சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 02

முந்தைய பகுதி 

mind-map-2’முதல்ல, எங்க அக்கா சொல்லிக்கொடுத்த ஒரு சிம்பிள் பயிற்சியைச் சொல்றேன்’ என்றான் நரேன், ‘அதை வெச்சு மைண்ட் மேப்ஸ்ன்னா என்னன்னு நீ புரிஞ்சுக்கமுடியும்.’
 
மேஜைமேலிருந்து ஒரு வெற்றுக் காகிதத்தை எடுத்த நரேன், அதைச் சீனுவிடம் நீட்டினான். ‘இந்தப் பேப்பர்ல, உன்னைப்பத்தி நீயே ஏதாச்சும் எழுதணும்’ என்றான்.
 
‘என்னைப்பத்தியா? என்ன எழுதறது?’
 
‘அது உன் இஷ்டம், பேரு, ஊரு, எடை, உயரம், பிடிச்ச சினிமா, சாப்பாடுன்னு இந்தப் பக்கம்முழுக்க நீ எதை வேணும்ன்னா எழுதலாம். உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்.’
 
சீனு யோசித்தான். பிறகு பரபரவென்று எழுத ஆரம்பித்தான்:
 

பெயர்: எஸ். சீனிவாசன்

அப்பா பெயர்: ஆர். சிவராமன்
அம்மா பெயர்: எஸ். விமலா
உடன்பிறந்தோர்: எஸ். ராகவன் (அண்ணன்), எஸ். ஜனனி (தங்கை)
சொந்த ஊர்: திருச்சி
இப்போது வசிக்கும் ஊர்: சென்னை
பள்ளியின் பெயர்: காந்தி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்
வகுப்பு: 8C
பிடித்த பாடம்: தமிழ்
பிடிக்காத பாடம்: கணக்கு
ரேங்க்: 7
எதிர்காலக் கனவு: இந்திய அணிக்காகக் கிரிக்கெட் விளையாடுவது
பிடித்த கிரிக்கெட்டர்: தோனி
பிடித்த நடிகர்: விஜய்
 
அவன் தொடர்ந்து எழுதுவதற்குள், நரேன் காகிதத்தைப் பிடுங்கிவிட்டான். ‘அஞ்சு நிமிஷம் ஆகிடுச்சு’ என்று சிரித்தவன் சீனு எழுதியவற்றை நிதானமாகப் படித்தான். ‘குட்’ என்றான்.
 
‘இதை வெச்சு என்ன செய்யப்போறே?’
 
‘இப்போ இந்தக் காகிதத்தை நான் யாரோ ஒருத்தர்கிட்டே கொடுத்துப் படிக்கச் சொல்றேன்னு வெச்சுக்குவோம், அவர் உன்னைப்பத்திப் புரிஞ்சுக்கறதுக்கு எவ்ளோ நேரமாகும்?’
 
‘அதான் எல்லாம் தெளிவா எழுதியிருக்கேனே, ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் போதும்.’
 
‘ஆனா, அப்படி ரெண்டு நிமிஷத்துல படிச்சதை அவங்களால எவ்ளோ நேரத்துக்கு ஞாபகம் வெச்சிருக்கமுடியும்?’ என்றான் நரேன், ‘உதாரணமா, இன்னும் பத்து நாள் கழிச்சு, உன்னோட ஸ்கூல் பேர் என்னன்னு அவங்ககிட்டே கேட்டா பதில் சொல்வாங்களா?’
 
சீனு கொஞ்சம் தயங்கினான். பிறகு, ‘கஷ்டம்தான்’ என்றான்.
 
‘காரணம் என்னன்னா, நீ உன் மனசுல உள்ளதையெல்லாம் அப்படியே இந்தப் பேப்பர்ல கொட்டிட்டே, அதுக்கு ஒரு வடிவம் இல்லை, அப்படி வடிவம் இல்லாத ஒரு விஷயத்தை நம்ம மூளை ஞாபகத்துல வெச்சுக்கச் சிரமப்படும்.’
 
‘வடிவம்ன்னா? சரியாப் புரியலையே!’
 
நரேன் சுவரில் ஒட்டியிருந்த ஒரு காகிதத்தைக் காட்டினான், ‘இது என்ன?’
 
’நம்ம க்ளாஸ் டைம் டேபிள்.’
 
‘எப்படிக் கண்டுபிடிச்சே?’
 
‘அதான் கட்டம் கட்டமாப் பார்த்ததும் தெரியுதே’ என்றான் நரேன் அலட்சியமாக, ‘திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளின்னு அஞ்சு நாள், டெய்லி ஏழு பீரியட், எப்போ எந்த க்ளாஸ்ன்னு எழுதியிருக்கு. அவ்ளோதானே?’
 
‘கரெக்ட், இப்போ இதுல வெள்ளிக்கிழமை நாலாவது பீரியட் எதுன்னு கேட்டா உன்னால சொல்லமுடியுமா?’
 
‘ஓ, சொல்லலாமே’
 
‘எப்படி?’
 
‘ரொம்ப ஈஸி, இந்தப் பக்கம் வெள்ளிக்கிழமையை எடுத்துகிட்டு ஒரு கோடு போடணும், அந்தப் பக்கம் 4வது பீரியடை எடுத்துகிட்டு ஒரு கோடு போடணும், இந்த ரெண்டு கோடும் சந்திச்சுக்கற இடத்துல எந்த க்ளாஸ் இருக்குன்னு பார்க்கணும், அவ்ளோதான்!’
 
’வெரி குட்’ என்றான் நரேன், ‘இப்படிக் கட்டம் கட்டமா இல்லாம, அஞ்சு நாள், ஏழு பீரியட்ன்னு மொத்தம் 35 பீரியட்களோட பெயர் விவரங்களைமட்டும் வரிசையா லிஸ்ட் போட்டு உன் கையில கொடுத்துட்டா, நீ அதை ஞாபகம் வெச்சுக்கவும் முடியாது, கையில பேப்பர் இருந்தாக்கூட தேடிக் கண்டுபிடிக்கிறது சிரமம், இல்லையா?’
 
’ஆமா, ஆனா இதுக்கும் மைண்ட் மேப்புக்கும் என்ன சம்பந்தம்?’
 
‘சொல்றேன், டைம் டேபிள்ங்கறதை 5 நாள், ஏழு பீரியட்ன்னு கட்டம் கட்டறதுதான் வடிவம், இதேமாதிரி நாம பார்க்கற ஒவ்வொரு விஷயத்துக்கும் வடிவம் இருக்கு.’
 
‘உதாரணமா, உனக்கு ரொம்பப் பிடிச்ச கிரிக்கெட்டையே எடுத்துக்குவோம், அங்கே ஸ்கோர் போர்டுக்குன்னு ஒரு வடிவம் இருக்கு, அணியோட பேரு, பேட்ஸ்மேனோட பேரு, அவங்க எப்படி அவுட் ஆனாங்க, யார் பந்துவீச்சுல அவுட் ஆனாங்க, எவ்ளோ ரன் எடுத்தாங்க, எத்தனை பந்துகளைச் சந்திச்சாங்க, எவ்ளோ நிமிஷம் விளையாடினாங்க… இப்படி ஒரு குறிப்பிட்ட வடிவத்துல எழுதறதாலதான், நீ ஸ்கோர் போர்டைப் பார்த்ததும் டக்குன்னு யார் செஞ்சுரி, யார் சொதப்பல்ன்னு கண்டுபிடிக்கமுடியுது. சரியா?’
 
’கரெக்ட்!’
 
‘அதுமாதிரி, நம்ம மூளையும் சிந்திக்கிறதுக்குன்னு ஒரு வடிவம் இருக்கு, அதைப் புரிஞ்சுகிட்டு, அதன்படி ஒரு விஷயத்தைப் பதிவு செஞ்சு தந்தா, அது அழுத்தமா மனசுல பதியும். அவ்ளோதான் ரகசியம்.’
 
‘அப்படீன்னா, இப்போ நான் எழுதினதை நீ மைண்ட் மேப்பா மாத்தப்போறியா?’
 
‘ஆமா, கொஞ்சம் பொறு’ என்றான் நரேன். தன் கையில் இருந்த சீனுவின் விவரங்களை ஒருமுறை படித்தான், அதே காகிதத்தின் பின்பகுதியில் விறுவிறுவென்று வரைய ஆரம்பித்தான்.
 
சில நிமிடங்களில், சீனுபற்றிய மைண்ட் மேப் தயாராகிவிட்டது. அதை அவனிடமே காட்டினான் நரேன். ‘இதையும் நீ எழுதினதையும் ஒப்பிட்டுப் பாரு’ என்றான்.
 
mm01
 
சீனு அந்தக் காகிதத்தை ஆர்வமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஏமாற்றத்தில் அவன் முகம் சுருங்கிவிட்டது. ‘என்னடா இது? நான் எழுதினதைதான் நீயும் கொஞ்சம் மாத்தி எழுதியிருக்கே, மத்தபடி இதுல என்ன புதுசா இருக்கு?’
 
’நீ எழுதின அதே விஷயங்களைதான் நானும் எழுதியிருக்கேன், புதுசா எதையும் சேர்க்கலை, உண்மைதான், ஆனா அந்த விவரங்களை வெவ்வேற தலைப்புகளின்கீழ் தொகுத்திருக்கேன், பார்த்தியா?’
 
‘அதாவது, உன்னோட பர்ஸனல் விவரங்கள் தனியா, படிப்பு விவரங்கள் தனியா, மற்ற ஆர்வங்கள் தனியா… இப்படிப் பிரிச்சுத் தொகுக்கறதால, நீ எழுதினதெல்லாம் அங்கும் இங்கும் சிதறிடாம, ஒழுங்கான வடிவத்துல உட்காருது, இப்போ இதை ஞாபகம் வெச்சுக்கறதும் ஈஸி, ஏதாவது விவரம் விடுபட்டிருக்குன்னா அதைக் கண்டுபிடிக்கறதும் ஈஸி!’
 
‘உதாரணமா, இங்கே கிரிக்கெட் பற்றி எழுதியிருக்கிற பகுதியைப் பாரு, அதுல நீ வருங்காலத்துல பெரிய கிரிக்கெட்டரா வரணும், இந்தியாவுக்காக விளையாடணும்ன்னு ஆசைப்படறது அங்கே பதிவாகியிருக்கு, ஆனா நீ இப்போ எந்த லெவல்ல கிரிக்கெட் விளையாடறே, உன்னோட கோச் யாரு, நீ பேட்ஸ்மேனா, பவுலரா, ஆல் ரவுண்டரா, நீ இதுவரைக்கும் கிரிக்கெட் விளையாடி என்னென்ன கப்ஸ் ஜெயிச்சிருக்கே… இதெல்லாம் மிஸ்ஸிங். இல்லையா?’
 
‘ஆக, ஒரு சாதாரணப் பட்டியலை மைண்ட் மேப்பா மாத்தறதன்மூலமா, அதைச் சுலபமா நம்ம மெமரியில ஏத்திக்கலாம், விடுபடற விஷயங்களையும் கண்டுபிடிச்சுச் சேர்த்துக்கலாம்.
 
’மைண்ட் மேப்போட இன்னொரு மிகப் பெரிய நன்மை, இதைப் பயன்படுத்தறதன்மூலமா நம்மோட ரெண்டு பக்க மூளைக்கும் வேலை கிடைக்குது.’
 
‘ரெண்டு மூளையா? அதெப்படி? மனுஷனுக்கு ஒரு மூளைதானே?’
 
நரேன் சிரித்தான், ‘ரெண்டு மூளை இல்லை, ஒரே மூளைதான், அதுக்கு ரெண்டு பக்கம் இருக்குல்லியா? அந்த ரெண்டு பக்கத்துக்கும் சாப்பாடு போடறதுதான் மைண்ட் மேப்ஸோட மிகப் பெரிய நன்மை!’
 
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 23, 2013 @ 4:02 pm