கோடீஸ்வர பொலார்ட்

2008 ஐபிஎல் ஏல நிகழ்ச்சி நடந்தபோது 'கைரோன் பொலார்டை யாராவது 30 லட்சத்துக்கு வாங்கிக்கொள்கிறீர்களா..?' என்று கூவிக்கூவி விற்கப் பார்த்தது ஐபிஎல். ஆனால் ஒருவர்கூட பொலார்டை சீந்தவில்லை. 'ம்.. அடுத்த ஆள்' என்று நகர்ந்துபோனார்கள். ஆனால் 2010 ஐபிஎல் ஏலத்தில் பொலார்டுக்காக ஐபிஎல் அணிகளிடையே கடுமையான தள்ளுமுள்ளு நடந்தது. முடிவில் மும்பை அணி பொலார்டை நம்பமுடியாத விலைக்கு (12.6  கோடி என்று தகவல்) வாங்கியிருக்கிறது.  (ஆனால் இதில் மூணே முக்கால்தான் பொலார்டுக்கு. மிச்சதெல்லாம் ஐபிஎல்லுக்கு). கிரிக்கெட் உலகில் ஒருவருக்கு இத்தனைக் கோடிகள் சம்பளம் வழங்கப்பட்டிருப்பது  இதுவே முதல்தடவை.

இந்த ஒரு வருட இடைவெளிக்குள்  அப்படியென்ன பெரிதாகச் சாதித்துவிட்டார் பொலார்ட்? சேம்பியன் லீக் போட்டியில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அந்த ஓர் ஆட்டம்தான் இன்று கிரிக்கெட் உலகம் அவர் காலடியில் விழுவதற்கு முக்கியக் காரணம்.  அந்த ஓர் ஆட்டமே பொலார்டை ஈடு இணையில்லா 20-20  நட்சத்திரமாக்கிவிட்டது. 

 

'என் முதல் ஏலத்தில் நான் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து நான் கவலைப்படவேயில்லை. அடுத்த வாய்ப்பில் தட்டிவிடலாம் என்றுதான் காத்திருந்தேன்' என்று இப்போது தன்னடக்கமாகப் பேசுகிறார் பொலார்ட். இவர் இதுவரை மேற்கு இந்தியத் தீவு அணி சார்பாக ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. மேற்கு  இந்தியத் தீவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியில் சில ஆட்டங்களில் ஆடியிருக்கிறார். சர்வதேச 20-20 போட்டிகளிலும் அவர் சிவப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறார். சென்ற ஐபில் ஏலத்திலும் அவர் பெயர் இடம்பெற்றது. அப்போதெல்லாம் இவரைத் துச்சமாக மதித்தது உலகம். ஆனால் அந்த 54 ரன்கள்தான் பெரிய மேஜிக் காட்டிவிட்டது.

மே.இ தீவில்  நிலவும் மோசமான கிரிக்கெட் சூழலில் இப்படியொரு நட்சத்திரம் உருவாவதும் முழு  வெளிச்சம் அவர்மீது  விழுவதும் மே.இ. தீவு கிரிக்கெட்டுக்குப் பெரிய உத்வேகம் கொடுக்கும். கிரிஸ் கெய்லே, ப்ராவோ இருக்கிற ஓர்  அணியில் பொலார்டுக்கு கும்பகர்ண வரவேற்பு அளிக்கப்படுவதற்குக் காரணம், பொலார்ட் ஒரு துல்லியமான 20-20  ஸ்பெஷலிஸ்ட். அல்வா வேண்டுமென்றால் இருட்டுக்கடை நோக்கிச் செல்வதுபோல ஐபிஎல்-லில் தன்னிகரற்ற வீரராக விளங்குவார் என்று பொலார்டை நம்பிக் கோடிகளை இறைத்திருக்கிறது மும்பை அணி. பொலார்டின் மற்ற பலங்கள், பந்துவீச்சும்  ஃபீல்டிங்கும். இதுவரை நடந்த இரண்டு ஐபிஎல்-லிலும் மும்பை அணி அரையிறுதி வரை முன்னேறாததால்  எப்பாடுபட்டாவது பொலார்டை பெற்று வாருங்கள் என்று அம்பானிக்கு சச்சின் அறிவுரை வழங்கியிருக்கிறார். சமீபத்தில் சச்சின் வேறு எந்த வீரருக்கு இவ்வாறு வக்காலத்து வாங்கியது கிடையாது.

’அதிரடி ஆட்டத்தை யாராலும் ஆடமுடியும். பொலார்டுக்கு வழங்கப்பட்ட தொகை மிகவும் அதிகம்’’ என்றும்  பேச்சு கிளம்பியிருக்கிறது. சச்சின், ஜெயசூர்யாவை விடவும் பொலார்ட் பெரிய ஆளா…?’ என்றும் கேட்கிறார்கள். ஐபிஎல்-லில் தோற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே 2010 ஐபிஎல்-லில் பொலார்ட்தான் அதிகம் கவனிக்கப்படும் நட்சத்திரமாக இருப்பார்.

(நன்றி : கல்கி)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 5, 2010 @ 7:57 pm