புது மாப்பிளையும் புது ஐபேடும்

புது மாப்பிள்ளைகளுக்கும், இன்றைய கால கட்டத்தில் பங்குச் சந்தைகளில் அறிமுகப் படுத்தப் படும் இணையம் சார்ந்த கம்பெனிகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை!. சந்தைக்கு வரும் முதல் நாளில், பங்குகளின் விலை உச்சாணிக் கொம்பிற்கு செல்கிறது. பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டார் என்ற ஒரு நாள் கொண்டாட்டம். அடுத்த நாள் மற்றும் ஒரு நாளாக மாறும் போது, பங்குகளும் மற்றும் ஒரு பங்காகி மாறி விடுகிறது. விலை விழுந்து விடுகிறது. முதல் நாள் என்னா விலை போச்சு தெரியும்ல என்ற பழம் பெருமை மட்டும் தான் மிச்சம் நிற்கிறது.

லிங்கிட்இன் (Linkedin), குரூப்ஆன் (Groupon) மற்றும் பண்டோராவைத் (Pandora) தொடர்ந்து சமீபத்திய உதாரணம், யெல்ப் (Yelp.com). 
 
ஒரு பர்த்டே பார்ட்டியில் நல்ல டாக்டர் என்று தெரிந்துக் கொள்வது எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? டாக்டர்களின் அட்ரஸை சொல்லும் கூகுள் அவர் அப்பாடக்கரா இல்லையா என்று சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒருவர் புலம்பினார். ஆமாம் ஆமாம், மக்கள் டாக்டரைப் பார்த்தவுடன் வீட்டிற்கு போய் மருந்து சாப்பிடாமல் அவரைப் பற்றி உலகத்துக்கு சொல்லி விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள் என்று நக்கலாய் பதில் சொன்னார். 
 
யோசித்துப் பார்த்தால் நிஜமாய் நல்ல ஐடியா என்று தோன்றியது முதலில் தெரிந்தவர்களுக்கு மட்டும் மெயில் அனுப்பி உதவி கேட்கும் சைட்டாக உருவாக்கினார்கள். பின்னர் ஹோட்டல் ரிசர்வேஷன் எல்லாம் செய்ய உதவினார்கள். அப்புறம் ஹோட்டல்களுக்கு விமர்சனம் எழுதும் சோஷியல் நெட்வோர்க் சைட்டாக மாறியது. சைட் அதிர ஆரம்பித்தவுடன், கூகிள் 500 மில்லியன் என டீல் பேசியது. யாகூவோ ஒரு பில்லியன் டாலர் என்றது.
 
அட போங்கப்பா, ரொம்ப கம்மியான விலையா இருக்கே என்று சொல்லி அனுப்பி விட்டனர். ஒரு வழியாய் பங்குச் சந்தையில் இறக்கினார்கள். 15 டாலர் என்று ஆரம்பித்தனர். சிலர் ரொம்ப கம்மி, இன்னும் அதிக விலை வைத்திருக்கலாம் என்றனர். சிலர் இதுவே அதிகம் என்றனர். விலையோ 26 டாலர் வரை எகிறியது. கூகுளிற்கு குட்பை சொல்லிய தீர்க்கதரிசி என்று யெல்ப்பை கொண்டாடினார்கள். அடுத்த நாள் 21 டாலருக்கு இறங்கியது. 
 
இது போன்ற பங்குகள் எல்லாம் அடுத்த நாளே விழுந்து விடுவது நிச்சயம் ஆறுதலான விஷயம். அவை பாட்டுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு ஏறிக் கொண்டே சென்று விட்டு, அம்போ என விழுந்து டாட்காம் பூம் பஸ்ட்டாக மாறுவதறகு அடுத்த நாள் புஸ்வானம் ஆவது மேல் இல்லையா?
 
oooOooo
 
ஐ-பேட் 3, இல்லை புது ஐ-பேட்டில் ஆச்சரியங்கள் எதுவும் அதிகமாக இல்லாமல் எதிர்பார்த்ததுப் போல் 4G, LTE, சிரி(Siri) இருக்கிறது ஆனால் இல்லை. ஐ-போன், ஐ-பேட்டில் இருந்த அம்சங்கள் மேக்கிற்கு சென்றது போல சில மேக் அம்சங்கள் ஐ-பேட்டிற்கு வந்திருக்கின்றன. வரலாற்று வழக்கப் படி புது ஐ-பேட் அதிக விலையிலும், ஐ-பேட்-2வின் விலைகுறைப்பும் நடந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட ஒரு நல்ல சமாச்சாரம் என்னவெனில் வீணாய் ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரை மருந்துக்கு கூட எங்கும் சொல்லவில்லை.
 
ஐ-பேட்-3 என்று சொல்லாமல் நியூ ஐ-பேட் (new iPad) என்று ஏன் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. அப்பொழுது இனி அடுத்து வரும் ஐ-பேடை என்னவென்று அழைப்பார்கள்?
டிம் குக்கின் (Tim Cook) கடைசி ஸ்லைடில், 2012-ல் எங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம் என்று சொல்லியதற்கு என்ன அர்த்தம் என்று யோசிப்பதற்கு முன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியது, புது ஐ-பேட்டில் இருக்கும் ரெட்டினா டிஸ்பிளே எந்த விதமான தாக்கத்தை உருவாக்கும்?
 
ரெட்டினா டிஸ்பிளே என்பது, நம் கண்ணால், ஏதாவது ஒன்றை நேரில், மிக அருகில் பார்ப்பதற்கு சமமான ஒன்று. முன்பே ஐ-போன் 4-ல் இது அறிமுகமாயிருந்தாலும் ஐ-பேட்டில் வரும் பொழுது அது ஒரு தனி அந்தஸ்தையும், பல பின்விளைவுகளையும் ஏற்படுத்தும்!.
 
திருட்டுத்தனமாய் டவுன்லோடு செய்த பிடிப்(PDF) களைப் படிப்பதில் சிரமம் இருக்காது. உயர்தர பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகத்துக்கு இணையாக இருக்கும். கேம் விளையாடும் போது, துப்பாக்கியில் சுட்டால் உள்ளிருந்து நம் மேல் இரத்தம் தெறிக்கும். படங்கள் HD-ஐ விட அட்டகாசமாய் இருக்கும். என்ன இதை எல்லாம் செய்ய டெவலப்பர்கள் சற்று மெனக்கெட வேண்டி இருக்கும். அது அவர்களின் பாடு.
 
எல்லாவற்றுக்கும் மேலான பின்விளைவு, பிசிகளின் (PC) எதிர்காலம். டேப் ரிக்கார்டர், கேஸட், பிளாப்பி டிஸ்க் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட அதே கதி தான் டெஸ்க்டாப்களுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது நடக்கும் பட்சத்தில், பிசிக்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட ஆப்பிளே, பை பையும் சொல்ல வைத்தது என்று வரலாறு சொல்லும்.
 
oooOooo
 
புது ஐ-பேட் பராக் பராக் சத்தத்தில், கூகிள் பிளேவை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. சத்தமில்லாமல் இருந்த கூகிள் மியூசிக், புத்தக கடை, ஏன் ஆண்டிராய்ட் மார்க்கெட் எல்லாம் இனி கூகிள் பிளே ஸ்டோர் என்று அழைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். 25 பில்லியன் அப்ளிகேஷன்கள் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்பிளின் அப்ளிகேஷன் ஸ்டோருக்கும் அமேசானுக்கும் போட்டியாக இருக்க வேண்டும் என்று கூகிளுக்கு ஆசை. மக்களுக்கு எதன் மேல் ஆசை என்று யாருக்குத் தெரியும்?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 7, 2012 @ 10:28 pm