மக்களின் ஆசையை யார் கூண்டில் ஏற்றுவது?

இன்னொரு பரப்பரப்பான செய்தி, ஒஹையோவில் நடந்த துப்பாக்கிச் சூடு. என்னதான் வீட்டில் தந்தையும் தாயும் வன்முறையாளர்கள், சட்டத்தின் பிடியில் பல முறை சிக்கியவர்கள் என்றாலும் மற்ற மாணவர்களை சுட்டுக்கொல்வது தவறே என்று இந்த 17 வயது மாணவனை வயது வந்தோருக்கான பிரிவில் விசாரிக்க தீர்மானித்திருக்கிறார்கள்.
ooOoo
மார்ச் மாதம் குடல் புற்றுநோய்க்கான விழுப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிகமானோரின் உயிரிழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இந்த புற்றுநோய் இருக்கிறது. சரியன உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாததும் இந்த புற்றுநோய்க்கு ஒரு காரணமாகும். மிக அதிக காய்கறிகள், பழங்கள் நார்ச்சத்து அடங்கிய உணவும், ஒருவரின் எடையில் 70% எடைக்கு சமமான அளவு நீர் பருகுதலும் ( எடை 100 பவுண்டு என்றால், 70 பவுண்டு எடைக்கு ஒரு பவுண்டிற்கு ஒரு அவுன்ஸ் என்ற அளவில் 70 அவுன்ஸ் தண்ணீர்) மிக அவசியம். 50 வயதுக்கு மேல், மருத்துவரின் பரிந்துரைகேற்ப கோலோனோஸ்கோப்பி செய்துகொள்வதும் மிக அவசியம்.
சமீககாலமாக மருந்துப் பொருட்களை தேவைக்கு அதிகமாக பயன் படுத்துவதும், அந்த மருந்துப்பொருட்கள் மற்ற மருந்துகள் அல்லது உணவு, போதைப் பொருட்களோடு புரியும் தவறுதலான வேதிவினைகள், பலரை உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைக்கு ஆளாக்குவது அதிகரித்து வருகிறது. சென்ற வாரம் இதுகுறித்தும் பலவித ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை, நோய்களைத் தடுக்கும் அரசாங்க மையம் நிகழ்த்தியது. பலவிதமான தொழில்துறை வல்லுநர்களும் அந்த அந்த உடல் உபாதைக்கு மருந்துகளைப் பரிந்துரைப்பதும், இதுகாரும் என்ன மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணராமலேயே மருந்துகள் பரிந்துரை செய்வதும், பலவித வைட்டமின்கள், உணவுக்கு துணையான பொருட்கள், தொலைகாட்சியில் பார்க்கும் விளம்பரங்கள் மூலமாக நாமே பயன்படுத்தும் மருந்துகள் என மிக அதிகமான வேதிப்பொருட்களுக்கு பலரும் அடிமையாக ஆரம்பித்திருக்கிறார்கள். தலைவலி என்றால் உடனே ஒரு டைலினால் அல்லது மோட்ரின் என நாமே பாதி மருத்துவர்களாகி எடுத்துக்கொள்வது எத்தனை ஆபத்தானது என்பதை அறிவதில்லை. மிக அடிப்படை நிலையில் இருக்கும் மூச்சுத்திணறலுக்கு கூட ஸ்டீராய்டுகளும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பரிந்துரை தேவையில்லாமலே கிடைக்கும் மிக சக்திவாய்ந்த மருந்துகள், ஒவ்வாமைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என க் கணக்கில் அடங்காமல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் எல்லாரும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் எல்லா மருந்துகள், கால்சியம், வைட்டமின்கள், உணவு அல்லாது அதன் சக்தியை அதிகரிக்கும் துணைப்பொருட்கள் , மீன் எண்ணெய், பூண்டு எண்ணெய் மாத்திரைகள் என எல்லாவற்றையும் பட்டியல் இடுங்கள். அடுத்த முறை மருத்துவரைச் சந்திக்கும் போது கூடவே இதை எடுத்துச்சென்றால், அவர் இதையும் கருத்தில் கொண்டு சரியான மருந்தை பரிந்துரை செய்ய இயலும். கூடுமான வரை சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றால் தீர்வு காண முயலுங்கள்.
ooOoo
அரசியலில் மிட் ராம்ணியின் உடல்நலக் கொள்கைகள் ஓபாமாவின் உடல்நல புரட்சிதிட்டடத்தைப் போன்றதே என கிங்ரிச்சும், கிங்ரிச்சின் கொள்கைகளில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் அதுவும் ஒபாமாவின் கொள்கையோடு சேர்ந்ததே என ராம்ணியும் சொல்லிக்கொன்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் யார் வந்தாலும், நமது உடல்நலத் துறை கொள்கைகளிலோ அல்லது காப்பீடுகளின் பிடியில் இருந்தோ விடுதலை நமக்கில்லை என்பது மட்டும் திண்ணம். இதுவரை ராம்ணிக்கு 339 டெலிகேட்டுகள் கிடைத்திருக்கின்றன. நிறைய நிதி திரட்டுதலும் நடந்துகொண்டிருக்கிறது. இப்படியான நன்கொடைகளை பெற்றுக்கொள்ளும் போதே, அவர்கள் கைகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன, பிறகு எப்படி அவர்கள் வெற்றி பெற்று வந்தால் சுதந்திரமாக செயல்பட முடியும்?. இந்த நன்கொடைகள் பல super pac குகளுக்கு தரப்பட்டு, எதிர்கட்சி வேட்பாளர்களை பற்றிய உண்மையில்லா கேலியுடன் கூடிய பரப்புவாதங்களை அவற்றின் மூலமாக சின்ன சின்ன வீடியோக்களாக வெளியிட்டு, மாயையில் மக்களை குழப்புதில் எல்லாருமே போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஒபாமாவின் புதிய நிதி திட்டத்தில் அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி மட்டும் கூடுதலாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான செய்தி.