என் பிரண்டைப் போல யாரு மச்சான்

 

இன்று நண்பர்கள் தினம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.
 
"உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு" என்று நட்பின் பெருமையைக் கூறுகிறது வள்ளுவம்.
 
வரலாறுகளில் பிரசித்தி பெற்ற நட்புகள் கர்ணன் – துரியோதனன், குசேலர் – கிருஷ்ணர், கோப்பெருஞ்சோழன் – பிசிறாந்தையார் ஆகியோர். நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர்கள். 
 
சொந்தங்கள் இல்லாத மனிதர்கள் கூட உலகில் உண்டு, நண்பர்கள் இல்லாத மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம். பெற்றோரிடம் சகோதர சகோதரியிடம், ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களைக் கூட நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். பெற்றோர் செய்யச் சொன்ன வேலைகளைச் செய்து முடிக்காமல் ஓடும் இளசுகள் நண்பனுக்கு ஒன்று என்றால் முன்னால் நிற்பார்கள். 
 
"உன் நண்பன் யாரென்று சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்". "சேர்க்கை சரியில்லாததால் முன்னேறாமல் போயிட்டான்" என்ற புலம்பல்களைக் கேட்டிருக்கலாம். நல்ல நம்பிக்கையான நண்பன் கடவுளுக்கு நிகரானவன். இன்ப-துன்பங்களைப் பகிரும் போது துன்பங்களைக் குறைத்து இன்பங்களைப் பூக்கச் செய்வதில் வல்லவன். பிரச்சினைகளைத் தீர்க்கும் வடிகாலே நல்ல நட்பு. 
 
நல்ல நட்பு பொக்கிஷம், நல்ல நட்பிற்குக் கோடிகள் கொட்டிக் கொடுக்கத் தேவையில்லை. அன்பைத் தந்து அன்பைப் பெறலாம். விதிமுறையில்லை, வரையறை இல்லை. உண்மையும் நம்பிக்கையும் நேர்மையுமே நட்பின் எல்லை.
 
நட்பிற்கு உதாரணமாய்ப் பல திரைப்படங்கள் வந்துள்ளன. தளபதி, அண்ணாமலை, வினித்- அப்பாஸ் நடிப்பில் வந்த காதல் தேசம் இப்படி பல படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிரண்ட்ஸ் திரைப்படத்தை எந்த நண்பர்களும் மறந்திருக்க முடியாது. பெண்ணிற்கும் பெண்ணிற்குமுள்ள நட்பின் பெருமைகளைச் சொல்லி 'தாமரை நெஞ்சம்' 'சினேகிதியே' என்று சில படங்கள் வந்துள்ளன. ஆணிற்கும் பெண்ணிற்குமான நட்பைக் காதலாக மாற்றிய படங்கள் தான் அதிகம். 'பிரியாத வரம் வேண்டும்' 'பூவெல்லாம் உன் வாசம்' என்று வரிசைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.   
 
ஆணிற்கும் ஆணிற்கும் உள்ள நட்பையோ பெண்ணிற்கும் பெண்ணிற்கும் உள்ள நட்பையோ சந்தேகிக்காத உலகம் ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள நட்பைத் தவறாகவே பார்க்கிறது. நட்பு காதலாகத் தான் முடியும் என்ற முன்னுதாரணங்கள் முன்வைக்கப்பட்டாலும் எல்லா நட்புகளும் காதலாகி விடுவதில்லை. தன் தோழி எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வேண்டும் நல்ல தோழனும் தோழனின் குடும்ப நல்வாழ்விற்காக வேண்டும் நல்ல தோழியும் உலகில் இல்லாமலில்லை. உதாரணத்திற்கு 'மனதோடு மழைக்காலம்' திரைப்படம் ஒன்று. வயதான ஒப்பனையில் ஷாம் எங்கேயோ கிளம்ப, அவரது மருமகள் 'இந்த வயசுலேயும் கிழவனுக்கு கேர்ள் பிரண்டைப் பார்க்காம இருக்க முடியல' என்று திட்டுவார். அவர் தன் உயிர்த்தோழியைப் பார்க்கச் செல்லுவார். ஆண்- பெண் நட்பை உயர்வாகச் சித்திரித்த படம்.   ஷாமும் நித்யாதாஸும் கல்லூரியில் ஒன்றாகப் படிப்பவர்கள். ஷாமை சமிக்ஷாவும் நித்யாவை அவரது அத்தைப் பையனும் விரும்புவார்கள். சொந்தங்கள் ஷாம்- நித்யா நட்பைக் காதலாகப் பேசி திருமண அறிவிப்பாகத் தெரிவிக்க ஷாம் மறுக்க, ஏன் நண்பர்களாகப் பழகும் நீங்கள் ஏன் நிஜ வாழ்க்கையில் ஒன்று சேரக் கூடாது? என்று பெற்றவர்களே கேட்க, ஷாம் சொல்லும் பதில்,'என்னால அவ கழுத்துக்குக் கீழே பார்க்க முடியாது' திருப்புமுனையான அசத்தலான பதில். நட்பிற்கே இலக்கணம் வகுத்த நல்ல படம், கடைசி வரை நட்புடன் செல்லும் அவர்களின் பாதை.
 
கல்லூரி காலங்களில் எந்த சூதுவாதுமின்றி கள்ளங்கபடமின்றி பழகும் ஆணும் பெண்ணும் கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் அவரவர் பாதையைப் பார்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அதற்குச் சமுதாயத்தின் கண்ணோட்டமும் காரணமாக இருக்கலாம். இந்த நிலை மாற வேண்டும். நட்பிற்கும் கற்பு உண்டு. கண்ணியம் உண்டு, பெருமை உண்டு, பெருமிதம் உண்டு. தன் எல்லைகளை மீறாமல் கண்ணியத்துடன் பழகும் ஆண்- பெண் நட்பையும் சமுதாயம் மதிக்கலாமே.  நட்பைப் போற்றா விட்டாலும் பரவாயில்லை, சந்தேகக் கண் கொண்டு தூற்றாமல் இருப்பது நல்ல நட்பு வட்டத்தை வளர்க்க உதவும். 
 
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 5, 2012 @ 5:25 pm