நீ அதுக்கு சரிப்படமாட்டே

 

உலகமறிந்த மென்பொருள் சேவை நிறுவனம் அது. பொருளாதார வீழ்ச்சி உச்சத்தில் இருந்த காலம். எப்படி எல்லாம் ஆட்களை வீட்டுக்கு அனுப்ப முடியுமோ அப்படி எல்லாம் அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நிறுவனத்திற்கு நகரத்தில் பல கிளைகள். ஒரு கிளையில் வேலை செய்பவர் மற்ற கிளையில் உள்ளேன் ஐயா என்று அட்டெண்டன்ஸ் போட்டார் என்ற காரணத்திற்காக எல்லாம் வெளியே போ என்று அனுப்ப பட்டதாக சொல்வார்கள். 
 
அவர்கள் வேறு ஒன்றையும் செய்தார்கள். நம்மிடம் வேலை பார்ப்பவர்களில் கறுப்பு ஆடுகள் இருக்கின்றனவா? பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்த பயபுள்ளைகள் ஏதேனும் இருக்கின்றனவா? இருந்தால் ஏன் இப்பொழுது போய் வா என்று சொல்லக் கூடாது?
 
அட இந்த ஆராய்ச்சியை எல்லாம் சேரும் பொழுது செய்ய மாட்டார்களா? சற்றே மேம்போக்காக செய்வார்கள். சிறிது கோக்குமாக்காக இருந்தாலும், அவசரமாக ஆள் தேவை, சரிப்பட்டு வருவான் போலத் தெரிந்தால் எடுத்துக் கொள்வார்கள். 
 
ஒரு நிறுவனத்தை பிடித்தார்கள். இத்தனை பேரின் நதிமூலம் ரிஷி மூலம் சரிப் பார்க்க வேண்டும் சரிப் பார்க்க தனி காசு. சரி இல்லை என்று சரியாக கண்டு பிடித்தால் அதற்கு தனி காசு என்றார்கள். கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என அந்த நிறுவனமும் லிஸ்ட் கொடுத்தது.
 
லிஸ்ட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வந்தவுடன் வீட்டுக்கு அனுப்ப பட்டனர். வெளியேற்றப்பட்டவரின் மேனஜருக்கு கூட சொல்ல வில்லை. எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர், ரீலீவிங் லெட்டர் எதுவுமில்லை. வேறு கம்பெனிகளில் அவர்கள் தேர்வாகி அந்தக் கம்பெனி இங்கு விசாரித்தால், அவனை இதற்காகத் தான் தூக்கினோம் என்று உண்மையை சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்களாம்!
 
நிற்க, ஒரு சாதாரண புரோகிரமருக்கே இப்படி என்றால் ஒரு கம்பெனியின் CEO. அதுவும் அதல பாதாளத்தில் இருக்கும் கம்பெனி அதை ஆகாசத்திற்கு கொண்டு போவார் என்ற நம்பிக்கையில் தேர்ந்தேடுக்கப்படுபவர் பற்றி தீர விசாரிக்க வேண்டாமா. விசாரிக்கவில்லை என்றாலும் அவர் படிக்காத படிப்பை படித்தேன் என்று பொய் சொல்லி இருக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னும் இது எல்லாம் உப்பு சப்பில்லாதது என்று சால்ஜாப்பு சொல்லலாமா? யாகூ அதைத் தான் செய்தது!
 
ரொம்ப காலமாய் யாகூவிற்கு இராகு காலம் தான். உங்களால் தான் இதை செய்ய முடியும். உங்களை விட்டால் வேறு யாராலும் முடியாது என்று எல்லாம் சொல்லி அழைத்து வருவார்கள். வந்த கொஞ்ச காலத்தில் ஆட்டத்திற்கு நீ சரிப்பட்டு வர மாட்டே என்று சொல்லி விடுவார்கள். 
 
கேரோல் பார்ட்ஸ் என்பவரை இப்படித்தான் போனிலேயே போ போ என்று துரத்தி விட்டார்கள். அவருக்கு பின்னர் e-bayலிருந்து அழைத்து வரப்பட்டவர்தான் ஸ்காட் தாம்ப்ஸன். வந்தவர் 2000 பேரைத் தூக்கலாம் என்றார். பேஸ்புக்கின் மீது பேடண்ட் வழக்கு போட்டார். இவ்வளவு செய்தவர், டேனியல் லோப் என்பவர் கேட்ட போர்டு உறுப்பினர் பதவியையும் கொடுத்திருக்கலாம்.
 
யாரிந்த டேனியல் லோப்? யாகூ போர்டில் யாருக்கும் பொறுப்பு இல்லை. பங்குதாரர்களின் நலனில் அக்கறை இல்லை. மூன்றாவது பெரிய பங்குதாரரான என்னை உறுப்பினராக்க வேண்டும் உடன் இதோ இந்த மூன்று பேரையும் உறுப்பினராக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் சிலர் கிளம்ப வேண்டும் என்றார்.
 
யாகூ மேல் இவருக்கு என்ன அக்கறை? அதான் மூன்றாவது பெரிய பங்குதாரர் ஆயிற்றே. அவருடைய தேர்ட் பாயிண்ட் என்ற கம்பெனி, யாகூவில் 5.8% பங்குகளை வைத்திருக்கிறது.யாகூவின் பங்கு மதிப்பு பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தால். அவர் ஒரு பண முதலை அதாவது முதலீட்டாளர். போட்ட பணம் பெருக வேண்டும் லாபம் வேண்டும்.அவ்வளவு தான். பங்கு மதிப்பு பெருக வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை போர்டு உறுப்பினராய் இருந்து தானே முன் நின்று செய்ய வேண்டும்.
 
கம்பெனி வருமானம் பெருக வேண்டும், கூகிளுடன் கோதாவில் குதிக்க வேண்டும் என்பது எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான். ஏன் அதில் எல்லாம் அவருக்கு அதில் அக்கறையே இல்லை. ஆனால் ஸ்காட் தாம்ப்ஸ்னுக்கு இது எல்லாம் முக்கியம் அப்படி இருக்க டேனியலை போர்டு உறுப்பினராக்குவது பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல. பார்த்தார் டேனியல் லோப். தாம்ப்ஸனுக்கு டாட்டா காட்ட வேண்டும் என்ன செய்யலாம்? வெகுநாட்களாய் பதவியில் இருந்தாலாவது பரவாயில்லை. இவ்வளவு நாட்களாகியும் நீ எதையும் செய்யவில்லை எனலாம். வந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது. இவன் நன்றாக வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் நம் வேலைக்கு ஒத்து வரமாட்டான் போல் இருக்கிறதே என யோசித்தார். சினிமா வில்லனைப் போல் இந்த ஸ்காட் தாம்ப்ஸனின் மொத்த ஜாதகமும் வேண்டும் என்றார்.
 
ஸ்டோன்ஹில் கல்லூரியில் இவர் அக்கவுண்ட்ஸ் மற்றும் கம்புயூட்டர் ஸயின்ஸ் இளநிலைப் பட்டம் பெற்றதாக சொல்லி இருக்கிறார். சரி படித்து அதற்கு என்ன? ஆனால் அந்தக் கல்லூரியில் 1983-ல் இருந்து தான் கம்புயூட்டர் ஸயின்ஸ் டிகிரி எல்லாம் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது ஸ்காட் தாம்ப்ஸன் படித்து முடித்து நான்கு வருடங்கள் கழித்து தான்! ஒரு வேளை டிகிரியில், கம்புயூட்டர் சம்பந்தப்பட்ட பாடங்கள் ஏதாவது நிறைய படித்திருக்கலாம் ஒரு வேளை அதனால் இப்படி சொல்லி இருக்கலாம் என்று கல்லூரியில் கம்புயூட்டர் சம்பந்தமாக என்ன படித்தார் என்று கேட்டார்கள். கம்புயூட்டர் ஒர் எளிய அறிமுகம் என்று ஒரே ஒரு பாடம் அவ்வளவு தான் என்றார்கள்.
 
அட ராமா இதைக் கூட சரியாக கவனிக்காமல் இவனை எல்லாம் வேலைக்கு எடுத்த புண்ணியவான் யார் என்றுப் பார்த்தால் அது புண்ணியவதி. கேரோல் பார்ட்ஸூக்கு பை சொல்லிய பிறகு புது தலைவரைத் தேர்ந்தேடுக்க அமைத்த குழுவின் தலைவி, பட்டி ஹார்ட். அந்த அம்மாவின் ஆதி அந்தம் ஆராய்ந்தால் அதுவும் இதே லட்சணத்தில். இல்லினாய்ஸ் மாநில பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் எகானமிக்ஸ் படித்தேன் என்று சொல்கிறார். ஆனால் இவர் படித்தது பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன். இதை எல்லாம் தீர விசாரித்து நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று பிராது கொடுத்தார்.
 
அட ஸ்காட் கம்புயூட்டர் பற்றி படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன? விசா, பார்கிளே, e-bay வில் எல்லாம் பெரிய பெரிய பதவியில் இருந்திருக்கிறார். யாகூவிற்கு தலைவராக இருக்க இது போதாதா. ஒரு சின்ன தப்பிற்கு இவ்வளவு பெரிய அக்கப் போரா என்றார்கள்.
 
ஸ்காட்டைக் கேட்டால் அட அப்படியா நான் ஒரு எக்ஸ்ட்ரா டிகிரி வாங்கி இருக்கிறேன் என்றா சொல்கிறார்கள். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாது? எப்படி நடந்திருக்கும் என்றால் e-bay வில் வேலைக்கு சேரும் போது ஒரு அங்கு என்னை சேர்த்து விட்ட ஏஜன்சியில் யாராவது இப்படி சேர்த்து விட்டார்கள் என நினைக்கிறேன் என்றார். அந்த ஏஜன்சிக்கு வந்ததே கோபம். எங்கள் நேர்மையை சந்தேகப் படுவதற்குப் பதிலாக எங்களைக் கத்தியால் குத்தி விடலாம் என்ற கணக்காய், எங்களிடம் இருக்கும் விபரங்களை வைத்துப் பார்த்தால் தப்பு எங்கள் மேல் இல்லை. எங்களில் யாரும் பொய் சொல்லவில்லை என்று கையைத் தூக்கி ஸ்காட்டை கை காட்டினார்கள்.
 
இப்படி முன்னும் பின்னும் பத்து நாட்கள் போராடிய பின்னர் ஸ்காட் பதவி விலகினார். அவரை வேலைக்கு எடுத்த பட்டி ஹார்ட்டும் தான். இந்நிலையில் ஸ்காட் எப்படி பதவி விலகினார் இல்லை விலக்கப் பட்டார் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. எல்லாவற்றுக்கும் பணம் தான் காரணம்.
 
அவராக இராஜினாமா செய்திருந்தால் அவர் கம்பெனிக்கு ஒரு 7 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் கம்பெனி அவரை ஏதேனும் காரணம் காட்டி தூக்கி இருந்தால் அவரும் கொடுக்கத் தேவையில்லை கம்பெனியும் அவருக்கு கொடுக்கத் தேவையில்லை. காரணமில்லை ஆனால் கிளம்புங்கள் என்று சொல்லியிருந்தால் அவர் எதுவும் திருப்பித் தர தேவையில்லை.கம்பெனி கொஞ்சம் பங்குகள் கொடுக்கும். எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் ஸ்காட்டிற்கு லாபம் லாபம் தான்! அவர் எப்படி கிளம்பினார் என்று யாகூ மூச்சு விடுவதாயில்லை. ஆனால் ஸ்காட்டிற்கு தைராயிடு கேன்சர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன!
 
யாகூவின் நிலை என்ன என்று கேட்பவர்களுக்கு? பத்து வருடங்களாக யாகூவில் வேலை பார்த்து வந்த ராஸ் லெவின்சானை தலைவராக போட்டு இருக்கிறார்கள். நம்ம ஆள் ஒருவரையே தலைவராக போட்டு இருக்கிறார்கள் என்று யாகூ மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இடைக்காலத் தலைவரான இவர் நிரந்தர தலைவராகத் தொடர்வார் என அனைவரும் நம்புகிறார்கள்.
 
சரி டேனியல் லோப், அவர் சொல்லும் ஆட்களை விட போர்டில் இருக்கும் மக்கள் மேலானவர்கள், யாகூ போர்டில் இருக்கும் அளவுக்கு டேனியலுக்கு அனுபவம் இல்லை என்று சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பிய யாகூ போர்டில் அவர் சொன்ன மூன்று பேரில் இருவரும் அவரும் உறுப்பினர் ஆகி இருக்கிறார்கள். ஸ்காட் தாம்ப்ஸன் பதவி விலகியதால் யாகூவின் பங்கு விலை சற்றே உயர்ந்ததில் டேனியலின் பங்குகளின் மதிப்பு 122 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது!.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “நீ அதுக்கு சரிப்படமாட்டே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 17, 2012 @ 6:41 am