பார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்

கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் பொழுது பெருங்கடுப்பு ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் வரும் விளம்பரங்கள்தான். அதுவும் சச்சின் டெண்டுல்கர் அவுட் ஆகி போகும் பொழுது அவர் நடித்த விளம்பரங்களைப் போட்டால் டீவியை உடைத்தால் என்ன என்பது போன்ற ஆத்திரம்தான் நமக்கு வரும். அதிலும் சில அசட்டு விளம்பரங்களைக் கண்டால் இன்னுமே நம் ரத்தக் கொதிப்பு அதிகமாகும். நிற்க. இந்தக் கட்டுரை கிரிக்கெட் பற்றியோ கடுப்பேற்றும் இந்த மாதிரி விளம்பரங்கள் பற்றியோ இல்லை. கவலை வேண்டாம். ஆனால் விளையாட்டு, விளம்பரம் எல்லாம் உண்டு அதையும் தாண்டி பார்ட்டி, பெட்டிங் என கலந்து கட்டி அடிக்கப் போகிறேன். சொன்ன பேச்சைக் கேட்டு நின்றவர்கள் இனி உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து படிக்கலாம்.

 
உலகத்திலேயே அதிகம் பேர் தொலைக்காட்சியில் கண்டு களிக்கும் விளையாட்டுப் போட்டி எது என்றால் ஒலிம்பிக்ஸ் என்றோ கால்பந்து உலகக்கோப்பை என்றோ பல பதில்கள் வரலாம். இந்த உலகத்திலேயே என்பதைக் கொஞ்சம் மாற்றி அமெரிக்காவில் எனக் கேட்டால் அதற்கு ஒரே பதில்தான் – சூப்பர் பௌல் (Super Bowl). உலகிலேயே என்பதற்கும் கூட இதைத்தான் பதிலாகச் சொல்பவர்களும் உண்டு. அது என்ன சூப்பர் பௌல் எனக் கேட்பவர்களுக்காக ஒரு சிறு விளக்கம். அமெரிக்காவில் புட்பால் என்றால் அது நாம் கால்பந்து என்று அறிந்திருக்கும் ஆட்டத்திற்கான பெயர் இல்லை. அதை சாக்கர் என்பார்கள். இங்கு புட்பால் என்பது ரக்பி ஆட்டத்தினை ஒத்த ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டின் விதிகள், வியூகங்கள், பிரபல ஆட்டக்காரர்கள், ஆகச் சிறந்த தருணங்கள் என்றெல்லாம் போனால் இந்த கட்டுரை காவல்கோட்டம் ரேஞ்சுக்குப் போய்விடும் என்பதாலும், ஆசிரியர் எஸ்ராவாக அவதாரம் எடுக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் அதை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிடலாம்.
 
ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தின் தலைசிறந்த இரு அணிகள், லொம்பார்டி கோப்பை என்று அழைக்கப்படும் கோப்பையை வெல்வதற்கான ஆட்டம் சூப்பர் பௌல். இப்போதைக்கு இது போதும். இந்த வருடம் நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணி (New York Giants) பாஸ்டன் நகரைச் சார்ந்த நியூ இங்கிலாந்து பேட்ரியட்ஸ் (New England Patriots) என்ற அணியுடன் வரும் ஞாயிறன்று மோதுகிறது. ஆட்டம் நடைபெற இருப்பது இண்டியானாபோலிஸ் நகரம். பொதுவாகவே நியூயார்க் நகர விளையாட்டு அணிகளுக்கும் பாஸ்டன் நகர அணிகளுக்கும் – புட்பால், பேஸ்பால், பாஸ்கட் பால், ஐஸ் ஹாக்கி என எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் பாரம்பரிய பகை உண்டு.
 
அது மட்டுமல்லாமல் 2007-08 ஆண்டு, தோல்வியையே பார்த்திராத அணியாக இருந்த பேட்ரியட்ஸ் அணியை சூப்பர் பௌல் ஆட்டத்தில் தோற்கடித்து எதிர்பாராமல் கோப்பையை வென்ற அணி ஜெயண்ட்ஸ். அவ்விரு அணியிலும் ஆடியவர்கள் பலர் இந்த வருடமும் இருக்கிறார்கள் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. நேரில் பார்க்க குறைந்த பட்ச டிக்கெட்டுகளே பல ஆயிரம் டாலர்களுக்குப் போகும். ஆனாலும் அரங்கம் நிறைந்துவிடும். அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இது தீபாவளி பொங்கல் மாதிரி ஒரு பெரிய விழாதான். சூப்பர் பௌல் சண்டே எனச் சொல்லி சிறப்பு நிகழ்ச்சிகள் காலை முதலே தொடங்கிவிடும். அமெரிக்காவே தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கப் போகிறது என்றால் அது மிகையே இல்லை. சென்ற வருடம் சுமார் 100 மில்லியன் பேர், அதாவது பத்து கோடி பேர் சூப்பர் பௌலைப் பார்த்ததாகக் கணக்கு சொல்கிறார்கள். இந்த வருட பார்வையாளர் எண்ணிக்கை 175 மில்லியன் பேர் என்பது எதிர்பார்ப்பு. சூப்பர் பௌலின் புகழைப் பற்றி ஒரு வரியில் கூற வேண்டுமானால், 1985 சான்ப்ரான்ஸிக்கோவில் உள்ளூர் அணி விளையாடிய சூப்பர் பௌலின் பொழுது அந்த ஊரின் நடக்கும் குற்றங்கள் 75% குறைந்தது! போதுமா?!
 
குடும்பத்தாரும் நண்பர்களும் ஓரிடத்தில் கூடி சூப்பர் பௌல் பார்ப்பது பல குடும்பங்களில் வாடிக்கையாக நடைபெறும் நிகழ்ச்சி. சூப்பர் பௌல், சரியாக குளிர்காலத்தின் நடுவே வருவதால் வெளியில் வேறொன்றும் செய்ய முடியாமல், புட்பால் ஆர்வம் இல்லாதவர்கள் கூட சூப்பர் பௌல் பார்ட்டிகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார்கள். நம்ம ஊரில் இருந்து புதிதாக இறக்குமதி ஆகி இருக்கும் மக்கள் எல்லாம் இந்த க்ரூப்தான். சூப்பர் பௌல் பார்ட்டி என ஞாயிறு முழுவதும் குடிப்பதும் உண்பதும் தொலைகாட்சி முன் தவம் கிடப்பதும், வீட்டினுள்ளே சிறு சிறு விளையாட்டுகள் விளையாடுவதுமாக இந்த ஞாயிறு கோலாகலமாகக் கழியும். ஸ்போர்ட்ஸ் பார் என்றழைக்கப்படும் விளையாட்டு சார்ந்த உணவகங்களில் நுழைய இடமில்லாத அளவிற்குக் கூட்டம் கூடும். அதிக டீவிக்கள் விற்பனை ஆவது சூப்பர் பௌலுக்கு முன்புதான் என்பதால் ஏகப்பட்ட தள்ளுபடி விற்பனையும் இருக்கும்.
 
பெரும்பாலான வீடுகளில் அன்று உணவு வெளியிடங்களில் இருந்தே ஆர்டர் செய்யப்படும். எளிதாக உண்ணும் வகை உணவுகளான பீட்ஸா, சிக்கன் விங்ஸ், சிப்ஸ் போன்ற உணவு வகைகளையே வரவழைப்பார்கள். அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day, நன்றி நவிலும் நாள் என்ற பண்டிகை) தவிர்த்து அதிக உணவு உட்கொள்ளப்படும் நாள் சூப்பர் பௌல் சண்டேதான். இந்த வருடம் பீட்ஸா ஹட் என்ற ஒரு நிறுவனம் மட்டும் தாங்கள் தயார் செய்யும் பீட்ஸாக்களை அடுத்தடுத்து வைத்தால் கிட்டத்தட்ட 450 மைல்கள் வரை நீளும் என்கிறார்கள். சில சாண்ட்விச் நிறுவனங்கள் இன்று 4 அடி, 6 அடி என பெரிய பெரிய சாண்ட்விச்களை சூப்பர் பௌல் சிறப்பு ஐட்டமாக செய்வார்கள்.
 
நாடு முழுவதும் 90 மில்லியன் பவுண்ட் சிப்ஸ், 100 மில்லியன் பவுண்ட் சிக்கன் விங்ஸ் (உலகை இரு முறைக்கும் மேல் சுற்றி வரும் அளவு) என உட்கொள்ளப்படும் உணவு வகைகளின் பட்டியலைப் பார்த்தால் சின்னதாக நாலு நாடுகள் ஒரு வாரம் சாப்பிடும் அளவிற்கு இருக்கும். சமீப காலங்களில் கேரட், அவகாடோ பழம் என உடல்நலத்தைக் கெடுக்காத வகை ஐட்டங்களில் மெனுவில் இடம் பெறுகின்றன. இவை எல்லாவற்றையும் உள்ளே தள்ள பல நூறு மில்லியன் கேலன் பீயர் உட்பட மதுபான வெரைட்டிகளுக்கும் இடம் உண்டு. இவ்வளவும் உண்பதாலும் குடிப்பதாலும் இதற்கு அடுத்த நாள் பலரும் ஆபீஸ் போகாமல் மட்டம் போடுவதும், ஜெலுசில் போன்ற ஆண்டாசிட்களின் விற்பனை அதிகமாவதும் கூட வருடா வருடம் நடப்பதுதான்.
 
விளையாட்டு ஒரு புறம் இருந்தாலும், விளையாட்டு தொடங்கும் முன் நடக்கும் ப்ரி கேம் ஷோ (Pre Game Show) மற்றும் இடைவேளையில் நடக்கும் ஹாப் டைம் ஷோ (Half Time Show) பெரும் ஆர்வத்துடன் பார்க்கப்படும் நிகழ்ச்சிகள். ஆட்டம் தொடங்கும் முன் பல்லாயிரக்கான புறாக்களைப் பறக்க விடுவது, விமானங்களை கொண்டு சாகசங்கள் நிகழ்த்துவது, பிரபல பாடகர்களை கொண்டு தேசிய கீதம் இசைக்கச் செய்வது என பல வகை கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும். அதே போல இடைவேளையிலும் பிரபல பாடகர்களின் நிகழ்ச்சிகள் நடக்கும்.
 
2004ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் ஜேனட் ஜாக்ஸனின் மார்க்கச்சை அவிழ்ந்து சில நொடிகள் அவர் அரை நிர்வாணமாகத் தோன்றியது உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதன் காரணமாக அமெரிக்காவில் எந்த நிகழ்ச்சியும் நேரலையாக காண்பிக்கப்படுவதில்லை. பத்து நொடிகள் தாமதத்திற்குப் பின்னரே ஒளிபரப்பப்படுகின்றது. அமெரிக்காவில் நேரலையான்னு கேட்டா நேரலைதான் ஆனா இல்லைன்னுதான் சொல்லணும்!
 
இந்த நிகழ்ச்சியை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி இன்னும் ஒண்ணு நடக்கும் அதான் சூப்பர் பௌல் விளம்பரங்கள். ஒரே நேரத்தில் 100 மில்லியன் பேர்கள் பார்க்கும் நிகழ்ச்சி. சும்மா விடுவாங்களா விளம்பர ஏஜென்ஸிகள். ஆட்டம் நடப்பது என்னமோ 60 நிமிஷங்கள்தான். ஆனா அது ஆட்டத்தின் தன்மை காரணமா முடிய மூணு மணி நேரம் வரை ஆகும். இதில் விளம்பரங்கள் 45 நிமிஷங்களாவது வரும். ஒரு முப்பது விநாடி வரும் விளம்பரத்துக்கு என்ன செலவாகும் தெரியுமா? அதிகமில்லை ஜெண்டில்மென், வெறும் மூன்றரை மில்லியன் டாலர்கள்தான்!
இவ்வளவு செலவு பண்ணி ஒளிபரப்பு ஆகும் விளம்பரங்கள் என்பதால் ரொம்ப கவனமெடுத்து செய்யும் விளம்பரங்களாக இருக்கும். சில மொக்கை விளம்பரங்களும் வரும் என்றாலும் பெரும்பாலும் நன்றாகவே இருக்கும். அதனால் சேனல் எல்லாம் மாற்றாமல் மக்கள் விளம்பரங்களையும் பார்ப்பார்கள். எது நன்றாக இருந்தது, எது மொக்கை என்று விளம்பரத்திற்கான விமர்சனங்கள் அடுத்த சில நாட்களுக்கு அலுவலகங்கள், இணையம், பத்திரிகைகள் என எல்லா இடங்களிலும் அலசப்படும். பாபா போன்ற பதிவர்கள் டாப் 10 பெஸ்ட், டாப் 10 வொர்ஸ்ட் என பதிவுகள் போடவும் மசாலா கிடைக்கும். 
 
திங்களன்று Super Bowl Ads என கூகிளினால் பொழுது போகும். இதற்கு நான் கேரண்டி.
 
விளையாட்டு சரி, கேளிக்கை சரி, விளம்பரம் சரி. ஆனால் இதுக்கு எல்லாம் மேல வேற ஒரு விஷயம் இருக்கு. அது பெட்டிங். யார் ஜெயிப்பார்கள் எனத் தொடங்கி, தேசிய கீதம் எவ்வளவு நேரம் பாடப்படும், வென்ற அணியின் கேப்டன் யாரைக் கட்டிப் பிடிப்பார், கமெண்ட்ரியில் 2008 சூப்பர் பௌல் பற்றி எத்தனை முறை பேசுவார்கள், எந்த விளம்பரம் சிறந்த விளம்பரமாகத் தேர்ந்தெடுக்கப்படும், வீட்டில் யார் முதலில் மட்டையாவார்கள் என்று எதற்கு வேண்டுமானாலும் பெட்டிங் நடக்கும். இந்த வருடம் கை மாறும் தொகை 8 பில்லியன் டாலராக இருக்கலாம் என்பது ஹேஷ்யம். இவ்வளவுக்கும் நெவாடா மாநிலம் தவிர மற்ற மாநிலங்களில் இது போன்ற பெட்டிங்கிற்கு அனுமதி கூடக் கிடையாது. ஆனால் வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடையே என எல்லா இடங்களிலும் ஒரு டாலரில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான டாலர் வரை பெட்டிங் இருக்கும். What happens in Vegas, stays in Vegas அப்படின்னு ஒரு சொலவாடை உண்டு. அது மாதிரி இந்த பெட்டில் ஜெயிச்சாலும் தோத்தாலும் வீட்டில் சொல்லாமக் கொள்ளாம கம்முன்னு இருக்கணும். 
 
இப்படித்தான் அமெரிக்கா சூப்பர் பௌல் சண்டேவைக் கொண்டாடும். சரி, எதாவது கேள்வி இருந்தா இப்பவே கேளுங்கடே. ஞாயித்துக் கிழமை ஐயா கொஞ்சம் பிஸி. ஃப்ரெண்டு வீட்ல தனியா இருக்கானாம். அவன் கூட சேர்ந்து சூப்பர் பௌலால் ஏற்படும் சமுதாயச் சீர்கேடுகள் பத்திப் பேசணும். இந்த வருஷம் எவ்வளவு கலாச்சாரச் சீரழிவு நடக்குதுன்னு உங்களுக்கு எடுத்துச் சொல்லணும்..
 
கடைசியா, இந்த மாதிரி கட்டுரை எல்லாம் எழுதினா நடுநிலமையோட எழுதணுமாம். அதனால எந்த விதமான பக்க சார்பும் இல்லாம "Let's Go Giants" எனச் சொல்லி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

7 thoughts on “பார்ட்டி, பெட்டிங் பின்னே (Super Bowl) புட்பால்

 • February 8, 2012 at 7:01 am
  Permalink

  சூபர் பவுல் சண்டே சரி, திங்களும் விடுமுறை வேண்டாமா? கொண்டாட்டம், பரேடு எவ்வளவு இருக்கு? ஒரு மூணு நாள் விடுமுறை கிடைச்சா நல்லாவே இருக்கும்.

  Reply
 • February 7, 2012 at 5:33 am
  Permalink

  பத்மா

  ஏற்கனவே இதைத்தான் சூப்பர் பௌல் சண்டேன்னு சொல்லி கொண்டாட ஆரம்பிச்சாச்சே இதுக்கு எதுக்கு ஒரு அதிபர் அனுமதி! இதுவும் ஒரு க்ரேட் அமெரிக்கன் ஹாலிடேதானே!

  அப்புறம் விளம்பரம் எல்லாம் விடுங்க. நம்ம ஆட்கள் விளையாடினது எப்படி?

  ஸ்ரீராம் பாவம் விடுங்க, அவரை போய் ஏன் கிண்டல் பண்ணிக்கிட்டு.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 3, 2012 @ 10:26 am