இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?

மனம் தளரா விக்கிரமாதித்தன் என்று கதைகளில் கேட்டு இருக்கிறோம். நேரில் காண விரும்புவர்கள் கூகிளின் லேரி பேஜைப் போய் பார்த்து வரலாம். ஏன், எதற்கு எப்படி என்று கேட்பவர்களில், எத்தனை பேர் கூகிள் ப்ளஸ்ஸில் உறுப்பினர்கள்? எத்தனை பேருக்கு சமீபத்தில் கூகிள் ப்ளஸ்ஸிற்கு குளுக்கோஸ் ஏற்றியது தெரியும்?

 
கூகிள் ப்ளஸ்ஸும் ப்ளாப் படம் தான் என்ற உண்மையை உணராமல் யாரும் இல்லாத டீக்கடைக்கு புது பெஞ்ச் பாய்லர் என்று புதுப் பொலிவுடன் ப்ளஸ்ஸை மாற்றி இருக்கிறார்கள்.
 
சர்ச் என்பது நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது என்று மைக்ரோசாப்ட் சற்றே தாமதமாக தெரிந்துக் கொண்டது. அதற்காக அதிகம் மெனக்கெடுவதில்லை. சோஷியல் நெட்வொர்க்கா, சரி வருமா என்று தெரியவில்லை. பேஸ்புக்கில் முதலீடு மட்டும் செய்து வைப்போம் என்று ஒதுங்கி இருக்கிறார்கள். இப்படி சர்ச்சிலும் சோஷியல் நெட்வொர்க்கிங்கிலும் தாதாவாக இல்லாத காரணத்தினால் மைக்ரோசாப்ட்டிற்கு அவ்வளவாக ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. [மைக்ரோசாப்ட் அப்படி மொபைலில் மல்லுக் கட்டாமல் இருக்க முடியாது.] 
 
சனியன் போய்த் தொலையட்டும் என சோஷியல்லை கூகுள் ஏன் தலை முழுகவில்லை. வராத படிப்பை வா வா என்று வலிய இழுப்பது போல, கூகுள் ஏன் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் மீண்டும் மீண்டும் மூக்கை உடைத்துக் கொள்ள வேண்டும். ஒரே பதில் விளம்பர வருமானம். கூகுள் சர்ச், ஜிமெயில் எல்லாம் இலவசமாக இருப்பதற்கு காரணம் இவற்றை மூலதனமாக வைத்து வரும் விளம்பர வருவாய்.அதிக பயனீட்டாளர்கள், அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று விளம்பரம் செய்பவர்கள் எல்லாம் பேஸ்புக் பக்கம் போய்விட்டால். எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று தேடுபவர்களும் தெரிந்தவர்களைக் கேட்கிறேன் என்று பேஸ்புக்கில் தேடினால் விளம்பர வருமானத்திற்கு வேட்டு வந்து விடும் என்ற பயம் தான் காரணம்.
 
நியாயமான பயம் தான். ஆனால் பேஸ்புக்கிற்கு சரியான பதிலடி ட்விட்டர், பின்டிரஸ்ட் போன்ற சமாச்சாரங்கள் தானே தவிர, மற்றுமொரு பேஸ்புக் போன்ற சைட் அல்ல.அப்படி என்றால் கூகிள் என்ன தான் செய்ய வேண்டும்? அது மட்டும் தெரிந்தால் லேரி பேஜ் இரவில் பாயை பிராண்டிக் கொண்டு தூக்கத்தை தொலைக்க மாட்டார். உங்களுக்கு தெரிந்திருந்தால் பல பில்லியன்கள் கொட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்!
 
ooOoo
 
என்னது பல பில்லியன்களா? பின்னே 30 மில்லியன் பயனீட்டாளர்களையும் 13 பேருக்காகவும் இன்ஸ்டாகிராம் என்ற கம்பெனியை பில்லியன் டாலர் கொடுத்து பேஸ்புக் வாங்கியிருக்கும் போது பேஸ்புக்கையே காலி செய்ய பல பில்லியன்கள் ஒரு பணமா? இந்த இன்ஸ்டாகிராமிற்கு ஒரு பில்லியன் டாலர்கள் என்பது டாட்காம்களின் காலம் முற்றி விட்டது என்பதைத் தான் காட்டுகிறது. ஒரு காலத்தில் இப்படி கொடி கட்டி பறந்த டாட்காம்கள் காணாமல் போனது எல்லாம் ஞாபகம் வருதே என சொல்பவர்கள் சிலர்.
 
சமீபத்தில் இது போன்ற டெக்னாலஜி விற்பனைகளை எல்லாம் வைத்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது நியாயமான சல்லிசான விலை தான் என கணக்கு சொல்பவர்களும் இருக்கிறார்கள். அட, அது போகட்டும், ஒரு காலத்தில் யாகூ, சில நூறு மில்லியன் டாலர்களுக்கு கஞ்சத்தனம் பார்த்து தான் பேஸ்புக்கையும் கூகுளையும் நழுவ விட்டது. இதை எல்லாம் கணக்கில் கொண்டால் பில்லியன் டாலர் எல்லாம் ஒரு பணமா? பிசாத்து என்றும் சொல்கிறார்கள்.
 
பலர் சொல்வது போகட்டும், நீ என்ன சொல்கிறாய் எனக் கேட்டால் ஒற்றை வார்த்தையில் என் பதில் பைத்தியக்காரத்தனம்.!
 
இன்ஸ்டாகிராம் மொபைலில் கில்லியாகத் தான் இருக்கிறது. பேஸ்புக் மொக்கையாகத்தான் இருக்கிறது. மறுப்பதற்கில்லை. அடிப்படை அம்சமான ஷேர் பட்டன் கூட இல்லை தான். மொபைலில் பேஸ்புக்கை பிரமாதமாக பல வழிகளில் மாற்றி இருக்கலாம். தற்போது இருக்கும் மொபைல் மெசஞ்சருக்குப் பதிலாக சமீபத்தில் வெளியிட்ட டெஸ்க்டாப் மெசஞ்சரை மொபலைக்கு மாற்றி வெளியிட்டிருக்கலாம். இது போல ஏதாவது யோசித்திருக்கலாம். ஒரு ஷேர் பட்டனுக்கு புரோகிரம் எழுத ஆட்களா கிடைத்திருக்க மாட்டார்கள்?  
 
இந்த இன்ஸ்டாகிராமை உருவாக்கியவர்களில் ஒருவரான கெவின் சிஸ்ட்ராம், 2004-ல் பேஸ்புக்கில் வேலை செய்ய வா என்று கூப்பிட்ட போது வர மாட்டேன் போ என்று சொன்னவர். இந்த விற்பனையின் மூலம் இவருக்கு கிடைத்திருப்பது 400 மில்லியன் டாலர்கள். 
 
ooOoo
 
என்னுடைய. கேர்ள் பிரண்ட்டிடம் கல்யாணம் கட்டிக் கொள்ளலாமா என்று நாளைக் கேட்க இருக்கிறேன். இதை ஐபில் ஸ்கோர் அப்டேட் போல ட்விட்டரில் அப்டேட் செய்யப் போகிறேன். ஐயா, சொல்வது நான் அல்ல! இப்படி சொன்னவர் மைக். சொன்னது போல் செய்தும் காட்டினார். கட்டிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். மைக் இன்னும் என்னவெல்லாம் லைவ்வாக ட்விட் செய்வார் என்று தெரியவில்லை. மைக் ட்விட் செய்தவற்றை எல்லாம் #MikeProposes என்ற ஹேஷ்டேக்கின் மூலம் தேடலாம்.
 
ooOoo
 
ஒரு காலத்தில் ஆப்பிள் மைக்ரோசாப்ட், பின்னர் யாகூ, கூகிள், இன்று ட்விட்டர், பேஸ்புக் என்று பல உலகத் தரம் வாய்ந்த கம்பெனிகள் தலைமுறை தலைமுறையாக அமெரிக்காவில் உருவாகி வருகின்றன. இந்த கம்பெனிகளில் ஆகட்டும் சிலிக்கன் வேலியில் ஆகட்டும். இந்தியர்களின் பங்களிப்பு நிச்சயம் மிக முக்கியமானதே. அப்படி இருக்கையில், இந்தியாவில் டிசிஸ், விப்ரோ, இன்போசிஸை தாண்டி அடுத்த தலைமுறை கம்பெனிகள் ஏன் வளரவில்லை வரவில்லை.
 
இந்தியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தொழில் முனைதலில் முனைப்பு இல்லையா? ரிஸ்க் என்னும் ரஸ்க் நம்மவர்களுக்கு பிடிப்பதில்லையா? இல்லை நம் படிப்பு முறை, சமூகம், அரசாங்கம் போன்ற காரணிகள் ரஸ்க் சாப்பிடுவதை ஊக்குவிப்பதில்லையா ?

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “இந்தியாவில் யாரும் ரஸ்க் சாப்பிட விரும்புவதில்லையா ?

  • April 19, 2012 at 9:06 pm
    Permalink

    படித்ததை பரிட்சைத் தாளில் வாந்தியெடுப்பதை போல், கற்றுக்கொண்டத் தொழிலை ஒரு வேலைக்காரனைப் போல் செய்துவிட்டு போய் கொண்டு இருக்கின்றோம். நம்மிடம் படைப்பாற்றல் இல்லை. அதனால் தான் புதுமைகளை நம்மால் படைக்க முடிவதில்லை.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 19, 2012 @ 6:07 am