iPad3 சாதிக்குமா ஆப்பிள் ?


கூகுள் ஆப்பிளை சாப்பிடுமா? பேஸ்புக் கூகுளிற்கு பல்பு கொடுக்குமா? ட்விட்டர் பேஸ்புக்கைத் தாண்டி செல்லுமா என்ற கேள்விகளுக்கே இன்னும் பதில் தெரிந்த பாடில்லை. அதற்குள் பின்டிரஸ்ட்(www.pinterest.com) ட்விட்டரை பின்னி பெடல் எடுக்குமா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆம் இணைய உலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் பின்டிரஸ்ட். இதுவரை வந்த வெப்சைட்களில் மிக குறுகிய காலத்தில் 10 மில்லியன் பேர் எட்டிப் பார்த்த வெப்சைட் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாம்.
ஆஸ்கரில் ,ஏன்ஜலினா ஜோலி, லைட்டாக துணியை அகற்றி காலை அகட்டி காட்டினாலும் காட்டினார், அதை மையமாக வைத்து போட்டோஷாப் செய்யப் பட்ட பல படங்கள் பவனி வருவது பின்டிரஸ்ட்டில் தான்! இதற்கு பிறகு பின் டிரஸ்ட்டை பார்க்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று தெரியவில்லை!
 
நமக்குப் பிடித்த ஸ்போர்ட்ஸ்டார் போஸ்டரோ இல்லை ப்ளேபாய் போஸ்டரோ, ஏதோ ஒன்று அதை அறையில் நாம் மட்டும் பார்க்குமாறு ஒட்டி வைக்காமல், அனைவரும் பார்க்கும் படியாய், நமக்கு பிடித்த போஸ்டர்கள் அனைத்தையும் அனைவரும் பார்க்க வழி செய்யும் தளம் தான் பின்டிரஸ்ட். இப்பொழுது பெயர்க்காரணம் புரிந்திருக்கலாம்.
 
ஒரு சோஷியல் நெட்வோர்க்கிங் சைட்டுக்கு அத்தியாவசியமான லைக்,ரீ-ட்விட், பின்தொடர்தல் போன்றவற்றுக்கு சமமான சமாச்சாரங்கள் இதிலும் உண்டு. அனைத்தையும் விட மிக முக்கியமானது இவர்கள் வருமானமும் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வெப்சைட்டில் விளம்பரம் செய்யாமல், இவர்களுக்கு வருமானம் வரும் விதம் வித்தியாசமானது. 
 
உதாரணமாக, பிகினி இல்லா பூனம் பாண்டேவின் படத்தை நீங்கள் ஒட்டி வைக்க, அந்த படத்தின் மூலமாக ஏதாவது பிகினி விற்கும் கம்பெனி வெப்சைட்டிற்கு லிங்க் கொடுத்து அதன் மூலம் பிகினி விற்றால், அதில் பின் டிரஸ்டிற்கு கமிஷன் கிடைக்கும். ஆனால் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறோம் என்று இவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை. எவ்வளவு வருமானம் என்றும் குத்து மதிப்பாக சொல்ல முடியவில்லை.
 
படங்களை பகிர்ந்து கொள்வதில் காப்பிரைட் பிரச்னை வரும் என்று இப்பொழுதே சிலர் பிரச்னை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இது போன்ற பிரச்னைகளைத் தாண்டி பின்டிரஸ்ட் பல்லாண்டு வாழுமா இல்லை புஸ்வாணமாகுமா என்பது காத்திருந்தால் தான் தெரியும்.
 
அது எப்படியோ போகட்டும். இதில் சேர முடியுமா? முடியும். அவர்கள் தளத்திற்கு சென்று, ஐயா என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மனு போட்டால், பெரிய மனது பண்ணி இரண்டு நாட்களுக்குள், வெல்கம் சொல்லி உள்ளே விடுவார்கள். 
 
ooOoo
 
இந்தியாவில் பலரின் முதல் மொபைல் நோக்கியா தான். ஆனால் இன்றோ நோக்கியா என்றால் நோ யா என்று சொல்லிவிட்டு ஸாம்சங்கின் பக்கம் சாய்கிறார்கள். இந்த நிலை மாறி மீண்டும் மக்கள் நோக்கியாவை நோக்குவார்கள் என்ற நம்பிக்கையை நடந்து முடிந்த மொபைல் உலக காங்கிரஸில் நோக்கியா உலகிற்கு கொடுத்துள்ளது.
 
என்ன தான் ஆண்டிராய்ட் இலவசம் என்றாலும், நல்ல ஸ்மார்ட்போன்கள் சல்லிசாய் கிடைப்பதில்லை. மார்க்கெட்டில் தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலைக்கு பாதியில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் போன் இருக்கும் என்ற அறிவிப்பு தான் இந்த நம்பிக்கைக்கு அடிப்படை. வாங்கிய காசுக்கு மேலே நோக்கியா நன்றாகவே கூவுகிறது என்று மக்கள் நினைத்து, இந்தியா போன்ற மார்கெட்களில் ஹிட்டானால் நோக்கியா இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில் அதிக பலன் மைக்ரோசாப்ட்டிற்கு தான். ஆப்பிளிடமும் ஆண்டிராயிட்டிமும் இதுவரை தோற்ற கணக்கு எல்லாம் சரியாகிவிடும்.
 
மொபைல் உலக காங்கிரஸில் நோக்கியா மீது அனைவரின் கண் பட்டதற்கு காரணம், இந்த விலை குறைந்த ஸ்மார்ட் போன்கள் அல்ல. ப்யூர்வியூ என்ற 41 மெகாபிக்ஸல் கொண்ட கேமரா போன். முதலில் கேள்விப் பட்ட போது, பெரும்பாலானவர்கள், ஒரு புள்ளி விட்டுப் போயிருக்கும் போல 4.1 என்பதைத் தான் 41 என்று தப்பாக சொல்கிறார்கள் என்று தான் நினைத்தார்கள். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த 41 மெகாபிக்ஸல் கேமரா இருப்பது செத்துப் போன சிம்பியன்(Symbian) ஆபரேட்டிங் சிஸ்டம் இருக்கும் மொபைல் போனில். 
 
எரிந்துக் கொண்டிருக்கும் வீட்டில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு சிம்பியனும் ஒரு காரணம். இதை சீக்கிரம் தலைமுழுகாவிட்டால் தலை தப்பாது என்று நோக்கியாவின் தலைவர், ஸ்டீபன் எலாப்(Stephen Elop) கொஞ்ச காலம் முன்னர் அனைத்து நோக்கியா மக்களுக்கும் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். பின்னர் மைக்ரோசாப்ட் உடன் ஒப்பந்தம் போட்டு, இனி நோக்கியாவில் கதவே இல்லை, எல்லாம் விண்டோஸ் தான் என்றார். சிம்பியனா ச்சீ ச்சீ என்றார். (ஸ்டீபன் எலாப், நோக்கியாவிற்கு வருவதற்கு முன் வேலை பார்த்த இடம், மைக்ரோசாப்ட்)
இன்று அந்த சிம்பியனில் தான் 41 மெகாபிக்சல் கேமரா மொபைல் என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். ஆ வென்று அனைவரும் வாய் பிளந்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள். சிம்பியனில் இருக்கும் பொழுது, விண்டோசிலும் இதைக் கொண்டு வர நாளாகாது. நிச்சயம் கொண்டு வருவார்கள். அப்பொழுது வேண்டுமானாலும் 41 மெகாபிக்ஸலிற்கு ஆசைப்பட்டு அப்பாவிகள் யாராவது வாங்குவார்கள்.
 
இதே போல் அட போட வைத்த மற்றோரு போன், சாம்சங்கின் புரஜக்டர் போன். போனில் புரஜக்டர் இருந்தால் ரொம்ப வசதியா இருக்கும்ல என்று இனி யாரும் புலம்ப வேண்டியதில்லை.
 
இந்த மொபைல் உலக காங்கிரஸ் சொல்லும் நீதி என்னவென்றால், நீங்கள் ஸ்மார்ட்டாக இல்லாவிட்டாலும் உங்கள் போன் நிச்சயம் ஸ்மார்ட் போனாகத் தான் இருக்கும்.
 
ooOoo
 
400 மெகாபிக்ஸல் கேமரா வந்தாலும் சரி, சாட்டிலைட்டையே மொபைலில் கொண்டு வந்தாலும் சரி, நாங்கள் கவலைப் பட போவதில்லை. எங்கள் வழி தனி வழி என்கிறது ஆப்பிள். உலக மொபைல் காங்கிரஸ் கிடக்கிறது. நீங்கள் எல்லோரும் மார்ச் 7 சான் பிரான்ஸிஸ்கோ வர வேண்டும். நிச்சயம் பார்க்க வேண்டும். தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறது ஆப்பிள்.
 
ஐ-பேட்-3-ன் அறிமுக விழாவாகத்தான் இருக்கும் என அனைவரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையில் ஆப்பிளின் ஷேர்கள் விலை ஏறி அதன் மொத்த மதிப்பு 500 பில்லியனைத் தொட்டிருக்கிறது. மைக்ரோசாப்ட், இன்டெல், சிஸ்கோ எல்லாம் முன்பே ஒரு காலத்தில் இந்த பெருமையை அடைந்திருக்கின்றன. ஆனால் அது எல்லாம் டாட்காம் மோகம் வெறி எல்லாம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில்!
 
ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பொருளை அறிமுகப் படுத்தும் விதமே ஒரு சுவாரஸ்யமான சினிமாப் படம் பார்ப்பது போல. அதுவும் ஆப்பிளின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக் (Tim Cook) நிஜமாகவே தனி ஆவர்த்தனம் நடத்தும் முதல் அறிமுகப் படலம் இது.. டிம் குக் அறிமுகப் படுத்தும் பொருளை விட அவர் எவ்வாறு அறிமுகப்படுத்தப் போகிறார் என்பதும் எதிர்ப்பார்ப்பிற்குரிய சமாச்சாரம் தான்.
 
பி.கு: விண்டோஸ்-8 என்ற புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரெயிலரை (Beta version) மைக்ரோசாப்ட் வெளியிட்டிருக்கிறது. ஒரே நாளில் மில்லியன் டவுன்லோட். மைக்ரோசாப்ட் மண்ணாகி விடும் என்ற எண்ணத்தில் மண் விழுந்திருக்கிறது.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “iPad3 சாதிக்குமா ஆப்பிள் ?

  • March 2, 2012 at 8:13 am
    Permalink

    அற்புதமான மூன்று சமீபத்திய கதைகளை தொகுதுள்ளிர்கள்…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 1, 2012 @ 10:35 pm