வாங்க பேசலாம் !!!


சமீபத்தில் இந்தியக் கல்வித் தரத்தை பற்றி வெளி வந்த செய்தியை  அப்படியே ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்  கொள்வதில் தவறில்லை. சர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் அடிப்படை கல்வியை ஆராயும் போது நமது கல்வித் தரம் மிகவும் பின் தங்கி இருப்பதாக கணித்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள கல்வியின் தரம், 72 நாடுகளில் 70 வது இடத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் உள்ள 2  மாநிலங்களைக்  கணக்கில் கொண்டு இந்த முடிவை அறிவித்திருக்கின்றனர். ஆனால் இது எந்த அடிப்படையில், எந்த அளவு கோலில் கணக்கெடுக்கபட்டது ? என்று  தெரியவில்லை; இவ்வளவு பெரிய ஆய்வை வெறும் இரண்டு மாநிலத்தை வைத்து எப்படி முடிவிற்கு வர முடியும் . இன்று, இந்தியாவில் படித்த நிறைய பேருக்கு வெளி நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது. அது எப்படி சாத்தியம்? ஒன்றை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்; முன்  போல் ஆசிரியர்கள் அதிக  ஈடுபாட்டுடன் சொல்லிக் கொடுப்பதில் வேண்டுமானால் தொய்வு நிலை ஏற்பட்டிருக்கலாம்; மேலும் இப்போது தரமான ஆசிரியர்களைக் கூட காண்பது அரிதாகி விட்டது. எல்லோருக்கும் பணத் தேவை அதிகரித்திருப்பது காலத்தின் கட்டாயம். ஆசிரியர் வேலையில் இதை எதிர் பார்க்க முடியாது; ஒரு வேளை அவர்களையும் மதித்து நல்ல சம்பளம் கொடுத்தால் தரமான ஆசிரியரை பெறுவதில் கஷ்டம் இருக்காது.
 
ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பது பழமொழி; நம் நாட்டில் பள்ளி வாசனை அறியாத சிறுவர்கள் கூட கணக்கு வழக்குகளில் மிகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இதை பெட்டிக் கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் வேலை செய்பவர்களிடம் கண்கூடாக பார்கிறோம். சில சுட்சமங்களும் சாதுரியங்களும் படித்தவர்களை விட இவர்களிடம் அதிகம் பார்க்க முடியும். ஆனால் அடிப்படைக் கல்வி இருந்தால் இவர்களால் இன்னும் சாதிக்க முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.
 
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது. இம் மாதிரி விஷயங்களை பொது படையான ஒரு அளவு கோல் வைத்து கணிக்க  முடியாது. எல்லா நாடுகளுக்கும் ஒரே மாதிரியான சட்டத் திட்டங்கள் இருப்பதில்லையே; சில சட்டங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது; உதாரணத்திற்கு நம் நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் என்பது சட்டத்திற்கு விரோதமானது. ஆனால் சில நாடுகளில் சிறுவர்கள் கூட பகுதி நேர வேலை பார்ப்பதை பெற்றோரும் சரி அரசாங்கமும் சரி அனுமதி அளிக்கிறது; நமது நாட்டில் திரைப்படங்களில்  நடிப்பது மட்டுமே விதி விலக்கு; சில இடங்களில் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே கற்கும் வழக்கமும் இருக்கிறது; அது நமது நாட்டிற்கு சரிவராது. பல்கலை கழகமும், பள்ளிக் கல்லூரிகளும் நாட்டிற்கு  நாடு வித்தியாசமான சூழ்நிலையில் தான் அமையப் பெற்றிருக்கு; வளரும் நாடுகளில் அத்தகைய வசதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது; அதனாலேயே கல்வித் தரம் பாதிக்கும் என்பதையும் ஏற்க முடியாது.
 
நம்  நாட்டில் கல்வின்  நிலை எந்த தரத்தில் இருக்கு என்பதை இன்னொருவர் சொல்லி அறிந்துக் கொள்ள வேண்டிய சுழலில் நாம் இல்லை. அது நமக்கே தெரியும்; எந்த நிலையிலுருந்து நாம் இன்று  இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கோம் என்று எல்லோரும் அறிந்ததே; இன்று மற்றவர்களுக்கு  போட்டியாக நாம் இருப்பதே  பெருமை பட வேண்டிய விஷயம். இன்றையக் காலக் கட்டத்தில்  நம்மிடையே  பல விஷயங்களில் மாற்றம் நடந்துக் கொண்டிருக்கும் நேரம்; அதனால்  சில பின்னடைவுகளும் தொய்வுகளும் ஏற்படுவது போன்ற தோற்றத்தை தவிர்க்க முடியாது தான். இது நிரந்தரம் கிடையாது; இந்நிலை கூடிய சீக்கிரமே மாறி விடும்.
  
உண்மை இன்று நமது அடிப்படைக் கல்வியில் தரமும் மாற்றமும் தேவை தான். காலத்திற்கு எற்றார் போல் நடை முறை  வாழ்க்கைக்கு  பயன் படும் வண்ணம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு செயல்படுவது அவசியம்; கட்டிடத்திற்கும்  வசதிக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை சரியான ஆசிரியர்களை அமர்த்துவதிலும் காட்ட வேண்டும் ;சரியான பயிற்சி பெற்றவர்களை பணிக்கு அமர்த்துவது மட்டும் அல்லாமல் தகுந்த ஊதியத்தை தருவதிலும் பரந்த மனத்தைக் காட்ட வேண்டும். சிறந்த கல்வி ஆய்வார்களைக்  கொண்டு சரியானபடி பாடத் திட்டங்களை வகுத்து நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை எல்லோரும் உணரும் நாள் கூடிய சீக்கிரமே அமையும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 31, 2012 @ 4:10 pm