வேட்டை
மாதவன் – ஆர்யா சமீரா ரெட்டி- அமலாபால் நடிக்க லிங்குசாமி இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய 'வேட்டை' திரைப்படம் தயாராகிறது என்றவுடன் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்திருக்கும். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறது இந்த வெற்றிக் கூட்டணி.

இடையில் மாதவன் – சமீரா கல்யாணம் ஆர்யா- அமலா பால் காதல் என்று நடக்கிறது. வில்லன் கூட்டம் ஆள் மாறாட்டத்தைக் கண்டுபிடித்து அப்பாவி மாதவனைத் துவம்சம் செய்ய ஆர்யா அண்ணனுக்கு வீரத்தை ஊட்ட சில முயற்சிகள் எடுக்கிறார். அந்த முயற்சிகள் பலித்ததா? அண்ணன் – தம்பிகள் வெற்றி பெற்றார்களா? என்பது சின்ன குழந்தை கூட சொல்லி விடும் இறுதிக்காட்சி.
வித்தியாசமான கதை என்று சொல்ல முடியாது. ஆனால் காட்சிகளை வித்தியாசப்படுத்தி ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டி கலகலப்பாக கலக்க வேண்டியதைச் சரி விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார் லிங்குசாமி. இருந்தாலும் பழைய திரைப்படங்களின் சாயல் மாதவன் – ஆர்யா அறிமுகப்பாடல்களிலும் சண்டைக் காட்சிகளிலும் வருவதைத் தவிர்த்து வேறு விதமாகக் காட்சிப்படுத்தி இருந்திருக்கலாம். படத்தின் சில குறைகளையும் லாஜிக் மீறல்களையும் தவிர்த்திருந்திருக்கலாம். அண்ணன் – தம்பிகள் என்பதற்காக அண்ணே, தம்பி என்று உருகிக் கொண்டிருக்காமல் பாசத்தைச் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.
ஹிந்தி திரைப்படங்களில் சாதாரணமாக இரண்டு, மூன்று கதாநாயகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பார்கள். தமிழில் ஈகோ முட்டிக் கொள்ளும். இரண்டு கதாநாயகர்கள் படத்தில் நடிக்கத் துணிச்சல் வேண்டும். மாதவனும் ஆர்யாவும் அமர்க்களம் பண்ணியிருக்கிறார்கள்.
படத்தலைப்பில் ஆர்யாவின் பேருக்கு முதலிடம் கொடுத்து இவருக்கு ஆர்யாவிற்கு அடுத்துப் போட சம்மதித்தற்கே தனி தைரியம் வேண்டும். அதிலும் இன்னொரு ஹீரோவைப் புகழவும் நல்ல மனம் வேண்டும். 'வந்துட்டான் என் சிங்கக்குட்டி' என்று மாதவன் கூறுவது தன் நடிப்புத் திறமை மேல் இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. சரக்கு உள்ளவன் எத்தனை நாயகர்களுடன் நடித்தாலும் தனியே தெரிவான் என்பது மாதவனைப் பார்த்தால் புரியும். அசத்தலான நடிப்பு. பயந்தவராக அதகளம் பண்ணியிருக்கிறார். அதிலும் இவரைப் பயமுறுத்த வில்லன் குழு தம்பியைக் கடத்தி வைத்து பேரம் பேசும் போது மாதவனின் முகத்தில் நடிப்பு என்று தெரியாத அளவு தத்ரூபம். ஆனாலும் ஆர்யாவின் நடிப்பை விட மாதவனின் நடிப்பு ஒரு படி மேலே என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
பயந்தாங்கொள்ளியாக நடிப்பது சவாலான பாத்திரம். அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். என்ன கொஞ்சம் எடையைக் குறைத்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் மாதவன் அலை மீண்டும் வீசும்.
ஆர்யாவிற்குப் பாதி நேரம் சண்டைக் காட்சிகள், மீதி நேரம் அமலாபாலுடன் காதல் காட்சிகள் இடையிடையே அண்ணன் -தம்பி பாசம் என்று காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமீராவிற்கு வரும் சந்தேகம் போல ஆர்யா என்ன தான் படித்தார்? எந்த வேலைக்கும் செல்லவில்லையா? என்று பல கேள்விகள் மண்டைக்குள் குடைகிறது. ஆனாலும் அதற்கு விடை இறுதிக்காட்சியில் தான் கிடைக்கிறது.
சமீராவின் வயது ஏறிக் கொண்டிருக்கிறது. மேக்கப் போட்டாலும் ஒட்டாமல் துருத்திக் கொண்டிருக்கிறது முற்றின முகம், ஆனாலும் போலீஸ்காரரின் மனைவியாகத் தைரியசாலியாக சபாஷ் வாங்குகிறார். அமலாபால் சில காட்சிகளில் அழகு. சில காட்சிகளில் 'நன்னா சாப்பிட்டு உடம்பத் தேத்தும்மா' என்றபடி இருக்கிறது இவரது கோலம். சமீராவிற்குப் பொருந்தாத முக ஒப்பனை என்றால் அமலா பாலுக்கு புடவை, தாவணி தவிர மாடர்ன் உடைகள் பொருந்தவில்லை. நடிக்கவும் வாய்ப்பில்லை. ஆர்யா- அமலாவின் காதலும் அந்த நீண்ட முத்தக்காட்சியும் ரசிகர்களுக்கு இளமை விருந்தாக இருக்கும். ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள் இருந்தும் 'ரன்' மீரா ஜாஸ்மினைப் போல ஈர்க்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
வில்லன் அசுதோஷ் ரானாவும் தம்பி ராமையவும் கருத்தில் நிற்கிறார்கள்.
சமீராவும் அமலாவும் சகோதரிகள். சமீராவிற்கு வரும் மாப்பிள்ளைகளை இருவரும் விரட்டுகிறார்கள். பிறகு எப்படி சமீரா மாதவனைப் பார்க்காமலே இந்த வரன் அமைய வேண்டும் என்று கலங்குகிறார்? ஒரு வேளை மாதவனின் புகைப்படத்தைப் பார்த்து பிடித்திருந்திருக்குமோ?ஆர்யாவிற்கு மட்டும் எதிரிகளின் இருப்பிடம் எப்படி தெரியும்? போன்ற ஓட்டை ஒடிசல் கேள்விகளுக்கு விடை அந்த (லிங்கு)சாமிக்கே தெரியும்.ஒரு காட்சியில் லிங்குசாமியும் வந்து போகிறார். நல்ல வேளை இவரும் பேரரசு போல சின்ன பாத்திரத்தில் வந்து பஞ்ச் வசனம் பேசி விடுவாரோ? என்று அஞ்சினேன், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.
'பப்பர பரபர' மற்றும் 'டம்டனா' பாடல்கள் ஓரளவு நன்றாக இருக்கின்றன. பின்னணி இசை தவிர பாடல்களில் யுவன் சங்கர் ராஜா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே நிலை தான் நீரவ்ஷாவின் ஒளிப்பதிவிற்கும். மனிதர் கொஞ்சம் ஏமாற்றி விட்டார்.
சமீபத்தில் வெளிவந்த 'ஒஸ்தி'யில் நெல்லை வட்டார மொழியைப் பேசுவதாக சின்னாபின்னப்படுத்தி இருந்தார்கள். 'வேட்டை'யில் கதைக்களம் தூத்துக்குடியில் என்பதற்காக பாத்திரங்களைத் தூத்துக்குடி வட்டார மொழி என்று தலைவலியைக் கொடுக்காமல் ( நாசர் தவிர) இருந்ததற்கே கோடி நன்றிகள்.
எதுவும் யோசிக்காமல் படம் பார்த்தால் கலகலப்பான படம் பார்த்த திருப்தி. 'வேட்டை' நடத்தும் வசூல் வேட்டை.
Hi Gayathri,your review has given the full essence of the story.Nice review.
Regards,
Gayetri.
ஒஸ்தி யை நாஸ்தி ஆக்கிவிட்டீர்கள்!