The Vow

 

இருபது வருடங்களுக்கு முன் நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு ஜோடி சந்தித்த நிஜ சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  
 
ஒரு விபத்து. கணவனும் மனைவியும் அதில் சிக்குகிறார்கள். கணவனுக்கு லேசான காயம். மனைவி கோமா நிலையை அடைகிறாள். சில வருடங்களுக்கு முந்தைய நினைவு நிலையில் மனைவி கண் விழிக்கிறாள். சமீபத்தைய நினைவுகள் ஏதும் அவளிடம் இல்லை. தன் கணவனை ஒரு முன்பின் தெரியாத மனிதனாகக் காண்கிறாள். இங்கே தொடங்குகிறது கதை!  
 
எடுத்துச் சொல்லப்படும் தகவல்கள், எடுத்துத் தரப்படும் ஆதாரங்களின் உண்மைத்தன்மை இவற்றை அவள் நம்பினாலும் எதிரில் நிற்பவன் "யாரோ" என்னும்போது அவனுடன் எப்படி வாழ்க்கை நடத்த இயலும்? தான் மணமாகாத ஒருத்தி என்று முற்றிலுமாக நம்பிக் கொண்டிருக்கும் ஒருத்தி யாரென்றே தெரியாத ஒருத்தனுடன் எப்படி வசிக்க இயலும்? எனினும் அவன் தரும் ஆதாரங்களின் அடிப்படையில் அவனுடன் தங்க அவள் சம்மதிக்கிறாள். 
 
அவள் பெற்றோர், முன்னாள் காதலன் வாயிலாக எழும் சிக்கல்கள், அவளால் மீட்டெடுக்கவே முடியாத அவளின் முந்தைய வாழ்க்கையின் நினைவுகள், அது தொடர்பான சம்பவங்கள் என நகர்கிறது கதை.
 
இந்துக்களின் "மாங்கல்யம் தந்துனானே"  மந்திரத்தின் அர்த்தத்திற்கு (இந்த நன்னாளில் இந்த மங்கள நாணை உன் கழுத்தில் சூட்டும் நான், உனக்காக இப்படி அப்படி இருப்பேன் என…..) இணையாக திருமணத்திற்கு முன்னதாக கிருத்துவர்கள் சொல்லும் "கல்யாண சத்தியம்" அல்லது "வெட்டிங் ப்ராமிஸ்"தான் "The Vow". தான் எடுத்துக் கொண்ட "Vow"வைக் காப்பாற்ற கதாநாயகன் செய்யும் முயற்சிகளும் இறுதியில் நம் எதிர்பார்ப்பைக் கெடுக்காமல் இருவரும் ஒன்று சேர்வதுவும்தான் கதை.
 
கொஞ்சம் அசந்தாலும் லாஜிக் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளும் தன்மை கொண்ட ஒரு கதைக்கு நல்ல திரைக்கதை அமைத்ததும், ரொமண்டிக் திரைப்படத்திகுத் தேவையான நச் நச் என்ற அழகான வசனங்கள் தந்ததும் படத்தின் பெரிய ப்ளஸ்.
 
படத்தின் மிகப் பெரிய பலம் ஹீரோ ஹீரோயின் (Channing Tatum / Rachel McAdams) இருவரின் அற்புதமான நடிப்பு. படத்தை ஒட்டுமொத்தமாகத் தூக்கி நிறுத்துவது போட்டி போட்டு நடிக்கும் அவர்கள் இருவரின் நடிப்புதான். 
 
குறிப்பாக Tatum வேலைக்குப் புறப்படும் நேரத்தில் தன்னெதிரே அமர்ந்துள்ள ரேச்சலை அணைக்கவும் இயலாமல், முத்தமிடவும் முடியாமல் ஒரு தடுமாற்றத்துடன் அவர் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டு "பை" எனச் சொல்லிப் புறப்படும் காட்சி, "ஓஹோ".
 
மைனஸ் என்று பார்த்தால் பார்த்துப் பார்த்துப் பழகிய கதையாக கதாநாயகியின் பெற்றோர் இருவரும் கதாநாயகனிடமிருந்து தம் மகளைப் பிரித்துச் செல்ல இறுதிவரை முயல்வது; கதாநாயகிக்கு தன் தந்தையின் மீது வெறுப்பு வரக் கூறப்படும் அரதப் பழசான காரணம் என்பவைகளை சொல்லலாம்.
 
படத்திற்குப் பேரழகு கூட்டுவது படத்தின் முடிவு. சரேல் திருப்பம், இடியாப்ப சிக்கல்கள், அதிலிருந்து மீள்தல், கண்ணீர், நீண்ட வசனங்கள், நீதி, நானூறு மீட்டருக்கு கட்டியணைத்து உருள்தல், நச்சென்று இச்…. இப்படி ஏதும் இல்லாமல் இயல்பாக படத்தை முடிக்கவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்தைக் கொண்ட படத்தின் டைரக்டரைப் ( Michael Sucsy ) பாராட்டத்தான் வேண்டும். 
 
நன்றி 1: இப்படி ஒரு படம் ஆடுவதோ ஓடுவதோ தெரியாத என்னை "வாங்க சார்", என்று ரெகமண்டு செய்து பிடிவாதமாக அழைத்துச் சென்ற நண்பன் விஷாலுக்கு.
 
நன்றி 2: படத்தின் நடிக நடிகையர், இயக்குனர் பட்டியல் தந்துதவிய விக்கி 'க்கு
 
 
கொஞ்சமே கொஞ்சம் நெடிய பின் குறிப்பு 1 :
 
இந்தப்படம் பார்ப்பதற்காக முதன்முறையாக எக்ஸ்ப்ரஸ் அவென்யூவிற்குப் போயிருந்தேன் (எஸ்கேப் கொட்டகை). "சென்னை மெட்ரோ" வேலைகளை முன்னிட்டு மவுண்ட் ரோடில் டிராபிக் கண்டமேனிக்கு திருப்பி விடப்பட்டதில் இப்படியப்படி ஸ்பென்சர் டு ராயப்பேட்டை, ராயப்பேட்டை டு ஸ்மித் ரோடு, ஸ்மித் ரோடு டு ஸ்பென்சர், ஸ்பென்சர் டு ஜீபி ரோடு, ஜீபி ரோடு டு ராயப்பேட்டை என்று அரைமணி நேரம் சுற்றி ஒருவழியாக அவென்யூ உள்ளே நுழைந்தேன்.
 
ஐயா சென்னை டிராபிக் தெய்வங்களே! உங்கள் "டேக் டைவர்ஷன்" அறிவிப்புப் பலகைகளை  தயை கூர்ந்து ஆங்கிலத்திலும் வையுங்களேன்! "எக்ஸ்ப்ரஸ் அவென்யூ செல்ல ===> திரும்பவும்" என்னும் பலகையை ஆங்கிலப் படத்திற்குப் போகும் மூடில் இருந்த நானே கஷ்டப்பட்டுத்தான் படித்தேன் என்றால் தமிழ் தெரியாமல் நம்மூரில் உலாத்துபவர்கள் பட்ட அவஸ்தையைச் சொல்லவும் வேண்டுமோ?
 
 
கொஞ்சமே கொஞ்சம் நெடிய பின் குறிப்பு 2 :
 
எக்ஸ்ப்ரஸ் அவென்யூ நுழைந்ததும் "ஒரு மணிநேரத்திற்கு இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணம் இருபது ரூபாய்" என்றது அறிவிப்புப் பலகை. வெளியே வர மூன்று மணிநேரம் ஆகிவிட்டால் அறுபது ரூபாய் அழவேண்டுமே. 
 
தொண்ணூறாம் வருட ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் வளர்ந்த காலகட்டத்தில் பத்து ரூபாய் பையில் இருந்தால் போதும்; நானும், வெங்கடேசனும், முருகனும் ட்ரிப்பிள்ஸ் அடித்துச் சென்று  "சைக்கிள் டோக்கன், மூவர் டிக்கட், மூவருக்கும் பாப்கார்ன் (௦ 0.50௦ + 6.00௦ + 3.00 )," என கரகாட்டக்காரன் வகையறாப் படங்களை அந்த பத்தே ரூபாயில் பார்த்த நினைவு ஏனோ மனதில் ஆடிச் சென்றது.
 
என்னத்த சொல்ல?

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 13, 2012 @ 2:00 pm