அமெரிக்க அரசியல் 2012 டிபேட் 3

மூன்றாவது டிபேட் முழுக்க முழுக்க உலகளாவிய அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் மேல் என்று டிபேட் ஆரம்பத்திலேயே சொன்னார்கள்.

 
அப்பாடா! சென்ற இரண்டு டிபேட்களிலும் வேலையில்லா திண்டாட்டம், பட்ஜெட்டில் பயங்கர துண்டு, ஃபுட்ஸ்டாம்ப்ஸ், ஒபாமாகேர், இன்ஷூரன்ஸ் என்று சக்கையாக அரைத்த மாவையே இப்போதும் திரும்ப அரைக்கப் போவதில்லை என்பதில் ஆடியன்ஸ் நிம்மதிப் பெருமூச்சுடன் கொட்டாவியையும் சேர்த்தே விட்டது.
 
ஏனென்றால், அமெரிக்கர்களில் பாதிப்பேர் அடுத்த டவுனுக்கு நடந்துகூட போனது கிடையாது. மீதம் பேரிடம் உலக வரைபடத்தைக் கொடுத்தால் ‘இம்மாம் பெரிய பீட்சா கூப்பனா?’ என்று கேட்பார்கள்.
 
‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க, என் எலெக்‌ஷன் வெல்லும், வென்ற பின்னே வாங்கடா வாங்க’ – ஜாலி மூடில் இருந்தார் ஒபாமா.
 
ராம்னியோ ஃப்ரஷ்ஷாக அரைகுறை டை அடித்துக்கொண்டு, கேள்வித்தாளை முதலிலேயே படித்துவிட்ட கள்ள மாணவன் போல் கேலிச் சிரிப்புடன் காட்சி அளித்தார். (“எப்படியும் ஊத்திக்கும். ஊருக்குப் போயி நாம இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் வேலையை கவனிக்கலாம், காசு பண்ணலாம், கிடக்கிறானுங்க அமெரிக்க அன்னாடங்காய்ச்சி 47% பசங்க’)
 
ராம்னிக்கு வெளி உறவுக்கொள்கை என்றால் விலை என்னவென்றே தெரியாது. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கடந்த சில பல வருடங்களில் நாம் கப்பல்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டோம் என்று முழங்கியதற்கு “ஆமாம். நாம் வைத்திருந்த குதிரைகளின் எண்ணிக்கை கூடத்தான் ஒரேயடியாகக் குறைந்துவிட்டது” என்று ஒபாமா ஒரு போடு போட்டார்! (”டெக்னாலஜிடா மிட்டு பையா, ஒரு ஏர்கிராஃப் கேரியர் = 25 சாதா கப்பல்ஸ்!)
 
ஒபாமாவாவது நோபெல் பரிசு, அது இது என்று கொஞ்சம் வெளிநாடு சுற்றியவர். இருந்தாலும் ஹில்லரி கிளிண்டனை எல்லாம் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவரால் எவ்வளவுதான் ஃபாரின் ஜல்லி வெற்றிகரமாக அடித்துவிட முடியும்?
 
 
 
ஈராக்கில் இனிமேல் அழிக்க ஒன்றும் இல்லை. ஒசாம் பின் லேடனைப் பிடித்தாயிற்று, அவனுங்க எப்படியோ அடித்துக்கொண்டு சாவட்டும், ஆஃப்கானிஸ்தானுக்கு சீக்கிரமே பை பை,  ஈரானை மிரட்டோ மிரட்டென்று மிரட்டி கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியாயிற்று, எகிப்தில் லேட் வசந்தம், லிபியாவில் எதிர்பாராத அடி, உதை, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க எலெக்‌ஷனில் எந்த ஒரு போட்டியாளரும் எதுவுமே சொல்லிவிட முடியாது -இதெல்லாம் எல்லோருக்குமே தெரிந்த அடிப்படை உண்மைகள்..
 
எப்போதுமே இரண்டு கட்சிகளுக்குமே சேர்ந்து ஒரே வெளியுறவுக் கொள்கைதான். பூவா, தலையா மட்டுமே போட்டுப்பார்த்து யாருடையது என்று அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
 
ஆனால் பிரபஞ்சத்தையே அமெரிக்கர்கள்தான் ஆட்டிப் படைத்துக் காத்து அழிக்கவும் வல்லவர்கள் என்று அசட்டு அமெரிக்க ‘ஆம் ஆத்மி’யை நினைக்க வைப்பதில் இரண்டு கட்சிக்காரர்களுமே வல்லவர்கள்.
 
இஸ்ரேல் என்ன அழிச்சாட்டியம் செய்தாலும் கண்டு கொள்ளாமல் காசு, பாம்ஸ், ப்ளேன்ஸ் கொடுத்துக்கொண்டே இருப்பது, பாகிஸ்தானுக்கும் கணக்கே பார்க்காமல் பில்லியன்ஸில் தூக்கிக் கொடுப்பது, ஆனால் அவ்வப்போது ட்ரோன்ஸ் மூலம் சவட்டுவது, பாகிஸ்தான் / சவுதி அரேபியாவில் மட்டும் ஜனநாயகம் பற்றியே பேசா மௌனகுருசாமியாக பாசாங்கு இருப்பது, இந்தியா சுத்தமாக உலக வரை படத்திலேயே இல்லாதது போல் கண்டுகொள்ளாமல் இருப்பது, சைனாவை செல்லமாக கன்னத்தில் கிள்ளிக் கண்டிப்பது- இதுவே அமெரிக்க வெளியுறவு கொள்கை.
 
இதில் எதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னாலும் அப்படிச் சொன்னவர் வீடு போய்ச் சேரமுடியாது.
 
அப்படியானால் எதை வைத்துத்தான் ஒன்றரை மணி நேரம் டிபேட் என்று எழுந்து போகாமல் உட்கார்ந்திருப்பதாம்?
 
அதனால் ராம்னி பல நேரங்களில் ஒபாமாவின் வெ. உ. கொள்கைகளுக்கு மண்டையை வேகவேகமாக ஆட்டும்படி ஆகிப் போனது. ஆனாலும் அவரை வம்புக்கு இழுப்பதற்காகவே மறுபடியும் பொருளாதாரம், வே.இ.திண்டாட்டம் என்று ஏற்கனவே பதில் தெரிந்த கேள்விகளுக்கு தானே தாவித்தாவி தனக்குத்தானே கேள்வி-பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
 
“அடே, இந்த கேம் நல்லாருக்கே” என்று ஒபாமாவும் அதே ஸ்டைலில் ராம்னிக்கு கணக்கே வராது, சயன்ஸில் பிட் அடித்தும் பாஸாகவில்லை, பூகோள கிளாசுக்கு இந்த ஆள் எப்பவுமே ‘கட்’ என்று புகார் வாசித்தே ஃபுல் டயத்தையும் முடித்து வைத்தார்.
 
டிபேட் ரம்பம் முடிந்தது. சுபம்.
 
நவம்பர் 6ல் தேர்தல்.
 
டஃப் பைட்தான்.
 
ஒபாமா மிகக் குறைந்த மார்ஜினில் அடித்துப் பிடித்து வெற்றி பெற்று, இன்னும் 4 வருஷங்களுக்கு அவருக்கு மட்டும் வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லாமல் இருப்பார். அல்லது, ராம்னி மிகக் குறைந்த மார்ஜினில் வெற்றி பெற்று அமெரிக்காவையும் உலகத்தையும் சேர்த்தே இன்னும் நாஸ்தியாக்குவார்.
 
என் வோட்டு ஒபாமாவுக்குத்தான்.
 
மயிரிழையில் ஒபாமா தன் வேலையை காப்பாற்றிக் கொள்ளலாம்!
 
புதிதாக ஏதோ ஒரு ப்ளானெட் வந்திருக்கிறதாமே, அங்கே போக எப்படி விசா எடுப்பது?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 23, 2012 @ 9:52 pm