பில்லா 2 குழுவினருக்கு ஒரு கடிதம்

 

அன்புள்ள சக்ரி டொலேட்டி, அஜித்…
 
 
அன்புள்ள சக்ரி டொலேட்டி,
 
பில்லா 2 பார்த்தேன். உங்கள் நல்ல மனம் புரிகிறது. எல்லாருக்கும் கேரக்டர் வேண்டும் என்ற உயரிய நோக்கோடு நீங்கள் படம் எடுத்திருக்கிறீர்கள். நல்ல விஷயம்தான். எல்லோருக்குமே கேரக்டர் என்றால் ஹீரோ அஜித்துக்கு கேரக்டரோ கேரக்டர் என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள் என்று புரிந்துகொள்கிறேன். இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை எடுக்கும்போது இதைக்கூட யோசிக்காவிட்டால் என்ன இயக்குநர்! ஆனால் என்ன, கொஞ்சம் அதிகம் யோசித்துவிட்டீர்கள்.
 
ஹீரோ நல்லவனா கெட்டவனா என்று தெரியக்கூடாது என்பது ஒரு வகை. அவனை நல்லவனாகக் காண்பிக்கக்கூடத் தேவையில்லை என்பது பில்லா வகை. நீங்கள் எடுப்பது பில்லா வகை. ஆனால் இதையெல்லாம் ஒருவன் ஏன் செய்கிறான் என்பதற்கு ஒரு காரணமாவது வேண்டாமா? வீட்டில் தீபாவளி பொட்டுவெடிக்குக் கூடப் பயப்படும் மனிதர்கள் அநேகமாக வாழும் ஒரு நாட்டில் இப்படத்தை வெளியிடுகிறீர்கள் என்றோ, நீங்களும் அவர்களுள் ஒருவர் என்றோ யாரேனும் உங்களுக்குச் சொல்லியிருக்கலாம். இந்தப் படத்தில் யாரையும் கொலை செய்யாத கேரக்டரே இல்லை என்பது ஒரு சாதனை. அசாத்தியமான சாதனைதான். அதிகப்படியான சாதனையும்கூட.
 
யார் எப்போது யாரை ஏன் கொல்லப்போகிறார்கள் என்ற திகிலோடு பார்க்க ஆரம்பித்து, அந்த திகிலே காமெடியாக, இப்ப பாரேன் இவ இவனைக் கொல்வா என்று சும்மா யாரோ கமெண்ட் அடிக்கும்போது அதே போல அவ அவனைக் கொல்லும் வகையான திரைக்கதையை எந்த வகையில் சேர்க்க? பில்லா வகைதான்!
 
ஒரு கேரக்டரும் திரைக்கதையும் சிக்கலாக இருக்கவேண்டும் என்பதை யாரோ உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதை நீங்கள் அளவுக்கதிகமாகவும் புரிந்துகொண்டுவிட்டீர்கள். உண்மையில் மனித மனம் அடிப்படையில் இலகுவானது. அதனால் ஒரு நேரத்தில் அதிலும் திரைப்படத்தில் ஒரு டிவிஸ்ட்டை மட்டுமே தாங்கமுடியும். தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்த தடிமனத்துக்காரர்களால் இதற்குமேல் தாங்கமுடியாது. அது உங்கள் தவறில்லைதான். ஆனாலும் இந்த மக்களை ஒரு கணம் யோசித்துப் பார்த்திருக்கலாம். ஒரு பட முடிவில் வரும் ஒரு டிவிஸ்ட்டையே க்ளிஷே என்றும் கதறும் கூட்டத்துக்கு நடுவில், டிவிஸ்ட் அட் லாஸ்ட் வகை சிறுகதைகளை குமுதம் ஒரு பக்க வகையறாக்கிவிட்ட காலத்துக்கு நடுவில், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நீங்கள் தந்திருக்கும் டிவிஸ்ட் – அலறடிக்கிறது. எப்படியும் சாகப்போகிறான் என்று யோசிக்கும்போதே உள்மனம் ‘அவன் சாகும்போது நல்லவனா சாவானா கெட்டவனா சாவானா’ என்று யோசிக்கத் தொடங்க இன்னொரு உள்மனம் சகுனி சந்தானம் போல கதைக்குள்ள கதை வேண்டாம் கமல் என்று சொல்ல – இவற்றையெல்லாம் மீறி பாவப்பட்ட மக்கள் பில்லாவைப் பார்க்கவேண்டியிருக்கிறது.
 
செக்யூலர் போர்வை போட்டுக்கொண்டு திரியும் கூட்டத்துக்கு இடையில் நீங்கள் ஆற்றியிருக்கும் செக்யூலர் சேவை புல்லரிக்க வைக்கிறது. ஹீரோ கிறித்துவர், கெட்டவர். இஸ்லாமியராக வருபவரும் கெட்டவரே. இதல்லாமல் கடத்தலைக் காண்பிக்கும்போது லாங் ஷாட்டில் மசூதியைக் காண்பிக்கும் உங்கள் அழகே அழகு, சே தைரியமே தைரியம். திருச்சிற்றம்பலம் என்று சைவத்தில் குட்மார்னிங் சொல்லி, சிவசிதம்பரம் என்று சீர்காழி மகனில் முடிக்கும் ஒரு சைவ ஹிந்து கேரக்டரும் கெட்டவரே. இப்படி எல்லா மதங்களும் இயல்பிலேயே கெட்டவர்களே என்பதை நீங்கள் புரியவைத்திருக்கும் பாங்கு அசாத்தியம். ஏன் வைணவர்களை விட்டுவிட்டீர்கள்? 
 
ஆனால் இதையெல்லாம்விட தைரியம் – அஜித்தை இலங்கையிலிருந்து வந்திருக்கும் ஒரு அகதியாகக் காட்டியதுதான். அகதிகள் வெளியில் வந்தால் இப்படித்தான் கொலை கொள்ளை என்று டானாகத் திரிவார்கள் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் என ஜெயலலிதா ஆசிபெற்ற சீமான் குழு உங்களைக் கழுவில் ஏற்றாது. ஏனென்றால் தமிழ்த்தேசியக்காரர்கள் இந்த பில்லா முழுப்படத்தைப் பார்க்கும் அளவுக்கு தைரியசாலிகள் அல்ல என்றே நினைக்கிறேன். உங்கள் திரைக்கதை உங்களைக் காப்பாற்றியது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
 
சரி, ஏன் அஜித் அகதியாக வந்தார் என்பதை ‘இப்பத்தான் ஆரம்பம்’ என்று பெரிய குண்டைத் தூக்கிப் போடும் அஜித்தின் ரூட்டில் பில்லா மூன்றிலாவது சொல்லிவிடுங்கள். ஆயுதக் கடத்தல் செஞ்சி ஈழப்போராட்டத்துக்கு உதவினான் பில்லா என்று என்னவாவது ரூட் போடுங்கள். இங்கே செஞ்சி என்பது செய்து என்பதன் மரூஉ. செஞ்சியில் ஈழப்போராட்டம் என்று புதுவகைக் கதையை உங்கள் டீம் செய்துவிடக்கூடாது என்று இதைச் சொல்லி வைக்கிறேன்.
 
கடைசியில் நியாயமே வெல்லும் என்பதைக் காட்டிய இடத்தில் பில்லா 2 கர்ணன் திரைப்படத்தைவிட உயர்ந்துவிட்டது. எல்லாக் கடத்தலையும் எல்லாக் கொலைகளையும் செய்த பில்லாவைத் தவிர அத்தனை பேரும் கொலை செய்யப்படுவது நியாயத்தின் ஊற்றுக்கண் என்பதை மறுப்பதற்கில்லை. பில்லாவின் கூடவே வரும் ஒரு முக்கியமான நடிகருக்குப் பதில் வேறொரு அழகான நடிகரைப் போட்டிருக்கலாம். ஏனென்றால் கடைசியில் ‘பில்லா நீ நினைச்சதை முடிச்சுட்ட’ என்று சொல்லும்போது எனக்குள் பல கேள்விகள். எப்படி இவன் மட்டும் கண்டுபிடிச்சான் பில்லா சாதிச்சிட்டான்னு என்று ஒரு கேள்வி. இவனையும் பில்லா கொன்னுபுட்டு ரிவர்ஸ்ல ஓடவிட்டு இவனும் துரோகின்னு காமிச்சு, இரா முருகனை வெச்சு இன்னொரு பன்ச் எழுதச் சொல்லி காமிப்பாய்ங்களோ என்று ஒரு கலவரம். பில்லா இவ்வளவையும் ஏன் செஞ்சன்னு இப்பவாவது என்கிட்ட சொல்லு என்று கேட்டு பில்லாவுக்குள் பில்லாவான ஃப்ளாஷ்பேக்கை ஆரம்பித்துவைத்து கழுத்தறுவிடுவானோ என்ற அச்சம். இப்படி பல கேள்விகளை எழுப்பிய மகத்தான – உயிரோடு விடப்பட்ட ஒரே – கேரக்டரல்லவோ அது.
 
எல்லாரையும் படத்தில் பில்லாவும் மற்றவர்களும் கொன்றார்கள் என்றால், ரகுமானை நீங்களே கொன்றே போட்டீர்கள். பாவம் அவர், ஒரே ஒரு காட்சி. ஆனாலும் அது உங்கள் சுதந்திரமல்லவா டெலெட்டி. கேரக்டரைக் கொல்வதா கேரக்டராக்கிக் கொல்வதா என்பதை நீங்கள்தானே முடிவுசெய்யவேண்டும்!
 
ஒரு சந்தேகம், படத்தில் யார் ஹீரோயின்? 
 
அதற்குப் பின்னும் ஒரு சந்தேகம் – இந்த சந்தேகம் படுத்தும்பாடு இருக்கிறதே, மனித மனம் எளிமையானது என்றேனல்லவா, அதன் ஆதாரம் இதுவே. ஹே ராம் படத்துக்கும் உங்கள் படத்துக்கும் சந்தேகம் மட்டும் ஒரே மாதிரி வருவது இந்த மனத்தின் சாதாரணத் தன்மை காரணமாகத்தானே! – சரி, சந்தேகத்துக்கு வருவோம். சீரியஸான ஹீரோ, அவர் சிரிக்கிறதே இல்லை என்று டிஸ்கசனில் பேசிய ஒரே குற்றத்துக்காகவா அவரை ஒரு காட்சியில்கூட சிரிக்க வைக்கவில்லை?
 
சலங்கை ஒலியில் கமலை ஏனோதானோ என்று படம் எடுத்துக் கெடுத்தீர்கள். கமல் தப்பித்துக்கொண்டார். ஏனென்றால் அது படம். ஆனால் பாவம் அஜித். கொஞ்சம் கருணை வைக்கவும்.
 
அடுத்த படத்தில் லாஜிக் லாஜிக் என்ற ஓர் அம்சம் இருக்கிறது என்பதையும், அதைப் பரிசீலிப்பது அவசியம் என்பதையும் மனத்தில் வைக்கவும். ஏனென்றால் படத்தில் உச்சகட்ட காமெடிக்கட்டமான, தனது மருமகளை (ஹீரோயினை என்று சொல்லவேண்டுமோ!) காரில் புழுதியைக் கிளப்பி அஜித் காப்பாற்றும் காட்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. இதுபோன்ற பல காட்சிகள் இதே படத்தில் உண்டே என்று நீங்கள் எனக்கு நினைவுபடுத்தக்கூடும் என்பதையும் புரிந்துகொண்டே இருக்கிறேன்.
 
மிகவும் பலவீனமான கதை மற்றும் திரைக்கதையைக் கொண்டே மிரட்டலான அசத்தலான மேக்கிங்கை உங்களால் தரமுடியும்போது, நல்ல கதை மற்றும் சரியான ட்ரீட்மெண்ட் இருந்தால் நீங்கள் உண்மையான சாதனைப் படங்களை எடுக்கமுடியும். அடுத்த நல்ல படத்துக்கு வாழ்த்துகள்.

 
அன்புள்ள அஜித்,
 
ஹீராவை எனக்குப் பிடிச்சிருக்கு என்று நேரடியாக பேட்டி கொடுத்த தைரியத்தில் தொடங்கி, யார் எடுத்த படமா இருந்தாலும் ப்ரொமோஷனுக்கெல்லாம் வரமாட்டேன் என்பதிலிருந்து, என் பெயருக்கு முன்னால் எந்தப் பட்டமும் போடவேண்டாம் என்று சொல்லும் உங்கள் தைரியங்களின் ஆதரவாளன் என்னும் முறையில் உங்களுக்கு சில வார்த்தைகள் – 
 
கலகலப்பாக ஒரு ஹீரோ படத்தில் வருவது அத்தனை பெரிய பாவமல்ல.
 
உங்கள் படத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு புருவவலி வந்துவிடுகிறது. அந்தப் புருவத்தை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் பாவம். உங்கள் புருவம்தான். ஆனாலும் அதனை எப்போதும் விரைப்பாக வைத்திருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. கொஞ்சம் பரிசீலிக்கவும்.
 
படத்தை ஒப்புக்கொள்ளும் முன்பு ஒரு வரியிலாவது கதை இருக்கிறதா என்று பார்க்கவும்.
 

 
அன்புள்ள இரா முருகன்,
 
நல்லவங்களைத் தேடுறதுதான் கஷ்டம். இந்தப் படத்திலும் அப்படியே. அடுத்தப் படத்தில் சந்திப்போம்.

 
அன்புள்ள யுவன் மற்றும் கேமராமேன்,
 
நன்றாக வேலை செய்திருக்கும் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள்.
 

அன்புள்ள அஜித் ரசிகர்களுக்கு,
 
இனி நீங்கள் தொடங்கலாம். 
 
 
அன்புடன்
பிரசன்னா

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “பில்லா 2 குழுவினருக்கு ஒரு கடிதம்

 • May 23, 2013 at 1:43 pm
  Permalink

  mister prasanna billa 1 la ajith sethdar.ethu flashback.ondum thereyaama kathaika koodathu.ok.

  Reply
 • July 14, 2012 at 10:35 pm
  Permalink

  வே ! நம்மூர் ஆளுங்கரதால சொல்லுதேன் வே! அரவிந்தன் நீலகண்டனோட சேராதேயும்! சொல்லிபுட்டேன்! கருணாகர ரெட்டி முஸ்லீமா ? கெட்டுச்சொல்லும்! —கஸ்யபன்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 14, 2012 @ 7:34 am