குட்டி கதைகள் – 2
கல்யாணம்
'ஏண்டா திவாகர்….. வயசுக்கு வந்த ரெண்டு தங்கச்சிக கல்யாணத்துக்கு நிக்கும் போது நீ ஒரு பொண்ணைக் காதலிச்சிட்டு 'அதைத்தான் கட்டிக்குவேன் அதுவும் உடனே" ன்னு குதிக்கறியே ஊரே உன்னைக் கேவலமாப் பேசுமேடா!…' தண்டபாணி மாமா கத்தலாய்க் கேட்க,
மெலிதாய்ச் சிரித்தபடி அவரருகே வந்த திவாகர், 'மாமா என்னோட நிலைமைல நான் சம்பாதிச்சு ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்றதுங்கறது நடக்காத ஒண்ணு!…அதான் வசதியான கலைவாணியைக் காதலிச்சேன். என்னோட நிலையைச் சொன்னேன் தங்கச்சிக கல்யாணத்துக்கு தான் தன் நகைகளைக் குடுத்து உதவறதா சொல்லியிருக்கா. அந்த ஒப்பந்தத்துலதான் இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்!. மாமா நான் பண்ணிக்கப் போற இந்தக் கல்யாணம் எனக்காக இல்ல என்னோட ரெண்டு தங்கச்சிகளுக்காகத்தான்!" என்று நிதாமாக சொல்ல மாமாவே சிலையாய் நின்றார்.
குழந்தை
'த பாருங்க ! இதுக்கு மேலேயும் நமக்கு குழந்தை பிறக்கும்கற நம்பிக்கை எனக்கில்லை, பேசாம என் தங்கச்சியக் கட்டிக்கங்க. அவளாவது பெத்துத் தரட்டும்" திவாகர் எவ்வளவோ மறுத்தும் தன் முடிவிலேயே திடமாய் நின்றாள் செல்வி.
சில நிமிட அமைதிக்குப் பின. திவாகர் பேசினான். 'ஏன் செல்வி இப்படிச் செய்தால் என்ன?…'
அவள் புருவத்தை உயர்த்தி, 'என்ன? 'என்று கேட்க, 'நான் உன் தங்கச்சியக் கட்டிக்கறதை விட நீ என் தம்பி குமாரைக் கட்டிக்கோயேன், அவன் உன்னைவிட ஆறு மாசம் பெரியவன்தான்!.. அவன் மூலமா நமக்கொரு குழந்தை வந்துட்டுப் போவுது!"
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், 'சரி இன்னும் கொஞ்ச வருஷம் பொறுத்துப் பார்ப்போம்" சொல்லியபடி உள்ளே செல்ல, நிம்மதியானான் திவாகர்.
ரோல் மாடல்
'அங்கிள் எங்க ஸ்கூல் டிராமா காம்படிஸன்ல நான்தான் ஃபர்ஸ்ட்" பக்கத்துப் போர்ஷன் சிறுவன் நீட்டிய சாக்லேட்டை சிரித்த முகத்துடன் வாங்கிய நரசிம்மன்.
'வெரி குட் ! வெரி குட்" என்று சொல்லி சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தவாறே வீட்டிற்குள் சென்றான். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, வெளியில் வேறு யாரோ ஒரு நபருக்கு அந்தச் சிறுவன் சாக்லேட் தந்து கொண்டிருந்தான், வாங்கிக் கொண்ட அந்த நபரோ, 'யாரு உனக்கு சொல்லிக்கொடுத்தா ?" என்று கேட்க,
'ஹூம் யாருமில்லை நானேதான் ஒருத்தரை ரோல் மாடலா வெச்சுக்கிட்டு நடிச்சேன்"
'அட..பரவாயில்லையே என்ன கேரக்டர்?..யாரு உன்னோட ரோல் மாடல்?"
"ம்ம்ம் .கொடுமைக்கார புருஷன் கேரக்டர் கோபமா முஞ்சிய வெச்சுக்கிட்டு பொண்டாட்டிய கண்டபடி திட்டி, தாறுமாறா உதைக்கணும். அதுக்கு இதோ இந்த வீட்டுல இருக்கற நரசிம்மன் அங்கிளைத்தான் ரோல் மாடலா எடுத்துக்கிட்டேன். தெனமும் எங்க வீட்டுல இருந்து அவரு அந்த ஆண்ட்டியை அடிச்சு நொறுக்கறதை நல்லாப் பாத்து வெச்சுக்கிட்டு அது மாதிரியே நடிச்சு முதல் பரிசும் வாங்கிட்டேன்"
வாயிலிருந்த அந்தச் சிறுவனின்ன் சாக்லேட் ஏனோ கசந்தது வீட்டிற்குள்ளிருந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரசிம்மனுக்கு.
மாடத்தி அம்மன்
'டேய் அந்த மாடத்தி அம்மனை சாதாரணமா நெனைச்சுடாதே…ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்..!..காணாமப் போன பொருளைச் சொல்லி மனசார வேண்டிக்கிட்டுப் போனா அடுத்த மூணே நாள்ல அந்தப் பொருள் திரும்ப வந்து சேருமாக்கும்…"பாலு சொல்ல, லோன் போட்டு வாங்கிய என்னுடைய பைக் காணாமல் போனதிலிருந்து பைத்தியக்காரனாட்டம் இருந்த நான் உடனே சம்மதித்தேன் அங்கே போக.
பஸ்ஸில் போகும் போது மாடத்தி அம்மனின் அருமை பெருமைகளை வாய் வலிக்கச் சொல்லிக் கொண்டே வந்தான் பாலு. எனக்குள் என்னையே அறியாமல் ஒரு நம்பிக்கை துளிர் விட்டிருந்தது.
மதியம் பனிரெண்டு மணி வாக்கில் கோவிலை அடைந்த நாங்கள் அங்கு ஏராளமாய் தெரிந்த போலீஸ் தலைகளைப் பார்த்துக் குழப்பமாகி, பக்கத்திலிருந்த தேங்காய் பழக்கடையில் விசாரித்தோம்.
'அதையேன் கேக்குறீங்க?…உள்ளார இருந்த பஞ்சலோக மாடத்தி அம்மன் சிலைய நேத்திக்கு ராத்திரி திருடங்க பந்து ஆட்டையப் போட்டுட்டுப் போயிட்டானுவ!"
நான் பாலுவைப் பார்க்க, அவன் 'ஹி…ஹி" என்று சிரித்தான் டன் கணக்கில் அசடு வழிய.
மனைவி
கல்யாணக் கூட்டத்தில் திவாகர் காதில் கிசுகிசுத்தாள் கௌரி. 'அதோ..அங்க நிற்கிறார் பாருங்க மஞ்சள் நிற ஜிப்பா அவர்தான் நேதாஜி மாமா"
திவாகர் திரும்பி அந்த நபரைப் பார்த்தான். சுமார் அறுபது வயதிருக்கும்!. 'சரி அவருக்கென்ன இப்ப?" கேட்டான்.
'போன வருஷம்.. அவரு மனைவி இறந்தப்ப.. அமர்க்களம் பண்ணிட்டாரு. சவம் ஹால்ல கிடக்கும் போதே அறைக்குள்ளார போயி தூக்கு மாட்டிக்க முயன்றாரு கதவை உடைச்சுக் காப்பாத்தினாங்க. அப்புறம்..சுடுகாட்டுல சவம் எரியறப்ப…= திடீர்னு நெருப்புக்குள்ளார பாய்ஞ்சிட்டாரு! கஷ்டப்பட்டுக் காப்பாத்தி ஆஸ்பத்திரில சேர்த்தாங்க!… மனைவி மேல அத்தனை பாசம்!…உசுரையே வெச்சிருந்தாரு!… ஹூம் நீங்களும்தான் இருக்கீங்க"
மண்டபத்திலிருந்து கிளம்பும் போது எதிரே வந்த அந்த நேதாஜி, 'என்னம்மா கௌரி சௌக்கியமா?' கேட்டுவிட்டு. ஒரு இளம் பெண்ணை அழைத்து, 'இவதாம்மா..என் புது மனைவி .மூணு மாசமாச்சு கல்யாணமாகி அதிகமா கூப்பிடாம சிம்பிளாவே முடிச்சுட்டோம்" என்றார். வீடு வரும் வரை கௌரி திவாகரிடம் பேசவேயில்லை.
Vazhga valamudan
your publication reg astrology lessons are quite interesting and useful . I am studying now and i will give my feed back after studying it thank u
Very nice stories. Expecting more interesting stories. Thanks.