அசல்

 

இயக்குனர் சரணின் இயக்கம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும். அந்த வகையில் 'அசல்' படமும் பொழுதுபோக்குத் திரைப்படம் தான். சறுக்கல் படங்களாகத்(பில்லாவைத் தவிர)தந்து வந்த அஜீத்திற்கு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயம். 'அசல்' அஜீத் ரசிகர்களுக்கு அசத்தல் தீனி தான். 

சம்பத்தும் ராஜீவ் கிருஷ்ணாவும்  கோடீஸ்வரர் அஜீத்தின் அசல் வாரிசுகள்,அவரது கள்ள உறவின் மகன் அஜீத். அப்பா அஜீத்திற்கு அசல் வாரிசுகளை விட அஜீத் மேல் பிரியம் அதிகம். தீய வழியில் செல்லாமல் தன் மகன்களை அஜீத்துடன் சேர்ந்து ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் தொழில் செய்யச் சொல்லுகிறார். அப்பா அஜீத்தும் காலமாக மகன் அஜீத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அசல் வாரிசுகள் குறுக்கு வழியில் சென்று மாட்டிக் கொள்ள, அஜீத் அவர்களைக் காப்பாற்றுகிறார், அஜீத்தைத் தன் சகோதரனாக ஏற்றுக் கொண்டார்களா? உயிருக்குயிராகக் காதலிக்கும் சமீரா,பாவனாவில் அஜீத் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பன பிற்பாதி முடிவுகள். 

பாரீஸில் பிளைட், பாம்பேயில் பைட், இடையிடையே இரண்டு கதாநாயகிகளுடன் டூயட் என்று அஜீத்திற்கு வேலைப்பளு தான். படம் முழுவதும் விறுவிறுப்பு, பிரதீப்சிங்க் ரணாவத், சுரேஷ், சம்பத், ராஜீவ் என்று வில்லன் பட்டாளம் ஏராளம், அதிலும் செட்டியாக வரும் வில்லன் கண்களாலேயே பயமுறுத்துகிறார்.அவர்கள் அனைவரையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் அஜீத்திற்கு, அஜீத் தன் உச்சரிப்பை நேர்த்தி செய்திருப்பது பாராட்டிற்குரியது. படத்தில் அஜீத்தின் வசனங்களை ஒரு பக்கத்தில் அடக்கி விடலாம், அடக்கி வாசித்திருக்கிறார். அல்ட்டிமேட் ஸ்டார் பட்டத்தைத் மறுத்தவருக்கு, 'தல' பட்டத்தைத் துறக்க மனமில்லையோ என்னவோ? தல போல வருமா? தல வருது என்று படத்தின் சில காட்சிகளிலும் பாடலிலும் 'தல' புராணங்கள் தான். அஜீத் புகைப்பிடிக்கும் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கியிருக்கலாம்.

சீரியஸ் கதை என்பதால் பாடல் காட்சிகளில் மட்டும் சிரித்துக் காதலிக்கும் அஜீத்தைக் காண முடிகிறது. சமீராவிற்குப் போட்டியாகப் பாவனாவும் கவர்ச்சிக் கோதாவில் இறங்கியிருக்கிறார். இருந்தாலும் குடும்பப்பெண் வேடத்திற்குப் பொருத்தமான முகம் பாவனாவிற்கு, கிளாமர் எடுபடவில்லை.வடிவேலு தலைநகரம் படத்தில், ஜோதிர்மயி வடிவேலுவைப் பார்த்து மயங்கி விழும் போது 'இது தான் அழகுலே மயங்கி விழறதா?' என்பாரே,அப்படி அஜீத்தைப் பார்த்தவுடன் பாவனா காதல் வயப்படுகிறார், அஜீத்தின் அழகில் மயங்கி விழாத குறை தான்.  பாவனாவும் சமீராவும் போட்டி போட்டுக் கொண்டு அஜீத்தைக் காதலிப்பதும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்படுவதும் ரசிக்கத் தகுந்த காட்சிகள். யூகிசேதுவின் காமெடி சில இடங்களில் மட்டும் சரவெடி, பல இடங்களில் புஸ்வாணம். பிரெஞ்ச் போலீஸாக வரும் சுரேஷ், சம்பத் இவர்களின் நடிப்பும் பாராட்டிற்குரியன. 'ஆஹா' ராஜீவ் கிருஷ்ணா ஓஹோ பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறார். 

பரத்வாஜின் இசையும் அருமை, பாடல்களில் ஒரு பாடலைத் தவிர மற்றவை அனுபல்லவியுடன் முடிந்து விடுவது ஏனோ? வைரமுத்து வரிகளில் பாடல்கள் பளீச். திரையரங்கை விட்டு வெளியில் வந்தும் 'டொட்டடொய்ங்' பாடல் மனதை விட்டு அகலாமல் முணுமுணுக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் பிரஷாந்த்தின் கேமிராவிற்குத் திருஷ்டி சுற்றிப் போடலாம், காட்சிக்குக் காட்சி கேமிரா மேய்ந்துள்ள இடங்கள் கொள்ளை அழகு, பிரபுவின் பிரம்மாண்டமான தயாரிப்பு ரசிகர்களுக்குப் பாரீஸ் நகரைச் சுற்றிப் பார்க்கப் பயன்பட்டிருக்கிறது.அனைத்து விஷயங்களிலும் படத்தைக் கவனமாக இழைத்த சரண் கதையில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம், படத்தின் விறுவிறுப்பும் ஒளிப்பதிவும் ஜனரஞ்சகமான இயக்கமும் படத்துடன் ரசிகர்களை நிச்சயம் கட்டிப் போடும்.  

அஜீத்+சரண்+பரத்வாஜ் கூட்டணி மீண்டும் வெற்றியைக் கண்டிருக்கிறது. அசத்தும் அசல் அள்ளும் வசூல்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 15, 2010 @ 10:34 am