சச்சின் – சின்னஞ்சிறிய கனவினூடே ஒரு சகாப்தம்

 

பதினாலு வயது பையனாக வான்கடே ஸ்டேடியமில் பந்து பொறுக்கும் பையனுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. அதே உலகக்கோப்பை மேடையில் தானும் இடம்பெறவேண்டும் என்பதுதான் அது. அக்கால கட்டத்தின் பல சிறுவர்களின் கனவாக அது இருக்கத்தான் செய்தது.  
 
Sachin-Tendulkar-16'முட்டிக்கு சற்று மேலே எழும்பிய அந்தப் பந்தை, அவர் கவர் திசையில் ட்ரைவ் செய்ய நினைத்து முன்னேறி, கடைசி நொடியில் மட்டையை விலக்கிக் கொள்ள பந்து கீப்பரின் கைக்கு சென்றது' என்ற கொரகொர ரேடியோ வர்ணனைக்குப் கேட்டுவிட்டு 'என்னாவாம்… ரன்னே எடுக்கல… அதைப் போய் இவ்ளோ லென்த்ததா சொல்றாங்க' என்று ஆயாசப்பட்டுக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் புயலென மாறி கட்டுக்கடங்காத கொண்டாட்டத்தில் திளைக்க ஆரம்பித்த காலம் அது. 
 
83-85 காலகட்டம் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரும் திருப்புமுனைக் காலம்.  ஏகப்பட்ட சாதனைகள் உடைக்கப்பட்டு, சரித்திரம் மாற்றியெழுதப்பட்ட காலம். 87ம் வருட கிரிக்கெட் உலகக்கோப்பை இந்திய மண்ணில் நிகழ்ந்த போது, வான்கடே ஸ்டேடியத்தில் பந்து பொறுக்கிப் போடும் பையனாக போக என் வலக்கையை வெட்டித் தர சித்தமாக இருந்திருப்பேன்.  அப்படித்தான் சச்சினும், காம்ப்ளியும் இன்னபிற பையன்களும் துடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.  
 
அதற்கு முந்தைய 83ம் வருட உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், கோலியாத் போன்ற மேற்கிந்திய தீவு அணியை  கபில்தேவ்வின் தலைமையிலான இந்தியா வெற்றிக் கொண்டது ஒன்றும் திட்டமிட்டு வியூகம் அமைத்து பெற்ற வெற்றி அல்ல. வெறும் துடிப்பையும், நம்பிக்கையையும் மட்டுமே கொண்டு சாதித்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்திய கிரிக்கெட் அப்படியேதான் இருக்கிறது.  கட்டுகோப்பான திட்டமிடுதல், தொலைநோக்கு பார்வை, வெற்றிபெறும் வியூகங்கள் என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் துடிப்பு மிக்க வீரர்களின் சாதனையை மட்டுமே நம்பிக் கொண்டு.  
 
சச்சினுக்கு என்ன குறைச்சல்? இந்திய கிரிக்கெட்டின் தலைவாசலான, அதிகாரமையமான மும்பையில் இருந்தார். கவாஸ்கர் போன்ற நட்சத்திர வீரர்கள் லைம் லைட்டில் இருக்கும்போது அவர் பார்வையில் இவர் விழுந்தார். இரண்டே ஆண்டுகளில் பாகிஸ்தான் டூருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை எளிதில் பெற்றார்.  அப்துல் காதரின் ஒரு ஓவரில் சில வித்தைகள் காட்ட நாளிதழ்களின் முக்கிய செய்திகளில் அவர் பெயரும் ஓரமாக இடம்பெற்றது.  The blue eyed boy என்ற அங்கீகாரம் உடனே அவருக்கு வழங்கப்பட்டது.  அடுத்து இரண்டே வருடங்களில் அவருடைய உலகக் கோப்பை கனவும் நனவாகியது. 1991 உலகக் கோப்பையில் இந்திய அணியில் சச்சின் இடம்பெற்றார். தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தினால் இரண்டு மேன் ஆஃப் த மேட்ச் விருதுகளும் பெற்றார். மார்ட்டின் க்ரோவ்வின் மேஜிக்கால் பிரும்மாண்டமாக உருவெடுத்திருந்த நியுஜி அணியிடம் தோற்ற மேட்ச்சிலும் கூட சச்சின்தான் டாப் ஸ்கோர். போதாதா? சந்தோஷமாக புகழ் மழையில் நனைந்து திளைக்க வேண்டியதுதானே?
 
வாய்ப்புகளும், அதை பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெறுதலும் வீரர்களுக்கு அழகு.  ஆனால் சாதனையாளர்களுக்கு?  அந்த பதினாலு வயதுக் கனவின் மிச்சம் அவரை அமைதியாக அமரவிடாமல் துரத்திக் கொண்டேதான் இருந்தது.  'இதல்ல என் குறிக்கோள்' என்று தன் வேர்களை இன்னமும் ஆழமாக பூமியிலிட்டு விருட்சமாய் வளர்ந்தார். 96 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு லீடிங் ஸ்கோரர், 99 உலகக் கோப்பையில் இரண்டு செஞ்சுரிகள், 2003ம் உலகக் கோப்பையில் அறுநூற்று எழுபது ரன்கள்.  கிட்டத்தட்ட ஒற்றைக்கையால் இந்திய அணியை உலகக் கோப்பை வெற்றிக்கும் மிக அருகே இட்டுச் சென்றார்.  ஆயினும் அந்த பதினாலு வயது சிறுவனின் கனவு பூரணமாக நிறைவேறவேயில்லை.  
 
உடல்நல பிரச்னைகள். டென்னிஸ் எல்போ, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை. 'எங்கள் மதம் கிரிக்கெட். எங்கள் தெய்வம் சச்சின்' என்ற வெறிபிடித்த ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஒவ்வொரு முறையும் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் இவற்றின் மத்தியில் தன் பதின்ம வயது ஆசைத்தீயை அணையவிடாது தொடர்ந்து தன்னை நிரூபித்துக் கொண்டே வந்தார். இந்த உலகக்கோப்பையாவது… இந்த உலகக்கோப்பையாவது… என்று விடாமல் ஓடிக் கொண்டேயிருந்தார். கிட்டத்தட்ட 24 வருடங்கள் கழித்து அதே வான்கடேவில் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது உலகக்கோப்பையை வென்றெடுத்தபோது அந்த பதினாலு வயதுச் சிறுவன் கண்ணீர் தளும்ப தன் அணியினரை ஓடி ஓடிச் சென்று அணைத்துக் கொண்டு கொண்டாடினான்.
 
சச்சின் கணக்கற்ற சாதனைகள் படைத்திருக்கலாம்.  நூறு கோடி மக்களின் நாயகனாக நெடுங்காலம் கோலோச்சியிருக்கலாம். பிராட்மேனிலிருந்து தொடங்கி, இன்றைய காலிஸ் வரை சச்சினோடு ஒப்பிட்டுப் பார்க்காத லெஜண்ட்களே கிடையாது. இந்திய கிரிக்கெட்டின் அதி-நட்சத்திரங்கள் பலரும சச்சினின் நிழலில் வளர்ந்தவர்களே.  ஆனால் இவை எதுவும் அவருக்கு பொருட்டில்லை.  
 
அவரளவிற்கு, தன்னுடைய பதினாலு வயதுக் கனவை முழுமையடையச் செய்யும் பயனத்தில் சச்சின் கடந்த சில மைல்கற்களே இவை. 
 
சச்சினுக்குள் இருக்கும் என்றும் மாறா சிறுவன்தான் அவரை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்று ஒரு சகாப்தமாக ஆக்கியது. என்னுள் இருந்த சிறுவனையும் எத்தனையோ முறை சந்தோஷபடுத்திய அந்த சிறுவனுக்கு என்றென்றும் என் நன்றிகள்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 23, 2012 @ 2:58 pm