ஈமு திட்டமா ? இவா திட்டமா ?

 

சுமார் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பாக சென்னை பனகல் பார்க் பக்கம் போனால் நூற்றுக்கணக்கான பெரிசுகள் கும்பலாக நின்று கொண்டிருப்பார்கள். நடுவே ஒரு ஸ்டூலைப் போட்டு ஏறி நின்று ஒரு வாலிப வயோதிக அன்பர், “…ஆகவே, அரசாங்கம் அந்தக் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை நாம் வைப்போம். நாமும் தொடர்ந்து போராடுவோம்” என்று புலம்பிக் கொண்டிருப்பார். எல்லோருமே தங்கள் கையிலிருந்து முழு சேமிப்பு, ரிடையர்மெண்ட் தொகை, வூட்டம்மாவின் நகை என அனைத்தையும் கொண்டு அதிக வட்டி தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருந்த ஃபைனான்ஸ் கம்பெனிகளில் கொண்டு போட்டு விட்டு கடைசியில் தலையில் போட்டுக் கொள்ள துண்டு வாங்கக் கூட காசு இல்லாமல் நின்று கொண்டிருந்த கூட்டம்.
 
எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் சரி, அதற்கென்று ஒரு குறிப்பிட்ட கணக்கில் வருமானம் இருக்கும். வருமானம் அறவே இல்லை என்றாலும் சரி, அதீத வருமானம் வருகிறதென்றாலும் சரி வியாபாரத்தில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். மக்களுக்கு ஃபைனான்ஸ் கம்பெனிகாரன் எப்படி காசை திருப்பித் தருவான் என்பது குறித்தெல்லாம் கவலையே இல்லை. அள்ளித் தருவதை அடுத்த வீட்டுக்காரன் மட்டும் சம்பாதித்து விட்டால் தாம் இளிச்சவாயனாகி விடுவோமே என்ற பெருங்கவலையில் சென்று குவிந்(த்)தது தான் அத்தனையும்!
 
‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்று சொன்ன புண்ணியாத்மா, ‘அளவாய் ஆசைப்படு’ என்றும் சொல்லித் தொலைத்திருக்கலாம்.
 
சில பல வருடங்களுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு டவுனிலும் திடீரென ஒரு நாள் காலையில் ஒரு புதிய கம்பெனி முளைக்கும். பிட் நோட்டீஸ், ஆட்டோ முழக்கம் என்று கலர் கலராக ஆரம்பிக்கும். ”ஆயிரம் ரூபாய் கொடுங்க.. ஒரு வாரம் கழிச்சு வந்து உங்களுக்குத் தேவையான ரெண்டாயிரம் ரூபாய்க்கான பொருளை எடுத்திட்டுப் போங்க” என்று ஆரம்பிப்பார்கள். 
 
நம்மாளு தான் ரொம்ப விவரமாச்சே.. எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு ஐநூறு ரூபாயைக் கொண்டு போய் கட்டுவாரு.. ஒரு வாரத்துக்கு அப்புறம் போய் ஆயிரம் ரூபாய் மதிப்பு சைக்கிள் எடுத்திட்டு வருவாரு. ‘ஆஹா.. ரொம்ப தங்கமானவங்கய்யா. அடுத்ததா வூட்டுக்கு ஃப்ரிட்ஜ் வாங்கணும்ன்னு இருந்தோமே. ஃப்ரிட்ஜ் கெட்ட கேட்டுக்கு பத்தாயிரம் ரூபாய்ன்றான். அதனால ஐயாயிரத்தைக் கொண்டு போய் கட்டுவோம்’.
 
”அட.. மக்கள் கூட்டம் ரொம்ப கூடிடுச்சு சார்.. அதனால ஒரு வாரத்திலே தர முடியாது.. ரெண்டு வாரம் ஆகும்”. அதனாலென்ன, ஐயாயிரத்தைக் கட்டிட்டு ஃப்ரிட்ஜ் புக் பண்ணிடுவோம். 
 
அட…அட…அட.. ரெண்டே வாரத்திலே பத்தாயிரம் ரூபாய் ஃப்ரிட்ஜ் ஐயாயிரம் ரூபாய்க்கு கொடுத்திட்டாங்களே, சூப்பரு!
 
“சார்…அது எப்படி பாதிக்கு பாதி விலையிலே தர்றானுங்க? ஒரே மர்மமா இருக்குதே?”
 
“அட, அவங்க வடக்கே (எங்கே, இமயமலைக்கு மேலேயா?)  பெரிய பெரிய ஃபேக்டரி எல்லாம் வெச்சிருக்காங்களாம்ப்பா. நாம குடுக்குற காசை ரொட்டேஷனிலே விட்டு ஒரே நாளிலே டபுளாக்கிடுவாங்களாம். அதான் இப்படி”
 
சைக்கிள்…பீரோ… ப்ரிட்ஜ்… பைக்… கார்… இப்படி ஆரம்பித்து விடியற்காலையில் 4 மணிக்கெல்லாம் மக்கள் கூட்டம் பழியாய்க் கிடந்து காசை அள்ளிக் கொட்டிக் குவித்து, ரெண்டு வாரம், ஒரு மாசத்துக்கு அப்புறம் வந்து இரட்டிப்பு மதிப்பில் பொருளை எடுத்துச் சென்று.. அப்புறம் காசு கட்டுவதற்கே திருப்பதி ஏழுமலையான் தரிசனம் ரீதியில் ரெண்டு நாள் க்யூவில் நின்று கட்டிச் சென்று… ஒரு நாள் காலையில் ஒட்டு மொத்த செலவுத் தொகையும் பல மடங்கு அதிகமாகக் கிடைத்தவுடன் ராவோடு ராவாக ‘எஸ்கேப்’ ஆகி ஓடிய பிறகு புலம்பல் படலம் ஆரம்பிக்கும்.
 
அதே  க்ரூப் வேறொரு டவுனில் வேறொரு பெயரில் அந்நேரம் சைக்கிளுக்கு அட்வான்ஸ் வாங்க ஆரம்பித்திருக்கும்.
 
சில இடங்களில், “இப்ப தாம்ப்பா வந்திருக்கான்.. ஓடுறதுக்கு ஒரு மாசமாச்சும் ஆவும்.. நாம ஆரம்பத்திலேயே காருக்கு பாதி காசைக் கொடுத்து அடுத்த வாரம் எடுத்திடுவோம். நாம எல்லாம் யாரு… வெவரமுல்ல” என்று சொல்லி எக்கச்சக்க பேர் அதே போல கிளம்பி காசைக் கட்டி மூன்றாவது நாளே அவர்கள் மொத்த வசூலையும் எடுத்து ஓடிய கதையெல்லாம் கூட உண்டு.
 
”உங்க நகையெல்லாம் எடுத்திட்டு வாங்க.. அஞ்சு ரூபாய்க்கு பாலிஷ் போட்டுத் தர்றோம்” என்று வீட்டு வாசலில் பக்கெட்டும் கையுமாக வந்து நிற்பார்கள். பாலிஷ் செய்யும் போது ரகசியமாக உருக்கி எடுத்துச் செல்லும் மில்லி கிராம் கணக்கான தங்கம். சமயத்தில் “குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடுங்க” அப்படீன்னு கேட்டுட்டு அப்படியே எஸ்கேப் ஆகும் அயோக்கியத்தனமெல்லாம் தனிக் கதை!
 
தினுசு தினுசாக ஏமாற்றுவதற்கு நம்மாட்களுக்கு எங்கிருந்து தான் ஐடியாக்கள் கிடைக்கிறதோ.
 
“ஈமு கோழிப் பண்ணை”…
 
”ஒரு வேலையும் செய்ய வேண்டாமுங்க.. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்யுங்க. உங்களுக்காக நாங்க வெச்சிருக்கிற கோழியிலேயே நாங்களே தனியா எடுத்து நாங்களே வளர்ப்போம். அதுக்கு தீனி நாங்களே கொடுப்போம். அதுக்கெல்லாம் தனிக் காசு. மாசா மாசம் ஏழாயிரம் ரூபாய் உங்க அக்கவுண்டிலே வந்து விழும். ஈமுக் கோழி பெரிசா (டைனோசர் சைஸூக்கா?!) வளர்ந்தப்புறம் அதை நாங்களே வித்து அந்த லாபத்தையும் நாங்களே உங்களுக்குத் தருவோம்”.
 
ஏன்டா.. எல்லாத்தையும் நீங்களே செய்யுறதுக்கு அப்புறம் எதுக்கு நாங்க பணம் தரணும் என்று யாருக்கும் கேள்வி கேட்கத் தோன்றவில்லை.
 
கே.எஃப்.சி. முதற்கொண்டு சகல இடங்களிலும் சென்று சிக்கனை ரவுண்டு கட்டி அடிக்கும் போதெல்லாம் “ஈமு 65”, “தந்தூரி ஈமு” என்றெல்லாம் இருக்கிறதா என்று ஒரு நாளும் ஆராய்ச்சி செய்து பார்க்கத் தோன்றவில்லை.
 
அடுத்த வூட்டுக்காரன் அடுத்த மாசத்திலேர்ந்து வேலைக்கே போகாம வூட்டுலேயே படுத்து காலை மாத்தி மாத்தி ஆட்டி காசு மட்டும் பார்க்கப் போறான். நாம மட்டும் இனா வானாவா என்ன? 
 
கொண்டு போய் குவித்து விட்டு இப்போது புலம்ப ஆரம்பித்திருக்கிறது நமதருமை தமிழ்ச் சமுதாயம்.
 
ஈமு விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுகின்றன. முதலில் இது நாள் வரையில் இந்த ஈமு மோசடியில் கொண்டு போய் பணத்தைப் போட்ட அனைத்து பேராசைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடிகர்களின் விளம்பரங்களையெல்லாம் விட இந்த அயோக்கியர்களின் வாய்வழி விளம்பரம் தான் மேலும் மேலும் மக்களை அங்கே கொண்டு குவித்திருக்கும். அது சரி.. அப்போ அந்த விளம்பரத்தை ஒளிபரப்பின டிவி சானல்கள், விளம்பரங்களைப் பிரசுரித்த நாளிதழ்கள், பத்திரிகைகள் மேலே எல்லாம் கேஸ் கிடையாதா? என்னாங்கப்பா நியாயம் இது?
 
ஈமு மோசடியில் ஈடுபட்ட அனைவரின் மேலும் நடவடிக்கை எடுத்து கைப்பற்றப்படும் மக்களின் பணத்தை மீண்டும் மக்களிடம் கொடுக்காமல் ஏதாவரு ஒரு நல்ல காரியத்துக்கு அரசு பயன்படுத்த வேண்டும்.
 
என்ன தான் செஞ்சாலும் நம்மாட்கள் அடுத்த தடவையும் இதே மாதிரி கும்பலா போய் காசைக் குவிச்சு ஏமாறத் தான் செய்வார்கள்!
 
ooOoo
 
தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டது என்று யாரோ குறை பட்டுக் கொண்டார்கள். யார் சொன்னது?
 
தொண்ணூத்து சொச்சம் வயசிலேயும் ஒரு ‘பெரிசு’ பெரும் காமெடி செய்கிறாரே, பார்க்கவில்லையா?
 
அதான்.. ‘டெஸோ’.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 7, 2012 @ 11:55 pm