உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?

வீட்னி ஹூஸ்டன் (Whitney Houston) என்ற பிரபல பாப் பாடகி பாத் டப்பில் உயிரை விட்டார் என்ற செய்தி முதலில் வெளி வந்தது, ட்வீட்டரில். அதுவும், நியூஸ் சேனல்கள் எல்லாம் சொல்வதற்கு 27 நிமிடங்களுக்கு முன்னரே. இப்பொழுது எல்லாம் பரபரப்பான செய்திகள் பெரும்பான்மையான ஊடகங்களில் வருவதற்கு முன்னர் ட்வீட்டரில் தான் வருகிறது. அப்படி என்றால் இன்று இருக்கும் ஊடக வரைமுறைகளை ட்வீட்டர் மாற்றி அமைத்து விடுமா என்ற கேள்விக்கு வரும் பதில் அது வரை ட்வீட்டர் தாக்கு பிடிக்குமா?

 
பிடிக்கும், என்றால் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும்? கூகிள், பேஸ்புக்கிற்கு சவாலாய் விளங்குமா? இல்லை, வால் நட்சத்திரமாய் காணாமல் போய் விடுமா என்று எல்லாம் பலரைக் குடைந்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் விடை கிடைத்து விடும் போல் இருக்கிறது.
 
என்னது ட்வீட்டர் காணாமல் போய் விடுமா? ஏன் போகாது. எந்த ஒரு தொழிலையும் நடத்த வேண்டுமென்றால் பணம் வேண்டும். போட்ட முதலீட்டிற்கு லாபமான வருமானம் வேண்டும். அப்பொழுது தானே தொடர்ந்து நடத்த முடியும். இல்லாவிட்டால் ஆட்டம் காலி. படுதா காலி. ட்வீட்டர் நீடுழி வாழ என்ன செய்வீர்கள்? வருமானம் எப்படி வரும்? எங்கு இருந்து வரும்? லாபத்தில் ஒடுமா? என்று நாலாபுறத்திலிருந்தும் கேள்விகள் கேட்டு ட்வீட்டரை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அதற்கு உருப்படியான ஒழுங்கான பதிலை ட்வீட்டர் சொல்லி இருக்கிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு இருக்கிறதா? தொழில், வியாபாரம் என்று ஏதாவது செய்து கொண்டு இருக்கிறீர்களா? ட்வீட்டர் அக்கவுண்ட், சரி. அதில் எப்போதாவது தலை காட்டுவது என்று இல்லாமல் அவ்வப்பொழுது ட்வீட் செய்துக் கொண்டு இருக்கிறீர்களா. உங்களையும் மதித்து ரிப்ளை, ரீ-ட்வீட் எல்லாம் செய்கிறார்களா?அப்ப சரி ட்வீட்டரில் விளம்பரம் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். மேலும் முதலில் முண்டியடித்து முதலில் முந்தி வரும் 10,000 நிறுவனங்களுக்கு நூறு டாலர் பெறுமானமுள்ள விளம்பரம் இலவசம் என்று ஆரம்ப கால சலுகையும் உண்டு என அறிவித்திருக்கிறார்கள். 
 
இந்த அறிவிப்பு எல்லாம் சில மாதங்களுக்கு முன்னரே குறைவான கம்பெனிகளை வைத்து பரிசோதனை வெள்ளோட்டம் எல்லாம் விட்ட பின்னர் தான். இதை எல்லாம் அறிவிக்கும் ட்வீட்டர், அவர்களின் வருமானம் எவ்வளவு என்று அறிவிப்பதில்லை.அவர்கள் சொல்லா விட்டாலும் நாங்கள் சொல்லுகிறோம் என சிலர் குத்து மதிப்பாக கணக்கு போட்டு சொல்கிறார்கள். 
 
போன வருடம், 139 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார்கள். இந்த வருடம் 259.9 மில்லியன் டாலர்கள் சம்பாதிப்பார்கள். இன்னும் இரண்டு வருடத்தில் 540 மில்லியன் டாலர் வரும் என்று எல்லாம் ஆருடம் சொல்கிறார்கள். கூகிளின் பல பில்லியன் டாலர்கள் வருமானத்தையோ இல்லை பேஸ்புக்கின் 800 மில்லியன் பயனீட்டாளர்களையோ ஒப்பிட்டால், 100 மில்லியன் டாலர்கள் பயனீட்டாளர்கள் இருக்கும் ட்வீட்டர், ஒன்றுமே இல்லை தான். ஆனால் ஆட்டம் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. முடிவு எப்படி இருக்கும் என்ற செய்தியும் ட்வீட்டரில் தான் முதலில் வரும்!
 
ooOoo
 
சிலர் சேர்ந்து சமைக்கிறார்கள், புத்தகம் எல்லாம் எழுதுகிறார்கள். அப்படி இருக்கும் போது சிலர் கூடி ஏன் இசை அமைக்கக் கூடாது? ஒருவர் பாட்டு எழுதலாம், அதற்கு மற்றோருவர் இசை அமைக்கலாம். வேறு ஒருவர் இதை மார்க்கெட் செய்யலாம். எல்லாரும் என்ன டி.இராஜேந்தரா? இப்பொழுதும் அப்படித்தானே செய்கிறார்கள் எனக் கேட்கலாம். 
 
ஆமாம். ஆனால், நீங்கள் எழுதி முடித்தவுடன் இசையமைக்க யாரைத் தேடுவீர்கள், எங்கு தேடுவீர்கள், எப்படித் தேடுவீர்கள்? இதற்கும் ஒரு சோஷியல்  நெட்வோர்க் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். உதாரணமாக, “காதலில் சொதப்புவது எப்படி” குறும்படத்தை யூடூப்பில் பார்த்த நீரவ் ஷா, டைரக்டர் பாலாஜி மோகனை தொடர்பு கொண்டு படமாக்க வாய்ப்பு தந்தார். எல்லாருக்கும் அப்படி அமையாது இல்லையா? அதனால் இது போன்று வாய்ப்பு தேடுபவர்களுக்கும், தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மட்டும் ஒரு தளம் இருந்தால் என்ன?
 
அடடே, நல்ல ஐடியா. நான் கிறுக்கிய கவிதைகளும் பாடலாகும், யூடூப்பில் ஹிட் எகிறும். ஒரு லேடி காகா ஆகாவிட்டாலும், ஐஐம்மிலாவது மேனஜ்மெண்ட் பற்றி பேச கூப்பிடுவார்கள் என்று கொலவெறியுடன் கிளம்ப தோன்றுகிறதா தோன்றினால் இந்த ஐடியா எவ்வளவு மதிப்பு பெறுமானம் இருக்கும்? இதை வைத்து உங்களால் எவ்வளவு பணம் புரட்ட முடியும்?
 
இந்த ஐடியா சுமார் 160 கோடி வரை பெறும் என முடிவு செய்து 27 கோடி மூதலீடு செய்து இருக்கிறது, சிஸ்கோ நிறுவனம். பின்னே இந்த குயிக்கி (Qyuki) என்ற நிறுவனத்தின் பின் இருப்பது பண்டிட் குயின் (Bandit Queen) எடுத்த சேகர் கபூரும், ரஹ்மானும். படம் எடுக்க ஐடியா இருப்பவர்கள், குயிக்கியை அணுகலாம். பிசினஸ் ஐடியா இருப்பவர்கள் சிஸ்கோவை அணுகலாம். கிராமப்புற வளர்ச்சிக்கு டெக்னாலஜியை பயன்படுத்தும் ஐடியா தான் என்றில்லை டெக்னாலஜியை வைத்து புதிய பயன்பாடு என்றால் 300 கோடி வரை சிஸ்கோவிடம் பட்ஜெட் இருக்கிறதாம்! உங்களிடம் ஐடியா இருக்கிறதா?
 
ooOoo

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா ?

  • February 28, 2012 at 9:49 pm
    Permalink

    New info about Qyuki …

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 22, 2012 @ 12:28 pm