ஐ-போன் யார் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது ?

ஸ்டீவ் ஜாப்ஸ், மீண்டும் ஆப்பிளிற்கு வந்திருந்த சமயம். டெல்லின் தலைவரான மைக்கேல் டெல்லிடம், நீங்கள் ஸ்டீவ் ஜாப்ஸாய் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, கம்பெனியை விற்று வரும் காசை பங்குதாரர்களுக்கு கொடுத்து விடுவேன் என்றார். ஆனால் அதன் பின் ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு டெல்லை தாண்டியது எல்லாம் பழங்கதை. ஆனால் தொடரும் பிரச்னை என்னவென்றால், பிசிக்களை விற்பதில் அவ்வளவாக வருமானம் இல்லை. பிசிக்களை விற்பதில் லாபம் வராவிட்டால் பரவாயில்லை நஷ்டம் வேறு வருகிறது..இதை வெகு நாட்களுக்கு முன்பே உணர்ந்தவர்கள், பிசிக்களை முதன் முதலில் உருவாக்கிய ஐபிம் தான். அதனால் தான் அவர்களின் பிசி பிஸினஸை லெனோவிற்கு (Lenovo) விற்று பிசி பிஸினஸூக்கு பை பை சொன்னார்கள். இதை டெல் போன்ற கம்பெனிகள் எல்லாம் சற்றே லேட்டாக உணர்ந்திருக்கிறார்கள்.

 
ஆப்பிள் போல பிளேயர்கள் போன்கள் எல்லாம் சாத்தியப்படவில்லை. சீந்துவாரில்லை. ஒரு காலத்தில் கம்புயூட்டர்களை வெப்சைட் மூலமாக விற்றுக் கொண்டிருந்தவர்கள், 300 டாலர் கம்புயூட்டரை நம்மால் வெப்சைட் மூலம் விற்கமுடியும் போது, 30 டாலர் புத்தகத்தை விற்க முடியாதா என்று யோசித்திருக்கலாம். இன்று அமேசனாய் இருந்திருக்கலாம். அதற்கும் இன்று வாய்ப்பில்லை. சரி, ஐபிம் போல, பிசி தயாரிப்பை விற்று விட்டால், அதற்கு கம்பெனியை மூடிவிடலாம்! ஐபிம்மிற்கு பிசி தயாரிப்பது பத்தோடு பதினொன்று. ஆனால் டெல்லிற்கு பிசி தயாரிப்பதை விற்று விட்டால் வேறு வேலை இல்லை. நமக்கும் ஐபிம் போல பத்து வேலைகள் இருந்தால் என்ன என்று யோசித்திருப்பார்கள் போல. சாப்ட்வேர் சர்வீஸஸ்களில் கோட் ஸூட்டை கசக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்கள். செக்யூர்வொர்க்ஸ் (Secureworks), போர்ஸ்10 நெட்வோர்க் (Force 10 Networks), காம்பெல்லண்ட் டெக்னாலஜிஸ் (Compellent Technologies)  என்று வாங்கிப் போட்ட கம்பெனிகள் எல்லாம் போதாது என்று சோனிக்வால் (Sonicwall) என்ற கம்பெனியையும் வாங்கிப் போட்டிருக்கிறார்கள்.
 
ooOoo
 
ட்விட்டரை கூகிள் வாங்குமா இல்லை பேஸ்புக் வாங்குமா என்று யோசித்துக் கொண்டு இருந்தால், எங்களைத்தான் யாராவது வாங்க வேண்டுமா? ஏன் நாங்கள் யாரையாவது வாங்க கூடாதா என்று போஸ்ட்டீரஸ்(posterous) பளாக் சைட்டை வாங்கி இருக்கிறார்கள்.
 
140க்கு மேல் போகக் கூடாது என்று கோடு கிழிப்பவர்கள், எதற்கு ப்ளாக் சைட்டை வாங்க வேண்டும். ட்வீட்டரின் ஆசை எல்லாம் அந்த சைட்டின் மீது அல்ல. அதை உருவாக்கிய 21 பேர் மீது. அவர்களை மொத்தமாக வாங்கி இருக்கிறார்கள். கம்பெனி லாபம் அவ்வளவே. போஸ்டீரஸை ஆரம்பித்த காலத்தில் இருந்து பல வேலைகள் செய்து இருந்தாலும் ஒரு புராடக்ட்டை தயாரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை என்று போஸ்டீரஸை உருவாக்கிய சச்சின் அகர்வால் சொல்லி இருப்பதைப் பார்த்தால் இந்த கம்பெனி நடத்தும் விளையாட்டு போதும் என்று தோன்றியிருக்கும் போல! (ட்வீட்டரில் அவரின் பொறுப்பு புராடக்ட் மேனஜர், அவ்வளவு தான்)
 
ஆம் போஸ்ட்டீரஸை உருவாக்கியவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். லண்டனில் பிறந்து ஸ்டான்போர்டில் கம்புயூட்டர் என்ஜினீயரீங் படித்து, ஆறு வருடம் ஆப்பிளில் வேலை பார்த்தவர். சிலிக்கன் வேலியில் இருக்கும் பெரும்பாலான நல்ல சாப்ட்வேர் என்ஜினீயர்களின் கனவு அடுத்த மைக்ரோசாப்ட், கூகிள் அல்லது ஆப்பிளை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்கும் இல்லை குறைந்த பட்சம் கம்பெனி ஆரம்பித்து அதை வேறு ஒரு பெரிய கம்பெனிக்கு விற்க வேண்டும் என்பதாக இருக்கும். சச்சினுக்கு அந்த கனவு மெய்ப்பட்டிருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் ஐ-போன் எனவும் சொல்லி இருக்கிறார். ஐ-போன் உலகை மாற்றியது போல என் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. ஐ-போனில் போட்டோ போஸ்ட் செய்ய எளிதான வழி மெயில் தான் அதற்கு என்ன செய்யலாம் என்று தோன்றிய போது உருவாக்கியது தான் போஸ்டீரஸ்.!
 
ooOoo
 
டெக்னாலஜி உலகில் பெரும்பாலும் ஏதேனும் புதிய பொருட்களை வெளியிடுவார்கள், இல்லை யாராவது யாரையாவது வாங்குவார்கள். சில சமயம் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் மிக கேவலமாக திட்டிக் கொண்டு இருப்பார்கள். அதோடு சரி, ஆனால் சமீப காலமாக புதுப் பழக்கம். ஒருவர் மேல் ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.ஆப்பிள், கூகிள் மீது இருக்கும் கோபத்தில் மொபைல் தயாரிக்கும் எல்லார் மீதும் கேஸ் போட்டுக் கொண்டு இருப்பதும் பதிலுக்கு அவர்களும் ஆப்பிள் மீது கேஸ் போட்டுக் கொண்டு இருப்பதையும் அரசியலில் இது சகஜமப்பா என்று பெரும்பாலானவர்கள் கண்டுக் கொள்வதில்லை. இவர்களுக்கு இதே வேலையாப் போச்சு என்றும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
எங்கள் பேடண்ட் சிலதை மற்ற கம்பெனிகள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் அவர்கள் அதற்கு லைசன்ஸ் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் அப்படி எதுவும் இல்லாமல் எங்கள் பேடண்ட்டை காசு கொடுக்காமல் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பேஸ்புக் மீது யாகூ போட்ட வழக்கிற்கு பலர் யாகூவை தூ தூ எனத் துப்புகிறார்கள்!
 
பேடண்ட்டை வைத்தே பிழைப்பு நடத்தும் கம்பெனிகள் பல இருக்கலாம். ஆனால் யாகூ போன்ற பெரிய கம்பெனி (இன்னுமுமா) இப்படி சின்னப்புள்ளத் தனமாக நடந்துக் கொள்ளலாமா என்பதே பலரின் கேள்வி?.
ஏன் ஏன்! என்று கேட்டால், யாகூ கேஸ் போட்டதே தவறு. அதுவும் இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்பொழுது பேஸ்புக் பங்குச்சந்தையில் இறங்கும் சமயமாய் பார்த்து இப்படி வழக்குப் போடுவது கீழ்த்தரமான செயல். முன்பே கூகிளிடமும் இப்படித்தான் காசு பிடுங்கினார்கள். இப்பொழுதும் பேஸ்புக்கிடமிருந்து சிறிது பணம் பெயரலாம். ஆனால் மானம் போய்விட்டதே அது வருமா என்றும் சிலிக்கன் வேலி கேள்வி கேட்கிறது. யாகூவோ எங்கள் பங்குதாரர்கள் நலனைக் காக்க இதை எல்லாம் செய்து தான் ஆக வேண்டும் என சப்பைக்கட்டு சொல்கிறது. யாகூ பங்குதாரர்களுக்காக செய்ய வேண்டிய மற்ற உருப்படியான விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது!
 
ooOoo
 
கூகிளும் சர்ச்சும் போலத்தான் ஒரு காலத்தில் பிரிட்டானிக்காவும் என்சைக்ளொபீடியோவும் இருந்தன. பல பேர் வீட்டில் தலையணைகளுக்கு பதிலாய் இதை தான் வாங்கிக் கொண்டு இருந்தது அந்தக் காலம். ஆனால் விக்கியின் புண்ணியத்தில் பிரிட்டானிக்காவுக்கு இது போதாத காலம். 1768-ல் ஆரம்பித்தவர்கள், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புத்தகம் போட்டுக் கொண்டு இருந்தவர்கள் 2010 தான் கடைசி,இனி மேல் அச்சிட்ட புத்தகங்கள் எல்லாம் போடப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டி இருக்கும் என முன்பே எங்களுக்குத் தெரியும். மேலும் இந்த அச்சிட்ட புத்தகங்கள் எல்லாம் எங்களின் வருமானத்தில் வெறும் ஒரு சதவிகிதம் தான். இதனால் அதிகம் நஷ்டம் எதுவுமில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். பிரிட்டானிக்காவிற்கே இந்த நிலைமை என்றால் எதிர்காலத்தில் புத்தகத்தை எதிர்க்கவும் கிழிக்கவும் ஆசைப்படுபவர்களின் நிலை!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 15, 2012 @ 4:03 pm