குட்டி கதைகள்
முதலாளி
செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா.
'பரவாயில்லையே குணா சீக்கிரத்திலேயே வந்திட்டியே!" சொல்லியவாறே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, குணாவின் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி முருகேசன், அத்தோடு நில்லாது கடைக்குள் திரும்பி, 'டேய்..நம்ம குணாவுக்கு ஒரு கூல் டிரிங்ஸ் உடைச்சுக் குடுடா!" ஆணையிட்டார்.
பையன் கொண்டு வந்து கொடுத்த கூல் டிரிங்ஸை வாங்கி தானே தன் கையால் குணாவிற்கு கொடுத்து விட்டு, 'நீ குடி குணா…நான் போய் மூட்டைகளை இறக்க ஏற்பாடு பண்றேன்!" சொல்லிவிட்டு நகர்ந்த அந்த முதலாளியைப். பார்க்கப் பெருமிதமாயிருந்தது குணாவிற்கு.
அதே நேரம் உள்ளே, 'ஹூம் டெம்போக்காரனையெல்லாம் உபசரிக்க வேண்டியிருக்கு, இல்லாட்டி வர்ற வழில மூட்டைக்கு அரைக் கிலோ, கால் கிலோன்னு பருப்புகளை உருவிடுவானுகளே!" தனக்குள் சொல்லிக் கொண்டார் முதலாளி.
கடன்
அரசு மருத்துவமனை பொதுவார்டில், மூச்சுத் திணறல் காரணமாக அட்மிட் ஆகியிருந்த எங்கள் தெருவைச் சேர்ந்த அங்க முத்துவை, நலம் விசாரிக்க வந்து அமர்ந்திருந்தேன்.
வார்டு பாயிடம் எதற்கோ அவர் பணம் தரும் போது அவர் பையிலிருந்த ஏராளமான கரண்ஸி நோட்டுக்கள் என் கண்ணில் பட, மகிழ்ந்தேன். 'எப்படியும் எனக்கு வர வேண்டிய ரெண்டாயிரமும் கெடைச்சிடும்".
ஒரு நாள், ரெண்டு நாளல்ல தொடர்ந்து பதினைந்து நாட்கள் வந்து கொண்டேயிருந்தேன் பணம் மட்டும் கைக்கு வந்தபாடில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான் கேட்டே விட,
'திவாகர் என்னால மொத தடவை நீ வந்தப்பவே பணத்தைக் குடுத்திருக்க முடியும், ஆனாலும் குடுக்கலை ஏன்னா அனாதையான என்னைப் பார்க்க வர்ற ஒரே விஸிட்டர் நீதான், அதையும் இழந்திடக் கூடாதுன்னுதான்" அவர் கண் கலங்க, நெகிழ்ந்து போய் அவர் கைகளைப் பற்றினேன்.