குட்டி

 

காதல்,ஆக்ஷன்,காமெடியோடு வித்தியாசமான கலகலப்புக் காட்சிகள் சேர்ந்து கோர்க்கப்பட்டிருக்கும் குட்டிக்கலவை தான் 'குட்டி'. தெலுங்கில் வெளியான 'ஆர்யா' படத்தின் ரீமேக்கே 'குட்டி'. திரைப்படங்களில் கல்லூரி என்றாலே காதல் செய்வது, சண்டைகள் நடப்பது பேராசிரியர்களை முட்டாள்களாகச் சித்திரிப்பது என்று காட்டுவது  தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி.  இந்தத் திரைப்படத்திலும் இதே போன்ற கல்லூரி தான். ஸ்ரேயாவை வற்புறுத்திக் காதலிக்க வைக்கிறார் வட இந்தியப்புதுமுகம் சமீர், இவரின் காதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரேயாவை அதே கல்லூரிக்குப் படிக்க வரும் தனுஷ் காதலிக்கிறார். யாருடைய காதல் வெற்றி பெறுகிறது என்ற குட்டி விஷயத்தைக் கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜவஹர்.மித்ரன். 

தனுஷ் பேசிப் பேசியே கல்லூரிப்பெண்களைக் கவர்கிறார். ஸ்ரேயாவை மட்டும் கவர முடியாமல் தவிக்கிறார்.சில இடங்களில் இவர் பேச்சு சூப்பர், சில இடங்களில் ஓவர்.  தனுஷ் டிரைனில் சமீர்,ஸ்ரேயாவுடன் பயணிக்கும் போது தாடியுடன் ஒரு நிமிடம், மீசையுடன் அடுத்த நிமிடம் என்று அவதாரம் மாறுகிறார். கால்ஷீட் பிரச்சினையோ என்னவோ?  எடிட்டர் கவனிக்கத் தவறி விட்டாரோ?  அழகு தேவதையாக ஸ்ரேயா கல்லூரியை வலம் வருகிறார்.ஸ்ரேயாவின் நடிப்பில் முன்னேற்றம் இருந்த அளவிற்கு அம்மணிக்குத் தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வமில்லையோ என்னவோ? அனேகத் திரைப்படங்களில் இவர் வாயசைப்பிற்கும் பின்னணி குரலுக்கும் ஒற்றுமையே இருக்காது. இந்தத் திரைப்படத்திலும் இதே நிலை தான். தனுஷ்ஷிற்குச் சற்று சீனியர் போன்ற முகத் தோற்றம் இருந்தாலும் ஜோடிப் பொருத்தம் நன்றாகவே இருக்கிறது. புதுமுகம் சமீர் அமுல் பேபி மாதிரி இருக்கிறார். 'உன் லவ்வுலே நம்பிக்கையில்லையா? பாஸ்' என்று பேசிப் பேசியே தனுஷ் சமீரை மடக்குவது கலகல. மனதிற்குள் ஏதேனும் நினைத்து டம்ளரில் கல் எறிந்தால் அது நடக்கும் என்ற புதுக் கண்டுபிடிப்பைக் காதலர்களுக்குப் பரிசாக்கியிருக்கிறார் இயக்குனர். டிரைனில் சமீர் வைத்திருக்கும் டம்ளரில் காதல் கை கூடுமா என்று தனுஷ் கல்லெறிய அது மிஸ்ஸாக கேலி பேசும் சமீரிடம், 'உன் லவ் சக்ஸஸ் ஆகுமானு பார்த்தேன் பாஸ்'என்று கூறும் போது தியேட்டரில் சிரிப்புச்சரவெடி.

நம்பிக்கையில்லாத காதலனுடன் ஸ்ரேயா ஓடிப் போக முடிவெடுப்பது நம்ப முடியாத லாஜிக். திரும்பி வந்த காதலனை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள முயல்வது தமிழ் சினிமாவிற்கே உரித்தான மேஜிக். கதாநாயகியை எதிரிகள் துரத்தும் போது நாயகன் வந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதும் குட்டிப்பையன் போல் இருப்பவர் ரெளடிகளைப் பந்தாடுவதும் திரையில் மட்டுமே சாத்தியம். 

 'குட்டி' படம் என்பதால் ராஜலெட்சுமி, ராதாரவி போன்றவர்களுக்கும் குட்டி ரோல்.ஆர்த்தி படம் முழுக்க பையன் போலவே வருகிறார். ஸ்ரீநாத் அண்ட் கோ சிரிக்க வைக்கிறார்கள். ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம் போட்டிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். 

அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடிகின்ற காட்சிகள், எத்தனையோ திரைப்படங்களில் பார்த்து சலித்த காதல் என்று திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கும் இயக்குனர் தனுஷ் ஸ்ரேயா நடிப்பாலும் வித்தியாசமான காட்சியமைப்பாலும் படத்தை அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறார்.'குட்டி' படு சுட்டி.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 15, 2010 @ 9:55 am