற்பக் காரணங்களால் சில மாதங்களிலே பிரிவு வரும் போது பெற்றோர்களின் மன நிலையை சொல்ல வார்த்தைகளே இல்லை. இன்றையத் தலைமுறை அடுத்தடுத்தக் கட்டத்திற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் மனோபாவம் இருப்பதால் சுலபமாக எதையும் எதிர் கொள்ள முடிகிறது. ஆனால் பாதிப்பு அடைந்த  பெற்றோர் நிலையோ வேறு!
 
பொது இடங்களிலோ, திருமணத்திலோஇந்த மாதிரி சம்பவத்திற்கு பிறகு அவர்களால்  எப்போதும்  போல் சகஜமாக கலந்துக் கொள்ள முடிவதில்லை; பிறர் கேட்கும்  கேள்விகளை எதிர் நோக்கும் தைரியம்   அவர்களுக்கு இருப்பதில்லை. குடும்பத்தினரிடமும், உறவுகளிடமும் நண்பர்களிடம் , அவர்களின் மதிப்பு குறைந்து விடுகிறது; தங்களின் வளர்ப்பு சரி இல்லையோ என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் மனம் புழுங்கித்  தவிக்கிறது. இதில் கூட பிறந்தவர்கள் இருந்தால் அவர்களின் திருமணம் என்ற கட்டம் வரும் போது எதிர் பார்ப்பது போல் அவ்வளவு சுலபமாக அமைவதில்லை. விவாகரத்து என்ற சொல் அந்தக் குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டு   ஒரு சுனாமி போன்ற பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. விவாகரத்து என்ற ஒன்று இல்லாமலே இருந்தால், சகிப்புத் தன்மையும், வாழ்க்கையின் அருமையும் புரியுமோ என்று நினைக்கும் அளவிற்கு பெற்றோர் மனம் விரும்புகிறது;
 
ஏன் என்றால் திருமணம் என்ற ஒன்று  நடக்கும் போதே இது சரியாக அமைய விட்டால் இருக்கவே இருக்கு இன்னொன்று என்ற எண்ணத்துடன்  தான் சிலர் மணம் புரிகின்றனர். ரொம்ப சுலபமாகவே விலக்கும் கிடைபதால் வாழ்க்கையின் அருமை எதில் உள்ளது என்பதை புரிந்துக் கொள்ள தவறி விடுகின்றனர். இதில் அதிகம் பாதிப்பிற்கு ஆளாவது பெற்றோர்களே என்பதை அறிவதில்லை. எந்த விஷயத்திற்கும் ஒரு கட்டுப்பாடு அவசியம்; இல்லாமல் போனால் அதன் மதிப்பை உணராமலே தவற விடும் வாய்ப்பு அதிகரித்து விடும். புது கலாச்சார  விஷயங்களை வரவேற்கலாம்; அதற்கு முதலில் நம்மிடம் உள்ள நல்லக் கலாச்சரங்களை உணர்ந்து மதிக்க வேண்டும். திருமணம் என்ற பந்தத்தை தொலை நோக்கு பார்வையோடு பார்த்தால் தான் அதன் அருமையை அனுபவித்து  உணர்ந்து ரசிக்க முடியும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “விவாகரத்து – மறுபக்கம் !!!

  • January 19, 2012 at 10:08 pm
    Permalink

    மிகவும் நல்ல கட்டுரை. பொறுமையின்மையும் சகிப்புத்தன்மையின்மையும் மட்டுமில்லாமல் தான் நினைத்தபடி கணவனோ மனைவியோ நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவிடுபொடியாகும் போது அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விவாகரத்து முடிவை எடுக்கிறார்கள். இதே அவர்களின் இந்த முடிவைத் தள்ளி வைத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் அங்கே பிரச்சினை இராது. தாம்பத்தியம் என்பது புரிதலிலும் விட்டுக் கொடுத்தலிலும் தான் அடங்கியிருக்கிறது என்ற சூட்சமம் புரிந்து கொள்ளாமல் அவசரத்தில் எடுக்கும் முடிவு.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 19, 2012 @ 2:01 pm