தாசில்தார் ஆபிஸ் மைக்கூடு

 

இப்பொழுது இந்திய நகரங்களில் தாசில்தார் ஆபிசில் மைக்கூடு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்க குடியுரிமை மற்றும் வந்தேறிகள் சேவை மையத்தில் (அதாங்க  USCIS – United States Citizen and Immigration Service)ஒரு மைக்கூடு வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வம்புகளுக்குத் தீனிபோடும் வற்றாத மைக்கூடு அது. ‘நெவார்க் ஏர்போர்ட்ல வந்து இறங்கினவுடன திருப்பி அனுப்பிச்சிட்டாங்களாம்பா’ என்று ஒரே செய்தியை பத்து காப்பி போட்டு பலருக்கும் விநியோகம் செய்து கொண்டே இருப்பார்கள். பத்து பத்தாக பரப்பப்பட்டு பல நூறுகளாக பரினமித்துவிட்ட செய்தியினால் பலருக்கும் வீட்டில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே வாயிலில் இமிகிரேஷன் ஆபிசர் போலிஸோடு நிற்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டு விடுகிறது. அப்படி என்னதான் Donald Neufeld  புதிதாக சொல்லிவிட்டார்?

அதற்கு முன்னால் இந்த H1B வீசா என்றால் என்ன, அதில் என்ன இத்தனை புரிதல் சிக்கல் என்பதை பார்த்துவிடுவோம்.

அமெரிக்காவில் கொலம்பஸ் காலடி எடுத்து வைத்த ஆர்வத்தை விட பலமடங்கு அதிகமாக அமெரிக்க மண்ணில் கால்தடம் பதிக்க வேண்டும் எனத் தணியாத ஆர்வத்தோடு பல நாட்டவர்களும் காத்திருக்க, இன்னொரு பக்கம் உத்தரவாத வேலை, சமூக பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியினால் மிதப்பான வாழ்வு என்று அமெரிக்க சமூகம் கொஞ்சம் அசால்ட்டாக இருந்த காலம் அது. அமெரிக்க மோகம் கொண்ட அந்நிய மனித வளத்தை ஆகர்ஷிக்க போட்ட திட்டம்தான் இந்த H1B வீசா திட்டம்.  அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட சில திறமைகள் உள்ளூரில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடுகளிலிருந்து தாற்காலிகமாக தருவித்துக் கொள்ளலாம் என்று இந்த வழி செய்யப்பட்டது.

எங்கெங்கும் கணிணிமயமாக ஆகிக் கொண்டிருந்த காலத்தில்,  போதாக்குறைக்கு இணையம் அறிமுகமாகி எல்லா தொழில்களிலும் ஊடுருவிக் கொண்டிருந்த தொன்னூறுகளில் கணிணி அறிவிற்கு ஏகப்பட்ட தேவை இருந்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கு அல்வாத்துண்டு போல அபரிதமான மனிதவளம் குறைந்த விலைக்கு கிடைக்கும் சூழல். ஒரே ஒரு இடறல் என்னவென்றால் முதலில் உள்ளூரில் ஆள் தேடி கிடைக்காவிட்டால் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து ஆட்களை கூட்டி வரலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. அதுவும் அமெரிக்க வேலை நல்வாழ்வு சட்டதிட்டங்கள் நிறுவனங்களுக்கு அவ்வளவு உவப்பானதல்ல. இந்த சமயத்தில் புதிய தொழிலாக உருவானதுதான் Bodyshopping. இந்த பாடிஷாப்பிங் நிறுவனங்களுக்கு உற்பத்தி, சேவை என்று குறிக்கோள்கள் இல்லாமல், குறிப்பிட்ட திறமையுள்ள ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடுவதுதான் பிஸினஸ் மாடலே.   பழம் நழுவி பாலில் விழுந்தது போல ஆனது பெரிய நிறுவனங்களுக்கு. குறைந்த ரேட்டிற்கு H1B வீசா ஆட்களை காண்டிராக்டில் எடுத்துக் கொள்ளலாம். காண்டிராக்ட் முடிந்தவுடன் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் குட் பை சொல்லிவிடலாம் என்பது மிகப் பெரும் வசதி. 

அதிகபட்சம் ஆறு வருடங்கள் வேலை செய்ய அனுமதிக்கும் தாற்காலிக வீசாதான் என்றாலும், அப்படியே பச்சை அட்டை என்று சொல்லப்படும் (Green Card) நிரந்தர குடியேற்றத்திற்கு பாலமாக இந்த வீசா செயல்படுவதினால் இதற்கு ஏகப்பட்ட கிராக்கி. 

நடுவில் பாலமாக பணியாற்றும் பாடிஷாப்பிங் நிறுவனங்கள் பெயருக்குதான் முதலாளியாக (employers) செயல்படுவார்கள்.  உண்மையில் அவர்கள் கமிஷன் ஏஜெண்டுகள்தான். பெரும்பாலான ஒப்பந்த அடிப்படை H1B  வேலையாட்களுக்கு முதலாளிகள் அவர்களை காண்டிராக்டுக்கு எடுத்திருக்கும் நிறுவனங்கள்தான். இந்த மறைமுகமான கூட்டணி H1Bயின் அடிப்படை நோக்கத்தை கேள்விக்குறியாக்கும் செயல் என்றாலும் பலவருடங்களாக தொடர்ந்து நடந்து கொண்டே வந்தது.  

H1B வீசாவில் பணிபுரிவோருக்கு வந்த முதல் சோதனை 2000த்தில். இந்திரலோகமாக நினைத்துக் கொண்டு இணையத்தில்  பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்த முதலீட்டாளர்கள் பத்மவியூகத்தில் சிக்கிய அபிமன்யு போல ’போட்ட பணத்தை எப்படிங்க எடுக்கிறது? அதச் சொல்லவேயில்லயே…’ என்று உணர்ந்து கொள்ளும்போது வெடித்து சிதறியது இணையக் குமிழி (Internet Bubble).  பெருமாளே பிச்சை எடுக்கும் நிலையில் புல்லட் ஓட்ட பூசாரி எதற்கு என்று வருடாந்திர வீசா கோட்டாவை மூன்றில் ஒருபங்காக குறைத்தார்கள். பிறகு மீண்டும் பிக்கப் ஆகி அடுத்த ஏழு வருடங்களில் டாப் கியரில் மாறியபோது வீங்கி வெடித்தது லீமென் பிரதர்ஸ் மற்றும் பல அமெரிக்க வங்கிகள். பொருளாதார மந்த சூழல் அதிவேகமாக (முரண்நகை பாருங்கள்) 2009ல் உலகம் முழுவதும் பரவி வேலைவாய்ப்புகளை குறைத்துவிட்டது. ”H1B வீசாவா? இன்னுமா உன்னய வேலைக்கு வச்சிருக்காங்க” என்று கேட்கும் அளவிற்கு களையிழந்து போய்விட்ட திட்டம் இது.  

பட்ட காலிலே படும் என்பது போல போன ஜனவரி மாதம் டொனால்ட் USCIS –ன் எல்லா சேவை மையங்களுக்கும் ஒரு மெமோ அனுப்பி வைத்தாலும் வைத்தார் ‘H1Bல் வேலை செய்யும் இந்தியர்களை குறி வைத்து விட்டார்கள்’ என்று பரபரப்பாக வழக்கறிஞர்களும் பயங்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்திய வழக்கறிஞர்கள்தான் அதிகம் பயம் காட்டுகிறார்கள். அப்படி என்னதான் டொனால்டு சொல்லிவிட்டார்? அவருடைய மெமோவின் சாராம்சம் இதுதான்.

H1B வீசா கோரும் பெட்டிஷனர் அந்த வீசாவில் வேலை பார்க்கப் போகும் தனது ஊழியருடன் எத்தகைய உறவை பேணுகிறார் என்பது முக்கியம். அதிலும் தனது ஊழியரை ஒப்பந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்தின் இடத்தில் வேலை செய்ய அனுமதித்திருக்கும் பட்சத்தில் முதலாளி-ஊழியர் உறவு எந்த நிலையில் இருக்கிறது, தொடர்ந்து எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் பெரிதாக இந்தியர்களை குறிவைத்தோ, அல்லது ஒப்பந்த அடிப்படையில் அடுத்த நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவதோ தவறு என்று சுட்டவில்லை. வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் தனது ஊழியரை எப்படி அவர்கள் கட்டுபடுத்துகிறார்கள் என்பதற்கு தெளிவான திட்டம் வைத்திருக்கிறார்களா என்று விசாரிப்பார்கள். இன்னின்ன முறையில் எனது ஊழியரைக் கட்டுபடுத்துவேன் என்று தெளிவான திட்டம் இருந்தால் எந்தவித பிரச்சினையுமில்லை.  

எல்லாம் வல்ல அகமதாபாத் சித்தேஸ்வரர் ’வீஸா’ அனுமாருக்கு வடைமாலை சார்த்தியோ, ஹைதரபாத் சிலுக்கூர் ’வீஸா’ பாலாஜி பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தோ டொனால்டு நூஃபெல்ட் வேண்டிக் கொண்டால் வீஸா ஓட்டைகளை இடைத்தரகர்கள் மேலும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க அனுக்ரஹிக்கட்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 4, 2010 @ 3:56 pm