ஐபோனில் மங்காத்தா


பன்றிகளை விண்வெளிக்கு நீங்கள் அனுப்பினால், ஏதோ எங்களிடம் இருக்கும் கணிணிகளைக் கொண்டு Angry Birds-ஐ விண்வெளிக்கு நாங்கள் அனுப்பி வைக்க உதவுவோம் என நாஸா (NASA) ரோவியோ மொபைலுக்கு ட்வீட் அனுப்பிய ஒரு வருடத்திற்குள் Angry Birds Space என்ற சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது Angry Birds-ஐ தயாரிக்கும் ரோவியோ மொபல் நிறுவனம். வெளியிட்ட நான்கு நாட்களுக்குள் பத்து மில்லியன் டவுன்லோடுகள்!
 
இப்படி ட்வீட் போட்டது மட்டும் இல்லாமல் இந்த கேமை டிசைன் செய்யவும் நாஸா உதவியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில், நாஸா விண்வெளி வீரர் டான் பெடிட் இந்த கேமை விளையாடும் வீடியோவை வெளியிட்டுதான் ரோவியோ மொபைல் நிறுவனம் இந்த கேமைப் பற்றிய அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. அதே வீடியோவில் புவி ஈர்ப்பு எப்படி செயல்படுகிறது என்று எல்லாம் டான் பெடிட் விளக்கியிருந்தார்.
 
ஆம், அதே தான், இந்த கேம் விளையாடி அதனால் விண்வெளி வீரனாக வேண்டும் என்று ஒரு சில மாணவர்களாவது நினைப்பார்களாக? அப்பா, விண்வெளியில் எப்படி பன்றி, பறவை எல்லாம் இருக்கிறது என்று குழந்தைகள் பெற்றோர்களை கேட்க மாட்டார்களா? இப்படி எல்லாம் விண்வெளி பற்றிய ஆர்வத்தையும் அறிவையும் மக்கள் மத்தியில் பரப்ப முடியுமா என நாஸா மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. நாஸா, கூகிள், மைக்ரோசாப்ட் உடனும் இது போல வேறு சில விஷயங்களிற்காக இணைந்து செயல்படுகிறது.
 
2009-ல் அறிமுகப் படுத்தியதிலிருந்து Angry Birds-ன் அனைத்து வெர்ஷன்களின் மொத்த டவுன்லோடு 500 மில்லியனை தாண்டி விட்டதாம். சீக்கிரம் பில்லியன் டவுன்லோடுகளை எட்டிவிடுமாம். ஆனால் இதில் விசித்திரமானது என்னவென்றால், இவர்கள் அதிகம் வருமானம் பார்ப்பது கேம் விற்பனையில் அல்ல! கேமில் விளையாடும் போது தோன்றும் விளம்பரத்திலிருந்து வரும் காசு, கேமில் வரும் கேரக்டர்களை மையமாய் கொண்ட துணிமணிகள், பொம்மைகள் மற்ற பொருட்களின் விற்பனையில் இருந்து வரும் ராயல்டி எல்லாம் சேர்த்தால் கேம் விற்று வரும் வருமானத்தை விட அதிகமாம்!
 
இப்படி ஒரு சூப்பர் பம்பர் கேமை அறிமுகப் படுத்தும் முன் ரோவியோ மொபைல் எத்தனை மொக்கை கேம்களில் மண்ணை கவ்வியிருக்கும்? அதிகமில்லை 52 தான்! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!
 
ooOoo
 
ஒருவர் படம் வரைய (அல்லது கிறுக்கல் என்றே வைத்துக் கொள்வோம்) மற்றவர் அது என்ன என்று கண்டுபிடிக்கும் விளையாட்டிற்கு விலை சொல்ல முடியுமா? முடியும் என்றால் எவ்வளவு கொடுத்து வாங்கலாம்? 180 மில்லியன் டாலர் என்கிறது ஸிங்கா. (Zynga)
 
OMGPOP என்ற நிறுவனத்தின் டிரா சம்திங் (Draw Something) என்ற கேம் அறிமுகப் படுத்தப்பட்ட ஐந்து வாரங்களில் 20 மில்லியன் டவுன்லோட், ஒரு பில்லியன் படங்கள் என சக்கை போடு போட்டது.  ஏழு வாரங்களில் 350 மில்லியன் என மக்கள் டவுன்லோட சோஷியல் கேம்களில் சிங்கிள் சிங்கமாய் சுற்றிக் கொண்டிருந்த ஸிங்காவிற்கு ஜூரம் ஏறியது.
 
இதுவும் மற்ற ஒரு விளையாட்டே என்று கொஞ்ச நாட்களில் காணாமல் போய் இருக்கலாம் இல்லை இன்னும் அதிகம் பேரை கிறுக்க வைத்திருக்கலாம். எது நடக்கும் என்று காலம் பதில் சொல்லும் வரை காத்திருக்க முடியாது என்று ஸிங்கா முடிவு செய்தது. இலவசமாகவும் 99 செண்ட்டிற்கும் விற்றுக் கொண்டிருந்த கேமையும் கம்பெனியையும் 180 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி விட்டது, ஸிங்கா. இது கில்லாடித்தனமான முடிவா இல்லை கிறுக்குத் தனமான முடிவா என்று காலம் நிச்சயம் பதில் சொல்லும்!
 
ooOoo
 
50000 டாலர் வேண்டுமா? பாங்க் (Pong) என்ற கேமை ஐ-போனுக்கு ஏற்ற மாதிரி உங்களால் டெவலப் செய்ய முடியும் என்றால் 50000 டாலர் உங்களுக்கு தான் என அறிவித்துள்ளது அட்டாரி (Atari) நிறுவனம். [ஐ-போனின் தந்தையான ஸ்டீவ் ஜாப்ஸ் முதலில் வேலை பார்த்தது அட்டாரியில் தான். ஏன் கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என அவருக்கு தோன்றியதே அட்டாரியினால் தான்]
 
பாங்க் என்று ஒரு வீடியோ கேமா ? என சந்தேகம் வரலாம். நம்மில் பலர் பிறப்பதற்கு முன்னர் அறிமுகப் படுத்தப் பட்ட உலகின் பிரபலமான முதல் வீடியோ கேம் இது தான். பிரபலமான முதல் வீடியோ கேம் தான். முதல் வீடியோ கேம் அல்ல. எது முதல் வீடியோ கேம் என பின்னூட்டத்தில் சொல்லலாம். பரிசு எதும் கிடையாது !
 
ooOoo
 
ஒபாமாவின் வெற்றியில் அவரின் வாய்பந்தலுக்கு சரியான பக்கவாத்தியமாய் இருந்தது சோஷியல் மீடியாவும் டெக்னாலஜியும். இந்த தேர்தலில் அவரின் புதிய பிரெண்ட், பின்டிரஸ்ட் தான். 100 மில்லியன் பயனீட்டாளர்கள் அதில் பெண்கள் தான் அதிகம் என்ற காரணங்கள் போதாதா?
 
ooOoo
 
நம்மூரு மங்காத்தாவை யார் ஐபோனிற்கு எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அடுத்த கோடீஸ்வரன். விளையாடு மங்காத்தா.. !!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 30, 2012 @ 4:52 pm